மிச்சமெல்லாம்  உச்சம் தொடு - 75: சிந்தனைகள் குவியட்டும், சிறகுகள் பறக்கட்டும்!

இயற்கை வளமும், வற்றாத நதிகளும், செல்வம் கொழிக்கும் வணிகமும், வளமான வாழ்வும் கொண்ட நாடு, வணிகம் செய்ய வந்தவர்கள், நம்மை அடிமைப்படுத்தினார்கள்.  
மிச்சமெல்லாம்  உச்சம் தொடு - 75: சிந்தனைகள் குவியட்டும், சிறகுகள் பறக்கட்டும்!


இயற்கை வளமும், வற்றாத நதிகளும், செல்வம் கொழிக்கும் வணிகமும், வளமான வாழ்வும் கொண்ட நாடு, வணிகம் செய்ய வந்தவர்கள், நம்மை அடிமைப்படுத்தினார்கள். ஒவ்வொருஇந்தியனும், குறுநில மன்னர்கள், வீரம் செறிந்த தளபதிகள் தாக்கும்போது கூட, ஆங்கிலேயர்கள் சமாளித்தார்கள். ஆனால், விடுதலைக்காக அனைவரும் ஒரே அணியில் நின்று, ஒரு தலைமையின் கீழ் நின்று, ஒரே குரலாக ஓங்கி ஒலித்தபோது, அகிம்சையே மிகப்பெரிய ஆயுதமானது, அதிர்ச்சியடைந்தார்கள். இரண்டு நூற்றாண்டுகளாக இந்தியாவில் உறுதியாக வேரூன்றிய ஆங்கிலேயரை திரும்பிப்போக வைத்தது.

"தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக்கெட்டு பாழ்பட்டு நின்றதாமோர் பாரத தேசந்தன்னை வாழ்விக்க வந்த காந்தி மகாத்மா' என்று பாரதி பாடியதைப்போல, ஒற்றைத் தலைமை பலமாக உருவானபோதுதான், வீழ்த்தப்பட்ட இறையாண்மையும் எழுந்து நின்றது. ஒரு முனையாகச் சேரும்போது, வெறும் தண்ணீரால் கூட உறுதியான இரும்பை வெட்ட முடியும். ஒளிக் கற்றைகள் ஒருங்கிணைந்து உருவாகும் லேசர், எவ்வளவு சக்தி வாய்ந்தது என்று நம்எல்லோருக்கும் தெரியும். 2020-இல் இந்தியா உலகில் அறிவிற் சிறந்த வல்லரசாக வேண்டும் அப்போது தான் பொருளாதார வல்லரசாக மாறமுடியும், அதற்கான பாதை 2010-இல் அமைக்கப்பட்டால்தான் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும் என்பது அப்துல் கலாமின் கனவு.

அந்த கனவு நனவாக வேண்டுமென்றால் அந்த சிந்தனையை உள்வாங்கி, அதை சிரமேற்கொண்டு செயல்படுத்தும் மன உறுதியும், அதை செய்வதற்குண்டான அதிகாரமும் பெற்ற நல்ல அரசியல் தலைவர்களால் மட்டுமே முடியும். அப்படிப்பட்ட தலைவர்கள் யார் என்பதை முதலில் மக்கள் அடையாளம் கண்டு அங்கீகரிக்க வேண்டும். ஆனால் இன்று நடப்பது என்ன?

நமக்கு எதற்கு வம்பு? நமக்கும் அரசியலுக்கும் ரொம்ப தூரம்! ராமன் ஆண்டால் என்ன? ராவணன் ஆண்டால் என்ன? அரசியல் ஒரு சாக்கடை என்ற பேச்சுகள் மக்களிடமிருந்து மிக சாதாரணமாக வெளிப்படுகின்றன. இன்னும் ஒரு படி சொல்லப்போனால் டீ கடைகளில் கூட இங்கு அரசியல் பேசாதீர்கள் என்று ஒரு போர்டு தொங்க விடப்படுகிறது. இது மக்கள் அரசியலில் கடைபிடிக்கும் சமூக இடைவெளி. மக்கள் அரசியலில், ஆட்சி அதிகாரத்தில் சமூக இடைவெளியை கடைபிடித்தால், அரசியல் கிருமிகள் அதிகமாகி, அதுவே நாளடைவில் சமூகத் தொற்றாகி, பின் மக்களின் சமூக, பொருளாதார சீரழிவிற்கும், பேரழிவுக்கும்தான் வழிவகுக்கும். அரசியல் பேசுவதே பாவமென்றால் மக்களும், இளைஞர்களும் இன்றைய அவலமான அரசியல் சூழ்நிலைக்குத்தான் தள்ளப்படுவார்கள்.

