வேலை வாய்ப்பு... தேவை புதிய திறன்கள்! 

வேலைவாய்ப்பின்மை என்பது தற்போது உலகளாவிய பெரும்பிரச்னையாக உருவெடுத்துள்ளது.
வேலை வாய்ப்பு... தேவை புதிய திறன்கள்! 

வேலைவாய்ப்பின்மை என்பது தற்போது உலகளாவிய பெரும்பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இளைஞர்கள் பட்டப்படிப்பு முடித்து, துறை சார்ந்து போதிய கல்வியறிவு பெற்றிருந்தாலும் வேலை தேடி அலையும் சூழலே இருக்கின்றது. இதில் சிலருக்கு மட்டுமே எளிதாகக் கிடைக்கிறது. பலர் தடைகளைத் தாண்டி பல முயற்சிகளுக்குப் பின்னர் வேலையைப் பெறுகிறார்கள். பலருக்கு அது வாய்ப்பதே இல்லை.

சமீபத்திய ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாக உலக அளவில் வேலையின்மை விகிதம் அதிகரித்துக் காணப்படுகிறது.

இந்தியாவில் 2019 - ஆம் ஆண்டு 5.33% ஆக இருந்த வேலைவாய்ப்பின்மை விகிதம் 7.11% ஆக அதிகரித்துள்ளது.

இதற்கு பெருகிவரும் மக்கள்தொகை, அரசு, தனியார் துறைகளில் உள்ள சிக்கல்கள் உள்ளிட்ட பல காரணங்கள் இருக்கின்றன. துறை சார்ந்து படித்திருந்தாலும் அவர்கள் விரும்பும் வேலையைப் பெற இளைஞர்களிடம் போதுமான திறன் இல்லை என்று கூறுகிறது ஓர் ஆய்வு. குறிப்பாக தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்துவரும் உலகில் கீழ்குறிப்பிட்ட முக்கிய திறன்கள் தேவை என்று கல்வியாளர்கள்கருதுகின்றனர்.

டிஜிட்டல் கல்வியறிவு

அனைத்துத் துறைகளும் டிஜிட்டல் மயமாகிவிட்ட சூழ்நிலையில், அடிப்படை கல்வித்தகுதியுடன் வேலைக்குச் செல்பவர்கள் கூட கணினி அறிவு பெற வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. ஒவ்வொரு தொழிலிலும் ஏதேனும் ஒருவகை கணினி தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதால் டிஜிட்டல் அறிவு தேவையாகிறது.

நேர்காணலுக்கு வரும் நபர் ஒருவர் எந்த அளவுக்கு நவீன தொழில்நுட்பத்தைப் அறிந்திருக்கிறாரோ அவர்களுக்கே வேலையில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

டிஜிட்டல் தொழில்நுட்ப அறிவு என்பது இளைஞர்களுக்கு பல்வேறு தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துகிறது. எதிர்காலத்தில் ஒரு குறிப்பிட்ட துறையில் சிறந்து விளங்கவேண்டுமெனில் டிஜிட்டல் அறிவு தவிர்க்க முடியாத ஒன்று.

சிக்கல் தீர்க்கும் திறன்

வேலையில் சேர்வதற்கு முன்பு இளைஞர்களுக்குத் தேவையான மிக முக்கியமான திறமை சிக்கலைத் தீர்க்கும் திறன்.

பல கல்வி முறைகள் இந்த திறன்களைக் கற்பிப்பதில்லை. பரந்த அளவிலான பிரச்னைகளைத் தீர்ப்பதில் வெளிப்படையான, உண்மையான அனுபவங்களை வழங்குவதில்இளைஞர்களுக்குப் போதுமான பயிற்சி தேவை. வேலைக்குச் செல்பவர்கள் அனைத்து வகையான பிரச்னைகளுக்கும் தீர்வு காண்பதற்கு பயிற்சி பெற வேண்டும்.

உலகளாவிய வாழ்க்கைமுறை

மேம்பட்ட தொழில்நுட்பத்தின் காரணமாக, நம் உலகம் இப்போது முன்னெப்போதையும் விட சிறியதாக உள்ளது.

கடந்த காலத்தில், ஊழியர்கள் தங்கள் வாழும் பகுதிகளிலேயே வேலை செய்தார்கள். ஆனால் இப்போது வெளிநாடுகளில் வேலை செய்வது சாதாரணமாகிவிட்டது. இளைஞர்கள் உலகளாவிய வாழ்க்கைமுறையை நன்கு அறிந்திருக்க வேண்டும். மற்ற கலாசாரங்களைப் பாராட்டவும் புரிந்து கொள்ளவும் வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளை அறிந்திருப்பது பெரிய சொத்து. பிற கலாசாரங்களைச் சேர்ந்த மனிதர்களுடன் தொடர்புகொள்வது, அவர்களுடன் இயைந்து வாழ்வது ஆகியவற்றுக்கு இளைஞர்கள் தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ள வே ண்டும். வேலைக்கான பயணத்தில் அது மிகவும் உதவும்.

