வீடு... பணியிடம்... புதிய  பிரச்னைகள்!

கரோனா தொற்று பரவலுக்கு முன்பே தகவல்-தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்கு அவ்வப்போது வீட்டிலிருந்தே பணிபுரிவதற்கான வாய்ப்பை வழங்கி வந்தன.
வீடு... பணியிடம்... புதிய  பிரச்னைகள்!

கரோனா தொற்று பரவலுக்கு முன்பே தகவல்-தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்கு அவ்வப்போது வீட்டிலிருந்தே பணிபுரிவதற்கான வாய்ப்பை வழங்கி வந்தன. ஆனால், கரோனா தொற்று பரவல், ஒட்டுமொத்த பணியிடச் சூழலையும் மாற்றிவிட்டது. தகவல்-தொழில்நுட்ப நிறுவனங்கள் தற்போது தங்கள் பணியாளர்களை வீட்டில் இருந்தே பணியாற்ற ஊக்கப்படுத்துகின்றன. 

ஒரு சில நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களில் குறிப்பிட்ட சதவீதத்தினரை நிரந்தரமாக வீட்டில் இருந்து பணியாற்ற வைக்கப் போவதாகத் தெரிவித்துள்ளன. புதிதாக வேலை தேடுபவர்களும் வீட்டில் இருந்தே பணிபுரிவதற்கு முன்னுரிமை அளித்து வருகின்றனர். அவ்வாறு பணிபுரிவது, பல்வேறு பலன்களை நமக்கு அளிக்கிறது. 

தினமும் வாகனங்களில் அலுவலகத்துக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை; அவசர அவசரமாகக் கிளம்பிச் செல்ல வேண்டிய அவசியமுமில்லை; அலுவலகத்துக்குச் செல்லும் முன்பே சமையல் வேலை உள்ளிட்ட மற்ற தனிப்பட்ட வேலைகளை முடிக்க வேண்டிய அவசியமில்லை. வீட்டிலேயே பணிபுரிவதால், தனிப்பட்ட வேலைகளையும் அலுவலக வேலைகளையும் சரியாகத் திட்டமிட்டுச் செய்ய முடிகிறது. 

அதே வேளையில், வீட்டில் இருந்து பணிபுரிபவர்களுக்கு சில பிரச்னைகளும் காணப்படுகின்றன. வீட்டில் நிலவும் சூழல், பணியில் நமது கவனத்தைச் சிதறடிக்க வாய்ப்புள்ளது. தனிப்பட்ட வேலைகளில் அதிக கவனம் செலுத்தி, அலுவலகப் பணிகளைத் திறம்பட மேற்கொள்ள முடியாத சூழல் உருவாகவும் வாய்ப்புள்ளது. வீட்டில் ஏற்படும் பல்வேறு இடையூறுகள், நமது பணித்திறனை பாதிக்கச் செய்கின்றன. 

அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின்படி, வீட்டில் இருந்து பணிபுரிவோருக்குப் பதவி உயர்வு உள்ளிட்டவை தாமதமடைவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தினமும் அலுவலகத்துக்குச் சென்று பணிபுரியும்போது, மேலாளர் நமது பணிகளை முறையாக ஆய்வு செய்வார். அலுவலகத்தில் யார் முறையாகப் பணியாற்றுகிறார்கள் என்பது அவருக்கு நன்கு தெரியும். 

நாம் வீட்டில் இருந்தே பணிபுரிவதால், யார் திறம்படப் பணியாற்றுகிறார்கள் என்பதைக் கண்காணிக்கும் வாய்ப்பு மேலாளர்களுக்கோ உயரதிகாரிகளுக்கோ இல்லாமல் போகிறது. இத்தகைய சூழல், பதவி உயர்வு வழங்கப்படும்போது, நம்மைப் பற்றிய நினைவை மேலாளர்களின் மனதில் இருந்து அகலச் செய்கிறது. 

