கிளர்ந்தெழுங்கள் தோழர்களே! - 22: தீயது விட்டு ஈட்டல் பொருள்!

மகாத்மா காந்தியின் பள்ளிப்  பருவ நாளில் நடந்த சம்பவம்
கிளர்ந்தெழுங்கள் தோழர்களே! - 22: தீயது விட்டு ஈட்டல் பொருள்!

மகாத்மா காந்தியின் பள்ளிப்  பருவ நாளில் நடந்த சம்பவம். அப்போது பள்ளிக்கு ஆய்வுக்கு வரும் அதிகாரிகள் கிரமமாக தங்கள் பணியைச் செய்த காலம். ஆங்கில ஆசிரியர் பாடம் எடுத்துக் கொண்டிருந்த  புத்தகத்திலிருந்து ஆய்வு அதிகாரி ஆங்கிலேயர் கைல்ஸ் ஸ்பெல்லிங்க் டிக்டேஷன் கொடுத்தார். எல்லா மாணவர்களும் எழுதினார்கள். காந்தி ந்ங்ற்ற்ப்ங் என்ற வார்த்தைக்கு தவறான ஸ்பெல்லிங்க் எழுதினார். பதற்றத்துடன் சுற்றி வந்த ஆசிரியர்,  காந்தி எழுதியது தவறு என்று பார்த்துவிட்டு பக்கத்து மாணவனைப்  பார்த்து திருத்திக் கொள் என்று சமிக்ஞை செய்தார். ஆனால் காந்தி இணங்கவில்லை. ஆசிரியர் பின்பு காந்தியைக் கடிந்து கொண்டார். ஆனால் காந்தி, "எனது தவறை ஒப்புக்கொண்ட திருப்தியோடு வீடு சென்றேன்' என்று குறிப்பிட்டுள்ளார். 

இம்மாதிரியான சூழல் எல்லாருக்கும் வரும். சத்தியத்திற்கு கட்டுப்படுவதா அல்லது சிறிது வளைந்து கொடுத்து சாதித்து விடுவதா என்ற குழப்பம்! இதைத்தான் கீதையில் கிருஷ்ணர் அர்ஜுனனுக்குப் போதிக்கிறார்: "தர்மத்திற்கு துணை போக வேண்டும்; அநீதிக்கு இணங்கக் கூடாது' என்ற தத்துவத்தை. இந்த மகாபாரத யுத்தம் நம்முள் ஒவ்வொரு நாளும் நடக்கிறது. என்ன முடிவை நாம் ஒவ்வொருவரும் எடுக்கிறோம் என்பது ஒட்டு மொத்த  சமுதாயத்தின் கலாசாரத்தை நிர்ணயிக்கிறது. தொடர்ந்து தவறு இழைப்பதால் தான் ஊழல் கட்டுக்கடங்காமல் நம்மை கட்டிப் போடுகிறது. 

ஊழல் எல்லா மனித உரிமை மீறல்களுக்கும் அடித்தளம் என்றால் மிகையில்லை. அரசு பணியில் சேரும்போது, ஆட்சியாளர்கள், மக்கள் பிரதிநிதிகள் எல்லாரும் அரசியல் சாசனப்படி ஊழலுக்கு இடம் கொடாது பணி செய்வோம் என்று பிரமாணம் எடுத்துக் கொள்கின்றனர். ஆனால் காலப்போக்கில் ஜோதியோடு கலந்துவிடுகிறார்கள், எடுத்த பிரமாணத்தை கிடப்பில் போட்டுவிட்டு! 

வருடா வருடம் அக்டோபர் மாத இறுதி ஒரு வாரம் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம் நாடு முழுவதும் மத்திய விழிப்புணர்வு ஆணையம் (சிவிசி) வழிகாட்டு
தலில் நடைபெறுகிறது. "இந்தியாவின் இரும்பு மனிதர்' என்று போற்றப்படும் சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபபாய் படேலின் பிறந்த நாளை ஒட்டி இந்த விழிப்புணர்வு பிரசாரம் நடைபெறுகிறது. இந்த வருடம் இந்தியா 75 -ஆவது சுதந்திர ஜெயந்தியைக் கொண்டாடுகிறது. அதை அனுசரிக்கும் வகையில் "சுதந்திர இந்தியா 75-  நேர்மையுடனும் தன்னம்பிக்கையுடனும்' என்ற தலைப்பில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 

தன்னம்பிக்கையும் நேர்மையும் கண்ணியத்தின் அடையாளங்கள். சமத்துவம், கண்ணியம் ஆகியவை மனித உரிமைகளின் முக்கிய அம்சங்கள். "ஏழை 
மக்களின் பசி பட்டினியைப் போக்க வேண்டும்; அவர்களின் கண்ணியத்திற்கு களங்கம் விளைவிக்காதவாறு' என்கிறார் அன்னை தெரசா.    

