சரியான பார்வை...  சரியான வழி... சரியான செயல்

மாணவர்கள் ஒவ்வொரு பாடத்திலும் உள்ள வரையறைகளை (definition), நோட்டின் ஒரு பக்கத்தை எடுத்து, புத்தகத்தைப் பார்த்து, மாணவர்களுடைய சிறந்த கையெழுத்தால் அழகாக எழுத வேண்டும்.
சரியான பார்வை...  சரியான வழி... சரியான செயல்

மாணவர்கள் ஒவ்வொரு பாடத்திலும் உள்ள வரையறைகளை (definition), நோட்டின் ஒரு பக்கத்தை எடுத்து, புத்தகத்தைப் பார்த்து, மாணவர்களுடைய சிறந்த கையெழுத்தால் அழகாக எழுத வேண்டும். உதாரணமாக, முதல் பாடத்தில் மூன்று வரையறைகள் இருந்தால் அந்தப் பக்கத்தில் இரண்டு வரையறைகள் எழுத முடியும் என்றால், இரண்டு எழுதி மூன்றாம் வரையறையை அடுத்த தாளில் எழுத வேண்டும். மீதமுள்ள இடத்தை வெற்றிடமாக விட்டுவிட வேண்டும். இதேபோன்று இரண்டாம் பாடத்தில் ஒரே ஒரு வரையறை மட்டுமிருந்தால், அதை மட்டும் அழகாக எழுதி மீதி உள்ள இடத்தில் காலியாக விட வேண்டும். இதுபோன்று ஒவ்வொரு பாடத்திலிருந்தும் வரையறைகளை எடுத்துப் பார்த்தால் - மொத்தமுள்ள பத்து பாடங்களில் 30 அல்லது 40 வரையறைகள் இருந்தால் - அவற்றை நாம் வகைப்படுத்தி எழுதி வைப்பதன் மூலம், எளிதாக இவற்றை ஞாபகப் படுத்திக் கொள்ள முடியும்.

இதேபோன்று விதிகள் வேறுபாடுகள் என பல்வேறு துணைத் தலைப்புகளை வகைப்படுத்திக் கொள்ள வேண்டும். இதே போன்று பெரிய கேள்விகளை, தங்களுக்குப் புரியும் வண்ணம் எளிதாகப் படம் உள்ள கேள்விகளையும் தனியாகப் பயன்படுத்த வேண்டும் மற்றும் கருத்தாழமுள்ள கேள்விகள், பயன்பாடுகள் பற்றிய கேள்விகள் என பாடப்புத்தகத்தை எவ்வளவு எளிதாகப் பிரிக்க முடியுமோ அவ்வளவு எளிதாகப் பெற்றுக் கொள்ள வேண்டும். பின்னர் எழுதியவற்றை ஒவ்வொரு முறையும் எப்பொழுதெல்லாம் நேரம் இருக்கிறதோ, அப்போதெல்லாம் அதை திருப்பித் திருப்பிப் பார்க்க வேண்டும். உதாரணமாக, இவற்றைத் திருப்பித் திருப்பி முறையாகச் செய்யும் பொழுது நமக்கு மறதி ஏற்படாது. எளிதாகப் பயன்படுத்த முடியும்.

எடுத்துக்காட்டாக, நமது வீட்டில் நாம் எல்லாருமே பல் விளக்குவதற்கான டூத் ப்ரஷ் (tooth brush) - ஐ ஒரே இடத்தில் வைத்து எடுப்பதனால், நாம் காலையில் எழுந்தவுடன் அதை அதிகமாகத் தேடுவது கிடையாது. ஒரு நாளில் அதிகபட்சம் இதை நாம் இரண்டு முறை தான் உபயோகிக்கிறோம். ஆனால் இதைவிட அதிகமாக உபயோகிக்க கூடிய மொபைல் போன், சாவிகள் போன்ற பொருட்களை நாம் அதிகமாகத் தேடுகின்றோம். ஏனெனில், இதை நாம் முறையாக ஒரே இடத்தில் வைத்து எடுப்பதில்லை. இதேபோன்றுதான் நமது மனித மூளையில் நாம் படித்தவற்றை முறையாகப் பதிவு செய்தால், நம்மால் எளிதாக அவற்றை ஞாபகப்படுத்த முடியும். இதுபோன்ற பயிற்சிகள் நல்ல ஞாபக சக்தி மேம்படவும், இந்த பயிற்சிகள் தேர்வுகளில் நாம் படித்தவற்றை மிக அதிக தடவை பயிற்சி செய்த காரணத்தினால் மிக குறைந்த நேரத்தில் ஞாபகப்படுத்தி எழுத உதவுகிறது. இதுபோன்ற பயிற்சிகள் மாணவர்களின் பாடங்களைப் பற்றிய ஓர் ஆழ்ந்த புரிதலுடன் எளிதாக ஞாபகப்படுத்தக் கூடிய
தன்மையை உருவாக்குகிறது.

