வெற்றியாளர்கள்!: மைக்ரோசாஃப்ட்  பில்கேட்ஸ்!

வரலாறு சிலரை உருவாக்குகிறது. ஆனால், வரலாற்றில் சில பக்கங்களை தனக்கென உருவாக்கிக் கொள்பவர்கள் வெகு சிலரே!
வெற்றியாளர்கள்!: மைக்ரோசாஃப்ட்  பில்கேட்ஸ்!

வரலாறு சிலரை உருவாக்குகிறது. ஆனால், வரலாற்றில் சில பக்கங்களை தனக்கென உருவாக்கிக் கொள்பவர்கள் வெகு சிலரே! அந்த வரிசையில் தொழிற் புரட்சிக்கு அடுத்தபடியாக இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஏற்பட்ட கணினி தகவல் தொழில்நுட்பப் புரட்சியில் மென்பொருள்கள் உருவாக்கத்தின் வரலாற்றில் பில் கேட்ஸ் ஒரு நிரந்தர இடத்தைப் பெற்றுள்ளார்.

அவர் தலைமையில் உருவாக்கப்பட்ட மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 1980-களில் இருந்து பல்லாண்டுகள் உலகின் மிகப்பெரிய நிறுவனமாக விளங்கியது. பில் கேட்ஸ் 1995 முதல் 2017 வரை (ஒரு சில ஆண்டுகள் தவிர) உலகின் மிகப்பெரிய பணக்காரர் பட்டியலில் முதலிடத்தில் இருந்து வந்தார். இப்போதும் அமேசான் நிறுவனருக்கு அடுத்து அந்த வரிசையில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். மைக்ரோசாஃப்ட் நிறுவன அலுவலகங்கள் 105-க்கும் மேற்பட்ட நாடுகளில் இயங்கி வருகின்றன. ஏறக்குறைய ஒரு லட்சம் பேர் அதில் பணியாற்றி வருகிறார்கள். தொழில் துறைகளில் ஈடுபட்டு வரும் பலருக்கு தாங்களும் பில் கேட்ஸ் மாதிரி ஆக வேண்டும் என்று கனவு காணும் வகையில் ஒரு முன்மாதிரியாக இவர் விளங்கி வருகிறார்.

பில் கேட்சுக்கு பெற்றோர் வைத்த பெயர் மூன்றாம் வில்லியம் ஹென்றி கேட்ஸ். 1955- ஆம் ஆண்டு அக். 28- ஆம் நாள் அமெரிக்காவில் வாஷிங்டன் நகரை அடுத்த சியாட்டிலில் அவர் பிறந்தார். அவரது தந்தை வில்லியம் கேட்ஸ் ஒரு வழக்கறிஞர். தாயார் மேரி மேக்ஸ்வெல் ஓர் ஆசிரியர். அத்துடன் அவர் பல பெரு நிறுவனங்களின் நிர்வாகக்குழுவில் இடம் பெற்றவர். பின்னாளில், இளம் வயதிலேயே பில் கேட்ஸ் பல நிறுவனங்களுடன் மென்பொருள் பற்றிய பேச்சுவார்த்தைக்கு செல்லும்போது அம்மாவையும் உடன் அழைத்துச் செல்வார். பில்கேட்ஸ் வளர்ச்சிக்கு திருப்புமுனையாக அமைந்த ஐபிஎம் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியிடம் நேரம் பெற்றுத் தந்ததே அவரது தாயார் மேரிதான்.

சியாட்டிலில் லேக்சைடு என்ற உயர்வகுப்பினர் படிக்கும் பள்ளியில் பில் கேட்ஸ் படித்தார். படிப்பில் அதிக ஆர்வம் காட்டவில்லை என்றாலும், அந்தப் பள்ளியில் இருந்த ஒரே கணினியில் அதிக நேரம் செலவழித்து அதன் அடிப்படைகளை அறிந்து கொண்டார். எளிய மென்பொருள் நிரல்களைப் படிக்கும் போதே தானாகவே உருவாக்கினார். டிக்-டேக்-டோ என்ற விளையாட்டு மென்பொருள் ஒன்றை உருவாக்கினார். சியாட்டில் நகரின் போக்குவரத்து சிக்னல்களை நிர்வகிக்க ட்ராஃபோ டேட்டா என்ற மென்பொருளை இவரும் அப்பள்ளியில் படித்த இவரது நண்பர் பால் ஆலனும் சேர்ந்து உருவாக்கிக் கொடுத்து 1972- இல் அதற்காக இருபதாயிரம் டாலர்கள் ஊதியம் பெற்றனர். பள்ளிப் பருவத்தின் இறுதியில் நடைபெற்ற தேசிய அறிவுக்கூர்மைதிறனறி போட்டியில் 1,600-க்கு 1,590 மதிப்பெண் பெற்றார் பில் கேட்ஸ்.

