வாங்க இங்கிலீஷ் பேசலாம் 235

ஊரடங்கு உத்தரவு பிரகடனம் பண்ணப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான வீரபரகேசரியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள்.
வாங்க இங்கிலீஷ் பேசலாம் 235

ஊரடங்கு உத்தரவு பிரகடனம் பண்ணப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான வீரபரகேசரியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள். வீரபரகேசரி வரலாற்றுப் புதினங்கள் தொடர்ந்து எழுதி மனம் பேதலித்துப் போனவர். தன்னை சோழப் பேரரசின் சக்கவர்த்தியாக நம்பி தனது சேவகர்களின் உதவியுடன் தனது பெரிய வீட்டில் வாழ்ந்து வருகிறார். அவருடன் இருவரும் உரையாடி இரவைக் கழிக்கிறார்கள். அப்போது ஒரு சின்ன விசயத்துக்காக வீரபரகேசரி கணேஷிடம் கோபித்துக் கொள்கிறார். அவர் அவனுக்கு மரண தண்டனை விதிப்பதாக, அவன் தலை உடனே கொய்யப்படுமென கட்டளை பிறப்பிக்கிறார். கணேஷ் மன்னிப்புக் கோர அவர் அவனிடம் பத்து கேள்விகள் கேட்கப் போவதாக சொல்கிறார். அதில் ஒன்பதுக்குச் சரியாக பதிலளித்தால் அவன் தலை தப்பும். 
வேகமாய் ஆடையைக் கழற்றுவதைக் குறிக்கும் ஆங்கில சொற்றொடர் என்ன என வீரபரகேசரி கேட்கிறார். கணேஷ் அதற்கு ஜூலியின் உதவியுடன் அளிக்கும் பதில்கள் கிட்டத்தட்ட சரியாகவும் ஆனால் பொருத்தமற்றதாகவும் உள்ளன. இப்போது புரொபஸர் அவனுக்கு ஒரு clue தரப்போவதாய் சொல்லி அனுமதி வாங்குகிறார். கணேஷ் சரியான பதிலைக் கூறாவிட்டால் அவன் தலை தப்பாது. என்ன ஆகும்? பார்க்கலாமா! 
புரொபஸர்: கணேஷ், கவனமா கேளு! நீ குளியலறையில் குளிக்கும்போது பண்ணும் போது சோப்பு வழுக்கி விழுகிறது. அதை நீ எடுக்கிறதுக்காகக் குனியும் போது சோப்பை மிதித்து விடுகிறாய். அப்போ என்னவாகும்? 
கணேஷ்: வழுக்கிருவேன். வழுக்கி விழுந்திருவேன். ஓ... இதுவா, இது தான் க்ளூவா? புரிஞ்சிருச்சு. 
ஜூலி: என்ன? 
கணேஷ்: Slip. She slipped off her jumper after she returned from the football game. 
வீரபரகேசரி: சரியான பதில். இந்த முறையும் எப்படியோ தப்பி விட்டாய். (மந்திரியை நோக்கி): ஏய் தூங்குமூஞ்சி! 
மந்திரி: மன்னர்... மன்னா... தங்கள் உத்தரவுக்காகக் காத்திருக்கிறேன். 
வீரபரகேசரி: ரொம்ப போர் அடிக்கிறது. இந்த பையனின் இன்னும் சில கேள்விகள் கேட்டு விட்டு வருகிறேன். அதற்குள் எனக்கு ஏதாவது வெளிநாட்டு பயணங்களை ஏற்பாடு பண்ணீரும். I need to peel off somewhere..
கணேஷ் (ஜுலியிடம்): Peel off என்பதை இவர் என்ன அர்த்தத்தில் பயன்படுத்துகிறார்? 
ஜூலி: கொச்சையான அமெரிக்க ஆங்கிலத்தில் ஏதாவது ஓர் இடத்துக்குக் கிளம்பிச் செல்வதை peel off எனச் சொல்வார்கள். இந்த மன்னர் நிறைய அமெரிக்க pulp நாவல்கள் படிக்கிறவர் போல இருக்கிறது. 
புரொபஸர்: ஒரு விமானம் தன்னுடைய திட்டமிடப்பட்ட பாதையில் இருந்து திடீரென வேறு திசைக்குப் போவதை peel off  என்பதுண்டு. The flight peeled off in a near vertical dive. 
வீரபரகேசரி: சொல்லு மந்திரியாரே, எங்கே போகிறோம் இந்த முறை? 
மந்திரி: மன்னர் மன்னா, போன வருடம் தாம் உலகில் உள்ள கிட்டத்தட்ட எல்லா நாடுகளுக்கும் ஒரு பயணம் போய் கலாசார நிகழ்ச்சிகளைக் கண்டுகளித்து அங்குள்ள பிரதமர், பிரதமர் மனைவி ஆகியோருடன் கைகுலுக்கி, டான்ஸ் ஆடி வந்து விட்டீர்கள். இனி நீங்கள் போவதற்கு நாடே இல்லை மன்னா. 
வீரபரகேசரி: ஓ... அப்படியா, போன நாடுகளுக்கே மற்றொரு டிரிப் அடித்தால் என்ன? 
மந்திரி: மன்னர் மன்னா, நம்முடைய ஒற்றர்களின் தலைமையகம் தெரிவித்த தகவலின்படி உங்களுடைய வருகையைத் தடுப்பதற்காகவே தீயசக்திகள் ஒரு பயங்கரமான வைரஸை உலகம் முழுக்க பரப்பி வருகின்றனவாம்.
வீரபரகேசரி: ஐயோ வேண்டாம்... நான் இங்கே அந்தப்புரத்திலே இருந்து கொள்கிறேன். 
புரொபஸர்: They say fear spreads like virus, much faster than a virus could. 
ஜூலி: ஹா... ஹா... 
வீரபரகேசரி: சரி, நாம உள்நாட்டு விவகாரங்களைக் கவனிச்சு பொழுதைக் கழிப்போம். தம்பி கணேஷ், உனக்கு அடுத்த ஒரு கேள்வி. நீ ஒருவர் தேவையில்லாத ஆடையைக் கழற்றுவதை slough off என சொன்னாய் நினைவிருக்கிறதா? 
கணேஷ்: ஆம்... மன்னா. 
வீரபரகேசரி: இந்த சொல் ஒரிஜினலாய் ஒரு குறிப்பிட்ட விலங்கைப் பற்றிப் பேசவே பயன்படுத்தப்பட்டது. 
நான் என்னுடைய கடந்த வார வானொலி உரையில் அதைப் பற்றி பேசியிருந்தேன். அதைக் கேட்டாய் அல்லவா? 
கணேஷ்: மன்னிக்கவும் மன்னா, வயதானவர்கள் பேசுவதை நாங்கள் கேட்பதில்லை. அதுவும் ரேடியோவில் எல்லாம் வாய்ப்பே இல்லை. 
வீரபரகேசரி: மிகவும் நல்லது. ஏனென்றால் இல்லாவிடில் நீ சுலபத்தில் பதில் சொல்லியிருப்பாய். 
கணேஷ்: அடடா, அப்போ கேட்டிருக்கலாமோ. Slough என்பது எந்த விலங்குடன் தொடர்புள்ளது? ம்...ம்...ம்... ஆங் கண்டு
பிடிச்சிட்டேன்.
பாம்பு. The snake sloughed. 
வீரபரகேசரி: கரெக்ட். Slough என்றால் பாம்பின் உதிர்க்கப்பட்ட தோல்.
(இனியும் பேசுவோம்) 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com