வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 294

ஊரடங்கு பிரகடனம் செய்யப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான மன்னர் வீரபரகேசரியின் அரண்மனைக்குச் சென்றிருக்கிறார்கள்.
வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 294

ஊரடங்கு பிரகடனம் செய்யப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான மன்னர் வீரபரகேசரியின் அரண்மனைக்குச் சென்றிருக்கிறார்கள்.  அங்கு அமைச்சரவைக் கூட்டம் நடக்கிறது. அப்போது உரையாடலின்போது புரொபஸர் சந்தர்ப்பம் சார்ந்த நகைமுரண் (situational irony) பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது ஜூலி Brutus is an honourable man என்றொரு மேற்கோளைக் குறிப்பிடுகிறது. அதன் பொருள் என்ன? அது என்ன வகையான நகைமுரண் எனப் பார்ப்போமா?

புரொபஸர்: மார்க்கஸ் புரூட்டஸ் கிறிஸ்துவுக்குப் பிறகு 85-இல் இருந்து 42- க்குள் வாழ்ந்த ஒரு ரோமானிய அரசியல்வாதி. மக்கள் சபையான செனட்டில் பிரசித்தமாக இருந்தவர். அவர் ஒரு லட்சியவாதி. ரோமானிய சர்வாதிகாரியான ஜூலியஸ் சீஸரைக் கொன்றவர்களிலும் இவர் பிரதானமானவர். ஷேக்ஸ்பியர் 1599 -இல் எழுதிய பிரபல நாடகமான ஜூலியஸ் சீஸரில் புரூட்டஸ் ஒரு முக்கிய பாத்திரம். புரூட்டஸ் தனது லட்சியவாதத்தால் உந்தப்பட்டு, கேஷியஸ் எனும் சந்தர்ப்பவாதியின் தூண்டுதலால் ஒரு செனட் கூட்டத்தில்  சீஸரைப் பின்னிருந்து கத்தியால் குத்துகிறார். இறுதி வரை புரூட்டûஸ தனது ஆத்ம நண்பனாக நினைத்திருந்த சீஸரால் இதை நம்ப முடியவில்லை.  "வேறு யார் என்னைக் கொன்றாலும் பரவாயில்லை, நீ ஏன் எனக்குத் துரோகம் செய்தாய்?' என மனம் கசிய எண்ணும் சீஸர் Et tu, Brutus என நம்ப முடியாமல் கேட்டு விட்டு சரிந்து விடுவார். இந்த லத்தீன் சொற்றொடருக்கு You too Brutus எனப் பொருள். 

கணேஷ்: ஆமா, இதை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். யாராவது எதிர்பாராமல் நமக்கு ஆப்படித்தால் வேடிக்கையாக You too Brutus எனச் சொல்வோமே.

புரொபஸர்: ஆமா, இன்று அந்த பயன்பாடு வேடிக்கை தொனியைப் பெற்று விட்டது. ஆனால் முன்பு அது ரொம்ப சீரியஸாக, கடும் ஏமாற்றத்தின் விளிம்பில் நின்று துரோகிகளை நோக்கி கூறுவதாக இருந்தது.  

கணேஷ்: சரி சார்... புரூட்டஸூக்கு என்னாயிற்று? 

புரொபஸர்: சீஸரின் வீழ்ச்சிக்கு, மரணத்துக்குப் பின்பு, புரூட்டஸூம் கேஷியஸூம் சேர்ந்து ஆட்சியைக் கையில் எடுத்துக் கொண்டார்கள். ஆனால் அவர்களால் நிம்மதியாக ஆள முடியவில்லை. அவர்களுக்கு எதிராக சீஸரின் ஆதரவாளரான மார்க் ஆண்டனி ஒரு படையைத் திரட்டி போரிட்டார். 

கணேஷ்: மார்க் ஆண்டனி? ரகுவரனா சார்? 

புரொபஸர்: சினிமாவுக்கு வெளியே வேறெதையும் யோசிக்க மாட்டியா நீ? 

