இணைய வெளியினிலே...

அந்த ஒரு நிமிஷத்தைக் கடப்பது எப்படி?ஒருவர் கோபப்படும் போது ஒரு நிமிடம் அமைதியாய்... 
இணைய வெளியினிலே...

முக நூலிலிருந்து....


குருவி கூடு கட்டுகிறது... 
கிளைகள் ஒடியவில்லை 
நிலம் அதிரவில்லை.
கூடு கட்டியபோது 
அருகிலிருந்தேன். 
அது என்னிடம் 
உதவியெதுவும் கேட்கவில்லை. 
எனினும் வருத்தமில்லை.
என் நிலம் 
என் மரம் 
என் பறவையென
சொல்லி மகிழ்வதைத் தவிர 
வேறென்ன வேண்டும்? 

பாரி கபிலன்

அந்த ஒரு நிமிஷத்தைக் கடப்பது எப்படி?
ஒருவர் கோபப்படும் போது ஒரு நிமிடம் அமைதியாய்... 
ஒருவர் மனம் வருந்தும்படி 
தன் மனதில் உள்ள அழுக்கைக் கொட்டி விடும்போது
அவரது அருஞ்செயல்களை நினைவு படுத்த...
உன் பேச்சு தவறாகப் புரிந்து கொள்ளப்படும் போது
அடுத்த வார்த்தைகளை அடக்க...
அந்த ஒரு நிமிஷத்தைக் கடப்பது எப்படி?
ஒவ்வொரு நிமிஷமாகக் கழிந்து 
வாழ்க்கை முடியும்  அந்த ஒரு நிமிடம், 
சொல்லித் தரும்.

டிகே கலாப்ரியா


சுட்டுரையிலிருந்து...

ரோஜாக்களை எதிர்பார்த்து 
வெகு சிரத்தையுடன் உரமிட்டு
முட்களை வளர்க்கும் விசித்திரம் தானே
உங்கள் வரையில் வெற்றிகரமான வாழ்க்கை?

அரூபி


மழை பிடிக்கும் எனக்கு- ஏனெனில்,
நீர்க்கம்பிகளின் மீட்டலில் இலை நடனம் நிகழும்.
மழை பிடிக்கும் எனக்கு-
ஏனெனில், மூடப்பட்ட பிள்ளைப் பருவத்தின் ஞாபகக் கதவைத்திறக்கும்.

மஞ்சப்பை

வலைதளத்திலிருந்து...


தினசரிப் பேச்சில் பழமொழிகளின் பயன்பாடு அர்த்ததோடு இருப்பதும் உண்டு. அர்த்தமில்லாமல் இருப்பதும் உண்டு. 

"கெட்டும் பட்டணம் சேர்' என்ற பழமொழி மிகக் கூடுதலான அர்த்தத்தோடு பயன்பாட்டில் இருந்து கொண்டிருக்கும் பழமொழி என்றே இதுவரை நாம் கருதிக் கொண்டிருக்கிறோம்.  

கிராமம் சார்ந்த வாழ்க்கை என்பது குலத்தொழில் சார்ந்த வாழ்க்கையாகவே ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்து வந்தது. குலத்தொழில் சார்ந்த வாழ்க்கையைத் தொடர்ந்து நடத்த முடியாத நிலைமை உண்டானபோது மனிதர்கள் இன்னொரு கிராமத்திற்குச் சென்று வாழ முயன்றிருக்கக் கூடும். ஆனால் அதை விடவும் நல்லபடியான வாழ்க்கை நகரத்தில் இருக்கிறது என நம்பும் போது, பூர்வீகக் கிராமங்களை விட்டுவிட்டு நகரங்களில் வந்து ஏதாவது வேலை செய்து பிழைக்கத் தொடங்கியவர்கள் உண்டாக்கிய பழமொழியே, "கெட்டும் பட்டணம் சேர்' என்பதாக இருக்கக் கூடும். அந்த வகையில் இந்தப் பழமொழியின் அதிக பட்ச வயது நூறைத் தாண்டாது என்பது என் கணக்கு "கெட்டும் பட்டணம் சேர்'  என்னும் பழமொழியைத் தமிழர்கள் எந்தக் கேள்வியும் இன்றி ஏற்றுக் கொண்டு நகரத்தை நோக்கி நகர்ந்த காலமாகக் கடந்த ஐம்பது ஆண்டுகளைச் சொல்லலாம். அதிலும் குறிப்பாக 1950 - களில் ஏற்பட்ட தொழிற்சாலைப் பெருக்கத்தின் காரணமாக உண்டான நகர்மயம், பெரும் அளவு வேளாண்மைத் தொழிலாளிகளை நகரங்களை நோக்கி நகர வைத்தது. தொழிற்சாலைகளின் பணியாளர்களாகவும், பெருந்தொழில்களின் துணைத் தொழில்களில் ஈடுபடுபவர்களாகவும் நகரத்தை நோக்கி நகர்ந்தவர்கள் கூட்டம் என்றால், அவர்களுக்குத் தேவையான அடிப்படை வேலைகளைச் செய்வதற்கும், சேவைப் பணிகளைச் செய்வதற்குமான உதிரித் தொழிலாளர்களாகவும் நகரங்கள் வீங்கிப் பெருத்துள்ளன.

https://ramasamywritings.blogspot.com/
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com