அதன் காரணமாக, வீட்டில் இருந்து நாம் முறையாகப் பணியாற்றினாலும் உயரதிகாரிகளுடன் போதிய தொடர்பு இல்லாததன் காரணமாக, பதவி உயர்வு உள்ளிட்டவை பாதிக்கப்படுகின்றன. இது நமது பணியில் அடுத்தடுத்த கட்டங்களுக்குச் செல்வதைக் கடுமையாகப் பாதிக்கும். எனவே, வீட்டில் இருந்து பணியாற்றுவோர் சில விஷயங்களை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும். 

முதலாவது, வீட்டில் எப்படி வேண்டுமானாலும் பணியாற்றலாம் என்ற மனநிலையை அகற்றுவது அவசியம். வீட்டில் இருந்தே நாம் பணியாற்றினாலும் கூட, பணியை மேற்கொள்வதற்கென தனி இடத்தை ஒதுக்க வேண்டும். அங்கு மற்றவர்களின் இடையூறு இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

பணி நேரத்தின்போது வேறு எந்த விஷயமும் நம் கவனத்தைச் சிதறடிக்காதபடி பார்த்துக் கொள்வது அவசியம். 

அதேபோல், உரிய நேரத்தை ஒதுக்கி பணியில் ஈடுபட வேண்டும். நமக்குப் பிடித்த நேரத்தில் பணியாற்றிக் கொள்ளலாம் என்ற மெத்தனப் போக்கு கூடாது. குறிப்பிட்ட நேரத்தை நிர்ணயித்து அதற்குள் பணிகளை முடித்துவிட வேண்டும். கூடுதல் நேரத்துக்குப் பணியாற்ற வேண்டும் என்ற அவசியமில்லை. அலுவலக நேரத்திலேயே அனைத்துப் பணிகளையும் முடிப்பதே பணியாளர்கள் மீதான நன்மதிப்பை உயர்த்தும். 

சக பணியாளர்களுடனும் உயரதிகாரிகளுடனும் தொடர்ந்து தொடர்பில் இருத்தல் அவசியம். அவர்களுடனான கலந்துரையாடலை ஒருபோதும் தவிர்க்கக் கூடாது. அது நம் மீது தவறான அபிப்ராயத்தைத் தோற்றுவிக்கும். 

வீட்டில் இருந்து பணியாற்றுவதால், பணித்திறனை வெளிப்படுத்துவதற்கு இன்னும் சற்று கூடுதல் கவனத்துடன் பணியாற்ற வேண்டிய கட்டாயம் நமக்கு உள்ளது.  இல்லையெனில் மற்ற பணியாளர்களைப் போலத்தான் நாமும் என்று நிறுவனம் கருதிவிடும். 

எந்தத் தனிச்சிறப்பும் நமக்குக் கிடைக்காது. எனவே, உயரதிகாரிகளைக் கவரும் நோக்கில் தொடர்ந்து கடினமாக உழைக்க வேண்டும். முடிந்தால் சில வாரங்களுக்கு ஒருமுறை அலுவலகத்துக்குச் சென்று அதிகாரிகளைச் சந்தித்துப் பேசலாம். 

இணையவழி உரையாடல்களில் கலந்து கொள்ளும் போது, கருத்துகளைத் திறம்படத் தெரிவிக்க வேண்டும். அத்தகைய சமயங்களில் பணி மீதான ஆர்வத்தை வெளிப்படுத்துதல் அவசியம். அனைத்தையும்விட முக்கியமானது, பணிநேரம் போக மற்ற நேரங்களில் பணிசார்ந்த திறமைகளை வளர்த்துக் கொள்ளுதல் வேண்டும். பணி தொடர்பான புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ளுதல் அவசியம். இவையனைத்தையும் முறையாகக் கடைப்பிடித்தால், வீட்டில் இருந்தே பணிபுரிந்தாலும், அலுவலகத்தில் நமது வளர்ச்சிக்கு எந்தவிதத் தடையும் ஏற்படாது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com