பெட்ரோல்... டீசல்... மாற்று எரிபொருள்!

"நவீன வசதிகளும் வேண்டும்; சுற்றுச்சூழல் மாசடையவும் கூடாது' என்ற அடிப்படையில் சிந்திப்பவர்கள் இப்போது அதிகமாகிக் கொண்டிருக்கிறார்கள்.
பெட்ரோல்... டீசல்... மாற்று எரிபொருள்!

"நவீன வசதிகளும் வேண்டும்; சுற்றுச்சூழல் மாசடையவும் கூடாது' என்ற அடிப்படையில் சிந்திப்பவர்கள் இப்போது அதிகமாகிக் கொண்டிருக்கிறார்கள். பெட்ரோல், டீசலால் இயங்கும் வாகனங்களால் சுற்றுச்சூழல் மாசடைகிறது. அவற்றின் விலையும் அதிகமாகிக் கொண்டே போகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், பெட்ரோல், டீசலுக்குப் பதிலாக மாற்று எரிபொருள் ஒன்றைக் கண்டுபிடித்து இருக்கிறார் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பொறியாளர் விஷால் பிரசாத் குப்தா.

ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.100- ஐத் தொட்டுவிட்ட நிலையில், இவர் தயாரித்திருக்கும் எரிபொருளின் விலை லிட்டருக்கு வெறும் ரூ.27 தான்.

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி வாழும் அவர், ராஞ்சி நகரில் உள்ள ஏரிகள், குளம், குட்டைகளில் உள்ள பாசியை எடுத்துக் கொள்வதற்காக அவர் ராஞ்சி நகரின் நகராட்சி அமைப்புடன் ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறார். ஆம். நீர்நிலைகளில் உள்ள பாசியை வைத்துதான் பயோ - ஃபியூயல் எனப்படும் மாற்று எரிபொருளை அவர் உருவாக்குகிறார்.

""நான் பெட்ரோலியம் தொழில் சார்ந்த பணிகளை மேற்கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவன். என் தாத்தா 1932- இல் பர்மா ஷெல் என்றழைக்கப்பட்ட பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் வேலை செய்தார். என்னுடைய அப்பா இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் விற்பனைப் பிரிவில் வேலை செய்தார். இந்தப் பின்னணி இருந்ததால்தான் கார்பனை அதிகம் வெளியிடாத, விலை குறைவான பெட்ரோல், டீசலுக்கு மாற்றான எரிபொருளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது.

நான் மெஸ்ராவிலுள்ள "பிர்லா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி'யில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு, "டோட்டல் பிரான்ஸ்' என்ற சர்வதேச ஆயில் மற்றும் எரிவாயு நிறுவனத்தில் மார்க்கெட்டிங் ஸ்பெஷலிஸ்ட்டாக வேலை செய்தேன். அதற்குப் பிறகு பல பொதுத்துறை நிறுவனங்களில் வேலை செய்தேன். பெட்ரோல், டீசலுக்கான மாற்று எரிபொருளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர்வம் மனதுக்குள் இருந்ததால், முழுமுயற்சியுடன் 2018 முதல் அந்த ஆராய்ச்சியில் இறங்கினேன்'' என்கிறார் விஷால்.

இவர் தயாரித்திருக்கும் இந்த மாற்று எரிபொருள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றைவிட சுற்றுச்சூழலுக்கு உகந்தது. ஒரு லிட்டர் பெட்ரோல், டீசலைப் பயன்படுத்தி வாகனங்கள் செல்லும் தூரத்தைவிட, இவர் தயாரித்திருக்கிற இந்த பயோ - ஃபியூயல்லைப் பயன்படுத்தினால் வாகனங்கள் அதிக தூரம் செல்கின்றன. அதாவது, அதிக மைல்லேஜ் கொடுக்கின்றன.

இவர் தயாரிக்கின்ற பயோ - ஃபியூயல்லை விற்பதற்காக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் அனுமதியுடன் ராஞ்சி நகரில் ஒரு பயோ - ஃபியூயல் பங்க்கை நிறுவியிருக்கிறார்.

எரிபொருள் தயாரிப்பதற்காக இவர் பயன்படுத்தும் பாசியில் புரதச்சத்து, அமினோ அமிலங்கள், தாது உப்புகள், பிற சத்துகள் இருப்பதாக பாசிகள் பற்றி ஆய்வு செய்யும் ராஞ்சியில் உள்ள பேராசிரியர் குமார் பூபதி கூறியிருக்கிறார். அவருடன் இணைந்துதான் விஷால் இந்த ஆராய்ச்சியில் இறங்கினார். பாசியில் உள்ள சத்துப் பொருள்களெல்லாம் விஷாலுக்கு முக்கியமானதாகத் தெரியவில்லை. பாசியில் உள்ள கச்சா எண்ணெய் போன்ற ஓர் எண்ணெய்ப் பொருள்தான் அவர் கண்ணில் பட்டிருக்கிறது. அதை வைத்துத்தான் பயோ - ஃபியூயல்லை உருவாக்கியிருக்கிறார். இந்த மாற்று எரிபொருளுக்கான அங்கீகாரத்தை இந்திய அரசின் "பெட்ரோலியம் கன்சர்வேஷன் ரிசர்ச் அசோசியேஷன்' வழங்கியிருக்கிறது.

