கல்வியில் புதிய தொழில்நுட்பம்... தேசிய விருது!

21-ஆம் நூற்றாண்டில் தகவல் தொடர்பு, தொழில்நுட்பம் என்பது தவிர்க்க முடியாத சக்தியாக அசுர வளர்ச்சியடைந்துள்ளது.
கல்வியில் புதிய தொழில்நுட்பம்... தேசிய விருது!

21-ஆம் நூற்றாண்டில் தகவல் தொடர்பு, தொழில்நுட்பம் என்பது தவிர்க்க முடியாத சக்தியாக அசுர வளர்ச்சியடைந்துள்ளது. கல்வியில் தொழில்நுட்பத்தைப் புகுத்தி புதுமையான முறையில் கற்றல் - கற்பித்தல் பணியை மேற்கொண்டு வருகிறார்  அரசுப் பள்ளி ஆசிரியரான மனோகர்.  

அவருக்கு 2018 - ஆம் ஆண்டுக்கான தகவல்-தொடர்பு, தொழில்நுட்ப ஆசிரியருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. 

இதுதொடர்பாக அவரிடம் பேசியதில் இருந்து...

""நான் கரூர் மாவட்டம், தாந்தோணி வட்டம், வெள்ளியணை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறேன்.   தேசியக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் (என்.சி.இ.ஆர்.டி) கீழ் செயல்படும்  கல்வியியல் தொழில்நுட்ப கல்வி மையம் (சி.ஐ.இ.டி)  தகவல்- தொடர்பு, தொழில்நுட்ப  விருதுக்கான ஆசிரியர்களைத் தேர்வு செய்து வருகிறது.  

நாடு முழுவதும் இருந்து 2018 - ஆம் ஆண்டுக்கான விருதுக்கு சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் ஆறு ஆசிரியர்கள் தமிழக அரசால் விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டனர். பல்வேறு கட்ட பரிசீலனைக்குப் பிறகு, 3 ஆசிரியர்கள் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளனர்.  அவர்களில் நானும் ஒருவன்.தமிழக அரசால் வழங்கப்படும் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் சார்ந்த அனைத்து பயிற்சிகளையும் பெற்று அவற்றை உடனடியாக வகுப்பறையில் செயல்படுத்திப் பார்ப்பதை நான் எப்போதும் வழக்கமாகக் கொண்டுள்ளேன். இதுதவிர, தனிப்பட்ட முறையில் நடைபெறும் கல்வி தொடர்பான பயிற்சி, கருத்தரங்குகளில் கலந்து கொள்வதும் அங்கு கற்றுக் கொண்டதை நடைமுறையில் செயல்படுத்திப் பார்ப்பதையும்  வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். 

மாணவர்களது கற்றல் திறனை மேம்படுத்த வேண்டும்; கற்பிக்கும் பணியை எளிமையாக்க வேண்டும் என்பதே எனது குறிக்கோள். ரெயின்போ எனும் நுட்பத்தில் படித்தல் (ரீடிங்), செயல்பாடு (ஆக்டிவிட்டி), பயன்படுத்துதல் (இம்பிலிமென்டேஷன்), நெட் ரெஃபர் (இணையவழி தேடல்), புக் ரெஃபர் (புத்தகக் கருத்துகளை உள்வாங்குதல்), ஓரல் பிராக்டிஸ் (வாய்மொழி தேர்வு / கேள்வி கேட்டல்) ரிட்டன் எக்ஸாம் (எழுத்துத் தேர்வு / பயிற்சி)  ஆகிய  வழிகளில் கற்றல் - கற்பித்தல் மேம்படுகிறது என்பதை மாணவர்களிடம் செயல்படுத்தியதில் இருந்து நேரடியாகக் கண்டுணர்ந்தேன்.  

இது தவிர,  இம்மெர்சிவ் ரீடர், கார்டனா,  ஆக்டிவிட்டி மைன்கிராப்ட்,  ஒன்நோட் போன்ற பலவிதமான மென்பொருள்களைப் பயன்படுத்தி கற்பித்தலுக்கும், கற்றலுக்குமான செயல்திட்டத்தை உருவாக்கினேன்.   