இவரது பெற்றோர் இவரை புகழ்பெற்ற ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பில் சேர்த்தார்கள். அங்கும் இவரது மனதில் கணினி மென்பொருள் உருவாக்குதல் பற்றிய சிந்தனைகளே இருந்தன.

இவரது வாழ்வில் முதல் திருப்புமுனை 1975 -ஆம் ஆண்டு "பாப்புலர் எலக்ட்ரானிக்ஸ்' பத்திரிகையில் வெளிவந்த "ஆல்டேர் 8800' என்று உலகின் முதல் சிறு கணினியால் ஏற்பட்டது. அதனை இயக்குவதற்கு ஏற்ற மென்பொருளை எழுதித் தர முடியுமா என்று அதை உருவாக்கிய எம்ஐடிஎஸ் நிறுவனத் தலைவர் எட் ராபர்ட்ஸ் கேட்ட போது, பில் கேட்சும், பால் ஆலனும் சேர்ந்து இரண்டே மாதங்களில் உருவாக்கி அதை வெற்றிகரமாகச் செயல்படுத்தினார்கள்.

அதைத் தொடர்ந்து பல்வேறு நிறுவன கணினிகளுக்கான மென்பொருள்களை இவர்கள் அந்த நிறுவனத்தில் இருந்தே உருவாக்கி அளித்து வந்தனர். பின்னர், அந்நிறுவனத்தில் இருந்து விலகி ஹார்வார்டில் படிப்பைப் பாதியில் நிறுத்தி விட்டு தனது நண்பருடன் இணைந்து பில் கேட்ஸ் 1976- இல் மைக்ரோசாஃப்ட் என்ற நிறுவனத்தை தொடங்கினார். பிற்காலத்தில் அதே ஹார்வார்டு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் சிறப்புரையாற்றினார்.

நிறுவன பெயர் எப்படி உருவானது? நுண்கணினி என்ற பொருள் கொண்ட மைக்ரோபிராசசர் என்ற சொல், மென்பொருள் என்ற பொருளுடைய சாஃப்ட்வேர் ஆகிய இரண்டு சொற்களின் முதல் பாதி எழுத்துக்களை இணைத்து மைக்ரோசாஃப்ட் என்று அதற்கு பெயரிடப்பட்டது.

நிறுவனம் படிப்படியாக வளர்ச்சி பெற்று வந்த நிலையில் 1979- இல் வாஷிங்டன் நகருக்கு இடம் பெயர்ந்தது. நிறுவனத்தில் உருவாகும் ஒவ்வொரு மென்பொருளையும் பில் கேட்ஸ் முழுவதும் படித்து, செப்பனிட்டு வெளியிட்டு வந்தார். பங்குச்சந்தை மூலம் வளர்ச்சிக்குத் தேவையான முதலீட்டைத் திரட்டினார்.

கணினி தொழில்துறையில் வளர்ச்சி ஏற்பட்டு வந்த அதே வேளையில் அவரது வாழ்க்கையிலும், நிறுவனத்தின் வளர்ச்சியிலும் மிகப்பெரிய திருப்புமுனை 1980- இல் ஏற்பட்டது. கணினி இயந்திரங்களை இன்டெல், ஆப்பிள் போன்ற பல நிறுவனங்கள் உற்பத்தி செய்து வந்தன. அவற்றில் முன்னணியில் இருந்த ஐபிஎம் நிறுவனம் பி.சி. எனப்படும் தனிநபர் கணினி உற்பத்தியை பெரிய அளவில் செய்யத் தொடங்கியது. அதை இயக்குவதற்கு வேண்டிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஒன்றை உருவாக்கித் தரும் வாய்ப்பு மைக்ரோசாஃப்ட்டுக்குக் கிடைத்தது.

அதுவரை சிறிய மென்பொருள் நிரல்களை உருவாக்கி வந்த இவரது நிறுவனம் எம்எஸ்-டாஸ் என்ற முழு கணினியையும் இயக்கும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை உருவாக்கி தந்தது.

