முந்தி இருப்பச் செயல்: பேச்சுத்திறன்- 2

தகவல் பரிமாற்றமுறைகள் போலவே, பேச்சிலும் கூட நான்கு வகைகளைக் கண்டறிகிறோம். 
முந்தி இருப்பச் செயல்: பேச்சுத்திறன்- 2


தகவல் பரிமாற்றமுறைகள் போலவே, பேச்சிலும் கூட நான்கு வகைகளைக் கண்டறிகிறோம். 

திண்ணைப் பேச்சு: 

திண்ணையில், தேநீர்க்கடையில், முடி திருத்தகத்தில் காலநிலை பற்றியோ, கரோனா குறித்தோ, விலைவாசி தொடர்பாகவோ, அல்லது கிண்டலும் கேலியுமாகவோ  பேசுகிற ஆபத்தற்ற அளவளாவல்கள். இவற்றில் பெரிய உள்அர்த்தங்கள் இருப்பதில்லை. அதேபோல, உறவுகள் முறிவதற்கான வாய்ப்புக்களும் இருக்காது.

கட்டுப்படுத்தும் பேச்சு: 

தகவல் பரிமாற்றம் எதுவுமில்லாமல், வெறுமனே ஆணையிடுவது, அதட்டுவது, மிரட்டுவது, ஒடுக்குவது, சண்டையிடுவது, அறிவுரைப்பது, வழிகாட்டுவது போன்ற  பேச்சுகள். முதலாளி-தொழிலாளி, பெற்றோர்-குழந்தைகள் போன்றோருக்கிடையே நடக்கும் இம்மாதிரிப் பேச்சுகளிலும் பெரிய உள்அர்த்தங்கள் இருப்பதில்லை, ஆனால் உறவுகள் முறிவதற்கான வாய்ப்புகள் ஏராளம் உண்டு.

தேடல் பேச்சு: 

கலந்தாலோசித்தல், பகுப்பாய்வு செய்தல், விவாதித்தல், விளக்குதல், விவரித்தல் போன்ற  பேச்சுகள். இவற்றில் உள்அர்த்தங்கள் அதிகமிருந்தாலும், உறவுகள் முறிவதற்கான வாய்ப்புகள் பெரிதாக இருப்பதில்லை.

நேர்படப் பேசுதல்: 

கவனத்துடன், இதயம் திறந்து, ஆழமான  புரிதலுடன், மனம்விட்டுப் பேசுவது. இம்மாதிரி பேச்சில் உள்அர்த்தங்களும் அதிகமிருக்கும், உறவுமுறியும் வாய்ப்புகளும் அதிகமிருக்கும்.

சமற்கிருதத்திலும் நான்கு வகையான  பேச்சுகளைக் குறிப்பிடுகிறார்கள். முதலாவது, இரண்டு பேருக்கிடையே "உண்மை' எதுவென்று கண்டறிய நடக்கும் "வாதம்.' இரண்டாவது, தன்னுடைய நிலைப்பாடு மட்டும்தான் சரி, எதிராளி நிலைப்பாடு முற்றிலும் தவறானது என்று உறுதியாய் எண்ணிக்கொண்டு, அவரைத் தோற்கடித்து தன்பால் இழுக்க நடத்தப்படும் "ஜல்பம்' (சொற்போர்).

மூன்றாவது, அடுத்தவர் சிந்திக்கும் வழியிலேயே  சென்று அவர் போலவே வாதிட்டு, அவரது நிலைப்பாட்டைக் கேலியும், கிண்டலும் செய்யும் "விதண்டாவாதம்' (எள்ளிநகையாடல்). நான்காவது, தன்னெதிரே நிற்பவரின் அறிவை, திறமையை, மாண்பை, கண்ணியத்தை சந்தேகிக்காமல், கேள்விக்குள்ளாக்காமல், அவரது  புரிதலை அல்லது நிலைப்பாட்டை தெளிவாக விளங்கிக் கொள்வதற்காக நடத்தப்படும் மனம்திறந்த "சம்வாதம்' (கருத்துப் பரிமாற்றம்). இந்த நேர்படப் பேசும் திறத்தைத்  திட்டமிட்டு  வளர்த்தெடுத்தாக வேண்டும். 

