சூழலியல் ஆய்வுப் பயணம்!

வாழ்வின் எந்தப் படிநிலையில் இருப்பவருக்கும் பயணங்கள் முக்கியமானவை. அது இன்பச் சுற்றுலாவாக, கல்விச் சுற்றுலாவாக, ஆன்மிகச் சுற்றுலாவாக அல்லது தொழில்முறைப் பயணமாகக் கூட இருக்கலாம்
சூழலியல் ஆய்வுப் பயணம்!

வாழ்வின் எந்தப் படிநிலையில் இருப்பவருக்கும் பயணங்கள் முக்கியமானவை. அது இன்பச் சுற்றுலாவாக, கல்விச் சுற்றுலாவாக, ஆன்மிகச் சுற்றுலாவாக அல்லது தொழில்முறைப் பயணமாகக் கூட இருக்கலாம். அவை நம்முடைய அன்றாட வாழ்க்கையிலிருந்து மாறுபட்ட புதிய அனுபவங்களை- புதிய அறிவைத் தருபவையாக இருக்கின்றன.
இதுபோன்றதொரு பயணத்தை குமரி அறிவியல் பேரவை, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளி மாணவர்களுக்கு அமைத்துத் தருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பயிலும் மாணவர்கள் 55 பேரை ஆண்டுதோறும் தேர்ந்தெடுத்து, அவர்களை இளம் விஞ்ஞானிகளாக உருவாக்கி வரும் இந்த அமைப்பு, அவர்களுக்குத் தொடர்ந்து ஓராண்டுகள் அளிக்கும் பல்வேறு பயிற்சிகளில் சூழலியல் ஆய்வுப் பயணத்தையும் ஒன்றாக வைத்துள்ளது. 
"குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற 5 புவியியல் அமைப்பும் ஒருங்கே அமைந்தது ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டம். இதுபோல நம் நாட்டில் வேறு எங்கும் இல்லை. மேற்குத் தொடர்ச்சி மலை (குறிஞ்சி), முண்டந்துறை புலிகள் வனக் காப்பகம் (முல்லை), வற்றாத ஜீவநதிகளால் செழித்து விளங்கும் வயல்கள் (மருதம்), தூத்துக்குடி மாவட்டம், வைப்பார் முதல் கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு வரை 279.5 கி.மீ. நீளமான கடற்கரை (நெய்தல்), 390 ச.கி.மீ. பரப்பில் மணல் மேடான தேரிக்காடு (பாலை) ஆகியவை இதன் சிறப்புகள்.
இதுபோன்ற இயற்கைச் சூழலை கண்டுகளிப்பதும், ஆய்வு செய்வதும், பாதுகாப்பதும், விழிப்புணர்வு ஏற்படுத்துவதும்தான் குமரி அறிவியல் பேரவை- சூழலியல் ஆய்வுப் பயணத்தின் நோக்கம்'' என்றார் அதன் அமைப்பாளர் முள்ளஞ்சேரி எம். வேலையன்.
கடந்த டிசம்பர் 28, 29 -ஆம் தேதிகளில் 55 இளம் விஞ்ஞானிகளுடன் ஆய்வுப் பயணம் மேற்கொண்ட அவர், பயண அனுபவங்கள் குறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்டவை: 
"இந்த ஆண்டு "மனித கண்டுபிடிப்புகள்' (Human Innovation) என்ற தலைப்பில் இளம் விஞ்ஞானிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன் ஒருபகுதியாக கடலோர சூழலியல் ஆய்வுப் பயணம் (Coastal Environmental Study Tour) மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பயணத்தில் பங்கேற்ற 55 இளம் விஞ்ஞானிகள் 5 அணியாகச் செயல்பட்டனர். அவர்கள் கடலோர மக்களிடம் கலந்துரையாடியதோடு, விழிப்புணர்வு துண்டறிக்கைகளை அச்சிட்டு விநியோகித்தனர். 
கடந்த 28 -ஆம் தேதி பயணத்தைத் தொடங்கிய நாங்கள், நீரோடி கிராமத்திற்கு முதலில் சென்றோம். அங்கு, ஆழ்கடலில் சென்று மீன்பிடிக்கும் அனுபவம், பேரிடர் காலங்களில் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து மாணவர்கள், மீனவர்களுடன் கலந்துரையாடினர். மேலும், கடற்கரைக்குச் சென்று எவ்வாறு மீன்பிடிப்பது, எந்த வகை மீன்கள் அதிகம் கிடைக்கின்றன என்பதையும், நீரோடியின் சிறப்புகளையும் அறிந்துகொண்டனர். அப்போது அங்குள்ள ஏ.வி.எம் கால்வாய் குறித்தும் விளக்கப்பட்டது.
பிறகு, பொழியூருக்கு சென்று நெய்யாறு அரபிக் கடலில் கலக்கும் கழிமுகப்பகுதியை பார்வையிட்டோம். மார்த்தாண்டம்துறையில் மீன்பிடித் தொழிலாளர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடினர்.
தொடர்ந்து, தேங்காய்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்துக்குச் சென்றோம். இரயுமன்துறைக்கும், தேங்காய்பட்டினத்துக்கும் இடையிலான கழிமுகப் பகுதி இது. மேலும், குழித்துறையாறும், ஏ.வி.எம். கால்வாயும் இங்குதான் சங்கமிக்கின்றன. மீன்கள் நன்னீர் வளம் தேடி வரும்பகுதி இது. கடல்நீர் உப்புத்தன்மையை குறைத்துக்கொள்ள இந்த கழிமுகம் உதவுகிறது என்பதை மாணவர்கள் இந்தப் பயணத்தில் அறிந்துகொண்டனர். 
29 -ஆம் தேதி குளச்சல் சுனாமி நினைவகம், வெற்றித்தூண் போர் நினைவிடம் ஆகியவற்றை பார்வையிட்டோம். குளச்சல் மீன்பிடித் துறைமுகம், குளச்சல் முதல் மண்டைக்காடு வரையான ஏ.வி.எம் கால்வாய் குறித்தும் மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. வள்ளியாறு கடலில் கலக்கும் அரிய மணல் நிறைந்த பகுதி கடியபட்டினம். இங்கு கனிமவளம் மிக்க பலவண்ண மணல் குவிகின்றன என்பதை அறிந்து மாணவர்கள் வியந்தனர்.
முட்டம் கலங்கரைவிளக்கம், கண்காட்சிக்கூடம், தனியார் மீன்பிடித் துறைமுகம், ராஜாக்கமங்கலம்துறை கழிமுகம், பெரியகாடு சிறப்பு, மணல்திட்டுகள், தூண்டில் வளைவுகளை இளம் விஞ்ஞானிகள் பார்வையிட்டனர். தொடந்து மணக்குடி பயணம். பழையாறு அரபிக்கடலில் கலக்குமிடம். சுனாமி பேரலையால் பாதிக்கப்பட்ட இடத்தில் தற்போது அலையாத்தி காடுகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இது, நன்னீர்வளம் தேடிவரும் மீன்களுக்கு புகலிடமாகவும், பறவைகள் வாழும் சரணாலயமாகவும் மாறியுள்ளது.

