இன்று புதிதாய்ப் பிறந்தோம்!

வாழ்க்கை என்பது தீர்க்கப்பட வேண்டிய ஒரு பிரச்னை அல்ல; அது அனுபவிக்கப்பட வேண்டிய உண்மை. 
இன்று புதிதாய்ப் பிறந்தோம்!

வாழ்க்கை என்பது தீர்க்கப்பட வேண்டிய ஒரு பிரச்னை அல்ல; அது அனுபவிக்கப்பட வேண்டிய உண்மை. 
- சோரென் கீர்கேகார்ட்
ஒவ்வொரு புத்தாண்டும் ஒரு புதிய நாட்காட்டியுடனும், வசதி படைத்தவர்களுக்கு புத்தாடையுடனும், இனிப்புடனும் தொடங்குவது என்னவோ வழக்கமான நிகழ்வுதான். ஆனால், அதையெல்லாம் எதிலுமே மாறாத அதே "பழைய' மனிதனாகவே செக்குமாடுகளைப் போல செய்துகொண்டிருப்பதால் என்ன பயன்? 
பிறக்கின்ற ஒவ்வொரு புத்தாண்டிலும் பெரும்பாலோனோர் அவர்தம் உள்ளூர் அம்மன் கோயிலில் ஆரம்பித்து, இதர சைவ, வைணவ ஆலயங்களுக்குச் சென்று சிறப்பு வழிபாடு செய்கின்ற அளவில்தான் நாம் புத்தாண்டின்போது புதிதாக பிறக்கின்றோம். ஆனால், செயலில், சிந்தனையில், வாழ்க்கை முறையில் ஏற்றமிகு மாற்றங்களோடு புது ஆண்டை எதிர்கொள்பவர்கள் நம்மில் எத்தனைபேர் இருக்கின்றோம்?
ஒவ்வொரு நாளும் மனித உடம்பின் இலட்சக்கணக்கான உயிரணுக்கள் (Cell) மடிந்து, அதே அளவிலான புதிய உயிரணுக்களால் புதுப்பிக்கப்படுகின்றன என்கிற அறிவியல் உண்மை நாம் எல்லோரும் அறிந்ததே. அப்படி புதுப்பிக்கப்படும் செல்களால் உயிர்ப்பிக்கப்படும் உடலின் எடையும் (Weight), ஒரு வருடத்தில் மடிந்து போகும் செல்களின் நிறையும் (Mass) ஒரே அளவில் இருக்கிறது என்று சொல்கிறது அறிவியல். கூட்டி கழித்துப் பார்த்தால்... ஒவ்வொரு நாளும் நாம் "இன்று புதிதாய்ப் பிறக்கிறோம்' என்பதே உண்மை.
சமூக முன்னேற்றம், சமூக வளர்ச்சி எல்லாமே விளையும் வயல் நமது மாணவர்கள். "அன்பு' எனும் நன்னெறியைப் பின்பற்றி வாழ்க்கை அஞ்சத்தக்கதல்ல என்பதை உணர்ந்து பயணிக்க வேண்டிய பருவம் மாணவப்பருவம். நாம் கடலாக இல்லை என்றாலும் களங்கமற்ற ஏரியாக இருக்கலாம். வெட்கப்பட ஒன்றுமில்லை. மனம் எனும் தோணியை நல்லெண்ணம் என்கிற திடமான உரம் கொண்டு நிரப்பினால், அச்சப்பட என்ன இருக்கிறது? 
மாகாகவி பாரதியார் விரும்பியதெல்லாம், "தேடிச் சோறு நிதம் தின்று, பல சின்னஞ்சிறுகதைகள் பேசி, மனம் வாடித் துன்பம் மிக உழன்று, பிறர் வாடப் பல செயல்கள் செய்து, நரை கூடிக் கிழப் பருவம் எய்தி, கொடுங்கூற்றுக்கு இரை எனப் பின் மாயும் வேடிக்கை வாழ்வை அல்ல; சுடர்மிகு அறிவு கொண்டு மண்ணில் நல்ல வண்ணம் வாழும் உயர் வாழ்வினையே'. 
