கிளர்ந்தெழுங்கள் தோழர்களே! - 6: வளம் குன்றா விவசாயம்!

"தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்' என்றார் பாரதியார்.
கிளர்ந்தெழுங்கள் தோழர்களே! - 6: வளம் குன்றா விவசாயம்!

"தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்' என்றார் பாரதியார். வேதனை விளிம்பில் வெளியான அந்த புரட்சிகரச்சிந்தனைக்கு காரணம் 1870 -90 களில் இந்தியா மிககடுமையான உணவு பஞ்சத்தைச் சந்தித்தது. லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.
1943 -ஆம் வருடம் மீண்டும் கடும் பஞ்சம். முப்பது லட்சம் இந்தியர்கள் உயிரிழந்தனர். ஏகாதிபத்தியபிரிட்டிஷ் அரசாங்கம் உயிரிழப்பைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்காமல் இருந்தது. அப்போதைய பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், ""இந்தியர்கள் உயிரிழந்தால் என்ன நஷ்டம்? முயல் போல அவர்கள் இனவிருத்தி செய்து கொள்வார்கள்'' என ஏளனமாகப் பதிலளித்தார் என்பது வரலாறு.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகும் பஞ்சம் தொடர்ந்தது. 1960- இல் இருந்து 1971 வரை நமது நாடு மூன்று போர்களைச் சந்தித்தது. அந்த காலகட்டத்தில் தான் அதிகமான உணவுப் பற்றாக்குறையும் ஏற்பட்டது. அதுவும் தமிழ்நாட்டில் சாதாரண குடும்பங்களில் யார் வீட்டைவிட்டு வெளியில் சென்றாலும் தாய்மார்கள் ஒரு பை, பத்து ரூபாய் கொடுத்து எந்த கடையில் எது கிடைக்கிறதோ அதை வாங்கி வரச் சொல்வார்கள். மணிக்கணக்காக வரிசையில் நிற்க வேண்டும், அரை கிலோ அரிசி, பருப்பு, சர்க்கரைக்கு! அந்த அளவுக்குப் பற்றாக்குறை.
திராவிடக் கட்சிகள் அதை சாதகமாகப் பயன்படுத்தி மக்களின் சங்கடங்களைப் பெரிது படுத்தி ஆட்சியைப் பிடித்தார்கள் என்பது தனிக் கதை!
உலகிலும் பல நாடுகளில் அமைதியின்மை நிலவியது. ஐரோப்பாவில் கிழக்கு, மேற்கு ஜெர்மனியில், ரஷ்யஆதரவுடன் கம்யூனிஸ்ட் நாடுகள், அமெரிக்க ஆதரவுடன் ஜனநாயக நாடுகள் இரு அணியாகத் திரண்டன. கியூபா நாட்டு விவகாரத்தில் "பே ஆஃப் பிக்ஸ் கணவாயில்' ரஷ்யா அமரிக்கா மோதும் நிலை, பின்பு வியட்நாம் போர், வடக்கு - தெற்கு கொரியா நாடுகளிடையே போர், மேலை நாடுகளில் அமைதியின்மை காரணமாகஇளைஞர்கள் போதை பொருளுக்கு அடிமையாகி "ஹிப்பி கலாச்சாரம்' தலையெடுப்பு என்று 1960-70
உலகமே குழப்பத்தில் தத்தளித்தது. விவசாயத்தைக்கவனிக்க அரசுகளுக்கு ஏது நேரம்? ஆப்ரிக்கா, ஆசியா, தென் அமெரிக்க நாடுகளில் ஜனத்தொகை பெருக்கம்காரணமாக பயங்கரமான பஞ்சம் உருவாகக்காத்திருந்தது.
வேள் என்றால் மண். மண்ணின் மீது ஆளுமை செலுத்து பவன் வேளாளன். அவனே கடவுள் கண்டெடுத்த முதல் தொழிலாளி, விவசாயி! மண்ணை "பூமித் தாய்' என்கிறார்கள். மண்ணின் மேல் உள்ள எல்லா உயிரினங்களும் பூமித்தாயின் குழந்தைகள். வயல் நிலத்தை, உழவனின் இல்லத்தாளோடு ஒப்பிடுகிறார் வள்ளுவர். நிலத்தைஉழவன் கவனிக்காவிட்டால் நிலமெனும் மங்கை ஊடிவிடுவாள் என்பது வள்ளுவர் வாக்கு. வாழ்வாதாரம் இல்லை என்று சோம்பி விடும் மக்களைப் பார்த்து"நிலமென்னும் நல்லாள் நகும்' என்று இடித்துரைக்கிறார்.
விவசாயம் வாழ்வாதாரத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பது பஞ்சம் ஏற்பட்டால் தான் புரியும். விவசாயத்தில் நவீன யுக்திகளைப் புகுத்தினால் தான் பஞ்சத்தை தவிர்க்க முடியும் . இந்த சித்தாந்தத்தை உலகுக்குப் புரிய வைத்து மனித குலத்தைக் காப்பாற்றிய இரு வேளாண் மேதைகள் அமெரிக்கா நாட்டின் நார்மன் போர்லோ மற்றும்இங்கிலாந்தை சேர்ந்த ஆல்பர்ட் ஹோவர்டு.
விவசாயக் குடும்பத்தில் பிறந்த போர்லோ, அயோவா மாநிலத்தில் உள்ளூர் பள்ளி படிப்பிற்குப் பின் மேற்படிப்பு படிக்கத் தூண்டியவர் போர்லோவின் பாட்டனார். "இப்போது படித்து தலையை நிரப்பிக் கொள்;
அப்போதுதான் பிற்காலத்தில் வயிற்றை நிரப்ப முடியும்' என்பது பாட்டனாரின் நெத்தியடி அறிவுரை! மின்னிசோட்டா பல்கலைக்கழக நுழைவு தேர்வில் வெற்றியடைய முடியவில்லை. அதனால் தளராமல் வேறு உறுப்பு கல்லூரியில் படித்து பட்டம் பெற்றார். நல்லவேளை அங்கு தமிழகம் போல் இளைஞர்களை தங்கள் சுயநலத்திற்காக தற்கொலைக்கு தூண்டும் அரசியல் கட்சிகள் இல்லை!
பள்ளியிலும் கல்லூரியிலும் குத்துச் சண்டை விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வமாகக் கலந்து கொண்டதன் விளைவாக, எந்தச் சவாலையும் சமாளிக்கும் மனஉறுதி கிடைத்தது என்பதை நிறைவோடு குறிப்பிட்டுள்ளார். எந்த ஒரு வெற்றிக்கும், முயற்சியோடு உடற்பயிற்சியும் அவசியம்.
நார்மன் போர்லோ வனவியலில் பட்டம் பெற்றுஅமரிக்க வனத்துறையில் பணிபுரிந்தார். தாவர நோயியலில் பின்பு டாக்டர் பட்டம் பெற்றார். மெக்சிகோ
நகரில் தாவரயியல் ஆராய்ச்சி மேற்கொண்டார். பூச்சிகள் தாக்க முடியாத "நோரின் ட்வார்ஃப்' என்ற வகை மரபணுக்கள் தாங்கிய கோதுமை விதையை ஆராய்ச்சி மூலம்உருவாக்கினார்.
இது மிக பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதிக மகசூல் தரக்கூடிய கோதுமை விதைகளைத் தன் ஆராய்ச்சி மூலம் கண்டுபிடித்து, நவீன பண்ணை விவசாய முறைகளை அமல்படுத்த மெக்சிகோ நாட்டில் அடித்தளம்வகுத்தார்.
இந்த உயர்ரக விதைகள் பயிரிடப்பட்டு கோதுமை விளைச்சல் பன்மடங்காகப் பெருகி பற்றாக்குறை நிலையிலிருந்து மெக்சிகோ கோதுமை ஏற்றுமை செய்யும்அளவிற்கு உயர்ந்தது! மெக்சிகோ நாட்டில் 1963 -இல் நிகழ்த்திய சாதனையை தொடர்ந்து இந்தியா,பாகிஸ்தானுக்கும் இந்த உயர் ரக விதைகள் அனுப்பப்பட்டன.

