ஊடக மாணவர்களுக்கு ஒரு மாநாடு!

உலகின் சிறந்த இளம் ஊடகத் தயாரிப்பாளர்களுக்கான சர்வதேச உச்சி மாநாடு வரும் ஜூலை 14, 15 - ஆம் தேதிகளில் லண்டனில் நடைபெறவுள்ளது
ஊடக மாணவர்களுக்கு ஒரு மாநாடு!

உலகின் சிறந்த இளம் ஊடகத் தயாரிப்பாளர்களுக்கான சர்வதேச உச்சி மாநாடு வரும் ஜூலை 14, 15 - ஆம் தேதிகளில் லண்டனில் நடைபெறவுள்ளது. இதில், இளங்கலை, முதுகலை மாணவர்கள் அல்லது அண்மையில் பட்டம் முடித்த இளைஞர்கள் பங்கேற்கலாம்.
பிரிட்டிஷ் கவுன்சில் மற்றும் உலகின் சில முன்னணி ஊடக நிறுவனங்கள் இணைந்து Future News Worldwide என்ற ஒரு கூட்டுத் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. பரந்த அளவிலான பத்திரிகைத் திறன்களை வளர்ப்பதற்கு இளைஞர்களுக்கு உதவுவது இதன் நோக்கம்.
பிரிட்டிஷ் கவுன்சில் என்பது கலாசார உறவுகள் மற்றும் கல்வி வாய்ப்புகளுக்கான இங்கிலாந்தின் சர்வதேச அமைப்பாகும். கலை, கலாசாரம்,நூலகம், ஆங்கில மொழி, பள்ளிகள், உயர் கல்வி, தேர்வுகள், திறன்கள், அறிவியல், ஆளுமை, சமூகம், இளைஞர்கள், காலநிலை மாற்றம், விளையாட்டு ஆகிய துறைகளில் இந்தியா உட்பட உலகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட நாடுகளுடன் பிரிட்டிஷ் கவுன்சில் இணைந்து பணியாற்றுகிறது. 
இதன் செயல்பாடுகளில் ஒருபகுதியாகவே ஊடகத் துறையை தங்கள் எதிர்காலமாக நினைக்கும் மாணவர்கள், இளைஞர்களுக்காக Future News Worldwide  2020 என்ற திட்டத்தின் மூலம் சிறந்த இளம் ஊடக தயாரிப்பாளர்களுக்கான சர்வதேச உச்சி மாநாட்டை (An international summit for the world's best young media makers) பிரிட்டிஷ் கவுன்சில் நடத்துகிறது.
இந்த ஊடக பயிற்சித் திட்டத்தில் உலகின் திறமையான, ஆர்வமுள்ள மாணவ பத்திரிகையாளர்கள் 100 பேர் பங்கேற்கலாம். இந்த மாநாட்டில் பங்கேற்பவர்கள், உலகின் முன்னணி ஊடக ஆசிரியர்கள், ஒளிபரப்பாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் நிருபர்களிடமிருந்து சிறப்புப் பயிற்சிகளைப் பெறலாம். மேலும், சர்வதேச அளவில் உள்ள ஊடகவியலாளர்கள், செய்திக்கான கருப்பொருள்களைக் கண்டுபிடித்து, அவற்றை உயிர்ப்பிக்கும் தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதையும் அறியலாம்.
இந்த மாநாடு வரும் ஜூலை மாதம் 14, 15 -ஆம் தேதிகளில் லண்டனில் உள்ள Sky's global head quarters- இல் நடைபெறவுள்ளது.
தேர்வு பெறும் விண்ணப்பதாரர்கள் இந்த மாநாட்டில் இலவசமாகப் பங்கேற்கலாம். மேலும், இந்த மாநாட்டுக்குச் சென்றுவரும் பயணச் செலவு மற்றும் விடுதி செலவுகள் ஏற்பாட்டாளர்களால் வழங்கப்படும். 
மாணவர் அல்லது ஊடகத் துறையில் ஆர்வமுள்ள பட்டதாரி என்றால், அவர்கள் ஓர் எழுத்தாளர், வலைப்பதிவர் (blogger), ஒளிப்பதிவர் (vlogger), புகைப்படக் கலைஞர், வானொலி ஊடகவியலாளர் உள்ளிட்ட வேறு எந்த வகையான ஊடகங்களில் பணிபுரிந்தாலும் மாநாட்டில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர், 2020, ஜூலை 1 அன்று 18-25 வயதுடையவராக, பல்கலைக்கழகம் அல்லது உயர்கல்வி நிறுவனத்தில் இளங்கலை அல்லது முதுகலை கல்வி பயில்பவராக அல்லது 2018, ஜூலை 1-க்குப் பிறகு பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும். நிலை 6.5 அல்லது அதற்கு சமமான அளவில் ஆங்கிலம் பேசக் கூடியவராக இருக்க வேண்டும் (முறையான தகுதி தேவையில்லை). மாநாட்டில் பங்கேற்க தேர்வு பெறுவோர் அடையாளம், வயது, மாணவர் நிலை, ஆங்கில மொழித் திறன்களுக்கான ஆதாரங்களை வழங்க வேண்டும். 
இணைய விண்ணப்பப் படிவத்தில் பங்கேற்பாளரின் பத்திரிகைத் திறன்கள் மற்றும் ஆர்வங்களைச் சோதிக்க 2 கேள்விகள் உள்ளன. அவற்றுக்கு இணையத்திலேயே பதில் அளிக்க வேண்டும். படிவத்தை நிறைவுசெய்யும் முன்னதாக, இந்தக் கேள்விகளுக்கான பதில்களை ஆஃப் லைனில் எழுதி, பிறகு அவற்றை நகலெடுத்து படிவத்தில் பதிவேற்றலாம்.

