வேறுபாடுகளால் வீழ்ச்சி, ஒற்றுமையால் வளர்ச்சி! விஞ்ஞானி வெ. பொன்ராஜ்(அப்துல்கலாமின் முன்னாள் அறிவியல் ஆலோசகர்)

"கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்தகுடி' என்று புறப்பொருள் வெண்பா மாலை என்ற நூல் கூறுவதைக் கொண்டு தமிழின் பழமையை உணரலாம்.
வேறுபாடுகளால் வீழ்ச்சி, ஒற்றுமையால் வளர்ச்சி! விஞ்ஞானி வெ. பொன்ராஜ்(அப்துல்கலாமின் முன்னாள் அறிவியல் ஆலோசகர்)

மிச்சமெல்லாம் உச்சம் தொடு 52
"கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்தகுடி' 
என்று புறப்பொருள் வெண்பா மாலை என்ற நூல் கூறுவதைக் கொண்டு தமிழின் பழமையை உணரலாம். உலகின் மூத்த மொழிகளுள் ஒன்றாக விளங்குகின்ற மொழி தமிழ் மொழியாகும்.
"வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகம்' என்று தமிழ்நாட்டின் எல்லை கூறப்படுகிறது. எனவே, வடக்கே வேங்கடமலை முதல் தெற்கே குமரிமுனை வரை தமிழ் பேசப்பட்டதாக நாம் இதன் மூலம் அறிகிறோம். 
வரலாற்றுச் சான்றுகள் மனித வரலாற்றை வரலாற்றுக்கு முந்திய காலமாக கற்காலம், பெருங்கற்காலம், இடைக் கற்காலம், புதிய கற்காலம், மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம், சங்க காலம் இப்படி பலவகைகளில் பிரிக்கின்றன. 
3000 ஆண்டுகள் வாழ்ந்து ஆண்டுக்கு ஒன்று என்று 3000 திருமந்திரம் படைத்தார் திருமூலர். இவர் வாழ்ந்த காலம் கி.மு. 5000 வருடங்களுக்கு முந்தையது எனினும் இவரால் அருளப்பட்ட திருமந்திரமாலை பல காலத்திற்கு பின்னரே உலகிற்கு வழங்கப்பட்டது என்பதால் தற்கால அறிஞர்கள்திருமந்திரத்தின் காலத்தை கி.பி. என்று கூறுகின்றனர். இதனைச் சைவத்திருமுறை பன்னிரண்டினுள் பத்தாவது திருமுறையாய்த் தொகுத்துள்ளனர்.
தமிழக வரலாறு கி.மு. 3000-1400 பையம்பள்ளியில் புதிய கற்காலமாக சான்றுகள் கிடைத்து கி.மு. 2000-300 தமிழகத்தின் இரும்புக்காலம் கண்டறியப்பட்டு, கி.மு. 1000-300 வரை பெருங்கற்காலம் கண்டறியப்படுகிறது. அதில் இருந்து தான் முற்சங்க காலம் தொடங்குகிறது. தமிழகத்தில் புதிய கற்காலம் என்பது கி.மு. 3000 - 1000 வரை நிலவியது. குறிப்பாக தமிழகத்தின் வட ஆற்காடு பகுதியிலுள்ள பையம்பள்ளியில் இப்புதிய கற்காலச் சின்னங்கள் அதிகம் காணப்படுகின்றன.
சுமார் கி.மு. 2,000 - 300 - தமிழகத்தின் இரும்புக்காலம் பொதுவாகவே அறிஞர்களால் பொ.மு. 500 என்றே நிறுவப்பட்டு வந்தது. ஆனால் ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வுகள் விரைவு பெற்ற காலம் அதை இன்னும் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக நிறுவியது. இதற்கு முன்னரே செம்பு, இரும்பு, தங்கம் போன்ற உலோகங்கள் இங்கு உபயோகப்படுத்தப்பட்டுள்ளன எனத் தெரிய வந்தது. ஆதிச்சநல்லூர் தொல்லியல் களத்துக்கு அடுத்து இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தால் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் பெரிய அளவிலான அகழாய்வு கீழடி. இது வைகை ஆற்றங்கரையில் உருவான தமிழர் கலாசாரத்தை வெளிக்கொணர்கிறது. இது சுமார் 3000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என அங்கு கண்டுபிடிக்கப்பட்ட ஆபரணங்கள் மூலம் காணலாம். இந்த அகழ்வாய்வில் சிந்துவெளி நாகரிகத்திற்கும் தொடர்புள்ளது.
