உடல் மேம்பட மனம் மேம்படும்!

வளமான வாழ்க்கை முறைக்கு உடல்நலம், மனநலம் ஆகிய இரண்டும் அவசியம்.
உடல் மேம்பட மனம் மேம்படும்!


வளமான வாழ்க்கை முறைக்கு உடல்நலம், மனநலம் ஆகிய இரண்டும் அவசியம். அதில் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உடற்பயிற்சி எனும் உடல் செயல்பாடுகள் மிகவும் முக்கியமானவை. இதில் உடல்நலத்தைச் சார்ந்து மனநலம் இருப்பதால் முதலில் உடல் செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம்.

பதின்வயதினர் மற்றும் இளைஞர்கள் தங்கள் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டுமென மெனக்கெடுகின்றனர். கல்வி, பணி, பொழுதுபோக்கு என வாழ்க்கை வேகமாகச் சுழலும் இக்காலத்தில் உடல் செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது எப்படி? அதற்கேற்ப திட்டமிட்டுவது எப்படி? என்பது குறித்த விஷயங்களைப் பார்க்கலாம்.

உடல் செயல்பாடு ஏன் முக்கியமானது?

உடல் செயல்பாடுகள் ஒவ்வொரு நாளும் உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது. இதயம் மற்றும் நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. வலுவான தசைகள், எலும்புகள் மற்றும் நல்ல உடல் கட்டமைப்பை ஏற்படுத்துகிறது. ஆரோக்கியமான எடையைப் பராமரிக்க உதவுகிறது. அதிக எடை அல்லது உடல் பருமனைத் தவிர்க்க உதவுகிறது. இவை அனைத்தையும் தாண்டி, உயர் இரத்த அழுத்தம், பதற்றம், மனச்சோர்வு மற்றும் டைப் -2 வகை நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்கிறது.

மேலும், பொதுவான பயன்களாக, நினைவாற்றலை அதிகரிக்கிறது. புதிய திறன்களை கற்றுக் கொள்ள உதவுகிறது. தன்னம்பிக்கையை அதிகரிக்கிறது. மன அழுத்தத்தைக் குறைக்கிறது. தூக்கத்தை மேம்படுத்துகிறது.

உடல் செயல்பாடு என்றால் என்ன?

உடல் செயல்பாடு என்பது உங்கள் உடலை நகர்த்துவது அல்லது இயங்க வைப்பது. சாதாரணமாக நடப்பது, நடனம் ஆடுவது, ஓர் இயந்திரத்தை இயக்குவது என நாம் அன்றாடம் செய்யும் செயல்கள், விளையாட்டு, உடற்பயிற்சி ஆகியவை அனைத்தும் சேர்ந்ததுதான் உடல் செயல்பாடு.

இவற்றில் மிதமான செயல்பாடுகளை விட இளம் வயதினருக்கு நடனம், நீச்சல், ஓடுதல் உள்ளிட்டவற்றை கற்றுக் கொடுத்தால் அனைத்திலும் சுறுசுறுப்பாக இயங்குவார்கள். இவ்வாறு இளம் வயதினரின் சுறுசுறுப்பான செயல்பாடுகள், அவர்களின் இதயத் துடிப்பை அதிகரிக்கும். எலும்புகளை வலுப்படுத்தும்.

குதித்தல், ஓடுதல், ஏறுதல், தூக்குதல் மற்றும் உடற்பயிற்சிகள் போன்ற தீவிரமான உடல் செயல்பாடுகள் பெரும்பாலும் தசைகள் மற்றும் எலும்புகளை உருவாக்க உதவுகின்றன.

இவற்றில் தீவிர ஆர்வம் கொண்ட இளம் வயதினர் உடல் ஆரோக்கியத்துடன் குறிப்பிட்ட திறன்களில் சாதனைபுரிய உதவும். கால்பந்து, ஹாக்கி உள்ளிட்ட குறிப்பிட்ட விளையாட்டுகளில் இளம் வயதினருக்குப் பயிற்சி வழங்கலாம்.

வயதுக்கேற்ற உடல் செயல்பாடு நிபுணர்களின் வழிகாட்டுதலின்படி, 5 வயது முதல் 18 வயது வரை உள்ள உள்ளவர்களுக்கு ஒவ்வொரு நாளும் குறைந்தது ஒரு மணி நேரமாவது அல்லது வாரத்தில் மூன்று நாள்களாவது உடல் செயல்பாடு அவசியம் என்று கூறப்படுகிறது.

18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் ஒவ்வொரு வாரமும் 2 மணி நேரம் முதல் 5 மணி நேரம் வரை மிதமான உடல் செயல்பாடு அல்லது 1 முதல் 2 மணி நேரம் தீவிரமான உடற்பயிற்சிகளில் ஈடுபட வேண்டும். மேலும், வாரத்தில் குறைந்தது இரண்டு நாள்களாவது தசைகளை வலுப்படுத்தும் உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.

முன்னரே திட்டமிடுதல்

பதின்வயதினர் மற்றும் இளைஞர்கள் தங்களுடைய அன்றாடச் செயல்களில் ஒரு குறிப்பிட்ட நேரத்தை உடல் செயல்பாடுகளுக்கு ஒதுக்க வேண்டும். நடப்பது, வீட்டில் வேலை செய்வது என்ற அன்றாட செயல்களைத் தாண்டி உடற்பயிற்சி, விளையாட்டுகளில் ஈடுபட காலை அல்லது மாலையில் ஒரு மணி நேரத்தை ஒதுக்கிவைத்து அதனைச் சரியாகக்
கடைப்பிடிக்க வேண்டும்.

பூங்கா உள்ளிட்ட இடங்களுக்குச் செல்ல முடியாதவர்கள் வீட்டின் வளாகத்திலோ அல்லது தெருவிலோ ஏதேனும் ஒரு விளையாட்டில் ஈடுபட வேண்டும்.

கல்வி மீது ஆர்வம்

மேலும் இளம் வயதினரை உடல் செயல்பாடுகளில் ஈடுபடுத்துவதால் படிப்பிலிருந்து சிறிது நேரம் ஓய்வு கிடைக்கிறது. அதனால் படிப்பு மீது வெறுப்பு ஏற்படாது. உடல் செயல்பாடுகள் மனதளவிலும் ஆரோக்கியத்தை மேம்படுத்தி படிப்பின் மீது ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.

மின்னணு சாதனப் பயன்பாடு குறையும்

தற்போதைய காலகட்டத்தில் இளைஞர்கள் மொபைல் போன், டிவியில் மூழ்கிக் கிடக்கிறார்கள். அவற்றில் இருந்து அவர்களை விடுவிக்க உடற்பயிற்சிகளில் அவர்களை ஈடுபடுத்துவது சிறந்ததாக இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com