முந்தி இருப்பச் செயல்: எண் திறன் - 12

வறுமையால் வாடிய ஒரு புலவர் அதிலிருந்து மீள வேறேதும் வழியறியாது, அந்நாட்டு மன்னனிடம் சென்றார்.
முந்தி இருப்பச் செயல்: எண் திறன் - 12

வறுமையால் வாடிய ஒரு புலவர் அதிலிருந்து மீள வேறேதும் வழியறியாது, அந்நாட்டு மன்னனிடம் சென்றார். திறமையைப் போற்றும் தாராளகுணம் படைத்த அந்த மன்னன், புலவரின் அருமையான கவிதையை செவிமடுத்துவிட்டு, ""என்ன பரிசு வேண்டும்?'' எனக் கேட்டான்.
மன்னனின் முன்பிருந்த சதுரங்கப் பலகையைப் பார்த்த புலவர், ""மன்னர் பெருமானே, இந்த சதுரங்கப்பலகையின் முதற்கட்டத்தில் ஒரே ஓர் அரிசியை வைத்து, ஒவ்வொரு கட்டம் நகரும்போதும் அதனை இரண்டு மடங்காக்கி எனக்குப் பரிசளித்தால், அதுவே எனக்குப் போதும்'' என்றார்.
எண் திறனில்லா அந்த மன்னன் அதனைச் சாதாரணமாக நினைத்துக்கொண்டு, ""கையளவு அரிசி போதுமா?'' என்று ஏளனத்துடன் கேட்டான். ""போதும்'' என்றார் புலவர். அப்படியே செய்ய ஆணையிட்டார் அரசர்.
அரண்மனை ஊழியர்கள் சதுரங்கப்பலகையின் முதற்கட்டத்தில் ஓர் அரிசியை வைத்தார்கள்.
இரண்டாவது கட்டத்தில் 2 அரிசிகள், மூன்றாவது கட்டத்தில் 4 அரிசிகள், நான்காவது கட்டத்தில் 8 அரிசிகள் என்று வைத்துக்கொண்டிருந்தார்கள். பத்தாவது கட்டத்துக்கு வந்தபோது, 512 அரிசிகள் தேவைப்பட்டன. இருபதாவது கட்டத்தை அடைந்தபோது, 5,24,288 அரிசிகள் வைத்தார்கள். மொத்தம் 64 கட்டங்கள் கொண்ட சதுரங்கப்பலகையின் பாதியான 32}வது கட்டத்தை எட்டியபோது, 214,74,83,648, அதாவது 214 கோடிக்கும் அதிகமான அரிசிகள் தேவைப்பட்டன.
தேவைப்படும் அரிசிகளின் எண்ணிக்கை லட்சம் கோடிகளைத் தாண்டிச் சென்றது. என்ன பரிசு வழங்குகிறோம் என்று எண்ணிப் பார்க்காத மன்னன், எண்ணற்ற அரிசியை வழங்க வேண்டிய நிலைக்கு ஆளாகி, தனது நாட்டையே அந்தப் புலவனிடம் இழந்தான். அத்தனையும் ஒரே ஓர் அரிசியில் தொடங்கியது.
மனிதவாழ்வில் எல்லாமே எண்ணும், கணக்கும்தான். அதனால்தான் வள்ளுவர்,
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு என்றார்.
எழுத்தை விட எண்ணுக்கே முதலிடம் கொடுக்கிறார் அவர். காரணம் எழுதப்படிக்கத் தெரியாமலே, ஒருவர் தன்னுடைய வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிடலாம்; ஆனால் எண்ண, கூட்ட, கழிக்க, பெருக்க, வகுக்கத் தெரியாமல் ஒரு நாள் கூட வாழ முடியாது.
"வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்' என்கிறார் கண்ணதாசன். ஆயிரம் இருந்தால் அங்கே நிச்சயம் கணக்கு இருக்குமே? கலைவாணர் ஒரு பாடலில் சொல்லும் குடும்பக் கணக்கைப் பாருங்கள்: "அம்பது ரூபா சம்பளக்காரன் பொஞ்சாதி தினம் ஒம்பது தடவ காப்பிக் குடிப்பது அநீதி; எம்பது ரூபா புடவ கேட்டா குடும்பத்துக்கே விரோதி'.