முதற்கட்டமாக, இந்த கீழடி களம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் இருந்து கி.பி. பத்தாம் நூற்றாண்டு வரையான காலப் பகுதியைச் சேர்ந்த வசிப்பிடமாக கணிக்கப்பட்டது. மேலதிக உறுதிப்படுத்தல்களுக்காக இந்த அகழ்வாய்வில் இருந்து இரண்டு மாதிரிகள் கரிமத் தேதியிடல் முறையில் பகுப்பாய்வு செய்ய அனுப்பட்டன. சூலை 2017 -இல் வெளிவந்த இதன் முடிவுகள் கீழடி மையம் சுமார் 2,200 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதை உறுதி செய்தன. நான்காம் கட்ட அகழ்வாய்வின் போது பெறப்பட்ட பொருட்களை கரிமத் தேதியிடல் முறையில் பகுப்பாய்வு செய்தபோது கீழடியில் கிடைத்த ஒரு கலைப்பொருள் கி.மு. 600-ஐச் (கி.மு.ஆறாம் நூற்றாண்டு) சேர்ந்தது எனத் தெரிய வந்துள்ளது. இப்படி பல்வேறு வரலாற்று சான்றுகளின் ஆய்வுகள், தமிழ் மொழி கூறும் இலக்கண, இலக்கிய படைப்புகளின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தி, தமிழ் மக்களது பண்பாட்டிற்கும், வேளாண்மைக்கும், கடல்தாண்டிய வர்த்தகத்திற்கும், தொழிலுக்கும், நாகரீகத்திற்கும், ஆட்சி முறை நிர்வாகத்திற்கும் சான்றுகளாக அமைந்திருக்கின்றன. இது தமிழ் மொழிக்கும், தமிழருக்கும் மட்டுமே உரித்தான பாரம்பரியம். 

கி.மு. 600 தமிழ்ப் பிராமி எழுத்து வந்து நடைமுறைத்தமிழ் எழுத்து உருவாகிறது. ஆய்வுக் கட்டுரைகள் தமிழி எழுத்துமுறை கி.மு.5-ஆம் நூற்றாண்டு காலத்துக்குரியன எனவும் மற்ற பிராமி எழுத்துமுறைகள் கி.மு. 3- ஆம் நூற்றாண்டு காலத்துக்குரியன எனவும், அதாவது அசோகருக்கு பிற்பட்ட அல்லது ஆரம்ப மெளரியப் பேரரசு (சுமார் கி.மு. 322-185) காலத்துக்குரியவை எனவும் பொதுவாகக் கருதப்படுகின்றன. தமிழ்ப் பிராமி தற்போதைய தமிழ் எழுத்து முறை, மலையாள எழுத்துமுறை என்பனவற்றின் முன்னைய முறையான வட்டெழுத்தின் முன்னோடியாகும். இலக்கிய ஆய்வு அடிப்படையில், தமிழர் குறைந்தது கி.மு. 3-ஆம் நூற்றாண்டிலிருந்து எழுத்துமுறை பற்றி அறிந்திருந்தனர் என்கிறார் கமில் சுவெலபில் என்ற அறிஞர்.
அதற்கு அடுத்து சங்க காலம் கிமு 500-50 வரை என்று வரையறுக்கப்படுகிறது. வணிக காலம் கி.பி. 1-250 வரை துறைமுகங்கள் மூலம் வணிக வர்த்தகம் கிரேக்கத்தோடு நடந்திருக்கிறது. 
சங்க காலத்திற்கு பின்னான காலம் கி.பி. 300-460 வரை பல்லவ அரசு தொடங்கி, கி.பி. 300 -590 வரை களப்பிரரின் ஆட்சிக்காலம். கிபி 550-859 வரை பல்லவர்கள் - பாண்டிய மன்னர்களின் ஆட்சிக்காலம். இதில் பெரும்பாலும் போர்கள் நடக்கின்றன. ஆட்சிகள் மாறுகின்றன. காட்சிகள் மாறுகின்றன. சொல்வதற்கு ஏதேனும் இருக்கிறது என்றால் கி.மு. 700-730 களில் கட்டப்பட்ட மாமல்லபுரம் சிற்பங்கள் மட்டும் தான். கி.பி. 887-1256 வரை சோழர் காலம் மற்றும் யாழ்ப்பாண அரசு உருவாக்கப்பட்ட காலம். இந்த காலகட்டத்தில் தான் கி.பி. 1010- இல் ராஜ ராஜ சோழன் தஞ்சைப் பிரகதீசுவரர் கோயிலைக் கட்டி முடிக்கிறார். 
