கல்வான் உருவான கதை

கல்வான் பள்ளத்தாக்கு ஜூன். 15-க்குப் பிறகு பத்திரிகைகளில் அடிக்கடி குறிப்பிடப்படுகிற பெயர்.
கல்வான் உருவான கதை

கல்வான் பள்ளத்தாக்கு ஜூன். 15-க்குப் பிறகு பத்திரிகைகளில் அடிக்கடி குறிப்பிடப்படுகிற பெயர். கல்வான் நதியின் பெயரால் அமைந்த பள்ளதாக்கு இது. குலாம் ரசூல் கல்வான் - என்கிற வழிகாட்டியின் பெயரால் ஆங்கிலேயர் வைத்த பெயர்.

குலாம் ரசூல் கல்வான், தனது சிறுவயதில் ஐரோப்பிய மலையேற்றக் குழுவினருக்கும், புவியியல் ஆராய்ச்சியாளர்களுக்கும், ராஜதந்திரிகளுக்கும் வழிகாட்டியாக அமைந்தவர். சுமைத்தூக்குவார் - உணவுப் பொருள்களும் சேகரித்துக் கொடுப்பார்.

கே-2 என்கிற உலகின் மிக உயரமான சிகரத்தை அளவிட வந்த ஆங்கில புவியியலாளர் மேஜர் எச்.எச்.கோட்வின்-ஆஸ்டன் குழுவினருடன் 1887-இல் பயணம் செய்திருக்கிறார்.

பயணம் என்றால் 44 நாள்கள், தட்டையான நிலப்பகுதி, பனிப்பாறை, செங்குத்தான மலைச்சிகரம் எனக் கடந்து செல்ல வேண்டியிருக்கும். அந்த சிகரத்தின் உயரத்தை அளவிட்ட அவரது பெயராலேயே "கோட்வின் - ஆஸ்டன் மலை' என்று இம்மலை அழைக்கப்படுகிறது.

தொடர்ந்து அடுத்தப் பயணமாக பாமிர் மலைகளை நோக்கி ஒரு குழு 1892-இல் சென்றது. அந்த குழுவிற்கும் குலாம் ரசூல் கல்வான் வழிகாட்டியாக அமைந்தார்.

பிரிட்டனைச் சேர்ந்த ஏழாவது எர்ல் டன்மோர் பிரபு, சார்லஸ் முர்ரே தலைமையில் இந்த குழு புறப்பட்டது. பயண நோக்கம் என்பது மர்மமாக இருந்தது. செங்குத்தான மலைகளை அடைந்து பணி முடிந்து திரும்புகையில், மோசமான வானிலை காரணமாக இவர்களது காரவன், அக்சய்சின் பகுதியின் வழக்கமான பாதையை விட்டு விலகியது. முன்னேற முடியவில்லை. எதிரே நெட்டுக்குத்தாக உயரமான மலை - கீழே அதல பாதாளம். முர்ரே குழுவினர் திகைத்து விழித்தனர்.

இவர்களின் உதவியாளனான கல்வான்,

""சிகரத்தைத் தொட்டபிறகு திகைப்பது கூடாது. நான் வழி கண்டுபிடிக்கிறேன்'' என்று கூறி அங்கிருந்த ஆறு வழியாக ஒரு பாதையைக் கண்டுபிடித்து இவர்களை அழைத்து வந்தான். அந்த ஆறு காரகோரம் கணவாய்ப் பகுதியில் உருவாகி சிந்து நதியின் கிளை நதியான ஷியோக்கில் சேருகிற நதியாகும். பள்ளத்தாக்கை அடைந்ததும் சார்லஸ் முர்ரே கல்வானைக் கட்டிப்பிடித்து மகிழ்ந்தார்.

தனது மகிழ்ச்சியின் வெளிப்பாடாக அதுவரை பெயரிடப்படாத அந்த நதிக்கு "கல்வான் ஆறு' என்றும் அந்த ஆற்றையொட்டிய பகுதிக்கு "கல்வான் பள்ளத்தாக்கு' என்றும் பெயரிட்டார். அதுவே இன்றுவரை நிலைத்த பெயராகிவிட்டது.

இதுகுறித்து லடாக் பகுதியின் வரலாற்று ஆசிரியர் அப்துல் கானி ஷேக் குறிப்பிடுகையில், "காலனியாதிக்கத்தில் புவியியல் கண்டுபிடிப்புகளுக்கு தங்களது பெயரையே சூட்டுவார்கள். ஆனால் முர்ரே தனது வழிகாட்டியான கல்வான் பெயரைச் சூட்டியது அதிசயத்திலும் அதிசயம்' என்று தெரிவித்திருக்கிறார்.

இங்கிலாந்தைச் சேர்ந்த ராஜதந்திரியான சர் ஃபிரான்சிஸ் யங் ஹஸ்பெண்ட் 1890 மற்றும் 1896-களில் லடாக்கில் வந்து தங்கினார். அவரின் பயணம் திபெத்தை நோக்கியதாக இருந்தது.

