அதிகாலை...தூங்குவதற்கு அல்ல!

காலையில் எழுந்து கொள்ள அலாரம் வைத்துவிட்டு, பின்னர் அதை அணைத்து விட்டு மீண்டும் தூங்கும் நபர்களே நம்மில் அதிகம். காலையில் எழுந்து சூரியனை வணங்கி அன்றாட வேலைகளைத் தொடங்கிய காலம் மறைந்து,
அதிகாலை...தூங்குவதற்கு அல்ல!

காலையில் எழுந்து கொள்ள அலாரம் வைத்துவிட்டு, பின்னர் அதை அணைத்து விட்டு மீண்டும் தூங்கும் நபர்களே நம்மில் அதிகம். காலையில் எழுந்து சூரியனை வணங்கி அன்றாட வேலைகளைத் தொடங்கிய காலம் மறைந்து, காலை எழுந்தவுடன் ஸ்மார்ட் போனில் கண்விழிக்கும் பழக்கத்துக்கு இன்றைய பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை மாறி விட்டனர். இரவைப் பகலாக மாற்றி பின்னர் அதிகாலையில் உறக்கத்தைத் தழுவத் துடிக்கும் இன்றைய நவீன சமுதாயத்தினருக்கு அதிகாலையில் எழுவது என்பது கசக்கிறது.
ஆனால், உண்மையில் வாழ்க்கையில் உச்சத்தை தொட்ட பலர், சாதனையாளர்கள் என்று போற்றப்படுபவர்கள், தலைசிறந்த தலைவர்கள் உள்ளிட்ட அனைவரும் காலை உறக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் பணி செய்தவர்கள்தான். யார் ஒருவர் காலையில் எழுந்து தனது அன்றாடப் பணிகளைத் தொடங்குகிறாரோ அவரின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்று அண்மையில் வெளியான ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இரவு கண் விழிப்பது கேடு
இன்றைய இளைஞர்கள் பலர் இரவில் 1 மணி, 2 மணி வரை செல்லிடப் பேசியை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். அதனால், அவர்கள் காலையில் தூங்குவதை விரும்புகின்றனர். ஆனால், இரவில் அதிக நேரம் கண் விழிப்பவர்களுக்கு சோர்வுற்ற மனநிலை எனும் மனநோய் வருவதற்கான சாத்தியம், அதிகாலையில் துயில் எழுபவர்களைவிட மூன்று மடங்கு அதிகம் என்ற அதிர்ச்சியான விஷயத்தைச் சமீபத்தில் வெளியான ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. 
கதிரவன் உதித்த பின் எழுவதால் உடலுக்கு அசதியும், சோம்பலும், மயக்கமும் ஏற்படும். அன்றைய நாள் முழுவதும் சோர்வும் பகலுறக்கமும் உண்டாகும். காலையில் தாமதமாக கண் விழிப்பவர்களுக்கு ஒற்றைத் தலைவலி உள்ளிட்ட நோய்கள் அதிக அளவில் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். 
நோயற்ற வாழ்வு 
அதிகாலை விழிப்பின் பின்னணியில், நோய்களைப் போக்கும் மிகப்பெரிய அறிவியல் இருக்கிறது. அதிகாலையில் நம்மீது விழும் கதிர்வீச்சு நமது உடலுக்கு நன்மை அளிக்கும். காலையில் சீக்கிரம் எழுவது ஆரம்பத்தில் சற்றே கடினமாக இருந்தாலும், பழகி விட்டால் கிடைக்கும் பலன்களோ ஏராளம். மேலும், அதிகாலையில் விழிப்பவர்களிடம் நேர்மறை எண்ணங்கள், எளிதாகத் திருப்தியடையும் மனப்பான்மை, வாழ்வின் மீது அதிக நம்பிக்கை போன்ற நற்குணங்கள் கூடுதலாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். 
