உற்சாகமே உயிர்!

ஒரு கனிவான இதயம் மகிழ்ச்சியின் நீரூற்று. அது அருகிலுள்ள அனைத்தையும் புன்னகையாக மாற்றுகிறது.
உற்சாகமே உயிர்!

ஒரு கனிவான இதயம் மகிழ்ச்சியின் நீரூற்று. அது அருகிலுள்ள அனைத்தையும் புன்னகையாக மாற்றுகிறது.

- வாஷிங்டன் இர்விங்

""ஒரு காஃபி கிடைக்குமா?'' என்று நீங்கள் கேட்டு... வந்த காபியை ருசித்தபின், அது நீங்கள் கேட்டதைவிட நல்ல காஃபி என்றால், அப்போது ஏற்கெனவே உங்களுக்கிருந்த களைப்பும், அயர்ச்சியும் போய், ஒரு புதுவித உணர்வும், தெம்பும் வருமே... அது உற்சாகம்.

கடினமான உழைப்பு. ஓய்வின்றி அலைச்சல். வியர்வை பெருக்கெடுக்கும் பணிகள். இதற்கடுத்து களைப்பைப் போக்க குளியல். குளியலுக்குப் பிறகு பசியாற்ற உணவு. உணவுக்குப் பின், சற்று காலாற உலாவிவிட்டு, தங்குதடையில்லாத ஒரு நீண்ட ஆழமான உறக்கம். விடியலில் தூரத்திலிருந்து கேட்கும் குயிலின் ஓசையோடு, நம் மனதிற்கு பிடித்த பக்திப் பாடலோ, சினிமா பாடலோ காற்றோடு கரைந்து வந்து நம் செவி மடல்களை வருடுமென்றால், அப்போது நம்முள் பிராவகமெடுத்து ஓர் உணர்வு பரவுமே... அதுவும் உற்சாகமே.

மனிதர்கள் தம் வாழ்வில் அண்ணாந்து மேலே பார்க்க விரும்புகிற அளவிற்கு, கீழே பார்க்க விரும்புவதில்லை. வாழ்க்கைப் பயணத்தில் ஒவ்வோர் உயர்வும் மனிதர்களுக்கு ஓர் ஊக்கத்தை, உற்சாகத்தை கொடுத்துக் கொண்டேதான் இருக்கிறது. அது ஊதிய உயர்வாக இருந்தாலும் சரி, பதவி உயர்வாக இருந்தாலும் சரி.

அரசுத்துறையிலோ, பொதுத்துறையிலோ கடைநிலை ஊழியராக தங்களது பயணத்தை தொடங்கிய பலர், படிப்படியாக மேலே ஏறி அவர்களது துறையில் உச்ச பதவிகளை அடைந்தும் இருக்கிறார்கள். இப்படி நடந்தேறும் மேல் நோக்கிய பயணத்தில் ஒவ்வொரு நிலையும் எவ்வளவு உற்சாகத்தைத் தருகிறதோ, அதே அளவிற்கு ஒருவருக்கு பொறுப்புணர்வும் வரவேண்டும். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால், ஒருவர் அடுத்த நிலையை நோக்கி, மேலே செல்லச் செல்ல, பெறும் உற்சாகத்தின் அளவிற்கு ஏற்ப அவருக்கு பொறுப்புணர்ச்சியும், விசாலமான பார்வையும் கிடைக்கிறது; கிடைக்கவேண்டும். இது நடக்கவில்லை என்றால் ஒருவர் உற்சாகம் என்று கருதிய உணர்வும் தவறு, அவரது மேல்நோக்கிய பயணத்தின் இலக்கும், பாதையும் தவறு என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

1983 - ஆம் ஆண்டு நடந்த உலக கிரிக்கெட் போட்டியில் தான் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதன்முதலாக உலகக்கோப்பையை வென்றது. அந்த வருடம் ஜூன் 25 - ஆம் தேதி, லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் இறுதிப் போட்டி. இந்த இறுதிப் போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 183 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. 60 ஓவர்களை கொண்ட இந்தப் போட்டியில், 54.4 ஓவர்களிலேயே இந்திய அணியை முடக்கியது பலமான மேற்கிந்திய தீவுகள் அணி.

