சூரிய ஒளி மின்சாரம்... தானியங்கி வீடு!

உலகத்தின் உயிராக மின்சாரம் இருக்கிறது.  
சூரிய ஒளி மின்சாரம்... தானியங்கி வீடு!

உலகத்தின் உயிராக மின்சாரம் இருக்கிறது.
அனல்மின் நிலையங்கள், அணுமின்நிலையங்களில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் அவற்றால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளும் அதிகம். நீர் மின்நிலையங்கள், காற்றாலைகள் மூலம் மின்சாரம் தயாரிப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படுவதில்லை என்றாலும், அவற்றைப் பயன்படுத்தி எல்லா இடங்களிலும், எல்லா நேரங்களிலும் மின்சாரம் தயாரிக்க முடியாது. சூரிய ஒளியின் மூலம் மின்சாரம் தயாரிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் மிகவும் குறைவு.
சென்னையைச் சேர்ந்த வசந்த் தனது "சென்னை சோலார் எனர்ஜி சிஸ்டம்ஸ்' என்ற நிறுவனத்தின் மூலம், சூரிய ஒளி மின்சாரப் பயன்பாட்டை அதிகப்படுத்தி வருகிறார். அதற்காக அவர் மேற்கொள்ளும் முயற்சிகள் வியப்பூட்டுகின்றன.
அவற்றைப் பற்றி வசந்த் நம்மிடம் பேசியதிலிருந்து...
""நான் ரஷ்யாவில் மாஸ்கோவுக்கு அருகில் உள்ள ட்வியர் நகரில் அமைந்துள்ள ட்வியர் ஸ்டேட் டெக்னிகல் யுனிவர்சிட்டியில் இயந்திரவியல் பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றேன். அதற்குப் பிறகு, சென்னையில் தோல் தொழிற்சாலை ஒன்றில், பாய்லர் மெயின்டனென்ஸ் பிரிவில் வேலை செய்தேன். பின்னர் சிவகாசியில் உள்ள துணி ஆலையில் பராமரிப்புப் பிரிவில் பொறியாளராக வேலை செய்தேன். அதற்குப் பிறகு சென்னையில் உள்ள சோலார் மின்சாரம் தொடர்பான நிறுவனமான ஆஸ்பிரேஷன் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தில் வேலை செய்தேன். இவற்றின் மூலம் கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில் 8 ஆண்டுகளுக்கு முன்பு "சென்னை சோலார் எனர்ஜி சிஸ்டம்ஸ்' நிறுவனத்தைத் தொடங்கினேன்.
நாம் வழக்கமாகப் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவைக் குறைத்து, சூரிய ஒளி மூலம் கிடைக்கும் மின்சாரத்தின் அளவை அதிகரிப்பதுதான் எங்களுடைய நோக்கம்.
சூரிய ஒளி மின்சாரத்தின் மூலமாக இயங்கும் சோலார் பம்ப்பை ஒரு வீட்டில் பொருத்திவிட்டால், கரண்ட் கட் ஆவதைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கலாம். தண்ணீர்த் தொட்டியில் தண்ணீர் குறைந்ததும் தானாகவே "ஆன்' ஆகி தண்ணீர் நிறையும். தொட்டியில் தண்ணீர் நிறைந்ததும் தானாகவே ஆஃப் ஆகிவிடும். அதுமட்டுமல்ல, தண்ணீரைத் தூய்மைப்படுத்தி தேவையான அளவுக்கு குடிதண்ணீரையும் தந்துவிடும். வீடுகளுக்கு மட்டுமின்றி, வயல்களுக்கு, தோட்டங்களுக்குத் தேவையான தண்ணீரையும் சோலார் பம்ப் மூலமாக பெறலாம். சொட்டு நீர்ப் பாசனத்துக்கும் பயன்படுத்தலாம். தொலைவில் இருந்தே இந்த சோலார் பம்ப்பை ஆன், ஆஃப் செய்யவும் முடியும். சூரிய ஒளி மின்சாரத்தில் இயங்கும் கருவிகள் மூலமாக கழிவுநீரை நல்ல நீராக மாற்றவும் முடியும்.
சோலார் வாட்டர் ஹீட்டரால் நிறைய பயன்கள் உள்ளன. வீடுகளில் குளிக்க, குடிக்க சோலார் வாட்டர் ஹீட்டர்கள் பயன்படுகின்றன. பெரிய பெரிய உணவுவிடுதிகள், ஹோட்டல்களிலும் சோலார் வாட்டர் ஹீட்டர்கள் பயன்படுகின்றன. தொழிற்சாலைகளிலும் அதிகம் பயன்படுகின்றன. உதாரணமாக, உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களைக் கழுவுதற்கு வெந்நீரைப் பயன்படுத்தும் தொழிற்சாலைகளில் அதிகம் பயன்படுகின்றன.
தெருவிளக்குகளுக்கும் சூரிய ஒளி மின்சாரம் பயன்படுகிறது. ஒவ்வொரு விளக்குக் கம்பத்திலும் சோலார் பேனல்களைப் பொருத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம். ஒரு பொதுவான இடத்தில் மொத்தமாக சூரிய ஒளி மின்சாரத்தை உற்பத்தி செய்து, அதை தெருவிளக்குகள் எரிய பயன்படுத்தலாம். இந்த இரண்டு முறைகளிலும் நாங்கள் தெருவிளக்குகளை எரிய வைக்கிறோம்.