சில நேரங்களில் மக்கள் அறியாமையால் சரியான முடிவை எடுக்க முடியாமல் தடுமாறலாம். அல்லதுதவறான முடிவைக் கூட எடுக்கலாம். ஆனால் இவையெல்லாவற்றையும் தெரிந்துகொண்டு, தவறு நடக்கிறது என்று தெரிந்தாலும் கண்டும் காணாமல் கடந்து போவது மிகப்பெரிய தவறு. ஆகவே படித்தவர்கள், அரசியலின் முக்கியத்துவம் உணர்ந்தவர்கள், நாட்டின் நலன் விரும்புபவர்கள் குறைந்தபட்சம் தன்னை சார்ந்தவர்களிடமாவது சிறிய மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும்.

தீய மற்றும் வேறுபாடுகளால் கட்டமைக்கப்படும் அரசியல் கருத்துகள் புயல் வேகத்தில் மக்களிடம் பரவும் போது, நல்ல அரசியல் கருத்துகள் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான கருத்துகள் பலம் பெறுவதும், அதைமக்களிடம் கொண்டு சேர்ப்பதும் அவசியம். அது மக்கள் சரியான முடிவை எடுப்பதற்கு உதவும். சரியான முடிவால் சரியான தலைமை அமையும், சரியான தலைமையால்தான் சரியான வளர்ச்சியை, அமைதியை மக்களுக்கு தர முடியும்.

மக்கள், இயற்கைப் பேரிடர்கள் நிகழ்ந்தால் நிலை தடுமாறிப் போகிறார்கள். அந்தப் பேரிடரை எதிர்கொண்டு மக்கள் மீண்டு வர வேண்டும். அறிவார்ந்த மக்கள் சிந்திக்க வேண்டும்.

இப்போது நமக்குத் தேவை நோய் எதிர்ப்பு சக்தி. நம் சிந்தனையில் எதிர்ப்பு சக்தி இருக்குமானால் எந்தத் தீமையும் நம்மை அண்டாது. அதை இல்லாதோர்க்கு கொடுப்பதே பாதி பிரச்னைகளைத் தீர்த்துவிடும்.

மகாத்மா காந்திக்குப் பிறகு, உலகளாவிய அளவில், பரந்த இந்திய தேசம் முழுவதும், ஒவ்வோர் இல்லங்களிலும், மாணவர்கள், இளைஞர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை இல்லங்களிலுள்ள ஒவ்வொரு இதயங்களிலும் மனதார நேசிக்கப்படுபவர் ஏ.பி.ஜே அப்துல் கலாம். மகாத்மா காந்தியின் தலைமையில் போராடிய பல கோடி மக்கள், இந்தியாவுக்கு அரசியல் சுதந்திரத்தை பெற்றுத்தந்தார்கள். ஆயிரமாயிரம் ஆண்டுகள் நாம் பல அன்னியர்களிடம் அடிமைப்பட்டதெல்லாம், நாம் நம்மைத் தொடர்ந்து வலிமைப்படுத்திக் கொள்ளத்தவறியதால்தான் என்று உணர்ந்த கலாம் இந்தியாவை ராணுவ வலிமை மிகுந்த நாடாக ஆக்கி நேதாஜியின் கனவை முன்னாள் பாரத பிரதமர்கள் துணை கொண்டு, நம் தேசத்தை உலக அரங்கில் உயரத்தில் தூக்கி வைத்து, இனிமேல் இந்தியாவைச் சீண்ட முடியாது என்கிற நிலையை உருவாக்கினார்கள்.