அதற்கான மென்பொருளை 50,000 டாலருக்கு விற்பனை செய்ததுடன் ஐபிஎம் நிறுவனம் விற்கும் ஒவ்வொரு கணினி இயந்திரத்திற்கும் மென்பொருளுக்கான தனிக் கட்டணம் பெறும் வகையில் பில் கேட்ஸ் ஒப்பந்தம் போட்டார். அத்துடன் பிற நிறுவனங்களுக்கும், கணினி வாங்கும் தனி நபர்களுக்கும் எம்எஸ்-டாஸ் அதிக அளவில் விற்பனை செய்யப்படவே மைக்ரோசாஃப்ட் ஒரு பெரு நிறுவனமாக வளர்ச்சி பெற்றது. பில் கேட்ஸ், "ஒரு கணினி மனிதர்' என்று பிசி பத்திரிகை எழுதியது.

அதுவரை இணைந்து இயங்கி வந்த பால் ஆலன் 1983- இல் நோய்வாய்ப்பட்டு விலகிய பின் அந்நிறுவனம் முழுவதும் பில் கேட்ஸ் வசமானது. அவரது அறிவுக்கூர்மையாலும், கடுமையான உழைப்பு மற்றும் சாதுரியமான செயல்பாடுகளாலும் நிறுவனத்தை பன்மடங்கு வளர்ச்சி பெறச் செய்தார்.

1985- இல் கணினி மென்பொருள் இயக்கத்தின் ஒட்டுமொத்தப் பின்புலமாக விளங்கும் "வின்டோஸ்' அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் விளைவாக பங்குச்சந்தை மூலமாக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குதாரரான பில் கேட்ஸ் 23 ஆவது வயதில் 1987- இல் உலகின் முதல் சுயம்புவாக வளர்ச்சி பெற்ற பில்லியனர் ஆனார். இவரது நிறுவனத்தில் முதலீடு செய்த 12,000 பேர் மில்லியனர்கள் ஆனார்கள். 2019- இல் இவருடைய சொத்தின் மதிப்பு 113 பில்லியன் டாலர்கள் என்று மதிப்பிடப்பட்டது.

அதே நிறுவனத்தில் பணியாற்றி வந்த மெலிண்டாவைத் திருமணம் செய்து கொண்டார். உலகின் மிகப்பெரிய வீடுகளில் ஒன்றாக பில்கேட்சின் வீடு 8,300 கோடி மதிப்பில் 66,000 சதுர அடியில் கட்டப்பட்டது. அந்த வீட்டை வெறும் அடுக்கு மாடிகளாக கட்டாமல் ஏராளமான மரங்கள் அமைந்த இயற்கையான சூழலில் உருவாக்கினார்.

நிறுவன வளர்ச்சியில் அடுத்த நிலையாக 1990- இல் "எம்எஸ்ஆஃபீஸ்' என்ற மென்பொருள் தொகுப்பு அறிமுகம் ஆனது. அதில் எழுத்து பயன்பாடுகளுக்கு "வேர்ட்', கணக்கீட்டு பயன்பாடுகளுக்கு "எக்செல்', மற்றும் தகவல்களை தொகுத்து வழங்க "பவர்பாய்ன்ட்' போன்றவை சேர்க்கப்பட்டன. பின்னர், இணைய பயன்பாட்டில்தேடுபொறியாக "இன்டர்நெட் எக்ஸ்புளோரர்' என்ற மென்பொருள் இணைக்கப்பட்டது. எண்பதுகளின் பிற்பகுதியிலும் தொண்ணூறுகளிலும் உலகின் 90% கணினிகளில் மைக்ரோசாஃப்ட் நிறுவன மென்பொருள்களே இயங்கிக் கொண்டிருந்தன.

"ஒவ்வொரு மனிதரிடமும், ஒவ்வொரு வீட்டிலும் ஒரு கணினி இருக்க வேண்டும்' என்ற பில்கேட்சின் கனவு நிறைவேறத் தொடங்கியது. மேசை கணினி மேலும் வளர்ச்சி பெற்று அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றங்களின் விளைவாக மடிக்கணினியாக மாறி இப்போது பள்ளி மாணவர்கள் கைகளிலும் தவழ்கிறது.
மைக்ரோசாஃப்ட் நிறுவன வளர்ச்சியில் பல எதிர்ப்புகளும், சிக்கல்களும் ஏற்பட்டன. ஏகபோக எதிர்ப்புக் கொள்கையை மீறுவதாகவும், மென்பொருள் விற்பனையில் சமநிலை பாதிக்கப்படுவதாகவும் அமெரிக்க அரசும், ஐரோப்பிய ஒன்றியமும் வழக்குகளைத் தொடுத்தன. போட்டி நிறுவனமான ஆப்பிள் கணினி நிறுவனமும் ஒரு வழக்கைக் கொண்டு வந்தது. அத்தனை வழக்குகளையும் எதிர்கொண்டும் சில இழப்பீடுகளை சந்தித்தும் மைக்ரோசாஃப்ட் முன்னோக்கி நடை போட்டுக் கொண்டே இருந்தது.1998- இல் உலகின் மிகப்பெரிய நிறுவனம் என்று இது பெயர் பெற்றது.