கணேஷ்: சாரி சார்... சொல்லுங்க. 

புரொபஸர்: இந்த போர் நடக்கும் முன்பு இந்த புரூட்டஸ், கேஷியஸூக்கு எதிராக மக்களுடைய உணர்வுகளைத் தூண்டும்படியான காரியத்தை ஆண்டனி செய்தார். சீஸரின் உடலை அடக்கம் செய்யும் முன்பு மக்கள் முன்னிலையில் அவர் உடலை வைத்து முக்கிய தலைவர்கள் உரையாற்றிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஆண்டனியும் பேச முன்வந்தார். ஆனால் கேஷியஸூக்கு அதில் உடன்பாடில்லை. ஆண்டனி அபாரமான பேச்சாளன், தந்திரசாலி. அவனை அனுமதித்தால் ஆபத்து என அவர் கருதி புரூட்டûஸ எச்சரித்தார். அதன்படி புரூட்டஸ் ஒரு நிபந்தனையின் பெயரில் ஆண்டனியைப் பேச அனுமதிக்கிறார்: ஆண்டனி ஒருபோதும் புரூட்டûஸ விமர்சிக்கக் கூடாது; உயர்வாகவே பேச வேண்டும் என்பதே அது. 

வீரபரகேசரி: அட... இது நன்றாக உள்ளது. என்னைப் போலவே இருக்கிறான் இந்த புரூட்டஸ். நானும் என்னை யாரும் நாட்டில் விமர்சிக்கக் கூடாது என சட்டம் இயற்றியிருக்கிறேன். 

கணேஷ்: யாராவது எதிர்த்துப் பேசினால்? 

வீரபரகேசரி: அத்தகையோரை தேசவிரோதி என என்னுடைய ஆதரவாளர்கள் அடையாளப்படுத்தி எல்லா மாநிலங்களிலும் உள்ள எல்லா மாவட்டங்களில் இருந்தும் பல வழக்குகளை அவர்கள் மீது தொடுப்பார்கள். சிறையில் அடைப்பார்கள். ஆனால் பொதுவாக அந்த அளவுக்கு எல்லாம் நாங்கள் போக விட மாட்டோம். எனக்கு எதிராக யாராவது யோசித்தாலே அவர்களைக் கண்டடைந்து தண்டிக்க ஒரு அமைச்சரவையை நிறுவி உள்ளோம். தேசபக்தி அமைச்சரவை. 

கணேஷ்: அதென்ன? 

புரொபஸர்: Thought police. இது ஜார்ஜ் ஆர்வெல்லின் சண்ய்ங்ற்ங்ங்ய் உண்ஞ்ட்ற்ஹ் ஊர்ன்ழ் எனும் நாவலில் வரும் ஒரு விசயம். இந்நாவல்  ஓர் அச்சுறுத்தக்கூடிய கற்பனை உலகைப் பற்றியது. ஓஷியானியா எனும் ஒரு நாட்டை சர்வாதிகாரி ஒருவர் ஆளுகிறார். அந்நாட்டின் பிரஜைகளின் சின்னச்சின்ன அசைவுகள், முணுமுணுப்புகளைக் கூட டெலிஸ்கிரீன் எனும் ஒரு கருவி கண்காணித்தபடி இருக்கும். பொதுஇடங்கள், வீடுகள் என எங்கும் இவை மக்களைக் கண்காணிக்கும். உன் நடை, உடையில் ஏதாவது பிசகாகத் தோன்றினால் அந்த கருவியின் திரையில் அரசு தோன்றி சத்தமாகப் பேசி எச்சரிக்கும். சிலரை இப்படி எண்ண அளவிலான குற்றங்கள் செய்வதற்காகக் கைது செய்து, அவர்களுக்குத் தண்டனை அளிக்கும். இப்படித் தான் thoughtcrime எனும் ஆங்கில உலகில் சொல் புழக்கத்துக்கு வந்தது. 

கணேஷ்:அது என்ன thoughtcrime?

(இனியும் பேசுவோம்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com