தெளிவான மனநிலை... இன்றைய தேவை!

21-ஆம் நூற்றாண்டு இளைஞர்கள் புரிந்து கொள்ள முடியாத வேகத்தில் பயணிக்கும் உலகில் வாழ்ந்து வருகிறார்கள் என்றால் மிகையில்லை.
தெளிவான மனநிலை... இன்றைய தேவை!


21-ஆம் நூற்றாண்டு இளைஞர்கள் புரிந்து கொள்ள முடியாத வேகத்தில் பயணிக்கும் உலகில் வாழ்ந்து வருகிறார்கள் என்றால் மிகையில்லை. தற்போது புதிய புதிய துறைகள் வளர்ந்துவிட்டன. அவை தொடர்பான விஷயங்களைக் கற்றுக் கொள்ள வேண்டிய தேவையும் அதிகரித்துவிட்டது. கற்றல் திறனும் மேம்பட்டு வளர்ந்து வருகிறது.
மாறிவிட்ட சூழலில் ஒவ்வொருவரும் தேர்வு செய்ய ஏராளமான விருப்பங்கள் இருந்தபோதிலும் எதைத் தேர்வு செய்வது என்பதில் குழப்பமான நிலைதான் நீடிக்கிறது. இதற்கு பெற்றோர்கள், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், சமூகம் கொடுக்கும் அழுத்தமோ அல்லது போதிய நிதி இன்மையோ அல்லது சரியான வழிகாட்டுதல் இல்லாததோ கூட காரணமாக இருக்கலாம்.
தற்போது இணையத்தில் இல்லாத விஷயங்களே இல்லை என சொல்லலாம். இன்றைய இளைஞர்களுக்கு பரந்த அறிவு இணையம் வாயிலாகக் கிடைத்துள்ளது. ஆனால் தங்களுக்குத் தெரிந்த விஷயங்களை வெளிப்படுத்துவதற்கு அவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை. இதனால் ஏற்படும் மன அழுத்தத்தின் காரணமாக பெரும்பாலும் இன்றைய இளைஞர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்கிறார்கள்.
அவர்களுடைய உணர்வுகளை, எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளும் சூழ்நிலையும் இப்போது இல்லை. குடும்பத்தினர், உறவினர்கள் ஒன்றாக அமர்ந்து பேசும் சூழலும் இல்லை.
இதுபோன்ற பல காரணங்களால் இளைஞர்களுக்கு மனநலப் பிரச்னைகள் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 10 முதல் 20 சதவீத குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் இத்தகைய மனநலப் பிரச்னைகளை அனுபவிக்கிறார்கள். ஆனால் அவர்களில் பெரும்பாலோனோர் வேறு யாரிடமும் அவற்றைப் பகிர்ந்து கொள்வதில்லை. மனநலப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்காக யாருடைய உதவியையும் அவர்கள் நாடுவதில்லை என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
பொதுவாக மனநலப் பிரச்னைகளினால் பாதிப்பு ஏற்படுபவர்களில் 50 சதவீதம் பேருக்கு 14 வயதிலேயே அத்தகைய பாதிப்பு தொடங்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்நிலை கவனிக்கப்படாமல் தொடர்ந்தால் 15 வயது முதல் 19 வயதாகும் போது அவர்களுக்கு தற்கொலை எண்ணம் ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. 13 வயது முதல் 17 வயதுக்குட்பட்ட 9.8 மில்லியன் இந்திய இளைஞர்களுக்கு இத்தகைய மனநலக் கவலைகள் இருந்ததாக தேசிய மனநலம் குறித்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
இந்தியா முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில் இன்றைய இளைஞர்களில் மனநலப் பிரச்னையால் பாதிப்படைவதற்கு மன அழுத்தம், பதற்றம் ஆகியவற்றுடன் இணைந்த கல்வி முறையும் , பணிச் சூழலும், காரணமாக இருப்பது தெரிய வந்தது.
மேலும் இளைஞர்கள் சிலர் பெற்றோரின் விருப்பத்திற்கு ஏற்ப தங்களால் செயல்பட முடியவில்லையே, இதனால் பெற்றோரின் நம்பிக்கையை இழந்து விட்டோமே, இதனால் மற்றவர்களால் நாம் நேசிக்கப்படாமல் போய் விடுவோமோ? இந்தத் தேர்வில் வெற்றி பெறாவிட்டால் நமது எதிர்காலம் வீணாகி விடுமோ என்பன போன்ற எண்ணங்களால் தாங்களாகவே மனநலப் பிரச்னைகளை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். அதுவும் கோவிட் கொள்ளை நோயின் காரணமாக வகுப்புகள், தேர்வுகள் என அனைத்தும் ஆன்லைன் மயமாகிவிட்ட சூழலில் நிச்சயமற்ற வாழ்க்கை வாழ்கிறோமோ? என்ற எண்ணம் இளைஞர்கள் மத்தியில் வேரூன்றத் தொடங்கி உள்ளது. இதனால் இந்திய இளைஞர்கள் பெரும் மனஅழுத்தத்துடன் தங்கள் வாழ்க்கையை நகர்த்திச் சென்று கொண்டிருக்கிறார்கள்.