""பயோ - ஃபியூயல்லை உருவாக்க நான் பயன்படுத்தும் பாசியின் பெயர் அúஸாலா பின்னாட்டா. இதில் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு கச்சா எண்ணெய் போன்ற எண்ணெய் உள்ளது. இந்த பாசியைக் குளத்தில் இருந்து எடுத்து அதில் ஹெக்ஸினி என்ற வேதிப் பொருளைப் போட்டு, வேறு பல செய்முறைகளைச் செய்தவுடன், பாசி கெட்டியான திரவ வடிவத்துக்கு மாறிவிடும். அதிலிருந்துதான் பயோடீசல், பயோ எத்தனால் வடிவிலான மாற்று எரிபொருளான பயோ - ஃபியூயல்லை உருவாக்குகிறோம். 7 ஆயிரம் கிலோ லிட்டர் பயோ - ஃபியூயல்லைத் தயாரிக்கத் தேவையான பாசியை கிட்டத்தட்ட 13 குளங்களில் இருந்து அறுவடை செய்து எடுத்து வருகிறோம். அவற்றை 13 மணி நேரங்கள் வெயிலில் காயவிடுகிறோம். அதற்குப் பிறகுதான் எரிபொருளாக அதை மாற்றும் பணியைத் தொடங்குவோம்.

ராஞ்சியில் உள்ள நீர்நிலைகளைத் தவிர, இந்தப் பாசியை ராஞ்சி மாவட்டத்தில் உள்ள நாம்கும் என்ற இடத்தில் வளர்க்கிறோம். அங்கே வளரும் பாசியைப் பயன்படுத்தி ஒரு நாளைக்கு 70 ஆயிரம் கிலோ லிட்டர் பயோ - ஃபியூயல்லை தயாரிக்க முடியும். 35 பேருக்கும் அதிகமானோர் பாசி வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தப் பாசியை அறுவடை செய்து காய வைக்க புற ஊதாக் கதிர் விளக்குகளைப் பயன்படுத்துகிறோம். இந்த பாசி வளர்ப்பினால் காற்று தூய்மையடைகிறது.

காற்றிலுள்ள கார்பன் டை ஆக்ûஸடை ஒளிச்சேர்க்கையின்போது, இந்த பாசி ஆக்சிஜனாக மாற்றுகிறது. காற்றுத் தரக் குறியீடு 60 சதவீதமாகக் குறைகிறது. அந்த அளவின்படி காற்றின் தூய்மை "மிதமான' அளவுக்கு இருப்பதாகக் கூறுவார்கள்.

மேலும் நீர்நிலைகளில் இருந்து பாசியை அறுவடை செய்துவிடுவதால் தண்ணீர் தூய்மை அடைகிறது. அதுமட்டுமல்ல, இந்த பயோ - ஃபியூயல் தயாரிக்கும்போது பயன்படுத்தும் தண்ணீரை மினரல் வாட்டர் போல பயன்படுத்தலாம்'' என்கிறார் விஷால்.

ராஞ்சியில் உள்ளதனது பயோ - ஃபியூயல் பங்க்கின் மூலமாக ஒருநாளைக்கு 2 ஆயிரம் கிலோ லிட்டர் முதல் 2,500 கிலோ லிட்டர் வரை விற்பனை செய்கிறார். இதுவரைக்கும் 2 லட்சத்து 50 ஆயிரம் கிலோ லிட்டர் மாற்று எரிபொருளை அவர் விற்பனை செய்திருக்கிறார்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இவர் தயாரித்த எரிபொருளைப் பாராட்டி இருக்கிறது. இவருடைய இந்த பயோ - ஃபியூயல்லைப் பயன்படுத்தினால், தங்களுடைய நிறுவனம் தயாரிக்கும் வாகனங்களின் திறன் மேம்படுவதாகவும் அது தெரிவித்து இருக்கிறது.

""என்னுடைய தயாரிப்பைப் போன்ற மாற்று எரிபொருள்களை நம் நாடு பயன்படுத்தத் தொடங்கினால், மிக விரைவிலேயே கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நிலையில் இருந்து மாறி, அதை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிலைக்கு நாம் உயர்ந்துவிடுவோம். வாகன எரிபொருள் துறையில் நாம் சுயசார்பு நிலையை அடைந்து விடுவோம்'' என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் விஷால் பிரசாத் குப்தா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com