"ஏழைகளின் பசி உணவுக்காக  மட்டுமல்ல; 
அன்புக்காகவும் ஏக்கம். 
நிர்வாணம் ஆடையின்மையால் மட்டுமல்ல; 
கண்ணியம் மரியாதையின்மையாலும் நிர்வாணம். 
கூரையில்லை, தலைக்குமேல் மட்டுமல்ல; 
நிராகரிப்பாலும் தனிமை. 

இதுதான் ஏழைகளின் நிலை' என்று மனம் வெதும்பி கூறுகிறார் அன்னை தெரசா. 

நாடு எவ்வளவு முன்னேற்றம் அடைந்தாலும் அதன் பயனளிப்பு எல்லா தரப்பட்ட மக்களையும் சென்றடையவில்லை என்பதுதான் உண்மை. அரசு நலத்திட்டங்களில் 85% நிர்வாக சுணக்கங்களால் விரயமாகின்றன.இதில் ஊழலும் அடங்கும் என்று ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.  

இந்தியாவை அடுத்த நிலைக்குப் போக தடுப்பது இந்த ஊழல். மேலைநாடு வர்த்தக நிபுணர் ஒருவர், 

"இந்தியா அழகான மாளிகை;ஆனால் மோசமான 
தெருவில் உள்ளது' என்று குறிப்பிடுகிறார்! 

ஊழல் பெருச்சாளிகள் முதலைகளாக உருவெடுத்து இப்போது மலை முழுங்கிகளாக வளைய வருகின்றன. களைவது பிரம்ம பிரயத்தனம் என்பதை 
எல்லோரும் உணர வேண்டும். இந்த விபரீத வளர்ச்சிக்கு ஒட்டு மொத்த சமுதாயமும் பொறுப்பு.

"அவ்வியம் பேசி அறம் கெட  நில்லன்மின் 
வெவ்வியனாகி பிறர் பொருள் வவ்வன்மின்' 

என்றார் திருமூலர். அதற்கு மாறாக, கனகச்சிதமாக தனக்கு சேராத பொருளை அபகரிக்கும் நிலையால் இத்தகைய சீர்கேடு!  

இரும்பு மனிதர் படேல் 1952- இல் இயற்கை  எய்தியபோது அவரது வங்கிக் கணக்கில் சொற்பமான பணம், பழைய கார், ஒரு பெட்டி துணிமணிகள், புத்தகங்கள் வேறு உடமைகள் ஒன்றுமில்லை.

தமிழக மேனாள் உள்துறை  அமைச்சர் கக்கன்ஜி பதவி இழந்ததும் கோட்டையிலிருந்து அரசு வாகனத்தை விட்டுவிட்டு , பொது பேருந்தில் வீடு சென்றார், அடக்கம் பொதுவாழ்வில் தூய்மையின் அடையாளமாக! காமராஜர் முதலமைச்சராக இருந்த போது,  அவரது தாயார் குடியிருந்த விருதுநகர் இல்லத்திற்கு விசேஷ குடி நீர் இணைப்பு  சில அதிகாரிகளால் அவர்களுடைய அதீத விசுவாசத்தைக் காண்பிக்கும் விதமாக கொடுக்கப்பட்டது. கேள்விப்பட்ட முதலமைச்சர் அதிகாரிகளைக் கடிந்து கொண்டு, தனது தாயார் மற்ற மக்களோடு பொதுக் குழாயில் தண்ணீர் பிடித்துக் கொள்வார் என்று விசேஷ இணைப்பைத் துண்டிக்கச் செய்தார். 

ராமேசுவரத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்து உழைப்பால் இந்தியாவின் முதல் குடிமகனாக தில்லி ராஷ்டிரபதிபவனில் ஜனாதிபதியாக பணியாற்றி  அப்துல்கலாம் விடை பெறுகையில், அவருடைய கையில் ஒரு பழைய பெட்டியில் துணிமணிகள்,  திருகுர்ஆன், கீதை.   இப்படியும் தலைவர்கள் வாழ்ந்து நீக்கமற மக்கள் நெஞ்சில்  நிலைகொண்டுள்ளார்கள். ஆனால் அவர் இட்டுச் சென்ற நேர்மையான பாதையிலிருந்து பிரிந்து விட்டோம். 