இப்பூவுலகில் உயிர்வாழ வேண்டுமென்றால் பேசத் தெரிய வேண்டும். தனிப்பட்ட வாழ்க்கை போலவே, செய்யும் வேலையிலும் பேச்சு மிகவும் முக்கியம். "கற்றது உணர விரித்துரைத்தல்' என்கிறார் வள்ளுவர். அதாவது தாம் கற்றவற்றைப் பிறரும் அறியும்படியாக விளக்கிச் சொல்லும் வல்லமை நமக்கு வேண்டும். எந்த வேலையை நீங்கள் தேர்ந்தெடுத்தாலும், உங்கள் அறிவை, திறமைகளை, அனுபவங்களைப் பிறரோடு பகிர வேண்டிய  தேவை கட்டாயம் எழும். இந்த  திறமை இல்லாதவர்களை "நாறா மலரனையர்' (மணம் வீசாத மலரைப் போன்றவர்கள்) என்று வள்ளுவர் குறிக்கிறார். செய்யும் தொழிலில் மணம் வீசுவது என்பது தெளிவாக  பேசத் தெரிந்திருப்பதுதான்.

பேசத் தெரிவது போலவே, நம் கேள்விகளை, சந்தேகங்களை, நமக்குத் தெரியாதவற்றை பிறரிடம் கேட்கவும் தெரிய வேண்டும். "மதுரைக்கு வழி வாயிலே' என்று எனது நண்பர் ஒருவர் அடிக்கடி  கூறுவார். அதாவது மதுரைக்குப் போக வேண்டும் என்றால், வாயைத் திறந்து வழியைக் கேள் என்று குறிக்கிறது இந்த முதுமொழி. கேட்காத  தகவல் கிடைக்காது. "கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும்' என்பதுதானே விதி.தனிப்பட்ட முறையில் உங்கள் எண்ணங்களை, கருத்துக்களை எடுத்தியம்புவதும், உங்கள் கேள்விகளை, சந்தேகங்களைக் கேட்பதும் போலவே, உங்களோடு வேலை செய்யும் பத்துக்கணக்கான ஊழியர்கள் மத்தியில் ஏதாவது ஒரு விடயம் குறித்து ஒரு வழங்குரை (பிரசன்டேஷன்) செய்ய வேண்டிய  தேவையும் எழலாம். அப்போது நீங்கள் என்னென்ன செய்ய 
வேண்டும்?

உங்களை அறிமுகம் செய்து கொண்டு, பார்வையாளர்களை உற்றுநோக்கி, அவர்கள் கண்களைப் பார்த்து, உற்சாகமூட்டும் வகையில், களிப்பூட்டும் முறையில் சக்தியோடு  பேசுங்கள்.

குறிப்புகள் வைத்துக் கொண்டு  பேசலாம். ஆனால் எக்காரணம் கொண்டும் எழுதி வைத்துப் படிக்காதீர்கள். நீங்கள் சொல்ல வேண்டியவற்றைத் தெரிந்து கொண்டு, சுருங்கச் சொல்லி, அதனை திருப்பிச் சொல்லி, விறுவிறுப்பான ஒரு மேடை நிகழ்வாக நடத்துங்கள்.

எல்லாரும், எப்போதும் செய்வதுபோல அல்லாமல், உங்கள் வழங்குரையை தனித்துவத்துடன் நடத்துங்கள். உங்கள் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்துங்கள். நீங்கள் பதற்றத்துடன் இருந்தால், பார்வையாளர்களும் பதற்றத்துடனேயே இருப்பார்கள். நீங்கள் பேசும் கருத்துக்களை விட, உங்கள் பரபரப்பின்மீதே அவர்கள் கவனம் செலுத்துவார்கள். எனவே அதனைத் தவிர்ப்பது மிக முக்கியம்.

ஆயாசமாக, இனிமையாகப் புன்னகைத்தவாறே, அந்த அனுபவத்தை ரசித்துப் பேசுங்கள். ஆழமாக மூச்சுவிட்டவாறே, குரலை சரியாக்கிக்கொண்டு, மிதமான வேகத்தில், தெளிவாகப் பேசுங்கள். தேவைப்படும்போது, சற்றே நிறுத்திக் கொண்டு  தொடருங்கள்.