கி.பி. 1190-1260 வரை சோழரிடமிருந்து பாண்டியருக்கு ஆட்சி மாறுகிறது. கி.பி. 1214-1370 பாண்டியர் எழுச்சி பெறுகிறது. அதன் பிறகு இசுலாமியர் ஆட்சி உருவாகிறது. கி.பி. 1370-1796-இல் விஜயநகரப் பேரரசு, திருமலை நாயக்கர் மற்றும் ஐரோப்பிய ஆட்சிகளாக தொடர்ந்து மாறுகிறது. கி.பி. 1749 -இல் கிழக்கிந்திய நிறுவனம் மற்றும் பாளையக்காரர்களிடையே போர்கள் நடக்கின்றன. கி.பி. 1751 - பூலித்தேவன் கும்பினிப்படைத் தலைவர்களான முகமது அலி மற்றும் அப்துல் ரகீம் போன்றவர்களை வரிமறுப்புப் போரில் தோற்கடித்தல். 
கி.பி.1780 ஐப்பசித் திங்கள் ஐந்தாம் நாள் வேலுநாச்சியார் தலைமையில் ஒரு படை திண்டுக்கல்லிலிருந்து சிவகங்கை நோக்கிப் புறப்பட்டு சுதந்திரப் போராட்டத்தில் முதல் வெற்றி பெற்ற பெண் வீராங்கனையாக தனது ஐம்பதாவது வயதில், தனது கணவரைக் கொன்ற ஜோசப் ஸ்மித்தையும் தளபதி பான் ஜோரையும் தோற்கடித்தார்.
கி.பி. 1800 - களில் பிரித்தானிய ஆட்சி தொடங்கியது. தமிழர்கள் பிரித்தானிய அரசால் வேலை செய்வதற்கென்று தமிழ்நாட்டில் இருந்து சிங்கப்பூர், இலங்கை, தென்ஆப்பிரிக்கா, மலேசியா அழைத்து செல்லப்பட்டார்கள். 
இந்தியச் சிப்பாய்க் கலகம் (1857) அல்லது சிப்பாய்க் கலகம் என்பது பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் சிப்பாய்கள் மே 10, 1857- இல் இந்தியாவில் மீரட் என்ற நகரில் கிளர்ச்சியைத் தொடங்கினார்கள். 
நவீன இந்திய வரலாற்றில் 1857 -இல் நடைபெற்ற போர்தான் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. ஆங்கிலேயர்கள் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியை அழித்துவிட்டு ஆங்கில முடியரசின் நேரடி ஆட்சியை அமல்படுத்தினர். முடியரசின் பிரதிநிதியாக இந்திய வைஸ்ராய் நியமிக்கப்பட்டார். புதிய ஆட்சிக் கொள்கையின் அறிவிப்பின்படி "இந்திய அரசர்கள், தலைவர்கள் மற்றும் மக்கள்" ஆகிய அனைவரும் பிரித்தானிய ஆட்சியின்கீழ் சமமாக நடத்தப்படுவார்கள் என்று விக்டோரியா அவர்கள் அறிவித்தார், ஆனால் பிரித்தானிய அரசின் மீதான நம்பிக்கையின்மை 1857 ஆம் ஆண்டு கலகத்திற்கு முன்னோடியானது.
அடுத்து இந்தியாவின் சுதந்திர போராட்டம் பல்வேறு வடிவங்களை எடுக்கிறது. அது தொடங்கி 20 ஆண்டுகளுக்குப் பின் தென்ஆப்பிரிக்கா இனவெறி போராட்டம் இந்தியாவின் வக்கீல் காந்தியை மகாத்மா காந்தியாக்கி இந்தியாவிற்குத் தருகிறது. அவருடைய எளிமை, அகிம்சை, சத்தியாக்கிரகம் போன்ற தொலைநோக்குப் பார்வை விரைவிலேயே லட்சக்கணக்கான சராசரி இந்தியர்களை இந்த அமைப்பிற்குள் கொண்டுவந்து அதை மேல்குடியினர் போராட்டம் என்பதிலிருந்து தேசிய மக்களது சுதந்திரப் போராட்டமாக மாற்றியமைத்தது. தேசியவாத நோக்கம் சராசரி இந்தியர்களின் பொருளாதாரத்தை உருவாக்கும் நலன்கள் மற்றும் தொழில்துறை உள்ளிட்டவற்றை சேர்த்துக் கொண்டு விரிவடைந்தது. அடக்குமுறைத் தன்மையோடு இந்தியா இரண்டாம் உலக போரில் இறக்கிவிடப்பட்டதற்கு 1937 மற்றும் 1939 இல் இரண்டுமுறை காங்கிரஸின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சுபாஷ் சந்திர போஸ், கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து, இந்திய தேசிய இராணுவத்தை உருவாக்கினார்.