அப்துல் கலாம் கடந்து வந்த பாதை எளிதானதல்ல, முற்றிலும் புதியது. இந்தியாவுக்காக அவர் செய்த சரித்திர சாதனைகளுக்கு, பல ஆயிரக்கணக்கான அறிவியல் அறிஞர்களையும், தொழில்நுட்ப வல்லுநர்களையும் இந்தியாவின் ஏராளமான நிறுவனங்களையும் இணைக்க வேண்டியிருந்தது, ஒரு மிகப்பெரிய சவால். தனது விரிந்த பாதுகாப்பு ஆராய்ச்சியை எடுத்துச் செல்கிற தனித்திறனும், ஆழ்ந்த உறுதியும், வலிமையான சிந்தனையும், தலைமைப் பண்பும், தடைகளைத் தாண்டிச்செல்கிற விவேகமும், அத்தனையும் ஒருங்கே வேண்டும். அது அவ்வளவு எளிதான காரியமல்ல. ஒரு மிகப்பெரிய தலைவரால் மட்டுமே முடியும், அத்தனை வல்லுநர்களையும் அரவணைத்து, தன்னுடைய தொலைநோக்குத் திட்டத்தில், அத்தனை பேர்களையும் பின்னிப்பிணைத்து, கடந்து வந்த பாதைகளில் உருவான நூற்றுக்கணக்கான சோதனைகளாலும், பரஸ்பர வேறுபாடுகளாலும், மனம் சிதைந்து தொய்வடைந்து போகாமல், தனது வரலாற்றுச் சிறப்பு மிக்க இலக்கை அனைவரின் சொந்த இலக்காக ஏற்றியது மிகப் பெரிய சாதனை. தன் சாதனைகளை அர்ப்பணித்ததோடு, தான் நேசிக்கிற தேசத்திற்கு, தன்னையும் அர்ப்பணித்த சரித்திர மகான்.

சாதனைகளோடு நிற்க முடியவில்லை அவரால். ராணுவ வலிமையில் தனக்கென தனியிடம் பதித்த நாடு, வளர்ச்சியடைய வேண்டும், வறுமை ஒழிக்கப்பட வேண்டும் என்றால், முதலில் பொருளாதார சுதந்திரம் அடைய வேண்டும் என்று நம்பினார். எதிர்கால இந்தியாவின் முக்கிய தேவைகளான ஆற்றல் (உய்ங்ழ்ஞ்ஹ்) எரிசக்தி, நதி நீர் இணைப்பு, நிரந்தர பசுமைப் புரட்சி, நவீன தொழிற்புரட்சி, அனைவருக்கும் தரமான மருத்துவம், தரமான கல்வி, அனைவருக்கும் மதிப்புகூட்டப்பட்ட வேலைவாய்ப்பு, "புரா' திட்டத்தின் மூலம் கிராமப்புற சுயசார்பு, முக்கியமான அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திலும் சுயசார்பு ஆகியவற்றில் நாம் தன்னிறைவு அடைந்து அனைவருக்கும் தரமான, அமைதியான வாழ்க்கைமுறையை அடைய வேண்டும் என்றார்.

சக்தி வாய்ந்த வீரம் செறிந்த மன்னர்கள் பலர் தோற்றுப்போன போதுகூட, சாதாரண மனிதர்களால், எப்படி காந்தி என்ற ஒரு தலைமையின்கீழ் திரண்டபோது, சுதந்திரம் நமக்கு சாத்தியமானதோ, அது போல நாம் கலாம் என்கிற மாபெரும் மானசீகத் தலைமையின் பாதையில் பயணிக்கும்போது, இளைஞர்களாகிய நாம் வழி மாறிப்போக மாட்டோம்; நிச்சயம் வெற்றிப் பாதையில் பயணிப்போம்.

நம் ஆற்றலும், அறிவார்ந்த சிந்தனையும், மன உறுதியும், நம்பிக்கையும் ஒரே திசையில் குவியட்டும், சிறகுகள் பறக்கட்டும். கையளவு குவிகிற சூரிய ஒளியால் தீயைக் கூட உருவாக்க முடியும். இது வீரம் செறிந்த பூமி - இது தான் இதன் வலிமை. வலிமையை உணர வேண்டுமென்றால், அறிவார்ந்த, வளர்ந்த இந்தியாவை உருவாக்கும் மாபெரும் முயற்சிக்காக, ஒரு புள்ளியில் குவிய வேண்டும், புதிய ஒரு பாதையில் பயணிக்க வேண்டும். அது தமிழகத்தில் இருந்து தொடங்க வேண்டும். கலாமின் விருப்பமும் அதுவே. இனி டாக்டர் அப்துல் கலஜ்ôமின் லட்சியத்தை நிறைவேற்றி நம்வாழ்வில் மிச்சமெல்லாம் உச்சம் தொடுவோம்.

(நிறைவு)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com