அவர்களிடம் பேசும் அனுபவத்தை மிகவும் ரசித்தவாறே, பார்வையாளர்களின் நட்பை அனுபவித்தவாறே, அவர்களுக்கும் இதனை ஒரு மகிழ்ச்சியான அனுபவமாக மாற்றுங்கள்.

தொழில் வெற்றிக்கு இது ஒரு மிக முக்கியமான  திறன். ஒருவேளை, உங்களுக்குள் அச்சமோ, தயக்கமோ இருந்தால், முதலில் நிலைக்கண்ணாடி முன் நின்று பேசிப் பழகுங்கள். பின்னர் உங்கள் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் சிலரை அமர வைத்து அவர்கள் முன்னால் பேசிப் பாருங்கள். நாளடைவில் வழங்குரை வித்தை எளிதில் கைவசமாகும்.

இந்த வழங்குரை போலவே, உங்கள் பணியிடத்தில் இன்னொரு பேச்சுத் தேவையும் எழலாம். அது ஓர் அலுவலகக் கூட்டத்தை வழிநடத்தும் கடமையாகும். மேற்குறிப்பிட்டது போலவே, ஓர் அலுவலகக் கூட்டத்தைத் திறம்பட நடத்தவும் சிலப் படிநிலைகள் உள்ளன:

நேர்த்தியான உடையணிந்து, தன்னம்பிக்கையோடு நிமிர்ந்து நின்று, இன்முகத்தோடு, துல்லியமான அறிமுகத்தோடு கூட்டத்தை ஆரம்பியுங்கள். கூட்டத்தின் நோக்கத்தை, விவாதிக்கவிருக்கும் விடயத்தை உயிரோட்டத்தோடு விளக்கிச் சொல்லி, ஒரு நல்ல  தொடக்கத்தை வழங்குவது வழிநடத்துபவரின் முதன்மையான, முக்கியமான உத்தி.பேசப்படும் விடயம் குறித்த ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் பங்கேற்பாளர்கள் மத்தியில் உருவாக்கி, அவர்கள் அனைவரும் பேசுவதை மேலாண்மை செய்து, ஒவ்வொருவராகப் பேசவைப்பது இன்றியமையாத அம்சம்.

இனியதோர் சூழலை உருவாக்கி, அனைவரும் தங்கள் கருத்துகளைப் பகிர ஊக்குவிக்க வேண்டும். அவர்களின் பங்களிப்புக்களில் தேவையானவை, தேவையற்றவற்றைப் பகுத்தறிந்து, அவற்றுக்குள் ஓர் ஒத்த கருத்தை உருவாக்க வேண்டும்.

கூட்டம் சோர்வடைந்தால், அல்லது கவனம் சிதறினால், உங்கள் கருத்து, சிந்தனை ஒன்றைச் சொல்லி, பயனுள்ள ஒரு சர்ச்சையை முன்மொழிந்து, விவாதம் சரளமாக நடக்க உதவ வேண்டும்.

தொடர்புடைய  கேள்விகள் கேட்டு, கிடைக்கும் பதில்களை இன்னுமொருமுறை எடுத்துச் சொல்லி, கூட்டத்தைக் குறிப்பிட்ட இலக்கு நோக்கி இட்டுச் செல்வது மிகவும் முக்கியம்.

கூட்டத்தில் இருப்போரிடம் கலந்துரையாடி, ஒரு தேர்ந்த ஆசிரியர் வழங்கும் திறமிக்க கல்வி அனுபவம்போல அக்கூட்டத்தை மாற்றுங்கள்.

இறுதியில், கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை அனைவருக்கும் எடுத்துச் சொல்லி, அவர்களின் ஆமோதிப்பைப் பெற்று, கூட்டத்தை இனிதே நிறைவு செய்யுங்கள்.

தனிப்பட்ட வாழ்விலும், பணி வாழ்க்கையிலும் மட்டுமல்ல, பொதுவாழ்க்கைக்கும் பேச்சுத்திறன் மிக முக்கியம். பள்ளி, கல்லூரி ஆசிரியர், வழக்குரைஞர், மத போதகர் போன்ற வேலைகளுக்குத் தேவைப்படும் மேடைப் பேச்சுத் திறன் ஒரு மிக முக்கியமான  திறன். அதனைக் குறித்து பின்னர் பேசுவோம்.

(தொடரும்)

 கட்டுரையாசிரியர்: சுற்றுச்சூழல் ஆர்வலர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com