வெற்றியாளர்கள்! முகநூல்: மார்க் சக்கர் பெர்க்!

​செல்பேசி பயன்பாட்டில் உலக அளவில் கூகுள் முதலிடத்திலும், யூடியூப் இரண்டாவது இடத்திலும் முகநூல் மூன்றாவது இடத்திலும் உள்ளது.
வெற்றியாளர்கள்! முகநூல்: மார்க் சக்கர் பெர்க்!


செல்பேசி பயன்பாட்டில் உலக அளவில் கூகுள் முதலிடத்திலும், யூடியூப் இரண்டாவது இடத்திலும் முகநூல் மூன்றாவது இடத்திலும் உள்ளது.

உலகிலேயே அதிகமாக முகநூல் (Facebook) பயன்படுத்துபவர்கள் இந்தியர்களே. இந்த ஆண்டு ஏப்ரல் கணக்கின்படி,280 மில்லியன் அதாவது 28 கோடி இந்தியர்கள் முகநூலில் இருக்கிறார்கள். அடுத்த இடத்தில்தான் அமெரிக்கா. அங்கே 19 கோடி பேர்கள் முகநூல் கணக்கு வைத்திருக்கிறார்கள். அடுத்தடுத்து இந்தோனேசியா, பிரேசில் நாடுகள் வருகின்றன. உலகெங்கும் இப்போது 260 கோடி முகநூல் உறுப்பினர்கள் உள்ளனர். ஒவ்வொரு நாளும் 250 கோடி பேர் முகநூலில் பதிவிட்டு செல்கிறார்கள்.

இந்த முகநூலை உருவாக்கி அதன் தலைமை நிர்வாக அலுவலராக இருப்பவர் மார்க் சக்கர்பெர்க் என்ற அமெரிக்கர். ஒரு நடுத்தரக் குடும்பத்தில் நியூயார்க் அருகில் 14 மே 1984-இல் பிறந்தார். இவரது அப்பா பல் மருத்துவர். தொழில்நுட்ப ஆர்வம் உள்ளவர். அம்மா ஒரு உளவியல் நிபுணர். இவருடைய தொழில்நுட்ப அறிவு 12 வயதிலேயே வெளிப்பட்டது.

இவரது அப்பாவின் பல் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் ஒவ்வொருவரையும் உள்ளே அனுப்பும் போது வரவேற்பாளர் உள்ளே வந்து இரைச்சலுடன் அவரைப்பற்றி மருத்துவரிடம் விவரங்களைச் சொல்வதைப் பார்த்த, மார்க் உடனடியாக அதற்கு ஒரு கணினி புரோகிராம் உருவாக்கி அதற்கு "சக்நெட்' (Zucknet) என்று பெயரிட்டார். மகனின் அசாத்திய திறமையைக் கண்டு வியந்த அப்பா ஓர் ஆசிரியரை நியமித்து கணினி தொழில்நுட்பமான "அட்டாரி பேசிக்'கை கற்றுத்தர வைத்தார். ஆனால், அந்த ஆசிரியரே மார்க் கேட்கும் கேள்விகளுக்கு விடை சொல்ல முடியாமல் தடுமாறினார்.

பள்ளி சிறுவர்கள் கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாடுவதில் ஆர்வமாக இருக்கும் வயதில், மார்க் அந்த கேம்ஸ்களை உருவாக்கத் தொடங்கினார். பள்ளியில் படிக்கும்போதே "சினாப்சே மீடியா பிளேயர்' என்ற இணைய இசை புரோகிராமை உருவாக்கி உலாவ விட்டார்.

இது பரபரப்பாக பேசப்பட்டு கூகுள் போன்ற பெரிய நிறுவனங்களில் இருந்து அதிக சம்பளத்தில் இவரை தங்கள் நிறுவனத்தில் சேர்க்க அழைப்பு வந்தது. அதையெல்லாம் ஏற்காமல் பள்ளிப்படிப்பை முடித்ததும் உலகின் முதல் தர பல்கலைக்கழகமானஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.

மார்க் சக்கர்பெர்க்கு அறிவுத்திறன் மட்டுமல்லாது தொலைநோக்கும் விடாமுயற்சியும் இருந்தது. பல்கலைக்கழக மாணவராக சேர்ந்த முதல் ஆண்டிலேயே ஒவ்வொரு மாணவரும் அவருக்குப் பிடித்த படிப்பை தேர்ந்தெடுக்க உதவும் "கோர்ஸ்மேட்ச்' என்ற புரோகிராமை உருவாக்கினார். அதற்கடுத்து அவர் உருவாக்கிய வில்லங்கமான ஒரு புரோகிராம்தான் அவருக்கு அலாவுதீனின் அற்புத விளக்காக அமைந்தது.

