ஐஐடி - கௌகாத்தி...: புதிய எரிவாயு அடுப்பு!

சமையல் எரிவாயுவின் விலை ஒவ்வொரு மாதமும் ஏறிக் கொண்டே போகிறது. என்றாலும் கடந்த பிப்ரவரி மாதம் சமையல் எரிவாயுவை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை 280 மில்லியனாகும்.
ஐஐடி - கௌகாத்தி...: புதிய எரிவாயு அடுப்பு!

சமையல் எரிவாயுவின் விலை ஒவ்வொரு மாதமும் ஏறிக் கொண்டே போகிறது. என்றாலும் கடந்த பிப்ரவரி மாதம் சமையல் எரிவாயுவை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை 280 மில்லியனாகும். ஒவ்வோராண்டும் சுமார் 10 சதவீதம் வரை இது அதிகரித்துக் கொண்டே போகிறது.

இன்னொருபுறம் தொலைதூரக் கிராமப்புறங்களில் பெரும்பாலான மக்களின் வீடுகளில் சமையல் எரிவாயு அடுப்புகள் இல்லை. விறகு, கரி, வறட்டி ஆகியவற்றைப் பயன்படுத்துகிறார்கள். இவற்றில் இருந்து வரும் புகையால் காற்று மாசுபடுகிறது. மக்கள் பலவிதமான நோய்களால் துன்பப்படுகிறார்கள்.
நாட்டின் பொருளாதாரத்துக்கும் இந்த சமையல் எரிவாயு, பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. சமையல் எரிவாயு தயாரிப்பதற்கான மூலப்பொருள்களில் பாதிக்கும் மேல் வெளிநாடுகளில் இருந்து நாம் இறக்குமதி செய்கிறோம். இதனால் ஆண்டுக்கு ரூ.35 ஆயிரம் கோடி வரை அந்நியச் செலவாணி இழப்பு ஏற்படுகிறது.

சமையல் எரிவாயுவுக்குப் பதிலாக சிக்கனமானதும், சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படுத்தாதுமான மாற்று எரிபொருள்கள் பயன்பாட்டுக்கு வரும் வரை சமையல் எரிவாயு அடுப்புகளைத் தூக்கி எறிந்துவிட முடியாது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், சமையல் எரிவாயுவின் பயன்பாட்டையும், சமையல் எரிவாயுவைப் பயன்படுத்துவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பையும் குறைக்கக் கூடிய அடுப்பு ஒன்றை உருவாக்கியிருக்கிறது, ஐஐடி - கௌகாத்தி. அதில் பேராசிரியராகப் பணிபுரியும் பி.முத்து குமாரைத் தலைமையாகக் கொண்டு இருக்கிற ஆராய்ச்சிக் குழு அந்த சாதனையை நிகழ்த்தியிருக்கிறது.

""இந்த அடுப்பைப் பயன்படுத்துவதால் இப்போது பயன்படுத்தும் சமையல் எரிவாயுவின் அளவை 25 சதவீதத்திலிருந்து 50 சதவீதம் வரை குறைக்க முடியும். சமையல் எரிவாயு அடுப்பிலிருந்து வெளிவரும் சுற்றுச்சூழல் பாதிப்பை 80 சதவீதம் வரை குறைக்க முடியும்'' என்கிறார் ஆராய்ச்சிக் குழுவின் தலைவரான பேராசிரியர் முத்துகுமார். அவரிடம் இது தொடர்பாக நாம் பேசியதிலிருந்து...

""சேலம் மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமமான தெசவிளக்குதான் எனது சொந்த ஊர். பள்ளிப் படிப்பு முழுக்க அரசுப் பள்ளிகளில்தான். விஎம்கேவி பொறியியல் கல்லூரியில்தான் பிஇ படிப்பை முடித்தேன். கோவை சிஐடி கல்லூரியில் எம்இ முடித்துவிட்டு, ஐஐடி - சென்னையில் எனது ஆராய்ச்சிப் படிப்பை முடித்தேன்.

2006 இல் ஐஐடி - கௌகாத்தியில் பேராசிரியராகப் பணிக்குச் சேர்ந்தேன். 2006 - 2007 ஆம் ஆண்டில்தான் எங்களுடைய ஆராய்ச்சி தொடங்கியது. பலவிதமான முயற்சிகள், குறைபாடுகள், தீர்வுகள், முன்னேற்றங்களுக்குப் பிறகு 2018 - ஆம் ஆண்டு நாங்கள் இப்போது முழுமையாக்கியுள்ள அடுப்பைத் தயாரித்தோம். இந்த அடுப்பில் உள்ள பர்னரினால்தான் சமையல் எரிவாயு பயன்படும் அளவும், அதிலிருந்து வெளியாகும் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பொருள்களின் அளவும் குறைகிறது.