மாணவர் ஒருவர், ஒவ்வொரு தேர்விலும் - அது மாதாந்திரத் தேர்வாக இருக்கலாம் காலாண்டுத் தேர்வாக இருக்கலாம் அல்லது வேறு எந்தத் தேர்வாகவும் இருக்கலாம் - அந்த தேர்வில் 100 மதிப்பெண்களுக்கு 80 அல்லது 90 மதிப்பெண்கள் எடுத்திருந்தால், பத்து அல்லது இருபது மதிப்பெண்கள் ஏன் கிடைக்காமல் போனது என்பதை ஆராய வேண்டும். அந்த மதிப்பெண்களுக்கான பதில்கள் தெரியாததால், எழுதாமல் விட்டுவிட்டு வந்திருக்கலாம் அல்லது தவறான பதில்களை எழுதியிருக்கலாம். தங்களுக்குக் கிடைக்காத அந்த மதிப்பெண்களுக்குக் காரணமான கேள்வி - பதில்களை ஒரு தனி நோட்டில் பாடப்புத்தகத்தைப் பார்த்து எழுதி வைக்க வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனியாக எனது இயற்பியல் தவறுகள், வேதியியல் தவறுகள், கணித தவறுகள், உயிரியல் தவறுகள் எனப் பிரித்து வைக்க வேண்டும்.

தேர்வு எழுதுவதற்கு மூன்று மணி நேரம் தேவைப்படும். அந்த தேர்வில் பத்து அல்லது இருபது மதிப்பெண்கள் கிடைக்காமல் போனதற்கான கேள்வி - பதில்களைப் பாடப்புத்தகத்தை பார்த்து எழுதுவதற்கு 15 - இலிருந்து 30 நிமிடங்கள் வரை மட்டுமே ஆகும். இவற்றை மாணவர்கள் விடாமல் தொடர்ந்து செய்துவந்தால் இவை எல்லாமும் மாணவர்களுடைய இறுதி ஆண்டு தேர்வுக்கான "ரிவிஷன் மெட்டீரியல்' ஆகும். எனவே ஒவ்வொரு தேர்வு முடிந்தவுடன் நாம் பதில் எழுதாமல் விட்ட வினாக்களை ஆவணப்படுத்துவது என்பது மிகவும் இன்றியமையாததாகும். இது இறுதி தேர்வில் மாணவர்கள் நூற்றுக்கு நூறு வாங்குவதற்கு மிகவும் உதவியாக இருக்கும்.

மன வரைபடம் (Mind Maps)

மாணவர்கள் தாங்கள் பயின்ற பாடங்களை மன வரைபடமாக மாற்றிக் கொள்ள வேண்டும். ஏறத்தாழ 8 -10 பக்கங்கள் உள்ள ஒரு பாடத்தை நன்றாகப் படித்து அதில் உள்ள மிக முக்கியமான கருத்துகளை ஒரு தாளில் அல்லது இரண்டு தாள்களை ஒன்றாக இணைத்து ஒரு மன வரைபடமாக அமைத்துக்
கொள்வது நல்லது.

ஒரு திரைப்படப் போஸ்டரை நாம் பார்த்ததும், அந்த முழுத் திரைப்படமும் எவ்வாறு நமக்கு ஞாபகம் வருகிறதோ, அதுபோன்று, புத்தகத்தில் உள்ள பத்து பக்கங்களை நாம் இரண்டு பக்கமாக சுருக்கி எழுதி மன வரைபடமாக மாற்றும்போது முழுப் பாடமும் நமக்கு நினைவுக்கு வரும். பாடங்களை மிக எளிதாக ஞாபகப்படுத்துவதற்கு இந்த மன வரைபடப் பயிற்சி மிகவும் உதவும்.
தற்பொழுது உள்ள இந்த ஊரடங்கு நேரத்தை மாணவர்கள் இதற்குப் பயன்படுத்திக் கொள்ள முடியும். வீட்டில் இருக்கும் இந்நாளில், ஒவ்வொரு பாடத்தையும் எடுத்து அதை தங்களால் இயன்றவரை மன வரைபடமாக மாற்றினால், அந்தப் பாடம் நினைவில் நிற்கும் என்பதோடு அதைப் புரிந்து கொள்வதும் எளிதாகும். இவ்வாறு அந்த பாடத்துடன் தங்களைத் தொடர்புபடுத்தி, நினைவிலும் வடிவரீதியாகவும் புரியும் வண்ணமாக செய்யும்பொழுது இவர்கள் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டார்கள். இதுபோன்ற பயிற்சிகள் மாணவர்களுக்கு பாடங்களைப் பற்றிய ஆழ்ந்த புரிதல்களை உருவாக்குவதுடன், அவற்றை மாணவர்கள் எளிதாக நினைவுபடுத்திக் கொள்ளவும் உதவுகின்றன.

