அதிகரித்து வரும் சமூக ஊடகங்களின் பயன்பாடு!
By - வி.குமாரமுருகன் | Published On : 29th June 2021 06:00 AM | Last Updated : 30th June 2021 05:38 PM | அ+அ அ- |

உலக அளவில் ஒப்பிடும் போது சமூக ஊடகத்தை பயன்படுத்தும் இந்தியர்கள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தெற்காசியாவில் இணையத்தின் பயன்பாடு மிகக் குறைவான அளவில் இருந்தபோதிலும், உலக அளவில் கணக்கிடும் பொழுது இந்தியாவில் மட்டும் 13 சதவீதம் பேர் இணையத்தைப் பயன்படுத்தி வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய மூன்று நாடுகளிலும் 100 கோடிக்கும் அதிகமான மக்கள் இணைய வசதி இல்லாமல் இருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
2010 - ஆம் ஆண்டு முதல் இணையத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வந்தாலும் கூட இந்தியாவில் இன்னும் 70 கோடி பேர் இணைய தொடர்பு இல்லாமலேயே இருக்கின்றனர். சீனாவைப் பொருத்தவரை 60 கோடிக்கும் அதிகமான மக்கள் இணைய வசதி இல்லாமல் இருக்கின்றனர். பொதுவாக ஒரு நாட்டின் 39 சதவீத மக்கள் கிராமப்புறங்களில் வசிப்பதால் இணைய பயன்பாட்டின் அவசியம் அவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லாததால் இணைய பயனர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆனால் சமூக ஊடகங்களின் பயன்பாடு இந்தியாவில் வெகுவாக அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் 2015- இல் 13 கோடி பேர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி வந்த நிலையில் 2016இல் 17 கோடி பேர், 2017-இல் 29 கோடி பேர் ,2018-இல் 35 கோடி பேர் என சமூக ஊடகங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 2021-இல் இந்த எண்ணிக்கை 44.8 கோடியாக அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை 2020 -ஆம் ஆண்டைவிட சுமார் 7.8 கோடி
அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இந்திய மக்கள் தொகையில் 32.3 சதவீதம் பேர் முகநூல், ட்விட்டர், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி வருவது தெரிய வந்துள்ளது.
சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் இந்தியர்களில் 85 சதவீதத்திற்கும் அதிகமான இணைய பயனர்கள் யூ-டியூபை பயன்படுத்தி வருகிறார்கள். 75 சதவீதம் பேர் முகநூல் , வாட்ஸ்அப் போன்றவற்றை பயன்படுத்துகிறார்கள்.
இந்தியாவைப் பொருத்தவரை அமேசான், ஃப்ளிப்கார்ட் மற்றும் ஸ்னாப்டீல் போன்ற மின் வணிக தளங்களைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 41.17 சதவீதம் பேர் மின் வணிக தளங்களைப் பயன்படுத்தி, (பயணம் செய்வதற்காகவும் தங்கும் இடங்களை தேர்வு செய்வதற்காகவும்) சுமார் ரூ.3500 கோடி செலவிட்டு உள்ளனர்.
அதுபோல் மின்னணு சாதனங்களை ஆன்லைன் வழியாக வாங்கவும் இந்தியர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக சுமார் ரூ.1400 கோடியை
இந்தியர்கள் செலவிட்டுள்ளனர்.
அதேசமயம் இணைய வழியாக வீடியோ கேம்களை பயன்படுத்தியதற்கு வெறும் 50 கோடியை மட்டுமே இந்தியர்கள் செலவழித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 4.76 சதவீதம் பேர் மட்டுமே வீடியோ கேம்களுக்காக செலவிட்டுள்ளனர்.
இந்நிலையில் குரல் தேடலின் பயன்பாடும் இந்தியாவில் அதிகரித்துள்ளது. உலக அளவில் 48 சதவீதம் பேர் குரல் தேடல்களைப் பயன்படுத்திய நிலையில் இந்தியாவில் மட்டும் 60 சதவீதம் பேர் குரல் தேடல் பயன்பாட்டினை பயன்படுத்தி உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மொத்தத்தில் இந்தியர்கள் தேவையான விஷயங்களுக்கு மட்டுமே இணையத்தை பயன்படுத்தி உள்ளனர் என்பது இதன் மூலம் தெரிகிறது.