இதுவரை தான் சம்பாதித்த வருமானத்தில் ஒரு பகுதியை தன்னை உருவாக்கிய இந்த உலகுக்கு திரும்பத் தர வேண்டும் என்ற உயர்ந்த நோக்கம் அவருக்கு ஏற்பட்டது. அதற்காக 2000 -ஆம் ஆண்டில் "பில் அண்டு மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷன்' என்ற அறக்கட்டளையை அவர் தொடங்கினார்.

2010 - ஆம் ஆண்டில் மைக்ரோசாஃப்ட் நிறுவன தலைமை நிர்வாகி பொறுப்பில் இருந்து விலகி ஆலோசகராக மட்டுமே இருந்து வந்த பில்கேட்ஸ் 2014- ஆம் ஆண்டு தன்னை இந்நிறுவனத்திலிருந்து முற்றிலும் விடுவித்துக் கொண்டு நீண்ட காலமாக தன்னுடன் பணியாற்றி வந்த பால்மரிடம் தலைமை நிர்வாகி பொறுப்பை ஒப்படைத்தார். 2017 முதல் அதன் தலைமை நிர்வாகியாக சத்ய நாதெல்லா என்ற இந்தியர் பணியாற்றி வருகிறார். இடையில் சில ஆண்டுகளுக்கு தொய்வு ஏற்பட்ட இந்நிறுவனம் பல மாற்றங்களால் மீண்டும் முதல் வரிசையில் இடம் பிடித்துள்ளது.

இப்போது தன்னுடைய நேரம் முழுவதையும் உலகம் முழுவதும் சுற்றி தன் அறக்கட்டளை மூலம் நற்பணிகளை ஆற்றுவதில் செலவிட்டு வருகிறார்.

"கேட்ஸ் ஃபவுண்டேஷன்' என்று அழைக்கப்படும் இவரது அறக்கட்டளையின் சொத்து மதிப்பு ஏறக்குறைய 50 பில்லியன் டாலர்கள். இதிலிருந்து பல்வேறு மக்கள் நலப்பணிகளுக்காக இதுவரை 29 பில்லியன் டாலர் அளவுக்கு கல்வி, எய்ட்ஸ் நோய்த்தடுப்பு, காச நோய், நோய்த்தொற்று போன்ற உடல்நலன் குறித்த துறைகளிலும் வறுமை ஒழிப்பு, பேரிடர்கால உதவிகள் ஆகியவற்றுக்கும் உதவி அளித்துள்ளார். பல ஆண்டுகளுக்கு முன்பு எபோலா வைரஸ் மூலம் உலகில் பல பகுதிகளில் மக்கள் பாதிக்கப்பட்ட போது ஆப்பிரிக்க மக்களுக்கு இவரது அறக்கட்டளை பேருதவி புரிந்தது. இந்தியாவிலும் பல வகைகளில் இந்த அறக்கட்டளை நற்பணிகளை ஆற்றி வருகிறது.

2015- ஆம் ஆண்டில் ஒரு கருத்தரங்கில் பேசியபோது, ""ஒரு கொடிய வைரஸ் 2019- இல் உலகை தாக்கக்கூடும்'' என்று முன்கூட்டியே கணித்துக் கூறினார். இப்போது பெரிய தாக்கத்தையும், உயிர்ச்சேதங்களையும் ஏற்படுத்தி வரும் கரோனா தீநுண்மியை ஒழிக்க தடுப்பூசி கண்டு பிடிக்கும் முயற்சியிலும் இவரது அறக்கட்டளை பங்களிப்பு செய்து வருகிறது.

தனது திரண்ட சொத்துக்களில் தன் வாரிசுகள் மூவருக்கும் ஆளுக்கு பத்து மில்லியன் டாலர் மட்டுமே தரப்போவதாக இவர் அறிவித்துள்ளார். அதன்படி பார்த்தால் இவரது சொத்துக்களில் 96% பொதுநலப் பணிகளுக்கே பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது சேவைகளைப் பாராட்டி அமெரிக்க, இங்கிலாந்து அரசுகள் பல விருதுகளை அளித்துள்ளன. இந்திய அரசு "பத்மபூஷண்' விருதை அளித்து இவரை பெருமைப்படுத்தி உள்ளது. வாழ்ந்தால் இவரைப்போல் வாழ வேண்டும் அனைவரும் பெருமைப்படத்தக்க, போற்றத்தக்க மாமனிதர் பில் கேட்ஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com