ஸ்டார்ட் அப்... பதிவு செய்வது எப்படி?

தொழில் முனைவோர்கள் ஸ்டார்ட் அப் நிறுவனத்தைத் தொடங்குவதிலேயே அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

தொழில் முனைவோர்கள் ஸ்டார்ட் அப் நிறுவனத்தைத் தொடங்குவதிலேயே அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அதைப் பதிவு செய்யும் நடைமுறைகள் உள்ளிட்டவற்றை அவர்கள் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. அதன் காரணமாக பெரும் இன்னல்களை அவர்கள் சந்திக்கின்றனர். 
ஸ்டார்ட் அப் நிறுவனத்தை உரிய முறையில் பதிவு செய்யாததன் காரணமாக சில சலுகைகளையும் தொழில் முனைவோர் இழக்கின்றனர். புதிய பொருளைத் தயாரிக்கப்போகிறோம் அல்லது புதிய சேவையை மக்களுக்கு வழங்கப் போகிறோம் என்பது உறுதியானதுமே ஸ்டார்ட் அப் நிறுவனத்தைப் பதிவு செய்து கொள்ளலாம். 

இணையத்திலேயே பதிவு செய்யலாம்:

ஸ்டார்ட் அப் நிறுவனத்தை இணையத்தின் வாயிலாகவே பதிவு செய்ய முடியும். முதலில் நிறுவனத்தை நிறுவும் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். பெயரை முடிவு செய்தல், இணை நிறுவனரைத் தெரிவு செய்தல் உள்ளிட்டவற்றில் உரிய கவனம் செலுத்தி தெளிவாக முடிவு செய்து கொள்ள வேண்டும். 

நிறுவனத்தை நிறுவிய பிறகு அதை ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தின் கீழ் பதிவு செய்து கொள்ளலாம். இத்தருணத்தில் நிறுவனத்தின் பதிவு எண், பதிவுச் சான்றிதழ் உள்ளிட்டவற்றைப் பெற்றுக் கொண்டு அவற்றைப் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். இணைய வழியில் பதிவு செய்வதால் சான்றிதழும் இணைய வழியில் கிடைக்கும். 

யார் உரிமையாளர்?

ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் உரிமையாளரைத் தெரிவு செய்யும் விஷயத்தில் தொழில் முனைவோர் கவனமாக இருத்தல் அவசியம். அதற்கு 4 வழிகள் உள்ளன. 

முதலாவது, நிறுவனத்துக்கு நீங்கள் மட்டுமே உரிமையாளராக   இருக்கலாம். அப்போது உங்களது வருவாய் அடிப்படையில் வருமான வரி வசூலிக்கப்படும். 
அதே வேளையில், நிறுவனத்தை வேறு ஒருவரிடம் உங்களால் விற்க முடியாது. வெளிநாட்டு நிறுவனங்களிலிருந்தும் முதலீடுகளைப் பெற முடியாது. 

இரண்டாவது, வேறொரு நபருடன் இணைந்து பங்குதாரர்களாக்கிக் கொண்டு ஸ்டார்ட் அப் நிறுவனத்தைத் தொடங்கலாம். நிறுவனத்தைத் தொடங்கிய 5 ஆண்டுகளுக்குள் மட்டுமே அதை ஸ்டார்ட் அப் நிறுவனமாகப் பதிவு செய்ய முடியும். 

மூன்றாவது, லிமிடெட்  லயபிலிடி பார்ட்னர்ஷிப். மத்திய தொழில்துறை விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் இந்நிறுவனங்கள் வரும். குறைந்தபட்சம் 
இருவர் இணைந்து இந்நிறுவனத்தைத் தொடங்கியிருக்க வேண்டும். பெரும்பாலான ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், லிமிடெட் லயபிலிடி பார்ட்னர்ஷிப் என்பதன் கீழே தங்களைப் பதிவு செய்து கொள்கின்றன. இதன் மூலமாகப் பல சலுகைகள் அந்நிறுவனங்களுக்குக் கிடைக்கின்றன. 

