மாறுங்கள்... மாற்றங்களுக்கு ஏற்ப!

உலகம் மாறிக் கொண்டே இருக்கிறது.
மாறுங்கள்... மாற்றங்களுக்கு ஏற்ப!

உலகம் மாறிக் கொண்டே இருக்கிறது. அதிலும் தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி அன்றாட வாழ்க்கையைப் பெருமளவில் மாற்றி வருகிறது. கடந்த 20 ஆண்டுகளில் உலகம் கண்டு வரும் மாற்றங்கள் அலாதியானது. வீடுகள், பள்ளிகள் என அனைத்து இடங்களும் மாறி வருவதைப் போல பணியிடங்களும் மாறி வருகின்றன. 

பணியிடங்களில் 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலைமை தற்போது காணப்படவில்லை. மாறி வரும் உலகத்துக்கு ஈடு கொடுத்து மாற வேண்டிய அவசியம் பணியிடங்களுக்கும் ஏற்பட்டுள்ளது. இல்லையெனில் மாற்றத்தை நோக்கிய பயணத்தில் தடுமாற்றமே ஏற்படும். அத்தகைய மாற்றங்களை ஏற்றுக் கொண்டு அவற்றுக்கு ஏற்ப பணியாளர்களும் மாற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. 

பணியிடம் நீண்ட ஆண்டுகளுக்கு ஒரே மாதிரியாக இருக்கப் போவதில்லை. இன்று காணப்படுவதைப் போல 20 ஆண்டுகள் கழித்து பணியிடம் காணப்படாது. எனவே, குறிப்பிட்ட பணியில் சேர்ந்துவிட்டாலும் இளைஞர்கள் தொடர்ந்து பணியிடத்துக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்வது அவசியம். 

பணியிடங்களில் தொழில்நுட்ப வசதிகளின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே, புதிய தொழில்நுட்பங்களை இளைஞர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது அவசியம். எதிர்காலத்தில் அத்தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தியே நம் பணியைச் செய்ய முடியும் என்ற சூழல் ஏற்படலாம். 

புதிய தொழில்நுட்பங்கள் அவசியமில்லை என்று கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால், அவற்றைத் தெரிந்து கொள்ளாததன் காரணமாகப் பணியை இழப்பதற்கு வாய்ப்பு ஏற்படும் அல்லது பணியில் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் போவதற்கான சூழல் ஏற்படும். எந்த மாதிரியான பணியில் இணைய விருப்பம் கொண்டிருக்கிறீர்களோ, அத்தகைய பணியிடங்களில் எந்த மாதிரியான தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பதைத் தெரிந்து கொண்டு அவற்றைக் கற்றுக் கொள்ள வேண்டும். 

கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இருந்து பட்டம் பெற்று வெளியேறும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. ஆனால், அதே அளவுக்கு நாட்டில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாவதில்லை. குறைவான பணியிடங்களுக்குப் போட்டியிடும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. 

எனவே, நமக்கு வேலை கிடைப்பதை உறுதி செய்யவும் கிடைத்த பணியைத் தக்க வைக்கவும் மாற்றங்களுக்கு ஏற்ப நம்மைத் தகவமைத்துக் கொள்வது அவசியம். தொழில் தொடங்கி நடத்தும் இளைஞர்களும் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். முக்கியமாக,   நிறுவனத்தை (ஸ்டார்ட்-அப்) தொடங்கிய பிறகு, அங்கு மாற்றத்தை உரிய வகையில் அனுமதிக்க வேண்டும். 

பணியாளர்களுடன் அவ்வப்போது கூட்டத்தை நடத்தி, பணியிடத்தில் எந்த மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்று ஆலோசிப்பது அவசியம். இல்லையெனில், பெருகி வரும் புதிய தொழில்  நிறுவனங்கள் மத்தியில் நாம் காணாமல் போய்விடுவோம். மாற்றங்களை ஏற்று அவற்றுக்கேற்ப தகவமைத்துக் கொண்டால்தான் ஆயிரம் புதிய நிறுவனங்கள் தோன்றினாலும் அவற்றுடன் வெற்றிகரமாகப் போட்டியிட முடியும். 

பணியிடங்களில் மாற்றங்களைப் புகுத்துவதற்கான சுதந்திரம் பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும். புதிய தொழில் நுட்பங்களைக் கற்றுக் கொடுப்பதற்கான பயிற்சிகள், பணியாளர்களின் திறனை மேம்படுத்துவதற்கான பயிற்சிகள் உள்ளிட்டவற்றை நிறுவனங்களே போதிய இடைவெளியில் வழங்க வேண்டும். 

பணியாளர்கள் மாற்றங்களைத் தாமாக முன்வந்து ஏற்றுக் கொள்ளும் வகையில் நிறுவனங்களின் நிர்வாகம் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும். தொழில்முனைவோர் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். பணியாளர்கள் தாங்கள் வாங்கும் ஊதியத்துக்குத் தகுந்த வேலையை மட்டும் செய்து கொடுத்தால் போதுமானது என்று நிறுவனங்கள் எண்ணக் கூடாது. 

வேலையுடன் பணியாளரின் தனிமனித வாழ்க்கை எந்த அளவுக்கு முன்னேற்றமடைகிறது என்பதிலும் நிறுவனங்கள் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில், பணியாளர்கள் சிறப்புடனும் மகிழ்ச்சியுடனும் இருந்தால், அவர்களது பணித்திறன் அதிகரித்து நிறுவனத்துக்கு மேலும் வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது.  

மாற்றங்களுக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளும் இளைஞர்களும், நிறுவனங்களும் மட்டுமே வெற்றியை நோக்கிய பயணத்தில் தொடர்ந்து பயணிப்பார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com