ஆங்கிலத்தில் "அண்டர் டாக்ஸ்' என்கிற வார்த்தை ஒன்றுண்டு. பொதுவாக போட்டிகளிலும், யுத்த நேரங்களிலும் பயன்படுத்தப்படும் இந்த வார்த்தை, கிரிக்கெட் உலகில் மிகப்பிரசித்தம். இதன் பொருள்... "பலவீனமான, வெற்றி வாய்ப்பில்லாத' என்பதாகும். அந்தவகையில் அன்றைய இந்திய அணியினர் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு முன் "அண்டர் டாக்ஸ்' ஆக கருதப்பட்டார்கள். இந்தப் பட்டத்தோடு சொற்ப 183 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில், லார்ட்ஸ் மைதானத்தின் ஓய்வு அறையில் ஒரு மயான அமைதி. இந்திய அணி வீரர்கள் ஸ்தம்பித்த நிலையில் "இனி என்ன செய்வது?' என்று அமர்ந்திருக்க, ஊடக வர்ணனையாளர்கள் "இந்திய அணிக்கு இனி எல்லாம் முடிந்து விட்டது' என்று அப்போதே தீர்ப்பெழுதினார்கள்.

அனைவரும் நம்பிக்கையிழந்திருந்த நிலையில் ஒரே ஒருவர் மட்டுமே, அசாத்திய துணிச்சலோடும், நம்பிக்கையோடும் இருந்தார். அவர்... இந்திய அணியின் தலைவர் கபில்தேவ். கிட்டத்தட்ட ஒற்றை ஆளாக இறுதிப்போட்டி வரை இந்திய அணியைக் கொண்டு வந்த தனக்கு, இந்த இறுதிப்போட்டியையும் வென்றெடுக்க முடியும் என்று அவர் நம்பினார். துவண்டு கிடந்த சக இந்திய அணி வீரர்களிடம் பேசினார் கபில்தேவ்: ""நம்மைப் போன்ற சிறந்த வீரர்களை 183 ரன்களுக்குள் அவர்களால் ஆட்டமிழக்கச் செய்யமுடியும் என்றால்... நம்மால் முடியாதா?''

ஆம். கபில்தேவ் சொன்ன: ""அவர்களால் முடியுமென்றால், நம்மாலும் முடியும்'' என்கிற வார்த்தைகள் உற்சாகத்தின் ஊற்றாக இந்திய அணி வீரர்களிடம் ஊடுருவியது. இந்த உற்சாகத்தால், இரண்டுமுறை உலக சாம்பியனாக இருந்த மேற்கிந்திய தீவுகள் அணியை 43 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து, முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது இந்தியா. கபில்தேவின் வார்த்தைகள் தந்த உற்சாகத்தால் மேற்கிந்திய அணியை 52 ஓவர்களில் 140 ரன்களுக்குள்ளாகவே கட்டுக்குள் கொண்டு வர முடிந்தது இந்திய அணியால்.

இந்த வெற்றி, வரலாறானது. இந்த தேசம் முழுவதும் ஒரு புதிய உற்சாகம் தொற்றிக்கொண்டது. அது கிரிக்கெட் விளையாட்டை பட்டி தொட்டியெல்லாம் கொண்டுபோய்ச் சேர்த்து, இந்தத் தேசத்தின் தேசிய விளையாட்டைவிட கிரிக்கெட்டை பிரபலம் ஆக்கியது.

உற்சாகம் என்பது போதை அல்ல. போதை என்பது அழிவுப்பூர்வமான நோய். உற்சாகம் என்பது நேர்மறையான உந்துசக்தி; பேராற்றல். அது பரவக் கூடியது. வெற்றி, வளர்ச்சி என்பதையெல்லாம் கடந்து... இருத்தலுக்கே உற்சாகம் அவசியம். உயிரே உற்சாகம்தான். மழலையின் சிரிப்பு, மலர்ந்த பூ, விடியலில் இன்னிசையும் பறவைகளின் பேச்சும், அன்பானவர்களின் அரவணைப்பு... இப்படி எல்லாமே உற்சாகம் தருவதுதான். உற்சாகமாகஇருப்பதை நாம் ஒவ்வொருவரும் நமது தனிப்பட்ட உரிமையாக தீர்மானித்து உயர்வோம், இயற்கையின் துணையோடு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com