கண்காணிக்கும்  மென்பொருள்!

மனிதன் தனது மூளையைப் பயன்படுத்தி செய்து வந்த அனைத்து வேலைகளையும், கணினி உதவியுடன் செய்து முடித்துக் கொடுப்பதுதான் மென்பொருள்.
கண்காணிக்கும்  மென்பொருள்!


மனிதன் தனது மூளையைப் பயன்படுத்தி செய்து வந்த அனைத்து வேலைகளையும், கணினி உதவியுடன் செய்து முடித்துக் கொடுப்பதுதான் மென்பொருள். கணக்குகள் செய்தல், தகவல்களைத் திரட்டி வைத்துக் கொள்ளுதல், திரட்டிய தகவல்களை தேவைப்படும் போது எடுத்துக் கையாளுதல், இயந்திரங்களைப் பணி செய்ய வைத்தல், இப்படி மனிதன் செய்த வேலைகள் அனைத்தையும்,முழுமையாகவோ, பகுதியாகவோ செய்வதற்குகணினியைப் பயன்படுத்தி, கணினியைச் செயல்படுத்த நிரல்வரிகளால் உருவாக்கப்பட்டதையே மென் பொருள் எனலாம்.

தற்போது , " உனது கணினியில் அந்த வேலையைச் செய்ய மென்பொருள் (சாப்ட்வேர்) உள்ளதா?' என கேட்கிறோம். இந்நிலையில் கல்லூரியில் விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் விடுதியை விட்டு வெளியே வந்தால், அவர்களோடு தொடர்புடைய தாய், தந்தை, அண்ணன், தம்பி போன்ற நெருங்கிய நபர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல்தெரிவிக்கும்விதமாக ஒரு மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்ட ஆலை வளாகம் போன்றவற்றில் ஆபத்தான மிருகங்கள், பாம்பு போன்றவை வந்தாலும், நிறுவனத்துக்குத் தொடர்பில்லாத நபர்கள்வந்தாலும், அதைத் தெரிவிக்கும்விதமாக, அந்த ஆலையில் பாதுகாப்பு பணி செய்பவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி தெரியப்படுத்தும் செயற்கைநுண்ணறிவு மென் பொருளை விருதுநகர்மாவட்டம் சிவகாசி அய்யநாடார்-ஜானகி அம்மாள் கல்லூரி மாணவர்கள் 4 பேர் சேர்ந்துஉருவாக்கியுள்ளனர்.

இது குறித்து அக்கல்லூரி முதல்வர் செ.அசோக் நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது:

""எங்கள் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மையம் அமைத்துள்ளோம். இதில் கணினி அறிவியல் படிக்கும் மாணவர்கள் பல ஆய்வுகளைச் செய்துவருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக முதுகலைகணினிஅறிவியல் படிக்கும் டி.மணிகண்டன்,எம்.கார்த்திகேயன், கா.நிவேதா, பெ.திவ்யாஆகியோர் செயற்கை நுண்ணறிவு மூலம் மாணவ, மாணவிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் வகையில் ஒரு மென்பொருளைஉருவாக்கியுள்ளார்கள்.

இந்த மென்பொருளை எங்களுடைய கல்லூரியில் பயன்படுத்தி வருகிறோம். கல்லூரி வளாகம், மாணவர் தங்கும்விடுதிகள் எல்லாவற்றிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமராக்கள் யார் வருகிறார்கள்? யார் செல்கிறார்கள் என்ற தகவல்களைச் சேமித்து வைக்கும். இதன் மூலம் விடுதியை விட்டு யார் யார் வெளியே செல்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்ட விடுதிக்காப்பாளர், தேவையில்லாத வகையில் வெளியில் செல்லும் மாணவர்களின் பெற்றோர்களின் கைபேசிக்கு குறுஞ்செய்தி அனுப்ப இயலும். இதன் மூலம் மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. இதற்காக விடுதியில் உள்ள மாணவர்களின் பெற்றோர்களின் கைபேசி எண்ணை தரவு தளத்தில் சேமித்து வைத்துள்ளோம். மேலும்கல்லூரியில் பயிலும் மாணவர்களின் 10 வகையான முகபாவனைகளை அடையாளம் காணும் வகையில் செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் தரவு தளத்தில் சேமித்து வைத்துள்ளோம். மாணவர்கள் விடுதியை விட்டு வெளியே செல்லும் போது, அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா மூலம் , அவர்கள் வெளியே சென்ற தகவல் கணினிக்குச் சென்று சேமித்து வைத்துள்ள கைபேசிஎண்களுக்கு குறுஞ்செய்தியை அனுப்பிவிடும். அதில், "உங்கள் மகன் கல்லூரி விடுதியை விட்டு வெளியே வந்துவிட்டார்; ஊருக்கு வந்துவிடுவார்' என குறுஞ்செய்தி இருக்கும்.

இதுபோல பெரிய ஆலைகளிலும், தொழிற்சாலைகளிலும், நிறுவனங்களிலும் வேலை பார்ப்பவர்களின் புகைப்படங்களை - அவர்களுடைய குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்களின் கைபேசி எண்களை- தரவு தளத்தில் சேமித்து வைத்துக் கொண்டால், வேலை செய்யும் நபர் பணியிடத்தை விட்டு வெளியே சென்றுவிட்டார் என குறுஞ்செய்திஉரியவர்களுக்குச் சென்றுவிடும்.

பெண்கள் வேலை பார்க்கும் அலுவலகம், கடைகளில் கணினியில் இந்த மென்பொருளை அமைத்துக் கொண்டால் அவர்களுடைய பாதுகாப்பை உறுதி செய்ய இயலும். மேலும் ஆலை வளாகத்தில் வெளிநபர்கள் வந்தாலும், வெளிநபர் வந்துள்ளார் என ஆலைநிர்வாகத்திற்கு தகவல் சென்றுவிடும். மேலும் தரவு தளத்தில் விலங்குகள் மற்றும் பாம்புகளை பல கோணங்களில் படம் பிடித்து அதனை இந்த செயற்கை நுண்ணறிவு அடிப்படையில்கணினியில் சேமித்து வைத்துக் கொண்டால், ஆலைவளாகத்தில் அவை எதிர்பாராதவிதமாக நுழைந்தால், அது குறித்து குறிஞ்செய்தி ஆலைநிர்வாகத்திற்குச் சென்று விடும்.

அபார்ட்மென்ட், வீடுகள், பொது இடங்கள், அரசு அலுவலகங்கள், முக்கியபிரமுகர்கள் இல்லம் உள்ளிட்டவற்றிலும் இந்த மென்பொருளைப் பயன்படுத்தி பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளலாம். மாணவர்களுக்கு கணினி அறிவியல்துறைத் தலைவர் வி.வெங்கடேஷ், ஒருங்கிணைப்பாளர் எஸ்.கார்த்தீஸ்வரன் ஆகியோர் வழிகாட்டியாகச் செயல்பட்டு வருகிறார்கள். இதுபோன்ற சிறிய அளவிலான மாணவர்களின் கண்டுபிடிப்புகள் அவர்களின் திறமையை மேலும் வளர்ப்பதற்கு உதவுகின்றன. வெளியுலகிற்கும் அவர்களைப் பற்றி தெரிந்து கொள்ளவும் இது உதவுகிறது'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com