தொடர்ந்து, கோவளம், குமரி வெங்கடாசலபதி ஆலயம், சுவாமி விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை என நிறைவாக வட்டக்கோட்டையில் ஆய்வுப் பயணத்தை முடித்தோம். 
இந்தப் பயணத்தின் மூலம் மாணவர்கள் சிறுவயதிலேயே சமூக இணக்கம் கற்றுக்கொள்கிறார்கள். உள்வாங்கும் திறனும், வெளிப்படுத்தும் திறனும் அவர்களுக்கு இயல்பாகவே அமைந்துவிடுகிறது'' என்றார் முள்ளஞ்சேரி வேலையன். 
முன்னாள் இளம் விஞ்ஞானி டாணிறோவஸ் கூறுகையில், "நான் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மருத்துவம் படிக்கிறேன். 8 - ஆவது படிக்கும்போது குமரி அறிவியல் பேரவை இளம் விஞ்ஞானியாக தேர்வான எனக்கு ஆய்வுச் சிந்தனையுடன் எழுதவும், தொகுக்கவும், பேசவும் வாய்ப்புக் கிடைத்தது. அந்த அனுபவத்தால்தான் இப்போது இளம் விஞ்ஞானிகளுக்கு எளிதாக வழிகாட்டவும், கருத்துகள் வழங்கவும் முடிகிறது. இந்த ஆய்வுப் பயணம் என்னை முழுமையாக மாற்றியது. எனக்கு சிரமம் எடுத்து படிக்கவேண்டிய நிலை இல்லை. கூர்ந்து கவனித்தலும், ஆய்வுக் கண்ணோட்டத்துடன் கேள்வி எழுப்புதலும், பின்னூட்டம் வழங்குதலும் என்னை தயார்படுத்திக்கொள்ள உதவின'' என்றார். 
மற்றொரு இளம் விஞ்ஞானி காயத்ரி கூறுகையில், "கடல்மட்டம் ஏன் உயர்கிறது என்பதைக் கண்கூடாக பார்க்க முடிந்தது. மேலும், எங்கும் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டிக்கிடக்கின்றன. சுற்றுச்சூழல் பராமரிப்பில் அதிக கவனம் செலுத்தவேண்டும்'' என்றார். 
இளம் மாணவர்கள் புத்தகங்களில் படித்துத் தெரிந்து கொள்வதை விட, இம்மாதிரியான சூழலியல் ஆய்வுப் பயணங்களின் மூலம் அதிகமாகத் தெரிந்து கொள்வார்கள் என்பதை அவர்களுடைய பேச்சின் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது. 
- இரா.மகாதேவன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com