உலக நாடுகளின் நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மை, ஊழலின் தாக்கம், ஊழலால் மக்கள் படும் அவஸ்தை, ஊழலை ஒழிக்க அந்தந்த நாடுகள் எடுத்து வரும் நடவடிக்கைகள் இவற்றை ஒவ்வொரு வருடமும் ஆராய்ந்து அறிக்கை வெளியிடப்படுகிறது. இதனை "ட்ரான்ஸ்பரன்சி இண்டர்நேஷனல்'  என்ற சர்வ தேச தன்னார்வு அமைப்பு பாரபட்சமின்றி கணித்து வெளியிடுகிறது. 2021- ஆம் ஆண்டு  அறிக்கைப்படி ஊழல் தடுப்பைச்  சிறப்பாக அமல்படுத்திய நாடுகளில் முதலிடம் டென்மார்க், அதையடுத்து நியூசிலாந்து, பின்லாந்து, சிங்கப்பூர், ஸ்வீடன், ஸ்விட்சர்லாந்து என ஆறு நாடுகள். இந்தியா 86- ஆவது இடத்தில். முந்தைய வருடம் 80 -ஆவது இடத்திலிருந்து ஆறு இடம் 2020- இல் பின்னடைவு. ஓர் ஆறுதல்,  தெற்கு ஆசிய நாடுகளை விட நாம் முன்னிலையில் இருக்கிறோம். பெரு, ஹாண்டரஸ், பர்மா நாடுகளில் ஊழல் கட்டுக்கடங்காமல் நிலவுகிறது என்று ஆண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஐரோப்பா நாடுகளில் வெளிப்படைத்தன்மை அதிகம். அதோடு மக்களிடம் தங்களுடைய உரிமைகள் பற்றிய நல்ல விழிப்புணர்வும் உண்டு. கடைநிலையில் உள்ள மக்கள் அன்றாடப் பிரச்சனைகளுக்கு சந்திக்கக் கூடிய 
அலுவலர்களிடம் லஞ்ச லாவண்ய ஊடுருவல் இல்லை. நமது நாட்டில் இந்த கடைநிலை ஊழல் அதிகம் உயர் இடங்களில் கேட்கவே வேண்டாம்! 

1948- இல் இராணுவத்திற்கு வாகனங்கள் கொள்முதலில் முறைகேடு வெளிவந்தது. 1958- இல் முந்தரா எல் ஐ சிஊழல்.  
1949-ஆம் வருடம் பக்ஷி தேக்சந்த் கமிட்டி ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளில் சட்ட திருத்தங்கள் பரிந்துரை செய்தது. 
மத்திய அரசு 1962 -ஆம் வருடம் சந்தானம் தலைமையில் குழு அமைத்து ஊழல் பிரச்னைக்குத் தீர்வு காண அப்போதைய உள்துறை அமைச்சர் லால் 
பஹதூர் சாஸ்திரி அவர்களால் நடவடிக்கை எடுக்கப்
பட்டது. தில்லி விசேஷ ஊழல் ஒழிப்பு விசாரணை அமைப்பாக இருந்த புலானாய்வுப் பிரிவு சி பி ஐ ஆக பரிமாண மாற்றம் பெற்றது. 
முந்தரா ஊழலை மக்களவையில் முன் வைத்தவர் பெரோஸ் காந்தி. பிரதமர் நேருவின் மருமகன். 
இந்திரா காந்தியின் கணவர். அத்தகைய துணிச்சலும் தவறை ஏற்று அதற்கு பரிகாரம் காணும் முயற்சியும் அப்போது இருந்தது. அந்த ஊழல் குற்றத்தில் பரிமாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட தொகை ரூ 1.25 கோடி மட்டுமே! அன்றைய நிதி அமைச்சர் டிடி கிருஷ்ணமாச்சாரி அதற்குத் தார்மீகப் பொறுப்பேற்று ராஜினாமா செய்தார். அது வெறும் சில்லறைக் காசாகத் தெரிகிறது.  2007- இல் நடந்த அலைக்கற்றை (2ஜி ஸ்பெக்ட்ரம்) ஊழலின் அளவான 1.76 லட்சம் கோடியுடன் ஒப்பிட்டால்!  

