கொஞ்சம் சிரிப்போம்... நிறைய ஜெயிப்போம்!

சிரிப்பும் புன்னகையும் வெறும் உதடு மற்றும் வாய் சார்ந்த செயல் மட்டுமல்ல. அது உணர்வுப்பூர்வமான ஓர் உடல்மொழி.
கொஞ்சம் சிரிப்போம்... நிறைய ஜெயிப்போம்!

எந்த தருணத்திலும் நமக்கு இரண்டு வழிகள் உள்ளன. வளர்ச்சியில் முன்னேற அல்லது பாதுகாப்பிற்கு பின்வாங்க.
- ஆபிரகாம் மாஸ்லோ
சிரிப்பும் புன்னகையும் வெறும் உதடு மற்றும் வாய் சார்ந்த செயல் மட்டுமல்ல. அது உணர்வுப்பூர்வமான ஓர் உடல்மொழி. உயிரோட்டமானது... சமயங்களில் உன்னதமானது. தெய்வீகமானது.
ஒரு சிலரைப் பார்த்தவுடன் நமக்குப் புத்துணர்ச்சி தொற்றிக் கொள்ளும். பெரும்பாலான நேரங்களில் முகத்தில் எந்த உணர்ச்சியையும் வெளிப்படுத்தாமல் எதையோ பறிகொடுத்த மாதிரியே அமர்ந்திருப்பவர்களைப் பார்த்து, "உர்ருன்னு .... உம்முன்னு இருக்கிறதைப் பாரு'"என்றோ"எப்பப்பாரு இஞ்சி தின்ன குரங்காட்டம் முகத்தை வச்சுக்கிட்டு' என்று சொல்வதையும் கேள்விப்பட்டிருக்கிறோம். 
இவற்றையெல்லாம் கடந்து ஒரு மனிதனின் வாழ்வை உயிர்ப்போடு வைத்திருக்க "சிரிப்பு' பிரதான இரத்த ஓட்டமாக இருக்கிறது என்பதை மறக்காதவர்கள் மட்டுமே வாழ்வில் வெற்றி பெற்றிருக்கின்றனர். மிகப்பெரிய சாதனைகளையும் செய்திருக்கின்றனர்.
"சிந்திக்கத் தெரிந்த மனித குலத்துக்குச் சொந்தமானது சிரிப்பு' என்கிறார் "கலைவாணர்' என்.எஸ்.கிருஷ்ணன். "சிரிப்பு, இதன் சிறப்பை சீர்தூக்கிப் பார்ப்பதே நமது பொறுப்பு' என்று தொடங்கும் அந்தப் பாடலின் வரிகள் மேலும் இப்படித் தொடர்கின்றன: "மனம் கருப்பா வெளுப்பா என்பதை எடுத்துக் காட்டும் கண்ணாடி சிரிப்பு' "இது களையை நீக்கி கவலையைப் போக்கி மூளைக்குத் தரும் சுறுசுறுப்பு'. 
"புன்னகைதான் மொழிக்கும் முன்னர் மனிதன் கண்டுபிடித்த முதல் தொடர்பு ஊடகம்' என்கிறார் தலைசிறந்த "சிரிப்பு' ஆய்வாளர் பேராசிரியர் ராபர்ட் புரொவின். அகில உலகத்துக்கும் பொதுவான மொழி சிரிப்பு. கைக்குழந்தையாக இருக்கும்போது நாம் நாள் ஒன்றுக்கு எத்தனை முறை சிரித்துக் கொண்டிருந்தோமா, அதில் ஐந்து சதவிகிதத்திற்கும் குறைவாகவே நாம் வளர்ந்து பொறுப்பானவர்கள் ஆகிய பிறகு சிரிக்கிறோம். ஏன் என்றால், இன்றையச் சூழ்நிலையில் நாம் மனிதர்களிடமிருந்து வெகு தூரம் விலகி, இயந்திரங்கள் மற்றும் மின் சாதன உபகரணங்களோடு அதிகமாக நேரத்தைச் செலவிடுகிறோம். செல்லிடைப் பேசி வழியாக, கட்செவி அஞ்சல்களில் சிரிப்பைக் கூட குறியீடாக, பொம்மைப் படங்களாகப் போட்டுவிட்டுவிட்டு அற்ப மகிழ்ச்சியில் திருப்தியடைந்து விடுகிறோம். 
இந்த வாழ்க்கை முறையின் காரணமாக நம்மில் பலரும் மன அழுத்தத்தால் எளிதில் பாதிக்கப்பட்டு, ஒருவரை ஒருவர் பார்க்கின்ற நேரங்களில் சிரிக்கின்றோமா அல்லது முறைக்கின்றோமோ என்பதைக் கூட வேறுபடுத்திப் பார்க்க முடியாத "ரோபோ'க்களாக மாறிக் கொண்டிருக்கிறோம். 
"வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்' என்கிற பழமொழியையும், சிரிப்பு, மன அழுத்தத்தைக் குறைத்து நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் என்பதையும், சிரிப்பு நம்மை நல்ல மனநிலையோடு நாள் முழுவதும் மகிழ்ச்சியோடு வைத்திருக்கும் என்பதையும், கடினமான நேரங்களிலும் நேர்மறையான மனநிலையைக் கொடுத்து உற்சாகத்தோடு செயல்பட வைக்கும் என்பதையும் கூட நாம் ஒருவரிடம் பணம் கொடுத்து மருத்துவம் என்கிற பெயரில் தெரிந்துகொள்ள விரைகிறோம்.
சிரிப்பைப் பற்றி பேசும்பொழுது சந்திரபாபுவின், "சிரிப்பு வருது.... சிரிப்பு வருது, சிரிக்க... சிரிக்க... சிரிப்பு வருது' என்கிற பாடலைப் பற்றி நாம் பேசாமல் இருக்க முடியாது. இந்தப் பாடலையும், நாமே மேலே சுட்டிக்காட்டிய என்.எஸ். கிருஷ்ணன் பாடலையும் இன்றைய இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் இணைய "யூ டியூப்' வாயிலாக அடிக்கடி பார்ப்பதுஅவசியம் . அது அவர்களுக்கு நல்ல உற்சாகத்தைத் தரும். புன்னகையும் சிரிப்பும் மகிழ்ச்சியை மட்டும் அல்ல... ஆரோக்கியத்தையும் இலவச இணைப்பாகத் தருகின்றன என்பதை, "மகிழ்ச்சி 100 சதவிகிதம் பலன் அளிக்கும் ஒரு தடுப்பு மருந்து' என திருக்குறள் முதல் கட்செவி ஸ்மைலி வரை அனைத்தும் அழுத்தமாகச் சொல்வதை நாம் அப்படியே அடுத்தவருக்கு தகவலாக தள்ளிவிடுவோமே தவிர, அதை செயல்படுத்தத் தவறிவிடுகிறோம்.
நோயாளிகளின் மனதில் மலர்ச்சியை உண்டாக்குவதே மருத்துவத்தின் முதல் நோக்கம் என்பதில் உறுதியாக இருந்த அமெரிக்க மருத்துவர் பாட்ச் ஆடம்ஸ், அதற்காக கோமாளி முகமூடி அணிந்துகொண்டு கோணங்கி சேட்டைகளைக் கூட செய்வாராம். இவர் எழுதிய "உடல்நலம் ஒரு சிரிப்புப் பொருள்" (Good 
health is a laughing matter) என்ற நாவலில் ஊசி, மருந்துகளைத் தாண்டி நலம்தரும் முக்கியமான விஷயங்கள், சிரிப்பும் மகிழ்ச்சியுமே என்பதை பல உதாரணங்களுடன் உணர்த்தியிருக்கிறார் பாட்ச். 
இரண்டும் உணர்வுகள்தானே என்றாலும், "குபீர்' சிரிப்பும், "சுரீர்' கோபமும் மனித உடலில் வேறுபாடான தாக்கங்களை உண்டாக்கும். "சிரிப்பு' நம் நரம்பு மண்டலங்களுக்கும் மனதிற்கும் நேர்மறையான பயிற்சியையும், "கோபம்' நம் உடலில் எதிர்மறையான விளைவுகளையுமே உண்டாக்கும். நாவலாசிரியர் நா. பார்த்தசாரதி அவரது "குறிஞ்சி மலர்' நாவலில் நாயகியின் மலர்ந்த முகத்தை... "நிலவைப் பிடித்து, சிறு கறைகள் துடைத்து... குறுமுறுவல் பதித்த வதனம் இது' என்று பதிவிடுகிறார். அந்த வகையில் புன்முறுவல் வேறு, புன்னகை வேறு, சிரிப்பு வேறு... செயற்கையான காரிய சிரிப்புக்கு... வளிதலுக்கு பேச்சுவழக்கில் சொல்லப்படும் "இளிப்பு' என்பது வேறு. ஒரு மாணவனின், இளைஞனின் வெற்றிக்கு படிப்பும், உழைப்பும், நேர்மறையான எண்ணமும் எவ்வளவு முக்கியமோ, அதற்கு கொஞ்சமும் குறைவில்லாமல் முக்கியமானது இந்தச் "சிரிப்பு'. எனவே நம் வாழ்வில் கொஞ்சம் சிரிப்போம்! நிறையவே ஜெயிப்போம்! 
-கே.பி. மாரிக்குமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com