கனவுகளைக் கூட்டி, தவறுகளைக் கழித்து, திட்டங்களை வகுத்து, வாய்ப்புக்களைப் பெருக்கி எண்ணித் துணிக கருமம் என்றே கழிகிறது மனித வாழ்க்கை.
எண் என்றால் சிந்தி என்றும் பொருள்படுவதாலோ என்னவோ, கணக்கில் சிறந்து விளங்குகிறவர்கள் தர்க்கரீதியாக சிந்திக்கிறவர்களாக, தர்க்கங்களில் மிளிர்கிறவர்களாக இருக்கிறார்கள்.
ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தமிழிலோ, ஆங்கிலத்திலோ திறம்பட எழுதவோ, பேசவோ தெரியாமல் இருப்பதுபோல, கணித வாய்ப்பாடு கூட சொல்லத் தெரியவில்லை என்பது மிகவும் வேதனையான உண்மை. எண் திறனின் அடிப்படையே இல்லாமல் இருக்கிறது.
அமெரிக்காவில் கடைகளுக்குப் போகும்போதோ, அல்லது பிற சந்தர்ப்பங்களிலோ நான்கைந்து தொகைகளை மனதிலேயே கூட்டி கணக்கைச் சொன்னால், அசந்துவிடுவார்கள். காரணம் கால்குலேட்டர் இல்லாமல் அவர்களால் எதுவும் செய்ய முடியாது. எண் திறன் என்பது இந்த மனக்கணக்குப் போடும் திறன் மட்டுமல்ல.
தற்போதைய முதலாளித்துவ உலகில் ஏராளமானோர் பங்குச்சந்தையில் முதலீடுகள் செய்கிறார்கள். பெரும்பாலானவர்கள் வங்கிக் கடன்கள் பெற்று மாதாந்திரத் தவணைகள் கட்டிக் கொண்டிருக்கிறோம். பங்குச்சந்தை நிலவரங்களைப் படித்துப் புரிந்துகொள்வதும், வங்கிப் பரிவர்த்தனைகளில் கணக்கு}வழக்குப் பார்த்து, பாங்காக நிதி மேலாண்மை செய்வதும் மட்டுமல்ல எண் திறன் என்பது.
எதுதான் எண் திறன்? வாழ்வின் குழப்ப நிலைகளைத் தவிர்த்து ஒழுங்கமைப்பதுதான் அது. வடிவமற்ற ஒரு வெளியைத் திருத்தி வீடாக மாற்றுகிறோம் என்றால், உடலுக்கேற்ற உடையை அளந்து வடிவமைக்கிறோம் என்றால், உடல்நலம் பெறத் தேவையான மருந்துகளைக் கணக்காக உட்கொள்கிறோம் என்றால், கலைத்திறனின் வெளிப்பாடாக ஒரு கருத்துப்படம் வரைகிறோம் என்றால், எல்லாவற்றிலும் எண்ணும், கணிதமும் இடம்பெறுகின்றன. பகுத்தறிவு, படைப்புத்திறன், பகுப்பாய்வு, புறவெளிச் சிந்தனை (ஸ்பேஷியல் திங்கிங்), பிரச்னைகளைத் தீர்த்தல், தகவல் பரிமாற்றம் என அனைத்துத் துறைகளிலும் எண் திறன் இணைந்திருக்கிறது.
ஒரு மனிதருக்கு ஒரு பேய்க் கனவு தொடர்ந்து வந்து துன்புறுத்தியதாம். அவர் தூங்கும்போது அவரது கட்டிலின் கீழே யாரோ ஒருவர் ஒளிந்திருந்து தாக்க முனைவது போன்று உணர்ந்திருக்கிறார். அதனால் தூக்கமிழந்த அவர் ஒரு மனநல மருத்துவரை அணுகி உதவி கோரினார். நீண்டகால சிகிச்சை தேவைப்படுமென்று சொன்ன மருத்துவர், ஒவ்வொரு வருகைக்கும் ரூ.1,000 கட்டணம் கேட்டார். அதனை விரும்பாத அந்த நபர் மருத்துவரிடம் போகவில்லை. ஒரு வாரம் கழித்து மருத்துவரை சாலையில் சந்தித்தபோது, வெறும் 100 ரூபாயில் தன்னுடைய பிரச்னை தீர்ந்துவிட்டது என்று சொல்லி மகிழ்ந்தார். ""அதெப்படி?'' என்று ஆச்சரியத்தோடு கேட்டார் மருத்துவர்.