அவருடன் கல்வான் ஓர் உதவியாளராக - வழிகாட்டியாகச் சேர்ந்தார். பலதடவைகள் பயணம் நேர்ந்தது. முடிவில், உருவானது ஏராளமான சலுகைகளுடன் கூடிய நீண்டகால ஒப்பந்தமான ஆங்கிலோ - திபெத்திய வர்த்தக ஒப்பந்தம்.

இந்த ஒப்பந்தம் திபெத், சீனாவின் வசம் செல்லும் நாள் வரை நீடித்தது.

அடுத்து 1913-இல் இத்தாலியைச் சேர்ந்த வனவிலங்குகள் ஆராய்ச்சியாளர் ஃபிலிப்போ டி ஃ பிலிப்பி லடாக் வந்தார். அவருடனும் கல்வான் சேர்ந்து பயணப்பட்டார்.

இந்தப் பள்ளத்தாக்கில் இந்திய - சீன வீரர்கள் மோதிக்கொள்வது புதிதல்ல. 1950 மற்றும் 1956- ஆம் ஆண்டுகளிலும் மோதல் வெடித்திருக்கிறது. 1950-ஆம் ஆண்டில் "கல்வான் ஆறுவரை தங்களது எல்லை' என சீனா கூறியது.

1956 -ஆம் ஆண்டிலோ "கல்வான் ஆறுமற்றும் பள்ளத்தாக்கு முழுவதும்' என்று கூற ஆரம்பித்தது.

1959-இல் சீனா திபெத்தை தனது வசப்படுத்தியதும், தலாய்லாமா அங்கிருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். இச்சம்பவத்திற்குப் பிறகு இந்தியா குறித்து சீனாவின் பார்வை படிப்படியாக மாறிவிட்டது. ஆனால், இந்தியாவின் வாதம் என்பது கல்வான் ஆறு, பள்ளத்தாக்கு, சீனா வசப்படுத்தி உள்ள அக்சய்சின் பகுதி உள்ளிட்டவை நம்முடையது என்பதே.

இந்த கல்வான் ஆற்றின் குறுக்கே இந்தியா ஒரு பாலத்தைக் கட்டுகிறது. இதுவும் தற்போதுள்ள பிரச்னைகளுக்கு ஒரு காரணமாக இருக்கிறது.

கொஞ்சம் முன்கதை..

லடாக்கில் பொதுவாக விளைச்சல் குறைவு. வர்த்தகம் என்பது அதிகமில்லை. ஆனாலும் தரைவிரிப்புகள், தேயிலை, உப்பு, தானியங்கள், காஷ்மீர் கம்பெளி, பட்டுநூல், பருத்தி உள்ளிட்டவை பண்டமாற்று முறையில் விற்பனையாகும். பல நூற்றாண்டுகளாக இந்தப் பகுதி வழியே யார்கண்ட், திபெத், காஷ்மீர், மத்திய ஆசியா, தென்கிழக்கு ஆசியா, பஞ்சாப் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் வியாபாரிகள் இடையே வர்த்தகம் நடைபெறும்.

இந்தப் பகுதியில் பல அரசுகள், பழங்குடியின தலைவர்கள், கொள்ளையர்கள் எனக் குறுக்கிட்டபோதும், இந்தப்பகுதி வர்த்தகத்தின் "சில்க் ரூட்' என்றே அழைக்கப்பட்டது.

19-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஜம்மு அரசும் - ஆங்கிலேயக் குழுவினரும் லடாக் பகுதியில் துருப்புகளைக் கொண்டு வந்து இறக்கினார்கள். ஜம்மு அரசு, லடாக்கின் அரச குடும்பமான நாம்கியால் வம்சத்தை அங்கிருந்து வெளியேற்றி, அந்தப் பகுதியை தங்களுடையதாக்கிக் கொண்டது. தொடர்ந்து வடக்கு எல்லையான இந்தப்பகுதியை ஜம்முவின் ஆட்சியாளரான குலாப் சிங் ஆங்கிலேயருக்கு விற்றார். இதன் பின்னர் உருவானதே ஜம்மு - காஷ்மீர் மாநிலம். இது நடந்தது 1846-இல். இம்மாற்றம் காரணமாக பிரிட்டிஷ் இந்தியா, சீனா மற்றும் ரஷியா உள்ளிட்ட நாடுகளுக்கு இடையிலான ஒரு பகுதியாக லடாக் மாறியது. இதன் பின்னர் டோக்ரி நில அளவையாளர் உதவியுடன், லடாக் நகரைச் சுற்றி வந்த நதியின் ஓட்டத்தை வைத்து வரைபடம் ஒன்றைத் தயாரித்தனர்.

இந்தச் சூழ்நிலையில்தான் குலாம் ரசூல் கல்வான் பிறந்தார். சிறுவயதிலேயே தந்தையை இழந்தார். வறுமையில் சிக்கிய குடும்பம். தாயார் பல்வேறு வீடுகளில் வீட்டுவேலை செய்து கல்வானைக் காப்பாற்றினார். கல்வானும் சிறுவயதிலேயே உடலுழைப்புத் தொழிலாளியாக மாறினார்.

