கிளர்ந்தெழுங்கள் தோழர்களே! - 29: நேரமே நிரந்தரம்!

"காசேதான் கடவுளப்பா... அந்த கடவுளுக்கும் அது தெரியுமப்பா' - இது வாலியின் வேடிக்கையான பாடல். "பணம் பாதாளம் வரை பாயும்' என்று உலகமே பணத்தை சார்ந்து இருக்கிறது.
கிளர்ந்தெழுங்கள் தோழர்களே! - 29: நேரமே நிரந்தரம்!


"காசேதான் கடவுளப்பா... அந்த கடவுளுக்கும் அது தெரியுமப்பா' - இது வாலியின் வேடிக்கையான பாடல். "பணம் பாதாளம் வரை பாயும்' என்று உலகமே பணத்தை சார்ந்து இருக்கிறது. எப்படி குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கலாமென்று அலைகிறார்கள். ஆனால் அதே செல்வம் "தேடும் போது வருவதில்லை; விட்டுப் போகும்போது சொல்வதில்லை'. திடீரென்று அழிந்துவிடும்! அழியக் கூடிய பணத்தை விட சக்தி வாய்ந்த செல்வம் ஒன்று உண்டு, அதுதான்  "நேரம்' என்ற பொக்கிஷம். 

நேரம் பொன்னானது. ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாது எல்லாருக்கும் ஒரே அளவு இயற்கையால் கொடுக்கப்படுகிறது. நேரத்தை வைத்து பணம் சம்பாதிக்க  முடியும். ஆனால் பணத்தால் நேரத்தை வாங்க முடியாது. அடகு வைத்து முன் பணம் வாங்குவது போல் நேரத்தை வாங்க முடியாது. வட்டிக்கு விட்டு வட்டி வாங்குவதைப் போல நேரத்தை வாங்க முடியாது. நேரத்தைச் செலவு செய்யவில்லை என்றாலும் நேரம் செலவழிந்து கொண்டே போகும்! நேரத்தை வீணாக்கினாலும் இயற்கை நமக்கு அபராதம் விதித்து வரும் நேரத்தை குறைப்பதில்லை. 

போன நேரம் திரும்பாது; ஆனால் விடியும் போது 24 மணி நேரம் எல்லாருக்கும் குறைவின்றிக் கிடைக்கும்!

தெருவில் முடங்கும் பிச்சைக்காரனுக்கும், மாட மாளிகையில் களித்திருக்கும் செல்வந்தனுக்கும் நேரம் ஒரே அளவுதான். முழுமையான சமத்துவம். நேரத்தைத் தவிர வேறு எந்த செல்வமும் இத்தகைய பயனுள்ளதல்ல. காலத்தை வென்று அழியாப் பெயர் பெற்றவர்கள் காலத்தின் வலிமை உணர்ந்து செயலாற்றியவர்கள்.

"காலத்தின் அருமை கருதி விரைவில் பேச்சை முடிக்கிறேன்' என்று தொடங்கி மணிக்கணக்காக பிதற்றும் மேடை பேச்சாளர்கள்  தங்களது நேரத்தை மட்டுமல்ல, மற்றவர் நேரத்தையும் வீணடிக்கிறார்கள். மக்களவையிலும் சட்ட மன்றத்திலும் விரயமாகும் நேரம் கணக்கிலடங்காது. மக்களவையில் அங்கத்தினராக இருப்பது எல்லாருக்கும் வாய்ப்பதில்லை. ஆனால் அதை உணராமல் பல மக்கள் பிரதிநிதிகள்  வாய்க்கு வந்தபடி வசை பாடுவது; சிலர் சினிமா பாட்டு பாடுவது; தங்கள் தலைவர்களை கேட்போர் முகம் சுளிக்கும் அளவிற்கு புகழ்வது வாடிக்கையாகிவிட்டது. மக்கள் பிரச்னைகள் பற்றி பேசவோ, விரிவாக விவாதிக்கவோ திறமையற்றவர்களாக பலர் பொது வாழ்வில் வலம் வருகிறார்கள். இதனால் தேசிய அளவில் நேரம் பாழடிக்கப்படுகிறது.  