""ஒரு தச்சரைப் பிடித்து கட்டிலின் கால்களை அறுத்தெறிந்து விட்டேன்'' என்றார் கனவுக்காரர். வெறும் 1,000 ரூபாய், 100 ரூபாய் கணக்கைத் தாண்டி, எண் திறன் கொண்ட அவர் மாற்றி யோசித்தார்.
பல்வேறு கணித முறைகளைப் பயன்படுத்தி, வாழ்வின் யதார்த்தப் பிரச்னைகளை எதிர்கொள்ளும் "ஆப்பரேஷன்ஸ் ரிசர்ச்' என்கிற ஒரு பாடப்பிரிவு பிறந்த கதை வேடிக்கையானது.
முதலாம் உலகப் போரின்போது, பிரிட்டிஷ் இராணுவம் சில நிபுணர்களை அழைத்து, தங்கள் கைவசமிருக்கும் குறைவான உணவுப் பொருட்கள், மருந்துகள், ஆயுதங்கள், படைகள் போன்றவற்றை பல்வேறு போர் முனைகளில் எப்படி நேர்த்தியாகப் பயன்படுத்துவது என்று ஆய்வு செய்யக் கேட்டுக் கொண்டதாம். இன்று ஓ.ஆர். பாடப்பிரிவு வாழ்வியல் பிரச்னைகளைக் கையிலெடுத்து, அலசி ஆராய்ந்து, அவற்றின் தீர்வுகளுக்கான நமது செயல்பாடுகளைச் செம்மைப்படுத்த, செழுமைப்படுத்த உதவுகிறது.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பொருளாதாரத் துறையில் கணிதமுறை, வரலாற்று முறை என இரண்டு அணுகுமுறைகள் முக்கியத்துவம் பெற்றிருந்தன. பொருளாதாரத்தில் கணிதத்தின் உதவியோடு விளங்கிக் கொள்ள முடியும் பொதுவான கோட்பாடுகள் இருக்கின்றன என்று கணிதமுறையினர் வாதிட்டனர். வரலாற்றுமுறையினரோ, மனிதச் செயல்பாடுகளை முன்கூட்டியே உணர்ந்து பொதுவான கோட்பாடுகளை உருவாக்க இயலாது என்று தீர்க்கமாகச் சொன்னார்கள்.
இவ்விரு முறைகளையும் பிரதிநிதித்துவப்படுத்திய வில்ஃபிரடோ பரேட்டோ ( 1848}1923) மற்றும் குஸ்டாவ் ஷ்மோலர் (1838}1917) எனும் இரண்டு பொருளியல் நிபுணர்கள் ஒரு சர்வதேசப் பொருளாதார மாநாட்டில் நேருக்குநேர் கடுமையாக மோதிக் கொண்டார்கள். உணவு இடைவேளையின்போது, கணிதமுறை பரேட்டோ, வரலாற்றுமுறை ஷ்மோலரிடம் சென்று, ""நாமிருவரும் சேர்ந்து மதிய உணவு சாப்பிடுவோம். இலவசமாக உணவு தருகிற ஓர் ஓட்டலுக்குப் போவோம்'' என்றழைத்தார்.
""எந்த ஓட்டலிலும் இலவசமாக உணவு தரமாட்டார்கள்'' என்று வெடித்தார் ஷ்மோலர். சிரித்துக் கொண்டே கேட்டார் பரேட்டோ: ""அப்படியானால் பொருளாதாரத்தில் சில பொதுவான கோட்பாடுகள் இருக்கின்றன என்று நீங்கள் ஒத்துக்கொள்கிறீர்கள், அப்படித்தானே?''
எண் திறன் பெறுவோம், இளைஞர்களே!

(தொடரும்)

கட்டுரையாளர்: சுற்றுச்சூழல் ஆர்வலர்.

தொடர்புக்கு: spuk2020@hotmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com