இவ்வழியாகச் செல்லும் யாத்திரிகர்கள், வியாபாரிகள், மலையேற்றக் குழுவினர் பலருக்கு உடலுழைப்புத் தொழிலாளியானார். வழிகாட்டியாகவும், கால் நடைகளுக்குத் தீவனங்கள் ஏற்பாடு செய்கிறவராகவும் மாறினார்.

கல்வான் வாழ்க்கையிலும் ஒரு மாற்றம் நிகழ்ந்தது. காஷ்மீரைச் சேர்ந்த வணிகர் ஒருவரிடம் பணியாளராகச் சேர்ந்தார். அடுத்த 35 ஆண்டுகளில் அமெரிக்கா, பிரிட்டன், இத்தாலி உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த மலையேற்றக் குழுவினருக்கு ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்தார். நாளடைவில் அந்தப்பகுதியின் தாதாவானார்.

தாய்மொழியான லடாக்கியுடன் திபெத், உருது, துருக்கி மொழிகளையும் பேசினார். சொற்பமான ஆங்கில சொற்களையும் கற்றுக் கொண்டார்.

இந்த பயணங்களின்போது அமெரிக்க நாட்டின் சாகசக்காரரான ராபர்ட் பாரெட் உடன் பயணிக்க நேர்ந்தது. அவருடன் மேலும் சில ஆங்கிலச் சொற்களைக் கற்றுக் கொண்டார்.

பாரெட் மற்றும் அவரது மனைவி காத்தரின் வற்புறுத்தலில் தனது வாழ்க்கைக் குறிப்புகளை மெல்லியதாளில் எழுதி அவர்களிடம் அளித்தார்.

""ஆரம்ப அத்தியாயங்கள் சரியாக அமையவில்லை. அவருக்கு எடுத்துச் சொல்லி திரும்பத்திரும்ப திருத்தி எழுதச்சொல்லி, அவர் எழுதியதை சரிபார்த்து திரும்ப அனுப்பி பல ஆண்டுகள் முயற்சிக்குப் பிறகு அவருக்கென ஒரு பாணி உருவாயிற்று. அதை நாங்கள் சிதைக்கவில்லை. அவரது "சர்வென்ட் ஆஃப் சாஹிப்ஸ்' நூல் 1923 -இல் வெளியாயிற்று. முன்னுரை எழுதியருப்பவர் சர் பிரான்சிஸ் யங் ஹஸ்பண்ட் என்கிறார் காத்தரின். அவர் தொடர்ந்து கூறுகையில், காஷ்மீர் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் எழுதிய முதல்சுயசரிதை இதுவாகத்தான் இருக்கும்'' என்று தெரிவித்திருக்கிறார்.

கல்வான் தனது கடைசி காலத்தில் லாடாக்கின் "ஆகாசக்கல்' ஆனார். அதாவது
தலைவர் ( ஹெட்மேன்)என்று பொருளாகும். பிரிட்டிஷ் உதவி கமிஷனரின் உதவியாளராகவும், பிரிட்டனுக்கும் காஷ்மீர் மஹாராஜாவுக்குமிடையே உருவாகும் வர்த்தக ஒப்பந்தங்களில் முக்கிய நபராகவும் இருந்தார்.

லே பகுதியில் உள்ள வணிகர்களிடையே அதிகாரம் செலுத்துகிற முக்கிய நபராகவும் இருந்தார். 1925-இல் காலமானார்.

இன்று கல்வான் குடும்பத்தினருக்கு வறுமை இல்லை. அவரது வாரிசுகளுக்கு பல நிறுவனங்கள் உண்டு. சுற்றுலாப் பயணிகளுக்காக பல விடுதிகள் நடத்துகிறார்கள். அவரின் ஏழாவது தலைமுறையைச் சேர்ந்த கொள்ளுப்பேரன் ரசூல் பைலே பத்திரிகையாளராக இருந்து வருகிறார். அவர் கூறுவது:

""தாத்தா ஏழையாக வாழ்க்கையைத் தொடங்கினார். பல்வேறு மலையேறும் கோஷ்டிகளுக்கு வழிகாட்டியாக இருந்தார். தொடர்ந்து பனிக்கட்டிகளில் பயணம் செய்கிறவர்கள் கால்விரல்கள் அழுகிவிடும். ஆனால் தாத்தா நெஞ்சுரத்துடன் போராடினார். வசதிகள் பல வந்தபிறகும் அவர் மலையேற்றத்தை விட்டுவிடவில்லை. இந்தப் பள்ளதாக்கு நமக்கு சொந்தம். இதில் ஓர் அங்குலத்தைக் கூட இழக்க முடியாது. லடாக் பகுதி வர்த்தகர்களுக்கு "சில்க் ரூட்' ஆக ஒரு காலத்தில் இருந்தது. இப்போது இதை சீனா தன் வசமாக்கத் துடிக்கிறது'' என்று தெரிவித்திருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com