வேலை மாறுதல்: திட்டமிடு... தயாராகு... செயல்படு!

வேலை மாறுதல்: திட்டமிடு... தயாராகு... செயல்படு!

தற்போதைய காலகட்டத்தில் பலர் தங்களது படிப்புக்கு ஏற்ற வேலையை செய்வது இல்லை. பெரும்பாலானவர்கள் தாங்கள் பெற்ற கல்வித்தகுதிக்குக் குறைந்த வேலையையே செய்து வருகின்றனர்.

தற்போதைய காலகட்டத்தில் பலர் தங்களது படிப்புக்கு ஏற்ற வேலையை செய்வது இல்லை. பெரும்பாலானவர்கள் தாங்கள் பெற்ற கல்வித்தகுதிக்குக் குறைந்த வேலையையே செய்து வருகின்றனர். அதே வேளையில், அவர்களின் மனதில் லட்சியக்கனவும் ஊற்றெடுத்துக் கொண்டேதான் இருக்கின்றன.
ஆனால், தற்போது பார்த்து வரும் வேலை அவர்கள் விரும்புகிற வேலையாக இருக்காது. விரும்புகிற வேலை என்கிற இலக்கை நோக்கிப் பயணிக்க தற்போது பார்த்துவரும் வேலையே பெரும் தடைக்கல்லாக இருக்கலாம். எனினும், அந்த வேலையைக் கைவிட்டு, புதிய வேலை அல்லது தொழில் தொடங்குவது குறித்த தயக்கமும் பலருக்கு இருக்கும். 
ஆனால், வருமானத்துக்கு வழிகோலும் வேலையை விடுவதில் பலருக்கு குழப்பம் ஏற்படுகிறது. வேலையை விடுவதற்கு முன் சிந்திக்க வேண்டியவை நிறைய உள்ளன. 
தீர ஆராய்ந்து திட்டமிடுதல் : வாழ்வாதாரத்தை ஏற்படுத்தித் தரவல்ல வேலையைக் கைவிடுவது அவ்வளவு எளிதானதல்ல. வேலையைக் கைவிட எண்ணி வருபவர்கள் சில முக்கியமான கேள்விகளைத் தங்களுக்குள் எழுப்ப வேண்டும். "நாம் செய்து வரும் வேலை, நமது வாழ்வின் இலக்கை அடைவதற்கு உதவிகரமாக உள்ளதா அல்லது தடைகளை ஏற்படுத்துகிறதா?', "நாம் பார்த்து வரும் வேலை வாழ்வில் நம்மை மேம்படுத்தி வருகிறதா?' என்பன போன்றவற்றை முதலில் ஆராய வேண்டும். 
இந்தக் கேள்விகளுக்கு விடை காணும்போது நாம் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், கவனச்சிதறல்களால் நிறைந்ததுதான் வாழ்க்கை. வேறு பொழுதுபோக்கு விஷயங்களே புதிய வேலைக்கு, தொழிலுக்கு நம்மைத் தயார்ப்படுத்திக் கொள்வதற்கு தடையாக இருக்கலாம். எது தடை என்பதை நன்கு ஆராய வேண்டும். தடைகளை நீக்குவது மட்டுமல்ல, அடுத்த வேலை அல்லது தொழிலுக்கு நாம் நம்மை எந்தவிதங்களில் எல்லாம் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை நன்றாக ஆராய்ந்து திட்டமிட வேண்டும். திட்டத்தைச் செயல்படுத்தும் செயல்களையும் திட்டமிட வேண்டும். 
வேண்டாததைக் கைவிடல்: நமது இலக்குகளை அடைய வேண்டுமானால், முக்கியத்துவம் இல்லாத விஷயங்களில் அன்றாடம் கவனம் செலுத்துவதைத் தவிர்க்க வேண்டும். பணி நேரம் தவிர மற்ற காலங்களில் நமது அடுத்த வேலை அல்லது தொழிலை நோக்கிச் செல்வதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட வேண்டும். அவ்வாறு ஈடுபடும்போது ஓய்வில்லாமல் உழைக்கிறோமே என்ற எண்ணமும் எழலாம். 
இலக்குகளை நோக்கி நம்மைச் செலுத்தாத விஷயங்களைக் கண்டறிந்து அவற்றைக் களைய முற்பட வேண்டும். 
பொழுதுபோக்கை துச்சமாக எண்ணுதல்: அப்படி கடினமாக உழைத்த பிறகும் தற்போது பார்த்துவரும் வேலை மிகப் பெரிய தடைக்கல்லாக இருப்பதாக உணர்ந்தால், புதிய வேலை அல்லது தொழிலைத் தேடுவதற்கு நமது கடின உழைப்பு போதுமானதாக உள்ளதா? என்று ஆராய வேண்டும். நமது கடின உழைப்பின் மேல் நம்பிக்கை கொண்டு வேலையைக் கைவிட்டு, நமது இலக்கை நோக்கி முன்னேறலாம். 
கிடைக்கும் சமயங்களில் எல்லாம் நமது இலக்கை நோக்கி முன்னேறுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும். 
வாழ்வாதாரத்தை அளிக்கும் வேலையைப் பார்த்துக் கொண்டு, குடும்ப பாரங்களைச் சுமந்து கொண்டும் நம் அடுத்த வேலைக்கான - தொழிலுக்கான தயாரிப்புகளைச் செய்து கொண்டிருப்பவர்களுக்கு பொழுதுபோக்க நேரம் இருக்காது. 
வெற்றி கொள்ள முடியாதது எதுவுமில்லை: "நாளை' என்பது கனவு என்பதால், இன்று இந்த நேரத்தில் முழு கவனத்தையும் நமது இலக்கின் மீது குவிக்க வேண்டும். 
ஏனெனில் காலம் பொன் போன்றது. எந்த வயதிலும் கடின உழைப்புடன் நம்மால் பணியாற்ற முடியும். அதனால், காலத்தை முறையாகப் பயன்படுத்தி வெற்றி கொள்ள வேண்டும்.
இதையே "வலியறிதல்' என்னும் அதிகாரத்தில் வள்ளுவப் பெருந்தகை,
"ஒல்வது அறிவது அறிந்ததன் கண்தங்கிச் 
செல்வார்க்கு செல்லாதது இல்'' 
(குறள் எண்: 472)
என்கிறார். 
இதற்கான விளக்கம், "தனக்குப் பொருந்தும் செயலையும், அதற்காக அறிய வேண்டியதையும் அறிந்து அதனிடம் நிலைத்து முயல்கின்றவர்க்கு முடியாதது ஒன்றும் இல்லை' என்பதாகும். அவர் வழி நடந்து நமது இலக்கை அடைந்து வெற்றி காண்போம்.
-சுரேந்தர் ரவி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com