கரோனா காலத்திலும்... தோட்டக்கலைக்கு நல்ல வாய்ப்புகள்!

கரோனா தொற்று ஏற்பட்டு  உலகமே முடங்கிவிட்டது. வேலைக்குப்  போகாமல் வீட்டிலேயே  முடங்கிக் கிடந்த பலரின் கவனம், வீட்டுத் தோட்டத்தின் பக்கம் திரும்பியது.  பலர் புதிய வீட்டுத் தோட்டங்களை ஏற்படுத்தினார்கள்.
கரோனா காலத்திலும்... தோட்டக்கலைக்கு நல்ல வாய்ப்புகள்!

கரோனா தொற்று ஏற்பட்டு உலகமே முடங்கிவிட்டது. வேலைக்குப் போகாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடந்த பலரின் கவனம், வீட்டுத் தோட்டத்தின் பக்கம் திரும்பியது. பலர் புதிய வீட்டுத் தோட்டங்களை ஏற்படுத்தினார்கள். ஏற்கெனவே இருந்த தோட்டத்துச் செடியில் மலர்ந்த ஒரு பூவைப் பார்த்து மகிழ்ந்து நின்றார்கள்.
""ஊரடங்கு காலத்தில் வேளாண்மைப் பணிகளுக்கு அரசு விதிவிலக்கு அளித்ததால், நாங்கள் வழக்கத்தைவிட அதிகமான வேலைகளைச் செய்தோம்'' என்கிறார் மதுரை காளவாசல்
பகுதியைச் சேர்ந்த அருள்ராஜா.
"கவிதாஸ் கிரீன் இந்தியா' என்ற பெயரில் நிறுவனத்தை நடத்தும் அவர், மாடித் தோட்டம் அமைத்துத் தருவது, புல்தரை ஏற்படுத்தித் தருவது, வேலி அமைத்துத் தருவது, சொட்டு நீர்ப்பாசனம் செய்து தருவது, நிழல் வலைகள் அமைத்துத் தருவது, தோப்புகளை உருவாக்கித்
தருவது என ஏகப்பட்ட தோட்டக் கலை தொடர்பான வேலைகளைச் செய்து தருகிறார். அவரிடம் அதிலுள்ள வேலைவாய்ப்புகளைப் பற்றிப் பேசினோம்.
""தோட்டக் கலையில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு மிகவும் அதிகமான வேலை வாய்ப்புகள் இருக்கின்றன. கரோனா ஊரடங்குகாலத்தில் எங்களுக்கு ஆர்டர்களுக்கு மேல் ஆர்டர்கள் வந்து குவிந்தன. அவற்றை நிறைவேற்றித் தருவதற்கு நாங்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. நாங்கள் 15 பேர் கொண்ட குழுவாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
இந்தத்துறையில் வெற்றி பெறுவதற்கு முதல் தேவை, லாப நோக்கமில்லாமல் ஆர்வத்துடன் ஈடுபடுவதுதான்.
உதாரணமாக ஒரு வீட்டில் மாடித் தோட்டம் அமைத்துத் தாருங்கள் என்று ஒருவர் கேட்டால், நாம் அங்கே சென்று மாடித் தோட்டம் அமைக்க வேண்டிய இடத்தின் பரப்பளவு, அந்தத் தோட்டத்தில் அவர் என்ன செடிகளை வளர்க்க விரும்புகிறார் போன்ற விவரங்களை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அவரால் மாடித் தோட்டத்துக்காக எவ்வளவு செலவு செய்ய முடியும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். பின்பு அதற்கேற்ப மாடித் தோட்டத்தை வடிவமைக்க வேண்டும். எத்தனை தொட்டிகள், என்னென்ன செடிகள் என்பதை முடிவு செய்து கொண்டு வேலையைத் தொடங்க வேண்டும். இதில் மிக மிக முக்கியமானது, நமக்கு வேலை வழங்கியவரின் மனதிருப்திதான்.
"வைத்துத் தந்த செடி வாடிவிட்டது; விதைத்த விதை முளைக்கவில்லை' என்று தொலைபேசியில் தெரிவித்தால் உடனே சென்று பார்க்க வேண்டும். செடிக்கு அதிகத் தண்ணீர் ஊற்றி இருப்பார்கள். அல்லது விதைத்த விதை முளைத்திருக்கிறதா என்று மண்ணைக் கிளறிப் பார்த்து இருப்பார்கள். இதில் நமது தவறு எதுவும் இல்லை என்றாலும் மிகப் பொறுமையாக அதை சரி செய்து தர வேண்டும். அங்கு போய் வந்ததற்கான செலவு எல்லாம் நஷ்டம்தான் என்றாலும் அதைப் பற்றிக் கவலைப்படக் கூடாது. அப்போதுதான் இந்தத் தோட்டத் தொழில் நிலைக்க முடியும்.
