விண்வெளியில் படப்பிடிப்பு!

ஹாலிவுட்டில் எத்தனையோ விண்வெளிப் படங்கள் வெளியாகியுள்ளன. தி மார்ஷியன், கிராவிட்டி, ஃபர்ஸ்ட்மேன், ஏலியன், அப்பல்லோ 18 போன்றவை விண்வெளியைக் கதைக்களமாகக் கொண்டவை.
விண்வெளியில் படப்பிடிப்பு!


ஹாலிவுட்டில் எத்தனையோ விண்வெளிப் படங்கள் வெளியாகியுள்ளன. தி மார்ஷியன், கிராவிட்டி, ஃபர்ஸ்ட்மேன், ஏலியன், அப்பல்லோ 18 போன்றவை விண்வெளியைக் கதைக்களமாகக் கொண்டவை. ஆனால், இவையனைத்தும் விண்வெளியைப் போன்று செட் அமைத்து, கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தின் உதவியுடன் படமாக்கப்பட்டவை. இத்திரைப்படங்கள் விண்வெளி இப்படித்தான் இருக்குமோ என நமது கண் முன் காண்பித்தன. கற்பனைக் காட்சிகள்தான் என்றாலும் விண்வெளிப் படங்கள் தந்த சுவாரசியம் அலாதியானது.

கற்பனையே இப்படி இருந்தால் உண்மையிலேயே விண்வெளிக்குச் சென்று படப்பிடிப்பு நடத்தினால் எப்படி இருக்கும்? அதற்கும் தயாராகி வருகிறது ஹாலிவுட். பிரபல நடிகர் டாம் க்ரூஸ் நடிக்க, டக் லிமன் இயக்கத்தில் 200 மில்லியன் டாலர் செலவில் ஒரு விண்வெளிப் படத்தைத் தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, தனியார் விண்வெளி போக்குவரத்து சேவை நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் ஆகியவற்றுடன் படத் தயாரிப்பு நிறுவனம் நிகழாண்டு தொடக்கத்தில் ஒப்பந்தம் மேற்கொண்டது. இதன்படி, ஸ்பெஸ் எக்ஸ் நிறுவனத்தின் விண்கலத்தில் நடிகர் டாம் க்ரூஸ் உள்ளிட்ட படப்பிடிப்புக் குழுவினர் சுற்றுலாப் பயணிகளாக சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு படப்பிடிப்பு நடத்த அனுமதிக்கப்படுவார்கள். 

இந்தத் திரைப்படத்துக்கான ஆரம்பகட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அடுத்த ஆண்டு அக்டோபரில் டாம் க்ரூஸ் விண்வெளிக்குப் பறப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்தத் திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டால் விண்வெளிக்குச் சென்ற முதல் நடிகர் என்கிற பெருமையை அவர் பெறுவார்.

இதேபோல ரஷிய விண்வெளி ஆய்வு நிறுவனமான ராஸ்கோஸ்மோஸ், ஒரு விண்வெளிப் படத்துக்காக ஒரு நடிகையை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பத் தயாராகி வருகிறது. "சேலஞ்ச்' எனப் பெயரிடப்பட்டுள்ள அத்திரைப்படத்தில் நடிக்கவுள்ள நடிகையைத் தேர்வு செய்யும் பணி தற்போது நடந்து வருகிறது. விண்வெளியை கதைக்களமாகக் கொண்ட அப்படத்தின் கதாநாயகி, தொழில்முறை நடிகையாக இருக்கக் கூடாது; 25-40 வயதுக்குள்பட்டவராக இருக்க வேண்டும், டிரையத்லான் உள்ளிட்டவற்றில் தேர்ச்சி பெற்றவராக, உடல்ரீதியாக ஆரோக்கியமானவராக இருக்க வேண்டும் என ராஸ்கோஸ்மோஸ் நிபந்தனை விதித்துள்ளது. முக்கியமாக ஒரு ரஷியரைத்தான் அதற்காக தேர்வு செய்யப்போவதாகவும் கூறியுள்ளது. இதை "நட்சத்திரங்களுக்குச் செல்லவுள்ளார் ஓர் உண்மையான சூப்பர் ஹீரோ' என ராஸ்கோஸ்மோஸ் குறிப்பிட்டுள்ளது. டாம் க்ரூஸ் விண்வெளிக்குச் செல்லும் முன்னரே இத்திட்டத்தைச் செயல்படுத்த ராஸ்கோஸ்மோஸ் தீவிரமாக உள்ளது.

எல்லா விஷயங்களிலும் போட்டி போடும் அமெரிக்காவும், ரஷியாவும் விண்வெளியில் திரைப்படம் எடுப்பதையும் விட்டுவைக்காது போலும். விண்வெளிக்கு நடிகரை அனுப்புவதில் யார் முந்துவார்கள் என பொறுத்திருந்து பார்ப்போம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com