கட்டமைப்புகளைத் திட்டமிடுகையில் கால அவகாசம் முக்கிய வளமாக கருதப்படுகிறது. காலம் கடந்தால் ஒரு திட்டத்தின் மதிப்பீடு அதிகமாகிறது. பல திட்டங்கள் நன்றாக வகுக்கப்படுகின்றன. ஆனால் நிறைவேற்றுகையில் பல குறுக்கீடுகள், நீதிமன்ற வழக்குகள், நிலம் கையகப்படுத்துவதில் சுணக்கம், ஊழல் என்று தடங்கல்களுக்கு அளவே இல்லை. அதனால் தான் இவற்றை ஐந்தாண்டு திட்டம் என்றார்களோ... திட்டமிடுதலுக்கே ஐந்தாண்டுகள்!  நிறைவேற்ற முடிவடையாது நீண்டு நிற்கும் திட்டங்கள் ! 

எப்போது பார்த்தாலும் எதாவது  ஒரு சாலை பணி நடந்து கொண்டே இருக்கும் , ஒரு சீராக சாலைகள் இருக்காது. இவை எல்லாம் பொதுவாக நேரத்தை வீணாக்கும் காளான்கள்.

ஒவ்வொருவரும் எவ்வாறு தங்களுக்கு வாய்த்திருக்கும் 24 மணி நேரத்தை பயனுள்ள வகையில் செலவிட வேண்டும் என்பதை பற்றி அர்னால்ட் பென்னட் என்பவர் ஒரு சிறு புத்தகம் வெளியிட்டார். "ஹவ் டு லிவ்  ஆன் 24 ஹவர்ஸ் எ டே' என்பது தலைப்பு . 1908 -ஆம் வருடம் விற்பனைக்கு வந்த  அந்த புத்தகம் ஆயிரக்கணக்கில் விற்றது! அந்த கால கட்டத்தில் தொழில் புரட்சியில்  மக்களுக்கு வேலை கிடைத்தது. ஆனால் மன நிறைவில்லாத வேலை. எட்டு மணி நேரம் அல்லது  வாரத்தில் 40 மணி நேர வேலை, காலையிலிருந்து மாலை வரை செய்ததையே திரும்பத் திரும்ப செய்ய வேண்டும், புதுமை ஒன்றுமில்லை. போரடிக்கும் அலுவலக வேலையில் நாட்டமில்லாது, அதே நேரத்தில் சம்பளம் கொடுக்கும் வேலையை விடவும் முடியாது என்ற நிலையில், பெருவாரியான மக்கள் செக்கு மாடு போல் வாழ்க்கையில் சுவாரசியம் இன்றி உழன்று கொண்டிருந்தனர். 

வாழ்க்கையை முழுமையாக அனுபவித்தால் அது வாழ்க்கை. இல்லாவிட்டால் ஜடமாக உயிரோடு இருக்கிறோம் அவ்வளவே!  வாழ்வது, வெறும் உயிரோடு இருப்பது, இரண்டுக்கும் உள்ள இடைவெளி மிகப் பெரிய கேள்விக்குறி ! இதை உணர்ந்துதான் அர்னால்ட் பென்னட் தனது புத்தகத்தில் 24 மணிநேரத்தில் கட்டாய வேலை 8 மணிநேரம் போக மீதமுள்ள 16 மணிநேரத்தை நல்ல முறையில் பயன்படுத்தினால் வாழ்வில் சந்தோஷம் கிடைக்கும்; மன நிறைவும் ஏற்படும் என்பதை மையக் கருத்தாக வைக்கிறார். இந்த 16 மணி நேரம் மிகவும் மதிப்பு மிக்கவை. செலவு செய்ய திட்டமிட வேண்டும்.

"நல்ல புத்தகங்களைப் படிக்கலாம். நல்லவர்களோடு  அறிவார்ந்த வகையில் பழகலாம். அனுபவசாலிகளின் சொற்பொழிவைக் கேட்கலாம். எல்லா வகையிலும் நம்மை உயர்த்திக் கொள்ள நேரத்தைச் செலவிடலாம்' என்கிறார் அர்னால்ட். தியானம் செய்வது, உடல் பயிற்சியில் ஈடுபடுவது நல்ல உணர்வுகளைக் கொடுக்கும். ஒரு சுயகட்டுப்பாட்டுடன் நமக்கு உயர்வை கொடுக்கக் கூடிய செயல்களில் நேரத்தைச் செலவிட வேண்டும்.

புது வருஷம் பிறக்கையில் புதிய வருடத்தில் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று பட்டியலிட்டு நிறைவேற்ற முனைவார்கள். ஆனால் புது வருஷம் பிறந்த ஒரு வாரத்திலேயே 90% மக்கள் தாங்கள் ஏற்ற சபதத்தை கை விடுகிறார்கள் என்று ஓர் ஆய்வு தெரிவிக்கிறது! அது போல "நேரத்தை உபயோகமாக செலவழிக்க முனைகையில் ஆரம்ப சூரத்தனம் இல்லாமல் எது முடியுமோ அதை கணக்கிட்டு நிதானமாக புது முயற்சியை மேற்கொள்ள வேண்டும்' என்கிறார் அர்னால்ட். ஏனெனில் அதிகமாகத் திட்டமிட்டு அதை நிறைவேற்ற இயலாது சோம்பிவிடும் நிலை வரக்கூடாது. 