இந்தச் செயல்திட்டத்தை எனது வகுப்பறையில் 2018 - ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறேன். 

தமிழக அரசுப் பாடநூல்களில்  உள்ள விரைவுத்துலங்கல் குறியீடு மாணவர்களது கற்றல் செயல்பாட்டினை எளிதாக்கியதைக் கண்டு மேலும் புதுமைப்படுத்த நினைத்தேன். அதன்படி, மாணவர்கள் தங்களது அடையாள அட்டையில் உள்ள விரைவுத்துலங்கள் குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் தங்களது பாடக்கருத்துகளை ஒலி வடிவிலும், காணொளி வடிவிலும், படங்களாகவும், எழுத்துகளாகவும் பெற முடிந்தது. இதனைக் கொண்டு மாணவர்கள் தங்களது வீட்டுப்பாடங்களை டிஜிட்டல் முறையில் செய்து அனுப்ப முடிந்தது. 

பாடப் புத்தகங்களின் விரைவுத் துலங்கல் குறியீட்டில் பாடம் தொடர்பான விடியோக்கள் இருக்கும். அந்தக் குறியீட்டுடன் டெக்ஸ், இமேஜ், ஆடியோ, 3டி அனிமேசன் விடியோக்கள்   கொண்டதாக குறியீட்டைப் புதுமைப்படுத்தும் பணியை மேற்கொண்டேன். 

அதன் பின்னர் கிளாஸ்டோஜோ எனும் இலவச மென்பொருளைப் பயன்படுத்தி மாணவர்களின் டிஜிட்டல் போர்ட்போலியோவை உருவாக்கினேன். இதில், மாணவர் பற்றிய விவரக் குறிப்பு, பாடம், வகுப்பில் மாணவரின் செயல்பாடு மற்றும் மதிப்பீடு போன்றவை இருக்கும்.

இதையடுத்து, ஒவ்வொரு மாணவருக்கும்  தனித்தனியே விரைவுத் துலங்கள் குறியீட்டை உருவாக்கினேன். அதன் பிறகு, பாட விரைவுக்குறியீட்டை மாணவரின் போர்ட் போலியோவுடன் இணைத்து அவர்கள் விரும்பியநேரத்தில் கற்றல் நிகழ்வை மேற்கொள்ளும் விதமாக மேம்படுத்தினேன். 

பல்வேறு மென்பொருள்களை மாணவர்களின் அடையாள அட்டை விரைவுத்துலங்கல் குறியீட்டுடன் ஒருங்கிணைப்பதன் மூலம் எனது கற்பித்தல் முறைகளை மிகவும் புதுமையாகவும், எளிமையாகவும் மாற்றியுள்ளேன். இதனால் கற்பிக்கும் நேரம் குறைகிறது. அதனால் கற்றலில் மிகவும் பின்தங்கியுள்ள, மாற்றுத் திறனாளி மாணவர்களிடம் தனிக்கவனம் செலுத்த முடிகிறது. இவ்வாறு தகவல் தொடர்பு தொழில்நுட்ப நுணுக்கங்களைப் பல்வேறு நிலைகளில் கடந்த நான்கு ஆண்டுகளாகப் பயன்படுத்தி வருகிறேன்.    
இதனால் மாணவர்களின் வாசித்தல் திறன் மற்றும் அடிப்படை கணித அறிவு மேம்பாடு அடைந்ததை அறிய முடிந்தது.  

தகவல் தொடர்பு தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி மைக்ரோ லேர்னிங் சென்டர் என்ற மையத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது எதிர்காலத் திட்டம். இதன் மூலம் வீட்டிலிருக்கும்போதும்  மாணவர்கள் தங்களுக்குள் குழுவாகப் பிரிந்து இணைய வழியில் கற்றலை மேற்கொள்ள இயலும். 

குழு கற்றல் முறையை  ஊக்குவிப்பதன் மூலம் மாணவர்களிடம் பன்முகத்தன்மை வளர்க்க இயலும் எனக் கருதுகிறேன்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com