18 வயது கண்டுபிடிப்பாளர்!

பல மாநிலங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு விட்டது. இதனால், போக்குவரத்து நெரிசல் அதிகமாகியுள்ளது. விபத்துகளும் அதிகமாகியுள்ளன.
18 வயது கண்டுபிடிப்பாளர்!

பல மாநிலங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு விட்டது. இதனால், போக்குவரத்து நெரிசல் அதிகமாகியுள்ளது. விபத்துகளும் அதிகமாகியுள்ளன.

தேவையில்லாமல் முந்திக் கொண்டு செல்வது வாகன விபத்துகளுக்கு முக்கிய காரணம். கவனமில்லாமல் வாகனங்களை ஓட்டுவது; குடித்துவிட்டு ஓட்டுவது; இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் ஹெல்மெட் அணியாமல் வாகனத்தில் பறப்பது என விபத்து நிகழ நிறையக் காரணங்கள் இருக்கின்றன.
கேரளாவில் கொச்சி அருகே உள்ள மத்தன்சேரியைச் சேர்ந்த 18 வயது ஆதான் ஜாய், பிளஸ் டூ படிக்கும் ஒரு மாணவர். அவர் வித்தியாசமான ஸ்மார்ட் ஹெல்மெட் ஒன்றை உருவாக்கியிருக்கிறார். அதோடு இணைக்கப்பட்ட மொபைல் செயலி மூலமாக இருசக்கர வாகனத்தின் இயக்கத்தைக் கட்டுப்படுத்துகிறார்.
ஆதான் ஜாயின் கண்டுபிடிப்பைப் பற்றித் தெரிந்து கொண்ட கேரள மோட்டார் வாகனத்துறை அதிகாரிகள் அவரை நேரில் சந்தித்துப் பாராட்டியிருக்கின்றனர்.
ஆதான் ஜாய் உருவாக்கியிருக்கும் ஸ்மார்ட் ஹெல்மெட்டில் சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த சென்சார்கள் அவர் உருவாக்கியிருக்கும் "மை ஸ்கூட்டி ஆப்' என்ற செயலியின் மூலமாக வாகனத்துடன் இணைப்பைப் பெறுகின்றன. இந்தச் செயலி ஜிபிஎஸ் மொபைல் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.
குடிபோதையில் உள்ள ஒருவர் இந்த ஹெல்மெட்டை அணிந்தவுடன், ஹெல்மெட்டில் உள்ள சென்சார்கள் அவர் குடித்திருப்பதை மோப்பம் பிடித்துத் தெரிந்து கொள்கின்றன.
ஹெல்மெட்டில் உள்ள ஒலிப்பானிலிருந்து அவர் குடித்திருப்பதை அறிவிக்கும் எச்சரிக்கை ஒலி உடனே கேட்கிறது. அதையும் மீறி ஹெல்மெட்டை அணிந்து கொண்டு அவர் வாகனத்தை ஓட்ட நினைத்தால் சென்சார்களின் மூலமாக அவர் குடித்திருப்பதைத் தெரிந்து கொண்ட இந்தச் செயலி வாகனத்தை ஸ்டார்ட் செய்யவிடாது.
சிலர் ஹெல்மெட்டை தலையில் "சும்மா' மாட்டியிருப்பார்கள். வண்டி ஓடுகிறபோதே அடிக்கடி கழற்றி மாட்டிக் கொண்டே இருப்பார்கள்.
போக்குவரத்துக் காவலர்கள் நிற்கும் இடங்களில் அதை அணிந்து கொள்வதும், பிற இடங்களில் ஹெல்மெட்டைக் கழற்றி வண்டியின் பெட்ரோல் டேங்கின் மீது வைத்துக் கொண்டு செல்வதுமாக இருப்பார்கள்.
ஆனால், இந்த ஸ்மார்ட் ஹெல்மெட்டை சரியாக மாட்டாவிட்டால் வாகனம் ஸ்டார்ட் ஆகாது.
"இந்த ஹெல்மெட் தொல்லை எதற்கு?' என்று நினைத்து, ஹெல்மெட் அணியாமல் வாகனத்தை ஓட்ட முடியாது. ஹெல்மெட் அணியாவிட்டால் வாகனம் ஸ்டார்ட் ஆகாது.
மொபைல் போன் குறுந்தகவலின் மூலம் இந்த வாகனத்தின் இயக்கம் கட்டுப்படுத்தப்படுகிறது. வண்டியை ஸ்டார்ட் செய்வதற்கே வாகன ஓட்டியின் மொபைல் போனில் குறுந்தகவலை டைப் செய்ய வேண்டும்.
வாகனத்தை இந்த செயலியின் மூலமாக ஸ்டார்ட் செய்ய முடியும்; நிறுத்த முடியும். இதனால் வாகனத்தை யாரும் திருடிச் செல்ல முடியாது. வேறு யாரும் வாகனத்தை ஸ்டார்ட் செய்ய முடியாது.
வாகனம் எங்காவது பழுதடைந்து நின்றுவிட்டாலோ, எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டாலோ அடுத்த 30 நொடிகளுக்குள் வாகன ஓட்டியின் குடும்பத்தினரின்- நண்பர்களின் - செல்போனுக்குத் தகவல் சென்றுவிடும்.
ஆதான் ஜாய் தனது கண்டுபிடிப்பைப் பற்றி விளக்கும்விதமாக ஒரு வீடியோ பதிவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருக்கிறார். அது பரவலாக பலரின் கவனத்தைப் பெற்றிருக்கிறது.
கரோனா தொற்றின் காரணமாக ஏற்பட்ட பொதுமுடக்கத்தால், பள்ளிக்குச் செல்ல முடியாதநிலை ஏற்பட்டுவிட்டது.
வீட்டில் இருக்கும் பல மாணவர்கள் பயனில்லாத வீடியோக்களில், சமூக வலைதளங்களில் மூழ்கிக் கிடக்கின்றனர். ஆனால் ஆதான் ஜாய், கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்ஃபோர்ட் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி நடத்தும் ஆன்லைன் கோர்ஸில் (டீப் லேர்னிங் ஸ்பெஷலைசேஷன் ஃபோகஸிங் ஆன் ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ்) சேர்ந்து அதை வெற்றிகரமாகப் படித்து முடித்துவிட்டார்.
தற்போது அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற மசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி நிறுவனம் நடத்தும் "சர்க்கியூட்ஸ் அன்ட் எலக்ட்ரானிக்ஸ்' என்ற ஆன்லைன் கோர்ஸில் சேர்ந்து படித்து வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com