"தேவையில்லாமல் தூங்கியே பலர் முட்டாள்
களாக முடங்குகிறார்கள்' என்கிறார் ஒரு மருத்துவர். 
இளமையில்  உடல் வளர்ச்சிக்கு ஆழ்ந்த உறக்கம் 
அவசியம். ஆனால் எப்போதும் படுக்கையில் வெட்டியாகவே சயனித்திருப்பது எந்த வகையிலும் நன்மையில்லை.

இன்பங்களை நுகர்ந்து களித்திருப்பது தான் சந்தோஷம் என்று தொழில் நுட்பம் வியாபித்திருக்கும்  உலகில் வியாபாரம் செய்கிறார்கள். ஆனால் உண்மையான  சந்தோஷம் இயந்திர இன்பத்தில் இல்லை. நாம் உபயோகிக்கும் சாதனங்கள்  கொடுக்கும் மகிழ்ச்சி மேலோட்டமானது. இத்தகைய இன்பத்தை தனிமையில் அனுபவிக்கிறோம். ஆனால் சந்தோஷத்தை எல்லாருடனும் பகிர்ந்து கொள்கிறோம். போதைப் பொருள்கள் கொடுக்கும் இன்பம் நிரந்தரமற்றது; நம்மை அடிமையாக்குவது. 

"மன நிறைவைக் கொடுக்கும் சந்தோஷத்திற்கு எல்லையே இல்லை. சிற்றின்பத்தில் திளைப்பது போதையில் முடிகிறது. தேகத்திற்கு கேடு விளைவிக்கும் "டோபோமைன்' என்ற சுரப்பு  நீர் சுரக்கிறது. மன நிறைவான சந்தோஷம் உடலுக்கு நன்மை பயக்கும் "சொரோடோனின்'  நீர் சுரக்க உதவுகிறது. இவ்வாறு நாளொன்றுக்கு இரண்டு மணி நேரமாவது சந்தோஷத்தை விளைவிக்கும் நல் பணிகளில் செலவிட்டால் நிறைவான சந்தோஷம் உண்டாகும்' என்கிறார் அர்னால்ட்.

இந்தியாவில் மத்திய தேர்வாணையம் நடத்தும் ஐஏஎஸ், ஐபிஎஸ் சிவில் சர்விஸ் தேர்வு மிகவும் கடினமான தேர்வு என்று கருதப்படுகிறது. பல லட்சம் இளைஞர்கள்  பங்கு கொள்கிறார்கள், ஆயிரத்துக்கும் குறைவான உயர் பணிகளுக்கு! நேரத்தைச் சரியாகத் திட்டமிட்டு முயற்சி செய்பவர் மட்டுமே வெற்றி பெற முடியும். தேர்வில் பங்கு கொள்ள அடிப்படை வயது 21. முதல் முயற்சியில் குறைந்தபட்ச 21 வயதில் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார், மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த அன்சர் அஹமது ஷேக் என்ற இளைஞர். இதற்கு முன்  22 வயதில் ரோமன் சைனி தேர்ச்சி பெற்றார். அன்சர் அஹமது தந்தை ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர் . இரண்டாவது மனைவியின் மகன்.  மிக ஏழ்மையான சூழல், மிகவும் பின் தங்கிய மாரத்வாடா பகுதியில் சிறுபான்மை இனத்தில் உள்ள போராட்டங்கள் மத்தியில் கல்வி ஒன்றே கைகொடுக்கும் என்று மூன்று வகைத் தடைகளைக் கடந்து ஜெயித்தது சாதாரண வெற்றியல்ல! அர்னால்ட் பென்னட் கூறியது போல்,  ஒரு நாளில் சில மணி நேரம் முழுமையாக தேர்விற்கான தயாரிப்பில் அன்சாரி ஷேக் ஈடுபட்டார். இப்போது மேற்கு வங்காள மாநிலத்தில் ஐஏஎஸ் அதிகாரியாகப் பணியாற்றுகிறார்.