நாங்கள் இந்த முறைகளில் இதேபோன்று பல்வேறு எளிய மற்றும் புரிந்து படிக்கக் கூடிய பயிற்சி வகுப்புகளை தற்பொழுது ஆன்லைனில் நடத்தி வருகிறோம். பல்வேறு பள்ளிகளில் பல்வேறு ஆசிரியர்களிடம் படிக்கக்கூடிய எண்ணற்ற மாணவர்கள் இதன் வாயிலாக தங்கள் திறன்களை மேம்படுத்திக் கொள்ள முடியும். கடந்த ஐந்து வருடங்களில் எங்களுடைய பயிற்சி வாய்ப்புகளில் பங்கேற்ற எண்ணற்ற மாணவர்கள், ஐஐடி மற்றும் நீட் தேர்வுகளில் வெற்றிபெற்று பல அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயின்று வருகிறார்கள்.

தவிர எண்ணற்ற மத்திய அரசின் கீழ் இயங்கிவரும் சிறந்த கல்வி நிறுவனங்களில் பயின்று வருகிறார்கள் என்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

அந்த அனுபவங்களின் அடிப்படையில் நாங்கள் சொல்லும் இந்த வழிமுறைகளை அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கைக்கொண்டால், மேற்கூறிய முறைகளில் பாடப் புத்தகத்தில் உள்ள பாடங்களை நன்கு பயின்று வந்தால், எளிதாகப் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளலாம்; வெற்றி அடையலாம் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை.
ஏனென்றால் போட்டித் தேர்வுகளில் உங்களது பாடப்புத்தகத்தைத் தாண்டி கேள்விகள் கேட்கப்படுவது இல்லை. மாணவர்கள் தங்கள் பாடப்புத்தகங்களை எவ்வாறு உள்வாங்கி இருக்கிறார்கள்; அவற்றை நன்கு புரிந்து பயின்று இருக்கிறார்களா என்பதே இந்த அகில இந்திய போட்டித் தேர்வுகளில் சோதிக்கப்படுகிறது.

எனவே பாடப்புத்தகங்களைப் படித்து மட்டுமே இறுதி தேர்வுக்கும் மற்றும் அகில இந்திய தேர்வுகளுக்கும் மாணவர்கள் தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ள முடியும். பாடப் புத்தகத்தைப் படிப்பது எளிது.

பாடப் புத்தகத்திலிருந்து ஞாபகப்படுத்திக் கொள்வதும் எளிது. போட்டித் தேர்வுகளுக்காகப் பாடப் புத்தகங்களைத் தாண்டி, பல்வேறு புத்தகங்களை மாணவர்கள் படிப்பதனால், எந்தப் புத்தகத்தில் என்ன படிக்க வேண்டும் என்ற குழப்பம் மாணவர்களிடையே ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

வெறும் 5 சதவீதம்தான் உங்களுடைய பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்டு போட்டித் தேர்வுகளில் இடம் பெறுகிறது என்றால், அதற்காக உங்களுடைய பாடப் புத்தகங்களை விட்டுவிட்டு வேறு பல புத்தகங்களைப் படிப்பது உகந்ததல்ல.

ஏனெனில், இறுதியாண்டு தேர்வில் கேட்கப்பட்ட எல்லா கேள்விகளும் உங்கள் பாடப்புத்தகத்தில் உள்ளது. அவற்றிலிருந்து மட்டும்தான் அகிலஇந்திய தேர்வுகளுக்கான கேள்விகள் உருவாக்கப்படுகின்றன. எனவே யார் வேண்டுமானாலும் எங்கிருந்தாலும் இந்தத் தேர்வுகளை எதிர் கொள்ளலாம்.
முயற்சியும் தன்னம்பிக்கையும் மட்டுமே தேவை. எல்லோரும் மேற்கூறிய பயிற்சி முறைகளை நன்றாகக் கடைப்பிடித்து வாழ்க்கையில் வெற்றி பெற்று நன்றாக வாழ மனமார்ந்த வாழ்த்துகள்.

(தொடரும்)

கட்டுரையாசிரியர் சமூக கல்வி ஆர்வலர்

www.indiacollegefinder.org

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com