கல்வி
இப்போதைய மாணவர்கள் இரவில் படிப்பதையே பழக்கமாகக் கொண்டுள்ளனர். நாளை செமஸ்டர் தேர்வு என்றால், முதல் நாள் இரவு முழுவதும் படித்துவிட்டு காலையில் தேர்வில் அதை எழுதி விட்டு அப்படியே மறந்து விடுகிறார்கள். அதனால் படித்து முடித்து வேலை தேடும்போது அந்த மாணவர்கள் திறனற்றவர்களாக அறியப்படுகிறார்கள். இதுவே அதிகாலையில் எழுந்து படித்த குழந்தைகள், கல்வியில் சிறந்து விளங்கியதாக டெக்சாஸ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு குறிப்பிடுகிறது. அதிகாலையில் கடினமான பாடத்தை படித்தால் கூட எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். மேலும், காலை எழுந்தவுடன் படிப்பதால் நமது மூளையிலும் அது நன்றாகப் பதியும். நினைவாற்றலை அதிகரிக்க மருந்துகளைத் தேடி அலைவதற்குப் பதிலாகத் தினமும் அதிகாலையில் கண் விழித்தால் போதும். மூளை சுறுசுறுப்படையும், நினைவாற்றல் அதிகரிக்கும். 
உற்சாக மனநிலை
காலையில் சீக்கிரம் எழுந்தால், நன்றாக உறங்கிய உணர்வு இருக்காது; நாள் முழுவதும் மந்தமாக இருக்கும் என்று கூறி காலையில் எழுந்திருப்பதை சிலர் தட்டிக் கழித்துக் கொண்டிருப்பர். ஆனால் உண்மையில், சூரிய உதியத்துக்கு முன்பு எழுந்தால், நம் அன்றாடப் பணிகளைக் கவனிக்கக் கூடுதல் அவகாசம் கிடைக்கும். உடற்பயிற்சிகள் செய்யத் தகுந்த காலமாக காலை வேளை அமைவதால், உடல் உறுப்புகளும் உற்சாகம் பெறும். யோகாசனப் பயிற்சிகள் செய்ய அதிகாலை வேளையே சிறந்தது. மேலும் உடலுக்குச் சுறுசுறுப்பும் புத்துணர்ச்சியும் உண்டாகும். அதிகாலையில் உடற்பயிற்சி செய்வதால், தேவையான அளவுக்கு இளம் வெயிலை உடல் கிரகித்துக்கொள்ளும். அதன் மூலம் நாள் முழுவதும் உற்சாகமாக, சுறுசுறுப்பாக இருக்கலாம். 
தூக்கமின்மைக்கு தீர்வு
இரவில் அலுவலகம் செல்பவர்கள், பகல், இரவு என மாறி மாறி பணியாற்றுபவர்களுக்கு தூக்கமின்மை ஒரு பெரிய பிரச்னையாக இருக்கிறது. அவ்வாறு தூக்கம் இல்லாமல் அவதிப்படுபவர்கள் அதிகாலையில் விழிக்கும் முறையைப் பின்பற்றிவந்தால், நல்ல உறக்கம் வரும். 
இரவில் அலுவலகம் செல்பவர்களால் காலையில் சீக்கிரம் விழிப்பது என்பது இயலாத காரியம்தான். எனினும், காலையில் எழுந்து காலை உணவை முடித்துக் கொண்டு, மீண்டும் உறங்கச் செல்வது உடல் நலத்துக்கு தீங்கு ஏற்படுத்தாது. தூக்கமின்மைப் பிரச்னைக்கும் தீர்வு கிடைக்கும்.
இவ்வாறு அதிகாலை அல்லது காலையில் எழுந்திருப்பதால் பல பலன்கள் உள்ளன. அதிகாலையில் எழுவதற்கு, இரவு ஒன்பது முதல் பத்து மணிக்குள் உறங்கச் செல்வதும் அவசியம். அப்போதுதான் நமது உடலுக்கு, மனதுக்கு நல்ல ஓய்வு கிடைக்கும். 
வயதையொட்டி குறைந்தபட்சம் ஆறு முதல் ஏழு மணி நேர இரவு உறக்கத்துக்குப் பிறகு, அதிகாலையில் எழுவதற்கு முயற்சி செய்ய வேண்டும். தொடக்கம் முதலே அதிகாலையில் எழும் பழக்கத்தை குழந்தைகளுக்கு பெற்றோர்கள் கற்றுக் கொடுத்தால், குழந்தைகளின் ஆரோக்கியம் பிற்காலத்தில் மேம்படும். நம் மரபணுக்களில் பதிந்திருக்கும் அதிகாலையில் எழும் பழக்கத்தை மீட்டெடுத்து உற்சாகமான சமூகத்தை உருவாக்குவோம்! 
- க.நந்தினி ரவிச்சந்திரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com