கிராமப்பகுதிகளில் ஊருக்கு வெளியே தூரத்தில் உள்ள விவசாய நிலங்களில், தோட்டங்களில் பன்றிகள் போன்ற விலங்குகள் நுழைந்து, விளையும் பொருள்களை நாசமாக்கிவிடுவது அடிக்கடி நிகழ்கிறது. அந்தப் பகுதியில், சாதாரண மின் இணைப்பு கூட இருப்பதில்லை. விளையும் பொருள்களைப் பாதுகாக்க சோலார் மின்வேலிகளை நாங்கள் அமைத்து தருகிறோம். அந்த வேலிகளைத் தாண்டி விலங்குகள் விளை நிலத்துக்குள், தோட்டத்துக்குள் நுழையவே முடியாது.
சிறிய வீடுகள், குடிசைகள், மின் இணைப்பு இல்லாத பகுதிகள் நமது நாட்டில் அதிகமாக உள்ளன. ஒவ்வொரு வீட்டுக்கும் அந்த வீட்டுக்குத் தேவையான மூன்று பல்புகள், ஒரு மின்விசிறி ஆகியவை இயங்கக் கூடிய அளவுக்கு சோலார் பேனல்கள் மூலம் மின்வசதி ஏற்படுத்தித் தர எங்களால் முடியும்.
எல்லாவற்றுக்கும் மேலாக சூரிய ஒளி மின்சாரம் அதிக அளவு பயன்படுவது, சூடான காற்றைத் தயாரிப்பதற்குத்தான். பெரிய மருந்து நிறுவனங்களில் தயாரிக்கப்படும் மருந்துகள் முதலில் ஈரப் பதத்துடன்தான் இருக்கும். அவற்றை உலர வைக்க, அவற்றின் மீது சூடான காற்றைச் செலுத்த வேண்டும். பெரிய பெரிய வாகனத் தொழிற்சாலைகளில் வாகனங்களுக்கு அடிக்கப்படும் பெயிண்ட்டை உலர வைக்க, தோல் தொழிற்சாலைகளில் தோலை காய வைக்க எல்லாம் சூடான காற்று பயன்படுகிறது. இவற்றுக்கெல்லாம் தற்போது சூரிய ஒளி மின்சாரம் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.
இவை தவிர, தானியங்கி வீடுகளையும் அமைத்துத் தருகிறோம். சோலார் வாட்டர் மேனேஜ்மென்ட், சோலார் பவர் மேனேஜ்மென்ட் ஆகிய இரண்டு விதங்களில் தானியங்கி வீடுகள் செயல்படுகின்றன.
வாட்டர் மேனேஜ்மென்ட்டில் நிலத்தடி தண்ணீரை எடுத்து அதை ஓர் இடத்தில் சேகரித்து, அதைச் சுத்திகரித்து வீட்டுப் பயன்பாட்டுக்கு கொடுப்பது உள்ளடங்கும். வீட்டின் மாடி, கீழ்ப்பகுதியில் ஒரே மாதிரியான அழுத்தத்துடன் தண்ணீரைக் கொடுப்பது, கழிவுநீரை நல்ல தண்ணீராக மாற்றுவது எல்லாமே தானாகவே செயல்படும். வீட்டில் உள்ளவர்கள் தண்ணீருக்காக மோட்டார் போட வேண்டிய அவசியமில்லை.
சோலார் பவர் மேனேஜ்மென்ட் முறையில் உருவாக்கப்பட்ட வீட்டுக்குள் வெளியிலிருந்து நீங்கள் சென்றால் கேட் தானாகத் திறந்து கொள்ளும். கேட்டைத் தாண்டி உள்ளே சென்றதும் தானாகவே மூடிக் கொள்ளும். காம்பவுண்ட் சுவரில் பொருத்தப்பட்டுள்ள விளக்குகள் மாலை 6 மணிக்கு தானாக "ஆன்' ஆகி இரவு 10 மணிக்கு- அல்லது நாம் செட் பண்ணும் நேரத்தில் - தானாகவே ஆஃப் ஆகிவிடும். அதுபோல் இரவு 10 மணிக்கு மேல் ஒருவர் வீட்டுக்கு வந்தால் வீட்டின் முன்பகுதியில் தானாகவே விளக்கு எரியும். இரவு நேரத்தில் வீட்டிலிருந்து ஒருவர் கதவைத் திறந்து வெளியே வந்தால் அந்தப் பகுதியில் உள்ள விளக்குகள் தாமாகவே எரியத் தொடங்கும். வீட்டுக்குள் போனதும் தாமாகவே ஆஃப் ஆகிவிடும்.
பாத்ரூம் கதவைத் திறந்ததும் லைட் எரியும். உள்ளே உள்ள எக்ஸாஸ்ட் ஃபேன் ஓடும். பாத்ரூமில் இருந்து வெளியே வந்து கதவை மூடியதும், தானாகவே லைட், எக்ஸாஸ்ட் பேன் ஆஃப் ஆகிவிடும்.
காலையில் ஜன்னல்திரை, வாசல்திரை எல்லாம் தானாகவே திறந்து கொள்ளும். மாலை 6.00 மணியளவில் தானாகவே மூடிக் கொள்ளும். இதற்கான எல்லாவற்றையும் நாங்கள் செய்து கொடுக்கிறோம்.
சூரிய ஒளி மின்சாரத்தின் பயன்பாட்டை அதிகரித்தால், சுற்றுச்சூழல் பாதிப்புகள் வெகுவாகக் குறையும் என்பதால், அந்த முயற்சியில் நாங்கள் இறங்கியிருக்கிறோம்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com