நாங்கள் தயாரித்திருக்கும் அடுப்பின் பர்னர் "போரஸ் மீடியம் கம்பஸ்ஸன்' என்கிற நுண்துளை வழியான எரிதல் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இயங்குகிறது.

இந்த பர்னரில் இரண்டு அடுக்குகள் இருக்கின்றன. கீழ் அடுக்கில் அலுமினா என்கிற பொருளினால் ஆன நுண்துளைகள் நிரம்பிய பொருளும், மேல் அடுக்கில் சிலிகான் கார்பைடால் தயாரிக்கப்பட்ட வட்ட வடிவிலான நுண்துளைகள் நிரம்பிய பொருளும் உள்ளன.

சமையல் எரிவாயு சிலிண்டரிலிருந்து வெளிவரும்போது, இந்த மேல் அடுக்கில் தீ பற்றுகிறது. இந்த மேலடுக்கில் நிறைய துண்களைகள் இருக்கும். அவற்றின் வழியாக எரிவாயு வரும்போது நேரடியாக தீ கொளுந்துவிட்டு எரியாமல், வெப்ப கதிர்வீச்சு மூலமாகப் பரவும். இந்த வெப்ப கதிர்வீச்சு பரவும் வேகம் ஒளியின் வேகத்தைப் போல அதிகம் என்பதால், பர்னரிலிருந்து பாத்திரத்துக்கு வெப்பம் செல்லும் வேகம் அதிகம். இதனால் அடுப்பு எரியும்போது, வெப்பம் வெளிக்காற்றில் வினைபுரியும் நேரம் குறைந்து விடுகிறது. அதனால் எரிவாயுவின் பயன்பாடு குறைகிறது.

இன்னொருபுறம், அதிகமான வெப்ப கதிர்வீச்சு வேகத்தினால், விரைவில் சமையல் வேலைகள் முடிந்துவிடும். 2 மணி நேரம் சமைப்பது 1 1/2 மணி நேரமாகக் குறைந்துவிடும். அதனாலும் எரிவாயுவைப் பயன்படுத்தும் அளவு
குறைந்துவிடும்.

இந்தக் வெப்ப கதிர்வீச்சு எல்லாத் திசைகளிலும் பரவும். மேல் அடுக்கில் உள்ள சிலிகான் நுண்துளைப் பொருளிலிருந்து கீழ் அடுக்கில் உள்ள அலுமினா நுண்துளைப் பொருளுக்கு வெப்ப கதிர்வீச்சு செல்லும். அது சிலிண்டரில் இருந்து வெளிவருகிற எல்லா எரி வாயுவையும் எரித்துவிடும். சாதாரண சமையல் எரிவாயு அடுப்பில், சிலிண்டரில் இருந்து வெளிவரும் எரிவாயு 5இலிருந்து 10 சதவீதம்வரை வீணாகும். ஆனால் இந்த அடுப்பில் அது வீணாகாது.

எல்லாவற்றுக்கும் மேலாக இந்த அடுப்பைப் பயன்படுத்துவதால், சாதாரண அடுப்பை பயன்படுத்தும்போது வெளிவரும் நைட்ரிக் ஆக்ûஸடின்
அளவும் கார்பன் மோனாக்ûஸடின் அளவும் 80 சதவீதம் குறைந்துவிடும். இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பும் குறைந்துவிடும்.

நாங்கள் உருவாக்கியுள்ள இந்த அடுப்பை சமையல் எரிவாயு போன்ற வாயு எரிபொருளைப் பயன்படுத்தும் அடுப்புகளிலும் பயன்படுத்தலாம். மண்ணெண்ணை போன்ற திரவ எரிபொருளைப் பயன்படுத்தும் அடுப்புகளிலும் பயன்படுத்தலாம்.

இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் அடுப்புகளை இந்தியாவில் எல்லாரும் பயன்படுத்தினால், சமையல் எரிவாயுவிற்காக இந்திய அரசு செலவிடும் தொகையில் ரூ.50 ஆயிரம் கோடி ஓர் ஆண்டுக்கு மிச்சப்படும்'' என்கிறார் பேராசிரியர் முத்துகுமார்.

நாட்டின் வளர்ச்சிக்குப் பங்களிப்பு செலுத்துகிற ஆராய்ச்சிகளை மேற்கொள்கிறவர்களுக்கு அளிக்கப்படும் மிக உயரிய விருதான "அப்துல்கலாம் தொழில்நுட்ப கண்டுபிடிப்புக்கான தேசிய விருது' (2021), இந்த கண்டுபிடிப்புக்காக பேராசிரியர் முத்துகுமாருக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஐஐடி - கௌகாத்தி இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அடுப்புகளைத் தயாரிப்பதற்கான பேச்சு வார்த்தைகளை சில தொழில்நிறுவனங்களுடன் நடத்தி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com