"வெள்ளையனே வெளியேறு இயக்கம்' என்பது, இந்தியாவிற்கு உடனடியாக சுதந்திரம் வழங்கக் கோரிய காந்தியின் அழைப்பிற்கும் இரண்டாம் உலகப்போருக்கு இந்தியர்களை அனுப்பி வைத்ததற்கு எதிராகவும் ஆகஸ்டு 1942 -இல் இந்தியாவில் தொடங்கப்பட்ட ஒரு சட்டத்திற்கு கீழ்ப்படியாமை இயக்கமாகும். சுதந்திர போராட்டம் தீவிரம் அடைந்ததைத் தொடர்ந்து 15 ஆகஸ்டு 1947 இந்தியா சுதந்திரம் அடைந்தது. 
இதில் நாம் கவனிக்க வேண்டிய செய்தி என்ன என்பது தான் முக்கியம். அது என்ன?
மனித நாகரிகத்தின் ஆணிவேராக இருந்தது தமிழ்நாடு. கற்காலம் தொட்டு தமிழனின் தொன்மைக்கும், இரும்புக்காலத்தில் தொழிலின் தொன்மைக்கும், சங்க காலத்தில் இலக்கணம், இலக்கியத்தின், குறளின் தொன்மைக்கும், வேளாண்மையின் தொன்மைக்கும் சான்றுகளோடு நிரூபிக்கப்பட்டது தான் தமிழ்நாட்டின் பண்பாடு மற்றும் நாகரிகம். 
கி.பி 21-ஆம் நூற்றாண்டில் மேலை நாடுகளில் STEAM Education 
மூலம் மாணவர்களுக்கு பாடம் நடத்துகிறார்கள். STEAM என்றால் (Science, Technology, Engineering, Arts and Mathematics) இதை வைத்து மாணவர்களுக்கு வளர்ந்த நாடுகள் பள்ளிகளில் பாடம் நடத்துகிறார்கள் இப்போது. ஆனால் அறிவியலுக்கும், தொழில் நுட்பத்திற்கும், பொறியியலுக்கும், கலைக்கும், கணிதத்திற்கும் எடுத்துக்காட்டாக விளங்குவது தான் கி.பி. 10- ஆம் நூற்றாண்டில் இராச இராசசோழன் STEAM கோட்பாட்டின் படி உருவாக்கிய தஞ்சை பெரிய கோவில். அப்படி என்றால் இந்த கலை, அறிவியல், தொழில்நுட்பம் அனைத்தையும் தெரிந்த சான்றோர்கள் தமிழகத்தில் 1000 ஆண்டுகளுக்கு முன்பே இருந்திருக்கிறார்கள் என்று தானே அர்த்தம்? 
கி.பி. 1ஆம் நூற்றாண்டில் கரிகாலன் கட்டிய கல்லணை, இன்றைக்கும் ஆர்ப்பரித்து வெள்ளமென வரும் காவேரி ஆற்றை தடுத்து அங்கு காவிரி ஆறானது உள்ளாறு (கொள்ளிடம்), காவிரி, வெண்ணாறு, புது ஆறு என நான்காகப் பிரிகிறது. உள்ளாறு(கொள்ளிடம்) மீண்டும் கொள்ளிடத்தில் இணைகிறது. காவிரி இவ்வாறு பிரியுமிடத்தில்தான் கல்லணை கட்டப்பட்டுள்ளது. இப்படி 4 கிளை ஆறுகளாகப் பிரித்து அனுப்பும் வல்லமை கொண்ட அணை பொறியியல் தொழில்நுட்பத்தின் முன்னோடியாக தொழில்நுட்ப வல்லமை பெற்ற தமிழர்கள் வாழ்ந்த நாடு எப்படி வணிகர்களுக்கு அடிமையானது? 
தற்போதுள்ள அணைகளில் கல்லணையே மிக பழமையானது எனவும், தற்போதும் புழக்கத்தில் உள்ளது எனவும் அறியப்படுகிறது. இதுவே உலகின் மிகப்பழமையான நீர்ப்பாசனத் திட்டம் என்றும் கூறப்படுகிறது. மணலில் அடித்தளம் அமைத்து கல்லணையைக் கட்டிய பழந்தமிழர் தொழில்நுட்பம் இன்று வரை வியத்தகு சாதனையாகப் புகழப்படுகிறது.