நான்காவது, "பிரைவேட் லிமிடெட்' என்று நிறுவனத்தைப் பதிவு செய்து கொள்ளலாம். இவ்வகை நிறுவனங்கள் கம்பெனி சட்டம், 2013-இன் கீழ் பதிவு செய்யப்படும். இந்த வகை நிறுவனத்தில் 200 பணியாளர்கள் வரை பணியமர்த்திக் கொள்ள முடியும். குறைந்தபட்சம் 2 இயக்குநர்கள் நிறுவனத்துக்கு இருக்க வேண்டும். 

மத்திய, மாநில அரசுகள் வழங்கும் சில சலுகைகள் இவ்வகை நிறுவனங்களுக்குக் கிடைக்கும். 

எப்போது பதிவு செய்வது?

ஸ்டார்ட் அப் நிறுவனத்துக்கு முறையாக வருவாய் வராதபோது அதைப் பதிவு செய்ய வேண்டியது கட்டாயமில்லை. ஆனால், குறிப்பிட்ட ஒரு நிலைக்கு நிறுவனம் வளர்ந்த பிறகு, அதைக் கட்டாயமாகப் பதிவு செய்ய வேண்டும். ஏனெனில், வரிக் கட்டமைப்பு, தொழிலாளர் சட்டங்கள், சுற்றுச்சூழல் சட்டங்கள் உள்ளிட்டவை நிறுவனங்களைச் சார்ந்து இயற்றப்பட்டுள்ளன. எனவே, அச்சட்டங்களின் கீழ் பிரச்னைகளை எதிர்கொள்ளாமல் இருப்பதற்காக  ஸ்டார்ட் அப் நிறுவனங்களைப் பதிவு செய்து கொள்வது அவசியம். 

அறிவுசார் சொத்துரிமை:

ஸ்டார்ட் அப் நிறுவனத்தைப் பொருத்தவரையில் தொழில்முனைவோர் கவனம் செலுத்த வேண்டிய மற்றொரு விஷயம், அறிவுசார் சொத்துரிமை பெறுதல். புதிய பொருளை சந்தைக்குக் கொண்டு வந்து ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் வாயிலாக விற்பதாக இருந்தால் அதற்கு அறிவுசார் சொத்துரிமை பெற முடியும். 

ஆனால், கணினி மென்பொருளுக்கு  அறிவுசார் சொத்துரிமை கோர முடியாது. அந்த மென்பொருள் சார்ந்த புதிய பொருளுக்கு மட்டுமே அறிவுசார் சொத்துரிமை கோர முடியும். இதைத் தொழில்முனைவோர் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். 

சட்ட ஆலோசகர் அவசியம்:

சட்ட விவகாரத்தைப் பொருத்தவரையில் இணை நிறுவனரைத் தேர்ந்தெடுப்பதில் அதீத கவனம் தேவை. அவருக்கும் நிறுவனத்தில் சம பங்கும் உரிமையும் உள்ளதால் சரியான நபரை இணை நிறுவனராகத் தேர்ந்தெடுக்க வேண்டும். 

ஸ்டார்ட் அப் நிறுவனம் தொடர்பான சட்ட விவகாரங்களில் உரிய சட்ட ஆலோசகர்களின் உதவியை நாடுவது நல்லது. இல்லையெனில் அபராதம், உரிமம் இழப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை நிறுவனங்கள் எதிர்கொள்ள வேண்டி வரும். சட்ட விவகாரங்களை முறையாகப் பின்பற்றவில்லை எனில், நாம் கடின உழைப்புடன் உருவாக்கிய ஸ்டார்ட் நிறுவனம், நம் கண்முன்னே சிதறுண்டு போவதற்கான வாய்ப்புகள் உள்ளன. 

எனவே, சட்ட விதிகளை முறையாகப் பின்பற்றி ஸ்டார்ட் அப் நிறுவனத்தைத் தொடங்குவோம். உரிய விதிகளைக் கடைப்பிடித்து நிறுவனத்தை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்வோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com