காந்தி, நேதாஜி கனவை நனவாக்க...!

காந்தி, நேதாஜி கனவை நனவாக்க...!

17-01-2006 அன்று மேற்கு வங்காளம் சென்று இருந்தோம். அன்று ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாமிற்கு 12 நிகழ்ச்சிகள். காலையில் அனைத்து இடங்களுக்கும் ஹெலிகாப்டரில் செல்ல வேண்டும், மாலை

மிச்சமெல்லாம் உச்சம் தொடு 56: விஞ்ஞானி வெ. பொன்ராஜ்(அப்துல்கலாமின் முன்னாள் அறிவியல் ஆலோசகர்)
17-01-2006 அன்று மேற்கு வங்காளம் சென்று இருந்தோம். அன்று ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாமிற்கு 12 நிகழ்ச்சிகள். காலையில் அனைத்து இடங்களுக்கும் ஹெலிகாப்டரில் செல்ல வேண்டும், மாலை கொல்கத்தாவில் பல நிகழ்ச்சிகள். சாகர் தீவு சுந்தர்பன்ஸ் செல்ல வேண்டும். காலை முதல் நிகழ்ச்சி. ராஜ்பவனில் இருந்து கிளம்ப வேண்டும். நாங்கள் அனைவரும் 8 மணிக்கே தயாராகிவிட்டோம். ஆனால் அன்றைக்கு கிளம்ப வேண்டிய ஹெலிகாப்டர் பைலட் அவசரமாக வந்தார். ""நாம் இறங்கும் இடத்தில் மேகமூட்டம் அதிகமாக இருப்பதால் இறங்க முடியாது. மேகமூட்டம் விலகினால் மட்டுமே அங்கு இறங்க முடியும், 2 மணி நேரம் தாமதமாகும். இந்த தகவலை ஜனாதிபதியிடம் தெரிவிக்க வேண்டும்'' என்றார். தகவலைத் தெரிவிக்க ஜனாதிபதியிடம் போனார்கள். 15 நிமிடம் கழித்து வந்தார்கள். என்ன? என்று கேட்டேன். 
"ஹெலிகாப்டரை எடுங்கள். அங்கு போனவுடன் வானம் நமக்கு வழிவிடும், கீழே பூமி தெரிந்தால் இறங்கி விடுவோம், இல்லையென்றால் அடுத்த நிகழ்ச்சிக்கு செல்வோம் என்று சொன்னார்'' என்றார்கள். அந்த நிகழ்ச்சி எனக்கு முக்கியம், ஏனென்றால் சுந்தர் பன்ஸ் தீவில் தான் 250 கிலோ வாட் சூரிய ஒளிமின்சக்தி நிறுவப்பட்டிருந்தது. அது ராஷ்டிரபதி பவனில் நான் மேற்கொண்ட 5 மெகாவாட் திட்டத்திற்கு அடிப்படையாக இருந்ததினால் அதை கலாம் பார்வையிட நான் ஏற்பாடு செய்திருந்தேன். 
அந்த நிகழ்ச்சி ரத்தாகக் கூடாது என்பது எனது விருப்பம். இருந்தும் வானநிலை ஒத்துழைக்காவிட்டால் நாம் என்ன செய்ய முடியும்? கொல்கத்தாவில் இருந்து 3 ஹெலிகாப்டர்கள் கிளம்பின. எங்கு பார்த்தாலும் மேக மூட்டம். கீழே ஒன்றும் தெரியவில்லை. அப்போது கலாம் பக்கத்தில் உட்கார்ந்து இருந்த என்னிடம் 14 ஆகஸ்டு 1947 நள்ளிரவில் நேரு ஆற்றிய சுதந்திரதின விழாப் பேருரை பற்றியும், அதை அவர் இராமேஸ்வரத்தில் நள்ளிரவில் ரேடியோவில் கேட்டது பற்றியும், மறுநாள் காலை தினமணி நாளிதழில் நவகாளியில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் காந்தியடிகள் இருந்ததைப் பற்றிய செய்தியைப் படித்தது பற்றியும், நேதாஜியின் வீர முழக்கத்தையும் பற்றியும் என்னிடம் கூறிக்கொண்டு வந்தார். அனைவருக்கும் கீழே இறங்க முடியுமா இல்லையா? என்று பதட்டம். கலாம் என்னிடம் சுவாரசியமாக பேசிக்கொண்டு வருகிறார். 