இந்திய சீதோஷ்ணத்திற்கும் விவசாயிகள்ஏற்புடமைக்கு ஏற்றவாறு விதைகள் செறிவூட்டப்பட்டன. இதற்கு தலைமை ஏற்று ஆராய்ச்சி செய்தவர்எம்.எஸ் சுவாமிநாதன்.

""மெக்சிகோ விதைகள் சிவப்பு, அதில் சப்பாத்தி செய்தால் சிவப்பு நிறமாக இருக்கும். மங்கிய வெள்ளை நிற சப்பாத்திக்குப் பழக்கமான இந்தியர்கள் ஏற்க மாட்டார்கள் என்று தொடர் ஆராய்ச்சி மூலம் மெக்சிகோ விதைகளை இங்குள்ள உணவுப் பழக்கத்திற்கு ஏற்றவாறு விதை உருவாக்கத்தில் இந்திய வேளாண் விஞ்ஞானிகள் குறுகிய காலத்தில் சாதித்தனர். நார்மன் போர்லோ பக்கபலமாக இருந்து 1965- இலிருந்து தொடர்ந்து பல ஆண்டுகள் வருடந்தோறும் இந்தியா வந்து பல மாநிலங்களுக்குச் சென்று புது ரக அதிக மகசூல் கொடுக்கக் கூடிய விதைகளைப் பயிரிட விவசாயிகளை உற்சாகப்படுத்தினார் என்று நன்றி உவகையோடு'' எம்.எஸ்.சுவாமிநாதன் குறிப்பிடுகிறார்.