பத்திரிகைகள் பல வடிவங்களில் வருவதால், இந்த கேள்விகளுக்கான பதில்களில் மல்டி மீடியாவைப் பயன்படுத்த ஊக்குவிக்கப்படுகிறது. பதிலை, எழுதப்பட்ட கட்டுரையாக கொடுக்க விரும்பினால், வழங்கப்பட்ட இடத்தைப் பயன்படுத்த வேண்டும். மல்டிமீடியா வடிவத்தில் பதிலளிக்க விரும்பினால், அவற்றை ஒரு ஹோஸ்டிங் தளத்தில் பதிவேற்ற வேண்டும் (youtube, soundcloud, vimeo). பதில்கள் எந்த வடிவத்தில் இருந்தாலும், அனைத்தும் சமமாக மதிக்கப்படும்.
முதல் கேள்வியாக, விண்ணப்பதாரரின் பத்திரிகை அனுபவம் மற்றும் Future News Worldwide 2020-க்கு விண்ணப்பிப்பதற்கான ஆர்வம் குறித்து அறிக்கை வழங்குமாறு கேட்கப்பட்டுள்ளது. இதற்கான பதிலை 300 வார்த்தைகள் அல்லது 2 நிமிட வீடியோ / ஆடியோவாகப் பதிவேற்றலாம்.
2-ஆவது கேள்வியாக விண்ணப்பதாரரின் சொந்த நாடு அல்லது வசிக்கும் நாடு குறித்து அவர் விரும்பும் ஒரு விஷயம் குறித்து கேட்கப்பட்டுள்ளது. இதற்கான பதிலில், விண்ணப்பதாரர் விவாதிக்கும் தலைப்பு நன்கு ஆராயப்பட்ட, சரி பார்க்கக் கூடிய உண்மைகளின் அடிப்படையில் மற்றும் வாசகருக்கு இந்த விஷயத்தில் பின்னணி அறிவு இல்லையென்றாலும் புரிந்து கொள்ளக் கூடிய அளவில் தெளிவாக இருக்க வேண்டும். இவை குழு வேலையாக இருக்கக் கூடாது.
மாநாட்டுக்குத் தேர்வானால், அதில் பேசுவதற்கான தலைப்புகளில் அரசியல், சுற்றுச்சூழல், தொழில்நுட்பம், சமூகம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை பதிலில் குறிப்பிட வேண்டும். விண்ணப்பங்களை வரும் பிப்ரவரி 14 - ஆம் தேதிக்குள் இணையம் வழியாக சமர்ப்பிக்க வேண்டும். மாநாட்டுக்கு தேர்ந்தெடுக்கப்படுவோர் வரும் ஜூலை 11 முதல் 16 - ஆம் தேதி வரை எந்த நாளிலும் இங்கிலாந்துக்குச் செல்ல தயாராக இருக்க வேண்டும். மேலும் விவரங்களை www.britishcoun
cil.org/future-news-worldwide என்ற இணைய முகவரியில் பார்க்கலாம்.
- இரா.மகாதேவன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com