எங்கு பார்த்தாலும் மேக மூட்டம். கீழே தரையே தெரியவில்லை. சரியாக 10 நிமிடத்தில் மேக கூட்டத்தில் ஒரு ஹெலிகாப்டர் மட்டும் செல்லும் வகையில் ஓர் ஓட்டை மட்டும் தெரிந்தது. கலாம் கையைக் காட்டினார். பைலட் அந்த மேக ஓட்டையில் ஹெலிகாப்டரை செலுத்தினார். கீழே பார்த்தால் சுந்தர்பன்ஸ் தீவு மக்கள் ஜனாதிபதி கலாமைப் பார்க்க ஆர்ப்பரிக்கிறார்கள். கலாம் சொன்னது போல் வானம் திறந்து வழிவிட்டது. அப்போது ஒளவையார் பாடிய, "தானமும் தவமும் தான்செய்வ ராயின் வானவர் நாடு வழிதிறந் திடுமே' என்ற பாடல் வரிதான் எனக்கு நினைவிற்கு வந்தது. 
சரி, மகாத்மா காந்தியைப் பற்றியும், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பற்றியும் கலாம் என்னிடம் என்ன சொன்னார்? 
ஆகஸ்ட் 15, 1947 அன்று இந்தியா மகாத்மா காந்தியடிகள் தலைமையில் அகிம்சை, சத்தியாகிரகம் என்ற இரண்டு அமைதி ஆயுதங்களால் நிகழ்ந்த சுதந்திரப் போராட்ட வரலாற்றில் வெகுஜன மக்களை ஒருங்கிணைத்து, உப்புச்சத்தியாகிரகம், தண்டி யாத்திரை, வெள்ளையனே வெளியேறு என்ற பல்வேறு போராட்ட வழிமுறைகளை உருவாக்கி பெற்ற சுதந்திரத்தைக் கொண்டாடியபோது, சுதந்திரப் போராட்டத்தில் முதன்மையான முக்கிய பங்கு வகித்த மகாத்மா காந்தி நாட்டின் பிரிவினையால் வருத்தப்பட்டு, கொல்கத்தாவில் உண்ணாநோன்பு மற்றும் மவுன விரதத்தில் கழித்தார். முதல் நாள் இரவு டெல்லியில் ஜவஹர்லால் நேரு 20 -ஆம் நூற்றாண்டின் முக்கியமான தனது "ட்ரைஸ்ட் வித் டெஸ்டினி' உரையை வழங்கினார். 
""நீண்ட ஆண்டுகளுக்கு முன்பு ... நாங்கள் விதியுடன் போராடி ஒரு முயற்சி செய்தோம். இப்போது எங்கள் நாட்டைப்பற்றி நாங்கள் எடுத்துக்கொண்ட உறுதிமொழியை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ, கணிசமாக மீட்டெடுக்கும் நேரம் வந்துவிட்டது.
நள்ளிரவு மணி நேரத்தில், உலகம் தூங்கும்போது, இந்தியா தனது வாழ்க்கை மற்றும் சுதந்திரத்திற்கு விழித்திருக்கும் தருணம் வந்திருக்கிறது. ஆனால் வரலாற்றில் அரிதாகவே, நாம் பழையதிலிருந்து புதிய நிலைக்கு அடியெடுத்து வைக்கும் போது, பழைய காலகட்டம் முடிவடையும் போது, நீண்ட காலமாக அடக்கி ஒடுக்கப்பட்ட ஒரு தேசத்தின் ஆன்மாவின் உயிர்த் துடிப்பைக் காணலாம். 
இந்த புனிதமான தருணத்தில் இந்தியாவிற்கும், அதன் மக்களுக்கும் சேவை செய்வதற்கும், மனிதகுலத்தின் மறுவாழ்விற்கு இன்னும் பெரிய காரணத்துக்குமான அர்ப்பணிப்பு உறுதிமொழியை நாங்கள் எடுத்துக்கொள்வது பொருத்தமானது'' என்றார். இந்த உரை எப்படி அப்துல் கலாமின் 15 வயதில் ஒரு தாக்கத்தை உருவாக்கியது என்பதைப் பற்றி என்னிடம் ஹெலிகாப்டரில் செல்லும்போது அவர் விவரித்தார். அவரது பிற்கால வாழ்வை, இலட்சியத்தை உருவாக்கி அவரது ஆழ்மனதில் தாக்கத்தை ஏற்படுத்திய உரையாக அமைந்தது நேருவின் உரை. 