ஒரு ஹெக்டேருக்கு ஒரு டன் சாகுபடி என்ற நிலையிலிருந்து 4 முதல் 5 டன் வரை உயர்ந்து கொடியபஞ்சத்திலிருந்து இந்தியா காப்பாற்றப்பட்டது. 1964 - இல் பத்து மில்லியன் டன் கோதுமை இறக்குமதி செய்த நிலையிருந்து ஐந்தே ஆண்டுகளில் கோதுமை, அரிசி வகைகளில் உபரி நிலை எய்தி பசுமைப்புரட்சிக்குவித்திட்ட இரு தமிழர்கள், கொங்குநாடு ஈன்றெடுத்த விவசாயத்துறை அமைச்சர் பாரத் ரத்னாசி.சுப்பிரமணியன், விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் என்பதில் நாம் பெருமை கொள்ள வேண்டும். இதற்கு பக்க பலமாக இருந்தவர்கள் அன்றைய பிரதமர் இந்திராகாந்தி, "ஜெய் ஜவான் ஜெய் கிசான்' என்று மக்களுக்கு உத்வேகத்தை அளித்த லால் பகதூர் சாஸ்திரி. இவர்கள்தாம் "க்ரீன் ரெவல்யூஷன்' பசுமைப் புரட்சி செய்து பஞ்சத்திலிருந்து நாட்டை காப்பாற்றிய மாமனிதர்கள்.
1970- ஆம் வருடம் நார்மன் போர்லோவிற்கு அவர் செய்த உத்தமமான சேவையை அங்கீகரித்து நோபல் பரிசு வழங்கப்பட்டது. நூறு கோடி உயிர்களைக் காப்பாற்றியவர் அல்லவா? பரிசு ஏற்புரையில் பசுமைப் புரட்சி வெற்றிக்கு இந்திய அரசு, இந்திய விஞ்ஞானிகள் முக்கியமாக எம்.எஸ்.சுவாமிநாதனின் பங்களிப்பைப் பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இயற்கை விவசாயத்திற்கு வித்திட்டவர் ஆல்பர்ட் ஹோவர்ட். "நீரின்றி அமையாது உலகு'.
""தண்ணீர் எவ்வளவு முக்கியமோ அதே போல் நாட்டின் வளத்திற்கு வனப்பாதுகாப்பு இன்றியமையாதது. காடுகள் எல்லா ஜீவராசிகளுக்கும் குளிர்ச்சியானபுகலிடம். இயல்பாகவே மண் வளம் காடுகளில்பாதுகாக்கப்படுகிறது'' என்கிறார் ஆல்பர்ட் ஹேவர்டு.

மரங்களுக்கும் மரத்தடித் தாவரங்களுக்கும் தேவைப்படும் தாதுப்பொருட்கள் அடி மண்ணிலிருந்தே பெறப்படுகிறது. மரங்களை நிலைப்படுத்தும் வேர்கள் நிலத்தில் ஊடுருவியுள்ள தாதுப் பொருட்களைச் சேகரித்து கிளைகளுக்கும் இலைகளுக்கும் எடுத்துச் செல்கின்றன. தரையில் விழும் தாவரக் கழிவுகள் மக்கி உரமாக மாறி உதவுகின்றன. அவை மீண்டும் வேர்கள் வழியாக மரத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இவ்வாறு காட்டில் பண்ணை முறையில் இருவழியில் தாதுப்பொருள்கள் உற்பத்தி,சேமிப்பு, தாவரங்களுக்கு வேண்டிய ஊட்டம் என்ற சுழற்சி நிகழ்வதால் கூடுதலாக பாஸ்பரஸ் , பொட்டாஷ் தாது உப்புகளை காட்டு நிலத்தில் போட வேண்டியதில்லை. இவ்வாறு தனது கூரிய ஆராய்ச்சி மூலம் பல நாடுகளின் விவசாய முறைகளை ஆராய்ந்து நுண்ணுயிர் விவசாய முறைகளை விவசாய மக்களுக்கு உணர்த்தி மகசூலை வளர்க்க பெரும் பணியாற்றியவர் ஆல்பர்ட்.