முகநூலில் தங்கள் படங்களை சிலர்தவறாகப் பயன்படுத்துவது குறித்து இளம் பெண்கள் பல சமயங்களில் புகார் செய்வது பற்றிய செய்திகள் படித்திருக்கிறோம். அந்த தவறின் ஆரம்பமே மார்க்கிடம் இருந்துதான் தொடங்கியது. வாலிப முறுக்கில் தன் சக மாணவிகளில் யார் அதிக கவர்ச்சியாக இருக்கிறார் என்று இரண்டு மாணவிகள் படத்தை அருகருகே போட்டு ஒருவர் படத்தை "லைக்' செய்யும் புரோகிராமை உருவாக்கினார். முகநூலில் இடம்பெறும் "லைக்' இங்குதான் தொடர்கிறது. அந்தப் புரோகிராமுக்கு “ஊஹஸ்ரீங்ம்ஹள்ட்’ என்று பெயர் வைத்தார். ஏர்ற் ர்ழ் சர்ற் என்ற கேள்வி கேட்டு மாணவர்களை "லைக்' போட செய்தார். இதற்குப் பல்கலைக்கழக மாணவர்கள் பட்டியலை புகைப்படத்துடன் நிர்வாக அனுமதி பெறாமலே இணையத்தில் "ஹாக்' செய்து பயன்படுத்தினார்.

இதன்மூலம் எந்த மாணவி அதிக "லைக்' வாங்குகிறாரோ அந்த மாணவி மற்ற மாணவர்களின் பாராட்டைப் பெறுவார். ஒரே நாளில் இது பெரும்பாலான மாணவர்களால் பயன்படுத்தப்பட்டு பல்கலைக்கழக சர்வர் தேங்கும் அளவுக்குப் போனது. இதில் "லைக்ஸ்' அதிகம் வாங்காத மாணவிகள் மனம் நொந்து அவமானம் அடைவார்கள் அல்லவா? அவர்கள் நிர்வாகத்திடம் புகார் செய்தனர். இது பல்கலைக்கழக விதிமீறல் வேறு. இதற்காக மார்க் நிர்வாகத்திடம் மன்னிப்பு கேட்டார்.

இதை அடிப்படையாக வைத்து ஒரு சமூக இணைப்பு புரோகிராமை உருவாக்கும் ஆழமான எண்ணம் மார்க் மனதில் இருந்தது. அவரது அம்மா ஒரு "சைக்காலஜிஸ்ட்' என்பதால் அவரிடமிருந்து மகனுக்கு ஏற்பட்ட தாக்கம் மற்றவர்கள் மனதில் நம் செயல்கள் இடம்பெற வைக்க வேண்டும் என்ற உறுதி உருவாக உதவியது. இந்த சமயத்தில் இவருக்கு அங்கு படிக்கும் மூத்த மாணவர்கள் மூவர் உதவினார்கள். அந்த மூவரில் ஒருவர் திவ்யா நரேந்திரன் என்ற இந்தியர். மற்ற இருவர் இரட்டையர்களான கேமரோன், டெய்லர் ஆகியோர்.

"தி ஃபேஸ்புக் டாட் காம்' என்ற தன் மனதில் நினைத்த இணைய தளத்தை பிப்ரவரி 4, 2004-ஆம் ஆண்டு தன்னுடைய 19-ஆவது வயதில் மார்க் சக்கர்பெர்க் உருவாக்கினார். அதில் ஹார்வார்டு மாணவர்கள் அனைவரும் தங்கள் தகவல்களைப் பரிமாற வழி ஏற்படுத்தினார். ஒரு மாணவர்கள் விடுதியறை ஒன்றில்தான் முகநூல் பிறப்பெடுத்தது. இதில் அருகில் உள்ள மற்ற பல்கலைக்கழக மாணவர்கள் பட்டியல்களையும் சேர்த்தார்.வெகு விரைவில் இது மிகவும் புகழ்பெற்ற தளமாகியது.

பின்னர் அதில் இருந்த The என்ற எழுத்து நீக்கப்பட்டு Facebook என்ற பெயர் நிலைத்தது. படிப்படியாகப் பல அமெரிக்க நிறுவனங்கள் இந்த இணைய தளத்தில் தங்களது நிறுவன தகவல்களைச் சேர்த்தன. முகநூல் நிறுவனத்தில் முதலீடு செய்ய பல முதலீட்டாளர்கள் முன்வந்தனர். 5 லட்சம் டாலர்கள் முதலாவதாக ஒரு நிறுவனம் அளித்தது. முதல் கார்ப்பரேட் அலுவலகம் 2005-இல் நியூயார்க்கில் தொடங்கப்பட்டது.

தன்னுடைய 22-வது வயதில் உலகின் மிக இள வயதில் பில்லியனர் ஆனவர் என்று மார்க் பெயர் பெற்றார். முகநூலில் அவ்வப்போது பல மாற்றங்கள் செய்யப்பட்டன. "லைக்ஸ்', "கமன்ட்ஸ்' மட்டும் இருந்த நிலையில் இருந்து மாறி மற்ற நண்பர்களை டேக் செய்யும் வசதியும் புகைப்படங்களை, வீடியோக்களை சேர்க்கும் வசதிகளும், ஷேர், ஹேஷ்டேக் போன்றவையும் சேர்க்கப்பட்டன.