இளைஞர்களின் புதிய சிந்தனையை ஏற்றுக்கொள்ள இந்த உலகம் தயாராக இல்லை. மனநலம் சார்ந்து அவர்கள் கூறும் கருத்துகளை, குடும்பத்தினர் மற்றும் பெரியவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை . "நீங்கள் சிறியவர்கள். உங்களுக்கு என்ன தெரியும்' என்று சொல்லி, இளைஞர்களின் கருத்துகளை யாரும் காது கொடுத்து கேட்பதில்லை.
மேலும் பொருளாதாரச் சூழலின் காரணமாக இளைஞர்கள் மனநல நிபுணர்களின் உதவியை நாடுவதும் இங்கு சாத்தியம் இல்லை.
"இன்றைய இளைஞர்கள் எதிர்கால இந்தியாவின் தூண்கள்' என்பதால் அவர்களின் உடல் மற்றும் மனநலன் மிகுந்த கவனத்திற்குரியது; முக்கியமானது. மனம் ஆரோக்கியமாக இருந்தால்தான் இளைஞர்கள் சுறுசுறுப்பாக இயங்கி புதிய திட்டமிடல்களைச் செயல்படுத்த முடியும் . எனவே அதற்கு அதிக அளவு நிதி ஒதுக்க வேண்டும். மேலும் சரியான நேரத்தில் சரியான உதவிகளும், ஆலோசனைகளும் மனநலம் குறித்து வழங்கப்பட வேண்டும் என தேசிய மனநல ஆய்வு நிறுவனம் தெரிவிக்கிறது.
கல்வி நிறுவனங்கள் தான் மனநலம் குறித்த விஷயங்களில் முக்கிய பங்கு வகிக்கின்றன. தங்களை நம்பி வரும் மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பினை மனநலம் குறித்த ஆலோசனைகளை வழங்குவதற்கு கல்வி நிறுவனங்கள் முன் வர வேண்டும். இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான கல்வி நிறுவனங்களில் மனநலம் குறித்த பயிற்சி பெற்ற ஆலோசகர்கள் இல்லை என்றே சொல்லலாம். எல்லாரிடமும், எல்லா விஷயங்களையும், எல்லாராலும் சொல்ல முடியாது என்பது நிதர்சனமான உண்மை.
அத்தகைய சூழலில் வளர் இளம் பருவத்தினர் தங்களின் மனநலம் குறித்த விஷயங்களை எப்படி சக நண்பர்களிடம் பேசி தீர்த்துக்கொள்ள முடியும்? அவர்கள் கிண்டல் செய்வார்களே என்று எண்ணி பெரும்பாலான வளரிளம் பருவத்தினர் தங்கள் பிரச்னைகளை வெளியில் கூறுவதில்லை. எனவே கல்வி நிறுவனங்கள் தோறும் மனநல ஆலோசகர்களின் மூலம் இளம் வயதினரின் மனநலம் சார்ந்த பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பது சிறப்பாக அமையும்.
வளர் இளம் பருவத்தினரின் மனநல பாதிப்புக்கு பெற்றோர்களும் மிகப்பெரிய காரணமாக அமைகிறார்கள். "உங்களுக்கு உழைப்பின் மதிப்பு தெரியாது',"உனக்கு சாப்பிட மட்டுமே தெரியும்", " நன்றி இல்லாதவர்கள் நீங்கள்', "பக்கத்து வீட்டு பையனைப் பாரு. எவ்வளவு திறமையாக இருக்கிறான்' என்பன போன்ற வார்த்தைகள் பெரும் மனச்சோர்வை இளைஞர்களுக்கு அளிக்கும். இது அவர்களின் மனநிலையைப் பாதிக்கும்.
இத்தகைய சூழலிலும் மனநலம் பாதிக்கப்படாமல் இளைஞர்கள் தங்களைக் காத்துக் கொள்ள வேண்டும்.
அன்றைய இளைஞர்களுக்கு கிடைக்காத பலவசதிகள் நமக்கு கிடைத்திருக்கிறது என்பதை இன்றைய இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும். புதிய புதிய கருவிகள், அறிவுத்திறனை வளர்க்க உதவும் புதிய தொழில் நுட்பங்கள் நமக்கு கிடைத்துள்ளன. எனவே சூழலில் சிக்கி நிலை தடுமாறாமல், தெளிவான மனதுடன் வாழ்க்கையை எதிர்கொள்ள இளைஞர்கள் தயாராக வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com