ஒரு பக்கம் மகாத்மா காந்தியின் அகிம்சை, சத்தியாகிரகம், எளிமை, நேர்மை, அன்பு, தொலைநோக்குப் பார்வை, சமத்துவம், சகோதரத்துவம், கிராம சுயராஜ்யம், ஒற்றுமையான, வலிமையான இந்தியா கலாமின் சிறுவயதில் ஆழ்மனதில் பதிந்தது. காந்தியின் கீழ்க்காணும் தத்துவங்கள் கலாமை சிறுவயதில் தொட்டன. 
"உண்மையைப் பின்தொடர்பவர்கள், எதிரிக்குக் கூட வன்முறையை அனுமதிக்க மாட்டார்கள்". "நான் போதிப்பது கோழைகளின் அகிம்சையை அல்ல. அகிம்சையின் மூலமே மனித வர்க்கம் பலாத்காரத்திலிருந்து வெளியேறியாக வேண்டும். எல்லா சமயங்களுக்கும் பொதுவானது அகிம்சை. வலிமையும், வீரமும் மிக்கவர்களின் ஆயுதம் அகிம்சை. அகிம்சையிலும், சத்தியத்திலும் தோல்வி என்பதே கிடையாது.' இந்த தத்துவங்கள் தனது வாழ்வின் ஒவ்வொரு பகுதியையும் செம்மைப்படுத்தியதாக கலாம் சொன்னார். 
" இந்தியாவின் சுதந்திரத்தை வென்றெடுக்க, வலிமையான இந்தியாவைக் கட்டமைக்க "உன் இரத்தத்தைக் கொடு; சுதந்திரக் காற்றை நான் சுவாசிக்க வைக்கிறேன்'" என்று 1943 - இல் இந்திய தேசிய இராணுவத்தைக் கட்டியமைத்து இரண்டாம் உலகப் போரின்போது ஆங்கிலேயர்களுக்கு எதிராக இராணுவக் கூட்டணிகளை உருவாக்கிய சுபாஷ் சந்திர போஸ் சொன்னார். இந்தியா சுதந்திரம் பெற வேண்டுமென்றால் வலிமைமிக்க இராணுவத்தைக் கட்டியமைத்தால் மட்டுமே முடியும் என்று நம்பினார். "ஜெய் ஹிந்த்' என்ற முழக்கத்தை உருவாக்கியவர். மகாத்மா காந்தியை "தேசத்தின் தந்தை' என்று உரையாற்றிய முதல் நபர் சுபாஷ் சந்திரபோஸ் ஆவார். 

"ஒரு கொள்கைக்காக அதை உருவாக்கியவர் இறக்கலாம்; ஆனால் அந்த எண்ணம், அவரது மரணத்திற்குப் பிறகு, ஆயிரமாயிரம் பேரின் வாழ்க்கையில் அவதாரம் எடுக்கும்' என்றார் நேதாஜி . "மனிதனும், பணமும் மற்றும் பொருட்களால் மட்டுமே வெற்றியையோ அல்லது சுதந்திரத்தையோ கொடுக்க முடியாது. துணிச்சலான செயல்களை, வீரத்தோடு, விவேகத்தையும் நம் ஒவ்வொருவரிடமும் தூண்டும் சக்தி நம்மிடம் உருவானால் தான் சுதந்திரத்தை வென்றெடுக்க முடியும்' என்று நம்பினார் நேதாஜி. 
"இந்த தேசத்தின் முக்கிய பிரச்னைகளான வறுமை, கல்லாமை மற்றும் நோய் ஒழிப்பு மற்றும் விஞ்ஞானம் மூலம் உற்பத்தி பெருக்கம் மற்றும் விநியோகம் போன்றவற்றை சோசலிசம் போன்ற பொது நலக் கோட்பாடுகளால் மட்டுமே செய்து முடிக்க முடியும் என்பதில் என் மனதில் எந்த சந்தேகமும் இல்லை' என்றார் நேதாஜி. 
இந்த வரலாற்று நாயகர்களின் வாழ்க்கை, அவர்களது தியாக வாழ்வு அப்துல் கலாமின் நெஞ்சில் அவருடைய 15 ஆவது வயதில் பதிந்ததாக அப்துல்கலாம் என்னிடம் சொன்னார்.