தொழில்முனைவு

அனைத்து இளைஞர்களும் சொந்தத் தொழில் செய்ய விரும்பமாட்டார்கள். என்றாலும் இனி வரும் காலங்களில் தொழில் முனைவோருக்கான உணர்வுடன் இளைஞர்கள் இருப்பது அவசியம். இதன் பொருள் இளைஞர்கள் தங்கள் வேலைகளில் ஈடுபாட்டுடன் செயல்பட ஊக்குவிக்கப்பட வேண்டும். நிறுவனங்கள் சிந்திக்கும் திறனுடைய, சொந்தமாக மாற்றங்களையும் அதற்கான யோசனைகளையும் வழங்கக் கூடிய பணியாளர்களை விரும்புகின்றன. கொடுத்த வேலையை மட்டும் செய்வது என்ற நிலையில் இனிமேல் இளைஞர்கள் இருக்க இயலாது. ஒரு தொழில்முனைவோரைப் போல
சிந்தித்துச் செயல்படுவது, அதற்கான திறன்களை வளர்த்துக் கொள்வது காலத்தின் கட்டாயமாகும்.

கற்பதில் ஆர்வம் எதிர்கால வேலைகளுக்குத் தேவையான மிக முக்கியமான திறன்களில் ஒன்று கற்பதில் ஆர்வம் கொண்டிருப்பதாகும்.

இளைஞர்கள் குழந்தைகளாக இருக்கும்போது இருந்த கற்கும் ஆர்வத்தைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள வேண்டும். புதிய விஷயங்களை எப்போதும் கற்றுக் கொள்ள வேண்டும். இளைஞர்கள் எவ்வளவு அதிகமாக அறிந்திருக்கிறார்களோ, அந்த அளவுக்கு வேலைவாய்ப்பில் முதலிடத்தைப் பெறுவதில் தகுதியுடையவர்களாக இருப்பார்கள். அப்படிப்பட்ட இளைஞர்களையே நிறுவனங்கள் தேடிக் கொண்டிருக்கின்றன.

தொடர்புத் திறன்:

எதிர்காலத்தில் வேலைகளுக்குத் தேவைப்படும் திறன்களில் பேசும் திறன், பிரச்சனைகளைத் தீர்க்கும் திறன் ஆகியவை மட்டுமே அதிகம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். ஒரு நபரின் எண்ணங்கள் அல்லது யோசனைகள் எவ்வளவு சிறப்பாக இருந்தாலும், அவர் அதை பிறரிடம் திறம்பட தொடர்பு கொண்டு பகிரும் திறன் இல்லாதவராக இருந்தால், வேறு பல திறமைகள் அவரிடம் இருந்தாலும் அது பெரிய விஷயமாக இருக்காது. இளைஞர்கள் எழுத்து மற்றும் பேச்சு இரண்டிலும் தங்கள் கருத்துக்களைப் பகிர்வதில் திறமைசாலியாக இருக்க வேண்டும். பல முதலாளிகள் புதிய பணியமர்த்தலின்போது, அவர்கள் தேடும் சிறந்த பண்புகளில் எழுத்து மற்றும் பேசும் திறன்களை பட்டியலிடுகின்றனர்.

பணியிடத்தில் தொடர்பு கொள்ள வசதியாக இருக்கும் வரை இளைஞர்கள் எழுதவும் பேசவும் பயிற்சி செய்ய வேண்டும்.

தகவமைத்துக் கொள்ளுதல்:

எதிர்கால வேலைகளுக்கு இரண்டு மிக முக்கியமான திறன்கள், ஒன்று தேவைக்கேற்ப இளைஞர்கள் தங்களைத் தகவமைத்துக் கொள்வது; இரண்டு எதிலும் இறுகிய தன்மையுடனான பார்வையைக் கொண்டிருக்காமல், நெகிழ்வான தன்மையுடன் இருப்பது ஆகியவையாகும்.

வரும் காலங்களில் தொழில்கள் எப்படி இருக்கும் என்று யாருக்கும் தெரியாது. இளைஞர்கள் வெற்றி பெற வேண்டுமானால், மாற்றங்களுக்கு ஏற்றவகையில் தங்களை எளிதில் மாற்றிக் கொள்ள வேண்டும்.

பல நிறுவனங்கள் எப்போதும் தங்கள் செயல்முறைகளை மாற்றிக் கொண்டே இருக்கின்றன. அந்த மாற்றங்களுக்கு ஏற்ப தங்களுடைய திறமைகளை, செயல்களை மாற்றிக் கொள்ளக் கூடிய பணியாளர்களே அவர்களுக்குத் தேவை. இளைஞர்கள் எந்தப் பிரச்னையை எதிர்கொள்வதிலும் நெகிழ்வுத்தன்மையுடன் இருக்க வேண்டியது அவசியம். புதிய பிரச்னைகள், சூழ்நிலைகள் தோன்றும்போது அவர்கள் தங்கள் சிந்தனைகளை அதற்கேற்ப விரைவாக மாற்றிக் கொள்ள வேண்டும். குறிப்பிட்ட சூழ்நிலையை பல கோணங்களில் பார்த்து சிறந்த செயல் திட்டத்தை வகுக்க முடியும்.

தன்னையறிதல்:

வருங்கால பணியாளர்களுக்குத் தேவையான மிக முக்கியமான திறன்களில் ஒன்று தன்னை அறியும் திறன்.

இளைஞர்கள் தங்களின் பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து கொண்டிருக்கும்போதுதான், சூழ்நிலைக்கேற்ற தேவையான மாற்றங்களை தங்களுக்குள் ஏற்படுத்திக் கொள்ளமுடியும். தன்னைச் சரியாக அறிந்த ஒருவரால்தான் பிறருடன் எளிதாக இணைந்து பணி செய்ய முடியும்.

பிறருடன் இணைந்து பணி செய்யும் திறன் மிக்கவரையே நிறுவனங்கள் தங்களுடைய பணியாளராகச் சேர்த்துக் கொள்ளும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com