கல்லணையின் நீளம் 1080 அடி அகலம் 66 அடி மற்றும் உயரம் 18 அடியாகும். இது நெளிந்து வளைந்த அமைப்புடன் காணப்படுகிறது. கல்லும் களிமண்ணும் மட்டுமே சேர்ந்த ஓர் அமைப்பு 1900 ஆண்டுகளுக்கு மேலாக காவிரி வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தி வருவது அதிசயமே ஆகும். 1839 - இல் அணையின் மீது பாலம் ஒன்று கட்டப்பட்டது.
ஆனால் காலப்போக்கில் இவை அனைத்தையும் இழந்து நாம் அடிமைகளாக்கப்பட்டோம் என்பது தானே உண்மை? எப்படி நடந்தது? சாதனை படைத்த தமிழ் மன்னர்களுக்கு பின் வந்தவர்கள் குறு நில மன்னர்கள் ஆனார்கள். ஆதிக்கம் பிறந்து, சாதி தோன்றியது. ஆதிக்கம் சாதியால் புகுந்தது. மக்களை பிறப்பால் சாதிய அடையாளப்படுத்தி வேறுபடுத்தினார்கள். தீண்டாமை தோன்றியது. சமூக வேறுபாடு என்னும் களை தோன்றியது. சாதியால் மனிதர்கள் பிரிக்கப்பட்டார்கள். சமூக, பொருளாதார வேறுபாடு கொண்ட மேடு பள்ளம் உள்ள சமுதாயம் தோற்றுவிக்கப்பட்டது. கல்வி உரிமை மறுக்கப்பட்டது. சமூக நீதிக்குப் பங்கம் விளைவிக்கப்பட்டது. வணிகம் செய்ய வந்த மேலை நாட்டார் இந்த வேறுபாடுகளைப் பயன்படுத்தி ஆட்சியைப் பிடித்தார்கள். அடக்குமுறையால் எதிர் குரல் கொடுத்த குறுநில மன்னர்களை பீரங்கி படை பலத்தாலும், சூழ்ச்சியாலும், நயவஞ்சகத்தாலும் கொன்று ஒழித்தார்கள். அநியாய வரி வசூலித்தார்கள். நாட்டின் வளங்களைச் சூறையாடினார்கள். கொள்ளை அடித்தார்கள், கனிம வளம், பொருள் வளம் எடுக்கப்பட்டு ஏற்றுமதியானது. அந்நிய நாட்டில் ஏற்படுத்தப்பட்ட தொழிற்புரட்சியால் நம் வளம் அங்கு மதிப்பு கூட்டப்பட்டு பொருள்களாக இறக்குமதி செய்யப்பட்டு விற்கப்பட்டது. 400 ஆண்டு காலம் அடிமை வாழ்வு வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சுதந்திரத்திற்குப் பின் இந்த இந்தியா எப்போதெல்லாம் ஒற்றுமையாக வேறுபாடு இன்றி அனைத்து மக்களையும் அரவணைத்து தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர்களால் எழுந்து நின்றதோ அப்போதெல்லாம் வளர்ந்திருக்கிறது. 
எப்போதெல்லாம் மக்களிடம் இருக்கும் வேறுபாடுகளைப் பெரிதுபடுத்தி கோபத்தால் நமக்குள் பிரிவினை ஏற்படுத்தப்படுகிறதோ அப்போதெல்லாம் ஒற்றுமையாக இருக்கும் விவேகமான காரியவாதிகளிடம் நாம் அடிமையாவது நிச்சயம். எப்போதெல்லாம் நமக்குள் இருக்கும் திறமையைப் பலப்படுத்தி சாதி, மதம், இனம், மொழி வேறுபாடின்றி மக்களின் சமூகப் பொருளாதார, அரசியல் மேம்பாட்டிற்கு வழிவகுக்கிறோமோ அப்போதெல்லாம் மனித சமூகம் மறுமலர்ச்சி அடைந்திருக்கிறது. உலகம் எப்படி தங்களது நாடுகளைக் கட்டியமைத்து வளர்ச்சிப் பாதைக்கு வித்திட்டது. இந்தியா எப்படி அதை எதிர் கொண்டது, தொடர்ந்து பார்போம்.
உங்கள் கனவுகளை, இலட்சியங்களை பகிர்ந்து கொள்ள தொடர்பு கொள்ளுங்கள்:
vponraj@live.com  
(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com