""இயற்கை தலை சிறந்த விவசாயி, விவசாயிகள் இயற்கையின் முதல் வாடிக்கையாளர்கள், பூச்சிகள் மற்றும் களைகள் வேளாண் விஞ்ஞானிகள்'' என்கிறார் ஆல்பர்ட்! தவறான பயிரிடுதல், பொருத்தமற்ற பயிர் வகைகளே நோய்களுக்குக் காரணம் என்பதை வலியுறுத்துகிறார்.

நம் காலத்து உழவர் நம்மாழ்வார் வேளாண் விஞ்ஞானி! வேளாண்துறையில் பணியாற்றிய நம்மாழ்வாருக்குப் புதிய ஞானம் பிறந்தது. பாறை சிதைந்து உருவான மண்ணில் இயல்பாகவே ஒரு விகிதத்தில் தாதுப் பொருட்கள் இருந்தது. மனிதன் மண்ணின் அடியிலிருந்து அரிய கனிமங்களைத் தோண்டியெடுத்து மண்ணையும் சுற்றுப்புறச் சூழலையும் இயல்பான நிலையிலிருந்து மாற்றி விட்டான். போதை ரசாயனங்களை விளை நிலத்தில் இட்டு தன் உடல் நலத்தையும் கெடுத்து கொள்கிறான் என்று வருந்தினார். வேம்புக்கு காப்புரிமை பதிவானபோது வேளாண் விஞ்ஞானிகளோடு சேர்ந்து சர்வதேச கூட்டமைப்பில் போராடி உரிமையை மீட்டெடுத்தார்.

"அடி காட்டுக்கு, நடு மாட்டுக்கு, நுனி வீட்டுக்கு' என்று விளைச்சலின் பயன் எல்லோருக்கும் சென்றடைய விவசாய சூத்திரம் அளித்தவர். ஒரு நலமான நாட்டுப்பசுவின் சாணம் கோமியம் கொண்டு, பஞ்ச கல்பம், ஜீவாம்ருதம், பீஜாமிருதம், அமுத கரைசல், தொழு உரம், மண்புழு உரம் என எல்லா வகை இயற்கை உரங்களையும் 30 ஏக்கருக்கு வேண்டிய அளவிற்குத் தயாரிக்கலாம் என்று செய்து காட்டியவர். தமிழ்நாட்டில் பல கிராமங்களுக்கு சென்று விவசாயிகளை ஒரு முறையாவது சந்தித்த ஒரே வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் மட்டுமே.

நான் சிறைத்துறை தலைவராகப் பணியாற்றிய போது அதிக நிலப்பரப்பு அடங்கிய மத்திய சிறைகளில் நம்மாழ்வாரை வரவழைத்து இயற்கை விவசாய முறையை சிறை இல்லவாசிகளுக்குப் பயிற்சியளித்து சிறைவளாகங்களில் பசுமைப் புரட்சி செய்தோம்.

நம்மாழ்வாரின் வழிகாட்டுதலில் உருவான நெல் ஜெயராமன் என்று போற்றப்படும் வேளாண் ஆர்வலர் ஜெயராமன் ஆதிரங்கம் திருத்துறை பூண்டியில் நெல் மாநாடு நடத்தி தமிழர்களின் சுமார் 250 பாரம்பரிய நெல் வகைகளை மீட்டவர். விவசாயிகளுக்கு இரண்டு கிலோ நெல் இலவசமாகக் கொடுத்து விளைச்சலில் விதைகளை நான்கு கிலோவாக திரும்பப் பெற்று தமிழ் நாடு முழுவதும் பாரம்பரிய நெல் வகைகளைப் பயிரிட அரும் பணியாற்றினார்.
காலச்சுவடுகளில் போர்லோ, ஹோவர்டு, சுவாமினாதன், நம்மாழ்வார், ஜெயராமன் போன்றோர் மக்கள் நலம் பெற பதித்த சேவை என்றென்றும் நிலைத்து நிற்கும்.

"வண்டில நெல்லு வரும் வண்டில நெல்லு வரும்
வண்டிநெல்ல ஊற வைக்க வைகை ஆத்து தண்ணி வரும்
குண்டானில நெல்லு வரும் குண்டானில நெல்லு வரும்
குண்டான் நெல்லை ஊற வைக்க கொள்ளிடத்து தண்ணி வரும்'

என்று பாடி மகிழ்ந்து சேவையாற்றும் விவசாயிக்கு வந்தனை செய்வோம் இளைஞர்களே!

போன வார கேள்விக்கு பதில்:

செப்டம்பர் 2008


இந்த வார கேள்வி:

க்ரீன் ரெவல்யூஷன் - பசுமை புரட்சி என்ற சொற்றொடரைக் கொடுத்தவர் யார்?

(விடை, அடுத்த வாரம்)

கட்டுரையாளர்:

மேனாள் காவல்துறைத் தலைவர்
மேனாள் சட்டமன்ற உறுப்பினர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com