காலத்தை கடந்து நிற்கும் அடையாளங்கள் பல உள்ளன. நமது நாட்டின் புராதனமான நகரங்களில் ஒன்று காசி நகரம். காசி விசுவநாதர் உடனுறை விசாலாட்சி கோலோச்சும் புனித ஸ்தலம். பல ரிஷிகளும் முனிவர்களும் வாழ்ந்து மறைந்த இடம். காசி என்றாலே "ஒளியின் மகுடம்' என்று பொருள். பழம்பெரும் காசி விசுவநாதர் கோயில் அமைப்பில் எழுபத்து இரண்டாயிரம் சந்நிதிகள், மனித உடலில் உள்ள நாடிகளின் எண்ணிக்கையை ஒத்து இருந்தன. சக்தி வாய்ந்த புனிதப்படுத்தப்பட்ட  இயந்திர வடிவம், அதன் அதிர்வலைகளை அனுபவித்தாலே பிரபஞ்சத்தின் மகிமையை உணர முடியும். சாதாரண மனிதர்களால் வாழ்க்கை பிரச்னைகளுக்கு நடுவே  ஆன்மீகப் பாதையில் முழுமையாக ஈடுபட முடியாது. காசி அதற்கு உபாயம் அளிக்கிறது. ஆப்கான் கொள்ளையர்கள், ஒளரங்கசீப் கொடுங்கோலனால் சேதப்படுத்தப்பட்ட  காசி புனித ஸ்தலத்தை புனரமைத்து நாட்டிற்கு அர்ப்பணித்தார் பிரதமர். 

தமிழ்நாட்டிற்கும் காசிக்கும் எப்போதும் ஒட்டுறவு உண்டு. நமது மூதாதையர்கள் வடக்கிருப்பது என்று கடைசி காலத்தில் காசி புண்ணிய பூமியில் தங்கினர். நாட்டுக்கோட்டை நகரத்தார் 1800 -ஆ வருடம் காசியில் தமிழர்கள் தங்குவதற்கு சத்திரம் கட்டினர். காசி விஸ்வநாதர் கோயிலில் நடைபெறும் ஐந்து கால பூஜைக்கும் மேளதாளம் முழங்க, விபூதி, குங்குமம்,பூக்கள், நெய், தேன், உலர்பழங்கள், போன்ற பூஜை பொருட்கள் இரு வேளையும் தமிழர் சத்திரத்திலிருந்து எடுத்து செல்லப்படுகிறது.

நேரம் வீணாகாது நிறைவேற்றப்பட்டது காசி உழவாரப்பணி. பாகிஸ்தான் கவிஞர் முனிர் அஹமது நியாசியின் உருது கவிதை, எனது மொழிபெயர்ப்பில், காலம் தாழ்த்துவதின் சோகத்தை நயமாக உணர்த்துகிறது. 

எப்போதும் தாமதிக்கிறேன் 
ஒவ்வொரு வேலையிலும் காலம் கடத்துகிறேன் 
ஏதாவது முக்கிய விஷயம் பேச வேண்டுமோ,
கொடுத்த வாக்கினைக் காப்பாற்ற வேண்டுமோ,
எப்போதும் தாமதிக்கிறேன்.
யாருக்கு அவசியம் குரல் கொடுக்க வேண்டுமோ,
எவரைத் திரும்ப அழைக்க வேண்டுமோ,
எப்போதும் தாமதிக்கிறேன்.
பிறருக்கு உதவ வேண்டும் 
நண்பனுடைய துக்கத்தை பகிர நினைக்கிறேன்
வெகுதூரம் செல்லும் சாலையில் எவரையாவது 
சந்திக்க வேண்டுமோ
ஏனோ தாமதிக்கிறேன்.
மாறிவரும் பருவங்களின் சுகமான பயணத்தில் 
மனதைப் பறி கொடுத்து மகிழ்வேனோ 
யாரை நினைவில் வைக்க   வேண்டுமோ 
யாரை மறக்கவேண்டுமோ
எப்போதும் தாமதிக்கிறேன்.
ஒருவரது இறப்புக்கு முன் அவரின் சோகத்தை போக்க 
உண்மை வேறு நினைப்பது  போல் இல்லை என்று 
சொல்ல முனைகிறேன்
ஆனால் எப்போதும் தாமதிக்கிறேன்.
காலம் தாழ்த்துகிறேன் நான் ஒவ்வொரு வேளையிலும்...
காலம் தாழ்த்த மாட்டோம். நேரத்தை வீணடிக்க மாட்டோம் என்று சபதம் ஏற்போம்!

சென்ற  வாரக்  கேள்விக்கு பதில்: நெப்போலியன் தொடுத்த கடைசிப் போர் 1815ம் வருடம் பெல்ஜியம் நாட்டில் வாடர்லூவில் நடந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com