அவருடைய இளைமைக்காலத்தில் - 1960 முதல் 1998 வரை - அவர் ஆற்றிய பணிகள் இந்தியாவை வலிமை மிக்கதாகக் கட்டியமைப்பதில் முதலிடம் பெற்றது. அதாவது நேதாஜியின் கனவை தனது அறிவாற்றலால் நனவாக்கியவர் கலாம். 
1980- இல் SLV3 ராக்கெட்டை வெற்றிகரமாக வடிவமைத்தார். அது தொலைத் தொடர்பு செயற்கைக்கோள், நீர் வளம், நில வளத்தை விண்ணில் இருந்து கண்டறியும் செயற்கைக்கோள், கல்வி மற்றும் மருத்துவத்திற்கான செயற்கைக்கோள். இன்றைக்கு நிலவில் தண்ணீர் இருப்பதைக் கண்டறிவதற்கும், நிலவில் கால் பதிப்பதற்கும் அடித்தளமிட்டு தொடர்ந்து உழைத்தவர் கலாம். கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகளான அக்னி, பிரித்வி, ஆகாஷ், திரிசூல், நாக், பிரம்மோஸ் போன்ற ஏவுகணைகளை உருவாக்கி, இந்தியாவில் எதிரி நாட்டு ஏவுகணை என்ன அதில் அணுகுண்டே வைத்து ஏவினாலும் அதை விண்ணிலேயே தாக்கி அழிக்கும் வல்லமை பெற்ற நாடாக மாற்றி காண்பித்தவர் அப்துல் கலாம். அது மட்டுமல்ல, இந்தியாவை அணுசக்தி வல்லமை பெற்ற நாடாக மாற்றி அமெரிக்கா, ரஷ்யா போன்ற அணுசக்தி வல்லமை பெற்ற நாடுகளைத் திரும்பிப் பார்க்க வைத்தவர். அதனால் ஏற்படுத்தப்பட்ட தடைகளைத் தகர்த்தெறிந்து இலகு இரக போர்விமானம் தேஜஸை உருவாக்கி காண்பித்தார். இத்தனை இராணுவ சாதனைகளை தனது அறிவியல் தொழில்நுட்ப சாதனைகளால் கலாம் உருவாக்கியதற்கு நேதாஜியின் இராணுவ சித்தாந்தம் தான் காரணம் என்பதை நான் உணர்ந்து கொண்டேன். இதை அப்துல்கலாமிடம் சொன்னபோது சிரிக்க மட்டும் செய்தார். 
இந்தியாவை வலிமை பெற்ற நாடாக மாற்றி விட்டபின்பு மகாத்மா காந்தியின் கனவை நனவாக்க அவர் உருவாக்கி கொடுத்த தொலைநோக்குப் பார்வைத் திட்டம் தான் 2020 -க்குள் இந்தியாவை அறிவார்ந்த வல்லரசு இந்தியாவாக, 2020- க்குள் வளமான, வளர்ச்சியடைந்த நாடாக உருவாக்க அவர் கொடுத்த திட்டம்தான் "தொழில்நுட்ப தொலைநோக்கு பார்வைத் திட்டம் 2020'. காந்தியடிகளின் கிராம சுயராஜ்யத்தை வென்றெடுக்க கலாம் கொடுத்த திட்டம் தான் "புரா' திட்டம். இப்படி நேதாஜியின் கனவை 40 ஆண்டுகளில் நனவாக்கினார். 
மகாத்தமா காந்தியின் கனவை 1998- இல் செயல் திட்டமாக்கி தனது வாழ்நாளில் காண்பேன் என்ற கனவையும் இலட்சியத்தையும் 17 ஆண்டுகள் பாராளுமன்றத்தில், சட்டமன்றங்களில், தொழில், விவசாயம் மற்றும் அனைத்து துறைசார்ந்தவர்களிடமும், மக்களிடமும், மாணவர்களிடமும், இளைஞர்களிடமும் விதைத்து விட்டு இந்த மண்ணில் விதைக்கப்பட்டவர் அப்துல் கலாம். பெரும் தலைவர்களின் கனவை ஒரு கிராமப்புற மாணவரான அப்துல் கலாமால் நனவாக்க முடியும் என்றால், அப்துல் கலாமின் கனவை நம்மால் நனவாக்க முடியுமா, முடியாதா? எப்படி மிச்சமெல்லாம் உச்சம் தொடுவது, தொடர்ந்து பார்ப்போம்.
உங்கள் கனவுகளை, இலட்சியங்களை 
பகிர்ந்து கொள்ள தொடர்பு கொள்ளுங்கள்:
vponraj@live.com 
(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com