நிறுவன வளர்ச்சியின்போது பல வழக்குகளைச் சந்தித்து வெற்றி கண்டார். தங்களது அந்தரங்கம் பாதிக்கப்படுவதாகப் பலர் புகார் அளித்தனர். அமெரிக்க செனட் அவரை கடுமையான முறையில் விசாரணைக்கு உள்ளாக்கியது. ஆயினும், நிறுவன வளர்ச்சி காரணமாக முதலீடுகள் ஏராளமாக வரத்தொடங்கின. பங்குச் சந்தையில் 100 மில்லியன் டாலர்களை முதலில் திரட்டினார்.

பில்கேட்சின் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முகநூலின் 1.6% பங்குகளை 2007-இல் 240 மில்லியன் டாலர்களுக்கு வாங்கியது. முகநூலில் விளம்பரங்கள் வெளியிட ஆரம்பித்தபின் அதன் வருமானம் மேலும் பல மடங்கு அதிகரித்தது.

தனது போட்டி நிறுவனங்களான வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றையும் வாங்கி அவற்றை முகநூல் குரூப்புடன் இணைத்து விட்டார். இந்த ஆண்டில் முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனத்திலும் மார்க் முதலீடு செய்துள்ளார். இப்போது 16 பில்லியன் டாலர் மதிப்புடைய உலகின் ஐந்தாவது பெரிய தொழிலதிபராக முகநூலின் உரிமையாளர் மார்க் விளங்குகிறார்.

இவரது 25-ஆவது வயதில் இவருடைய வாழ்க்கை வரலாற்றை பென் மெஸ்ரிச் என்பவர் நூலாக எழுதி அது "தி சோஷியல் மீடியா' என்ற திரைப்படமாகவும் வந்தது. அப்படத்திற்கு இரண்டு ஆஸ்கார் விருதுகள் கிடைத்தன. அப்படத்தில் தன்னைப்பற்றி சில தவறான தகவல்கள் இடம் பெற்றுள்ளன என்று கூறிய போதிலும் அதை எதிர்த்து வழக்கு எதுவும் அவர் போடவில்லை. தன்னுடைய வணிகத்தில் கவனம் சிதறக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.

முகநூலை பயன்படுத்துபவர்கள் பற்றிய தகவல்களை வணிகத்திற்குப் பயன்படுத்தினார் என்று அவர் மீது குறை சொல்லப்படுவது உண்டு. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமாவுக்கு, மார்க் உதவினார் என்றும் இப்போதைய குடியரசுத்தலைவர் டரம்ப் தேர்தலில் போட்டியிட்டபோது, அவருக்கு உதவுவதற்காக கேம்பிரிட்ஜ் அனலைட்டிகா என்ற நிறுவனத்தின் மூலம் முகநூல் தரவுகள் தரப்பட்டன என்றும் குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன.

உலகின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவர் என்றாலும் மிகவும் எளிமையான வாழ்க்கை வாழ்பவர் மார்க். சாதாரண கார்களையே பயன்படுத்துவார். ஆண்டுக்கு ஒரு டாலர் மட்டுமே சம்பளமாக வாங்குகிறார். முகநூல் நிறுவனத்தின் 99% பங்குகளைப் படிப்படியாக அறப்பணிக்கே செலவழிப்பேன் என்று உறுதி எடுத்துள்ளார். அதற்காக அவரது மனைவி பிரிசில்லா சான் உடன் இணைந்து "சேன் சக்கர்பெர்க் இனிஷியேட்டிவ்' என்ற ஒரு நிறுவனத்தைத் தொடங்கி உள்ளார். பல்வேறு அமைப்புகளுக்கு நன்கொடைகள் அளித்தும் வருகிறார்.

ஹார்வார்டில் இரண்டாவது ஆண்டில் படிப்பை நிறுத்திய மார்க்குக்கு 2017-இல் அப்பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியது. பட்டமளிப்பு விழாவில் அவர் பேசிய பேச்சில் ""ஒவ்வொரு மனிதரும் ஒரு நோக்கத்துடன் செயலாற்ற வேண்டும் என்றும் சமுதாய வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும்'' என்றும் உரையாற்றினார்.

முகநூல் நிறுவன வணிக வளர்ச்சியிலும் மார்க்கின் செயல்பாடுகளிலும் சில குறைகள் இருந்தாலும் கணினி இணையத் தொழில்நுட்ப வளர்ச்சியின் மூலம் சாதாரண நிலையில் இருந்து ஒருவர் உலகின் உச்சநிலை வரை செல்ல முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அவர் திகழ்கிறார் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com