இணைய வெளியினிலே...(24/03/2020)

நான் சிறுவனாக இருக்கும் போது (அதாவது பெற்றோரை நம்பி இருக்கும் போது) பெற்றோர்களிடம் நான் வாங்காத அடிகள் இல்லை
இணைய வெளியினிலே...(24/03/2020)

முக நூலிலிருந்து....
அடையாளப்படுத்துவதற்கு 
ஆளற்ற தருணங்களில்...
செய்கூலிக்கே
சேதாரமாகிவிடுகின்றன...
சில நல்ல புத்தகங்களும் கூட.
சுப்புராஜ் ரெங்கசாமி

எத்தனை முறை
இறங்கிப் போனாலென்ன?
தூக்கிப் போட்டது
தலைக்கனத்தை அல்லவா!
கனகா பாலன்

துருப்பிடித்த உந்தன் நாக்கு...
அவற்றின் பொய்யான 
வார்த்தைகள்... 
உண்மைத்தன்மை இல்லாத
உன் மனது! 
இவற்றைச் சகிக்க இயலாத நின்
ஆன்மாவின் பெரும் 
மௌனமானது... 
கோடைக்கால வெப்பநிலையை
இன்னும் அதிகரிக்கின்றது! 
வவுனியூர் சுஜனி

"என்னடா வெயில் இது... கொளுத்தி எடுக்குது' 
என்றவர்கள், முதன்முறையாக "வெயில் நல்லது' என்று 
சொல்லத் தொடங்கியுள்ளனர். 
வெயில் இருக்கும்
இடங்களில் கொரோனா கிருமி உயிர்வாழும் கால அளவு குறையும் என்று 
மருத்துவ நிபுணர் 
தெரிவித்துள்ளார்.
சுந்தரபுத்தன் நடராஜன்

சுட்டுரையிலிருந்து...
உலகில் சிறந்த சந்தர்ப்பவாதி
தண்ணீர்தான்...
அதுதான் எந்தப் பாத்திரத்தில் ஊற்றினாலும் 
அதற்கேற்றவாறு தன்னை மாற்றிக்கொள்ளும்
வல்லமை கொண்டது.
ஊர்க்காவலன்

அன்பு அனைத்துயிர்க்கும் பொது. 
தேவை...
நெஞ்சில் ஈரமும்,
அடுத்தவர் மகிழ்வில் 
மகிழும் மனமும். 
பனித்துளி

முட்டாளாய் இருப்பதில் எந்த
சிரமமும் இல்லை.....
அறிவாளியாய் நடிப்பதில்
தான் சிரமம் உள்ளது.
ஆர்.ஐ.பி.ரேஷ்மா

முகவரியைத் தொலைக்காமல்...
முட்டுச்சந்தில் முட்டாமல்
ட்ராபிக்கிலும் மாட்டி
தாமதிக்காமல் 
காசில்லாமலே தினமும் 
டோர் டெலிவரி 
செய்யப்படுகின்றன...
புதுப் புது பிரச்னைகள்.
நட்சத்திரா

வலைதளத்திலிருந்து...
நான் சிறுவனாக இருக்கும் போது (அதாவது பெற்றோரை நம்பி இருக்கும் போது) பெற்றோர்களிடம் நான் வாங்காத அடிகள் இல்லை. வடிவேலு ஒரு படத்தில் சொல்வது போல "புதுசு புதுசா கண்டுபுடிச்சு... அடிக்கிறாங்கய்யா'
பெல்ட் அடி, தடி அடி, சைக்கிள் ட்யூப் அடி, சாட்டை அடி, விளக்கமாத்து கட்டை அடி, ரூலர் அடி, இன்னும் பல... 
எனது அனுபவத்தில் அடியை இரண்டு வகையாக பிரித்துள்ளேன்.
1. எதிர்பாராத அடி
2. எதிர்பார்த்த அடி
அண்ணன் செஞ்ச தப்புக்கு வாங்குறது எதிர்பாராத அடி. (உன்னால் தான் நான் அடி வாங்கினேன்னு எங்களுக்குள் அடி தடி... அது தனி... கடைசியில் "ஏன்டா நம்ம அப்பா அம்மா மட்டும் இப்படி அடிக்குறாங்க... பேசாம நம்ம அவுங்க வீட்டுல பொறந்திருக்கலாம்டா'ன்னு எங்களுக்குல்லேயே சமாதானம் செய்யுறது.) 
எக்சாம் பேப்பர் வந்ததும் வாங்குறது எதிர்பார்த்த அடி. சாவை முன் கூட்டியே அறிந்து மரண ஓலமிடும் ப்ராய்லர் கோழி அனுபவம் இந்த எதிர்பார்த்த அடியில் இருக்கும். இத்தனை அடியையும் வாங்கிட்டு சொந்தக்காரங்க முன்னாடி வலிக்காதது போல... அடியே வாங்காதது போல கெத்தா போறது... ஆக்கா.. க்கா... (வடிவேலு மாதிரி உச்சரிங்க) வடிவேலு சொல்றது மாதிரி வலிக்காத மாதிரி எவ்வளவு நேரம் தான் நடிக்கிறது? மறுநாள் பள்ளிக்கூடத்துல நண்பர்கள் என்ன ஆச்சுன்னு கேக்கும் போது "கீழ உளுந்துட்டேன்னு' கூலா சொல்லுறது. (அந்த பய புள்ளயும் அவன் வீட்டுல அடி வாங்கிட்டு தான் வந்துருப்பான்) 
ம்ம்ம்... இப்ப நினைக்கும்போது ஒரு சிரிப்பா வருது ஓய்....
http://tamilmakkal.blogspot.com/

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com