தமிழ்நாட்டிலும் சென்னை மாநகராட்சி மஸ்டர் ரோல் ஊழல்1960 -களில் பூதாகாரமாக உருவெடுத்தது.
ஊழல் ஒழிப்பிற்கு மூன்று கட்ட நடவடிக்கைகள் தேவை.  ஊழல் தடுப்பு, விரைவில் உரிய தண்டனை, ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகள் ஊக்குவிப்பு. தொழில் நுட்பம் வழியாக அரசு நிர்வாகத்தை எளிமைப்படுத்துவதின் மூலம் வெளிப்படைத் தன்மை வளரும். 
மக்களுக்கும் அரசு நிர்வாகம் மூலமாக வர வேண்டிய பட்டா, ஜாதி சான்றிதழ் போன்றவற்றை எளிதாக பெறக் கூடிய வழி கிடைக்கும். மக்களோடு தொடர்புடைய பொதுப் பணி, உள்ளாட்சி, காவல்துறை , வருவாய்துறை, மக்கள் நல்வாழ்வு, கல்வி, மின்சாரம் ஆகிய துறைகளில் உள்ள நிர்வாக விதிகளைத் தொடர்ந்து எளிமையாக்கி மக்களுக்கு அரசு சேவைகள் துரிதமாகவும் கொடுக்கல், வாங்கல் இன்றி நடைபெற அந்தந்த துறை தலைவர்கள் விழிப்புணர்வோடு பணியாற்ற வேண்டும். 
உச்ச நீதிமன்ற மேனாள் நீதிபதி கே டி தாமஸ்  அரசு அதிகாரிகளை மூன்று வகையாகப் பிரிக்கிறார். 
மிகவும் நேர்மையான அர்ப்பணிப்போடு உழைக்கும் அதிகாரிகள் ஒரு வகை. அடுத்து கைநீட்ட சபலமுண்டு; ஆனால் பயம் தடுக்கும், சந்தர்ப்பம் கிடைத்தால் சுருட்டிக்கொள்ளும் வகை. மூன்றாவது திட்டம் போட்டு கட்டம் கட்டி கொள்ளையடிக்கும் அரசு அலுவலர்கள். இதில் நேர்மையானவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது, இரண்டாம் வகையினரும் மூன்றாம் வகையினரோடு சேர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சன உண்மை என்கிறார்   நீதிபதி தாமஸ். 

உலகமயமாக்கல் தாராளமயமாக்கல் எல்லா நாடுகளிலும் வேரூன்றிய நிலையில் ஊழல் வளர்ச்சிக்கு பெரும் தடையாக இருப்பதைச் சரி செய்ய ஐக்கிய நாடுகள் சபை தொடர் முயற்சி எடுத்து வருகிறது. ஐக்கிய நாடுகள் சபை 2005 - ஆம் ஆண்டு ஊழல் தடுப்பு உடன்படிக்கை நிறைவேற்றியது. எல்லா நாடுகளும் சர்வதேசப் பண்ட பரிமாற்றம், 

கட்டமைப்பு ஒப்பந்தங்களில் ஊழலின்மை, வெளிப்படைத் தன்மை, பொறுப்பேற்றல், ஆகியவற்றைக் கட்டாயம் உறுதி செய்ய வேண்டும். இதற்கான நேர்மை ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று ஐநா உடன்படிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது துறைமட்டுமல்லாது, தனியார் துறைகளும் நேர்மை விதிகளைக் கடைப்பிடிக்க சட்டம் இயற்றவேண்டும் என்பதும் பிரேரணையில் முக்கியமான  ஷரத்து. 

இந்தியா 2011-ஆம் வருடம் மக்களவையில் ஊழலுக்கு எதிரான ஐநா உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டது. ஆனால் சட்ட திருத்தங்கள் முழுமையாக இயற்றப்படவில்லை. ஜனநாயகத்தின் முதல் கதவு தேர்தல். தேர்தலின் போது ஏற்படும் முறைகேடுகள் களையப்பட வேண்டும். நிர்வாகம், தேர்தல் சட்டம், நீதிபதிகள் நியமனம் ஆகியவற்றில் சீர்திருத்தங்கள் அவசியம். 


உலக அளவில் ஊழல் ஒழிப்பு முழுமையாக  இரு நகரங்களில் வெற்றி பெற்றது. ஒன்று சிங்கப்பூர்; மற்றொன்று ஹாங்காங். லீ குவான் தலைவராக இருந்தபோது 1986- ஆம் வருடம் ஊழல் செய்தால் மரண தண்டனை என்ற வகையில் கடுமையான சட்டம், தீவிர அமலாக்கம் என்பதை நடைமுறைப்படுத்தினார். 

ஊழலில் சிக்கிய தே சாங்க் வான் என்ற அமைச்சர் தற்கொலை செய்து கொண்டார். அதோடு நாடே சுதாரித்துக் கொண்டது , ஊழல் ஒழிக்கப்பட்டது.  

எதற்கெல்லாமோ போராட்டம் நடத்துகிறார்கள். ஊழல் ஒழிப்பு, தரமான கல்வி இவை இரண்டையும் மாபெரும் இயக்கமாக இளைஞர்கள் முன்னெடுக்க வேண்டும். 

சென்ற வார கேள்விக்குப் பதில்: பால் ஓ நீல் ஜார்ஜ் புஷ் ஜனாதிபதியாக இருந்த போது 2001-இல் நிதி அமைச்சராகப் பதவி வகித்தார்.

இந்த வாரக் கேள்வி: மத்திய புலனாய்வுத்துறை (சிபிஐ) எந்த வருடம் உருவாக்கப்பட்டது, முதல் இயக்குநர் யார்?

(விடை அடுத்த வாரம்)

கட்டுரையாளர்: மேனாள் காவல்துறைத் தலைவர்
மேனாள் சட்டமன்ற உறுப்பினர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com