மாடித் தோட்டம் என்றதும் வெறும் பூச்செடிகள் என்று நினைக்க வேண்டாம். துளசி, தூதுவளை, நிலவேம்பு, நொச்சி, செம்பருத்தி, மருதாணி, ஓமவள்ளி போன்ற மூலிகைச் செடிகளைக் கொண்ட மூலிகைத் தோட்டம், பூச்செடிகள் நிரம்பிய பூந்தோட்டம், தக்காளி, கத்தரி, வெண்டைக்காய், மிளகாய், பீர்க்கங்காய், புடலங்காய் போன்ற காய்கறிச் செடிகளைக் கொண்ட காய்கறித் தோட்டம், அரைக்கீரை, சிறுகீரை, தண்டுக்கீரை, பாலக்கீரை ஆகியவை உள்ள கீரைத் தோட்டம் என நிறைய தோட்டங்களை அமைத்துத் தர வேண்டியிருக்கும். இதைப் பற்றியெல்லாம் இந்தத் தொழிலில் ஆர்வமுள்ள இளைஞர்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
அப்புறம் இந்தத் தோட்டத்தின் செடிகள் நன்றாக வளர அதற்கான உரங்களை இட வேண்டும். மண்புழு உரம், தேங்காய் நார் கொண்டு தயாரிக்கப்படும் உரம், பஞ்சகவ்யா, அமிர்த கரைசல் என நிறைய உரங்கள் இருக்கின்றன. இவற்றைச் சொந்தமாக நாங்கள் தயாரிக்கிறோம். அவ்வாறு தயாரிக்கத் தெரிந்திருப்பது நல்லது. தயாரிக்கத் தெரியாவிட்டால் அவை விற்பனை செய்யப்படும் இடங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஆனால் எந்தச் செடிக்கு, மரத்துக்கு என்ன உரம், எவ்வளவு உரம் இட வேண்டும் என்பது அவசியம் தெரிய வேண்டும்.
இவற்றையெல்லாம் இத்துறையில் ஈடுபட வேண்டும் என்று விரும்பும் இளைஞர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். ஆர்கானிக் தோட்டத் தொழிலைப் பொருத்தவரையில் ஏற்கெனவே செய்து கொண்டிருப்பவர்களை அணுகி கற்றுக் கொள்ளலாம். ஆன்லைனில் உள்ள பல சேனல்களில் வெளிநாடுகளில் செய்யப்படும் தோட்டத் தொழில்களைப் பற்றிய விவரங்கள் கிடைக்கின்றன. அவற்றிலிருந்தும் தெரிந்து கொள்ளலாம்.
எல்லாவற்றையும் விட முக்கியமானது, இந்தத் தொழிலுக்கு மிகவும் தேவை டீம் வொர்க். தோட்டக் கலைக் குழுவில் பிளம்பர், எலக்ட்ரீசியன், கொத்தனார், வெல்டிங் செய்பவர் என பல வேலைகளைச் செய்பவர்கள் தேவைப்படுவார்கள்.
மலேசியாவில் உள்ள ஒருவர் எங்களுடைய வலைதளத்தைப் பார்த்துவிட்டு தொடர்பு கொண்டார். காரியாபட்டி அருகே உள்ள தனது 13 ஏக்கர் நிலத்தில் தோப்புகளை ஏற்படுத்தித் தருமாறு கேட்டுக் கொண்டார். தென்னந்தோப்பு, மாதுளை மரத்தோப்பு, கொய்யாத் தோப்பு, மாந்தோப்பு, சப்போட்டா மரத் தோப்பு என 600 மரங்களைக் கொண்ட தோப்புகளை உருவாக்கித் தந்தோம். அவர் தன்னுடைய செல்போன் மூலமாக மலேசியாவில் இருந்து கொண்டே, தோப்பில் உள்ள மரங்களுக்கு நீர் பாய்ச்ச மோட்டாரை ஆன் செய்யலாம். ஆஃப் செய்யலாம். தோட்டத்தில் என்ன நடக்கிறது என்று அங்கிருந்தே கண்காணிக்கலாம். அதற்கான மொபைல் போனுடன் இணைக்கப்படக் கூடிய செயலிகள், அவை இயங்க உதவும் சென்சார்கள் என எல்லாவற்றையும் பொருத்தி தோட்டம் அமைத்துத் தந்தோம்.
இந்தத் தோட்டத்தை அமைக்க நான் ஏற்கெனவே சொன்னது போல பலதுறையினரின் பணி தேவையாக இருக்கிறது. பலரையும் ஒருங்கிணைத்து, வேலைகளைச் செய்து, நமக்கு பணி வாய்ப்பு தந்தவர்
களின் மனதை மகிழ்ச்சிப்படுத்த வேண்டியிருக்கிறது. எனவே டீம் வொர்க் இந்தத் தோட்டத் தொழிலுக்கு மிகவும் அவசியம்.
தொடக்கத்தில் இந்தத் தொழிலில் நிறைய இழப்புகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். ஆனால் அதற்குக் கலங்காமல் இளைஞர்கள் இதில் ஈடுபட்டால் நிறைய வேலைவாய்ப்புகள் உள்ளன'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com