உள்ளங்கையில் தங்களது கைபேசி மூலம் உலகையே பார்க்கின்ற வாய்ப்பினைப் பெற்றுவிட்ட நமது இளையதலைமுறையினரும் நாமும், கவலையற்றவர்களாக, அச்சமற்றவர்களாக, குழப்பமற்றவர்களாக இருக்கின்றோமா? பாகுபாடற்று மனிதர்களிடமும் மனிதர்கள் அல்லாத பிற உயிர்களிடமும் அன்பு செய்கின்றவர்களாக இருக்கின்றோமா?
கவலைப்படுவதையே இயல்பாகக் கொண்டிருக்கிற மனிதர்களே நம்மில் அதிகம். வீணாகக் கவலைப்பட்டுக் கொண்டிருப்பதால் மட்டும் ஒருவரது கவலை தீர்ந்துவிடாது. எனவே,
"நெஞ்சிற் கவலையை நிதமும் பயிராக்கி... அஞ்சி உயிர்வாழ்தல் அறியாமை' என்று அறைந்து சொல்கிறார் பாரதி. "கவலைப்படுதலே கருநரகம்; கவலையற்று இருத்தலே முக்தி' என்றும் திண்ணமாக எடுத்துரைக்கிறார் அவர்.
"அஞ்சி யஞ்சிச் சாவார் - இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே' என்று அன்று நெஞ்சு பொறுக்காமல் வெதும்பிப் பாடிய பாரதி, "அச்சம் தவிர்' என அவர்தம் ஆத்திசூடியைத் தொடங்கி நமக்கெல்லாம் ஊக்கப் படையல் வைத்திருக்கின்றார். குழப்பமே உருவாக நடமாடிக் கொண்டிருப்பவர்களுக்கு "திருவைப் பணிந்து, நித்தம் செம்மைத் தொழில் புரிந்து, வருவது வருக என்றே மகிழ்வுற்று இருக்க வேண்டும்' என்கிற அடிப்படையான வாழ்வியல் சிந்தனைகளைப் பதிவிட்டு சென்றிருக்கிறார் இந்த மகாகவி.
வள்ளுவர் சொன்ன "சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி' என்பதனை அடியொற்றி சினத்தின் கேட்டினையும் பொறுமையின் பெருமையினையும், "சினங் கொள்வார் தமைத்தாமே தீயாற் சுட்டுச் செத்திடுவார் ஒப்பாவார்...கோபத்தால் நாடியிலே அதிர்ச்சி யுண்டாம்...கொடுங் கோபம் பேரதிர்ச்சி; சிறிய கோபம் ஆபத்தாம் அதிர்ச்சியிலே சிறிய தாகும்' என்று தனது சீரிய வரிகளால் நமக்காகவே பாரதியார் பாடியுள்ளார். 
"தன்னை அறிதல்' என்கிற உயரிய கோட்பாடும் புரிதலும் ஒருவன் வாழ்க்கையில் உயர முக்கியமான காரணி. "தன்னை ஆளல்; தன்னை வெல்லல்... தனைத்தான் ஆளுந்தன்மை நான் பெற்றிடில், எல்லாப் பயன்களுமே தாமே எய்தும்' என "விநாயகர் நான்மணி மாலை'யில் சொன்ன பாரதி, "ஆத்ம ஜயம்' என்ற வேதாந்தப்பாடலில், "தன்னை வென்றாளும் திறமை பெறாது இங்கு தாழ்வுற்று நிற்போமா?'" என்று நெஞ்சம் நிமிர்த்தி பிரகடனம் செய்திருக்கிறார். 
"சென்றதினி மீளாது, மூடரே! நீர் எப்போதும் சென்றதையே சிந்தை செய்து கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து குமையாதீர். சென்றதனைக் குறித்தல் வேண்டாம். இன்று புதிதாய்ப் பிறந்தோம்' என்கிற பரவச வரிகளை ஒவ்வொரு நாளும் நம் மனதில் நிறுத்தி, இன்று மட்டுமல்ல, நாளையும் புதிதாய்ப் பிறப்போம் என்கிற உறுதியோடு, நம் வாழ்வு முழுவதும் பயணிப்பதே புதிய பிறப்பு என்பதைப் புரிந்து கொள்வோம். 
- கே.பி. மாரிக்குமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com