முழு விருப்பம்... முழு ஈடுபாடு!

இன்ஸ்டிடியூட்  ஆஃப்  சார்டர்டு அக்கவுண்டன்ட்ஸ் ஆஃப் இந்தியா (ஐசிஏஐ) நடத்தும் சிஏ தேர்வில் வெற்றி பெறுவது அவ்வளவு  சாதாரண விஷயமில்லை.
முழு விருப்பம்... முழு ஈடுபாடு!


இன்ஸ்டிடியூட் ஆஃப் சார்டர்டு அக்கவுண்டன்ட்ஸ் ஆஃப் இந்தியா (ஐசிஏஐ) நடத்தும் சிஏ தேர்வில் வெற்றி பெறுவது அவ்வளவு சாதாரண விஷயமில்லை. மிகவும் கடினமான அந்தத் தேர்வை எழுதி வெற்றி பெற்றிருக்கிறார் எஸ்.கோகுலகிருஷ்ணன். பார்வைத் திறன் குறைபாடு உள்ள அவர், அந்தத் தேர்வை எழுத எடுத்துக் கொண்ட முயற்சிகள், பெற்ற வெற்றிகள், அவர் சந்தித்த பின்னடைவுகள் என எல்லாவற்றையும் கேட்க கேட்க பிரமிப்பாக இருக்கிறது. சிஏ தேர்வு எழுத அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகளைப் பற்றி பேசினோம்:

""பிளஸ் டூ முடித்தவுடன் நான் படித்த பள்ளியின் பிரின்ஸ்பால் பத்மினி சாம்பசிவம் என்னை சிஏ படிக்கச் சொன்னார்கள். "பி.காம் படித்தவர்கள் நிறையப் பேர் எம்பிஏ படிக்கிறார்கள். அதைவிட சிஏ படிப்பது நல்லது. உன்னால் சிஏ படிக்க முடியும்' என்று ஊக்கப்படுத்தினார்கள்.

நான் சென்னை லயோலா கல்லூரியில் பி.காம் பட்டப் படிப்பில் சேர்ந்தேன். கூடவே சிஏ தேர்வு எழுத நான் பயிற்சி செய்யத் தொடங்கினேன்.

எனக்கு பார்க்கும் திறன் குறைவு. எனவே பெரிதுபடுத்திக் காட்டும் லென்ஸ் மூலமாகத்தான் எதையும் படிக்க முடியும். இந்நிலையில் நான் படிப்பதற்காக நண்பர்கள் நிறைய உதவினார்கள். பாடங்களைப் படித்துக் காட்டினார்கள். அக்கவுண்ட்ஸ் படிக்கும்போது நிறைய அட்டவணைகள் போட வேண்டியிருக்கும். அட்டவணையின் ஒவ்வொரு பகுதியையும் எப்படி அமைப்பது, அதில் என்ன என்ன தகவல்கள் இடம் பெற வேண்டும் என்பதையெல்லாம் நண்பர்கள் சொல்லிக் கொடுத்தார்கள்.

சிஏ தேர்வு எழுத யாராவது ஓர் ஆடிட்டரின் கீழ் மூன்று ஆண்டுகள் பணி அனுபவம்- ஆர்டிகல்ஷிப் - செய்திருக்க வேண்டும். பார்வைத் திறன் குறைபாடு எனக்கு இருப்பதன் காரணமாக பல இடங்களில் முயற்சி செய்தும் ஆர்டிகல்ஷிப் எனக்குக் கிடைக்கவில்லை. சோர்ந்து போனேன். இறுதியில் சென்னை தியாகராய நகரில் உள்ள கருப்பையா&கோ என்ற ஆடிட்டிங் நிறுவனத்தில் வாய்ப்புக் கிடைத்தது. இங்கு சிஏ படிப்பு தொடர்பான பல விஷயங்களைத் தெரிந்து கொண்டேன். பிறரை விட சிறப்பாக என்னைக் கவனித்துக் கொண்டார்கள். நிறையச் சொல்லிக் கொடுத்தார்கள்.

இன்கம் டாக்ஸ் தொடர்பான விஷயங்களுக்காக வெளியே செல்லும்போதெல்லாம் ஆடிட்டர் என்னை தன்னுடன் அழைத்துச் சென்று, அது தொடர்பான விஷயங்களைக் கற்றுக் கொள்ள உதவினார்.

இதற்கிடையில் ஐசிஏஐ, சிஏ படிப்புக்கான பாடங்களை ஆன்லைனில் வெளியிட்டது. பிறரைப் படிக்கச் சொல்லி பாடங்களைக் கேட்டு, லென்ûஸப் பயன்டுத்தி படித்துவந்த எனக்கு இது மிகவும் உதவியாகிப் போனது. நான் "ஜாஸ்' என்கிற மென்பொருளை எனது கணினியில் பதிவிறக்கம் செய்து கொண்டேன். இந்த மென்பொருள் கணினித் திரையில் உள்ள தகவல்களைப் படித்துச் சொல்லும். சிஏ தேர்வுக்கான பாடங்களைப் படிப்பதற்கு இந்த மென்பொருள் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது.

சிஏ தேர்வுக்கு படிப்பதற்காக சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்குச் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டேன். அங்கே பார்வைத்திறன் குறைபாடு உள்ளவர்களுக்காகவே "பிரெய்ல்' என்ற தனிப் பிரிவையே வைத்திருக்கிறார்கள். நூலகத்துக்கு வரும் பார்வைத்திறன் குறைபாடு உள்ளவர்களுக்குப் புத்தகங்களைப் படித்துக் காட்டுவதற்காகவே பல தன்னார்வ அமைப்பைச் சேர்ந்தவர்களும் அங்கு வருகிறார்கள். எனக்கு "லிட் தி லைட்' என்ற தன்னார்வ அமைப்பைச் சேர்ந்தவர்கள் உதவினார்கள்.

வீட்டில் எனது படிப்பு முயற்சிகளுக்கு மிகவும் உதவி செய்தவர் என் அம்மா விஜயலக்ஷ்மி. அவர் பிபிஏ படித்தவர். சிஏ தேர்வுக்கான பாடங்களைப் படித்துக் காட்டுவார். அக்கவுண்ட்ஸ் எல்லாம் எழுதிப் பார்க்க வேண்டும். நான் சொல்லச் சொல்ல அம்மா எழுதுவார்.

சிஏ தேர்வு மூன்று படிநிலைகளைக் கொண்டது. பவுண்டேஷன், இன்டர்மீடியட், ஃபைனல் என்ற அந்த மூன்று படிநிலைகளில் பவுண்டேஷன் தேர்வில் எந்தத் தோல்வியும் இல்லாமல் வெற்றி பெற்றுவிட்டேன். அது எனக்கு மிகவும் உற்சாகத்தைக் கொடுத்தது. நம்மாலும் முடியும் என்ற நம்பிக்கை பிறந்தது. ஆனால் அடுத்தடுத்து எழுதிய மற்ற இரு படிநிலைகளிலும் தோல்வி. மீண்டும் மீண்டும் எழுதியும் தோல்வி. நான் நிலைகுலைந்து போய்விட்டேன். சிஏ தேர்வு எழுதாமல் விட்டுவிடலாம் என்று நினைத்தேன். வேலைக்குப் போக முடிவெடுத்து ஒரு நிறுவனத்தில் வேலைக்கும் சேர்ந்துவிட்டேன்.

ஆனால் என்னுடைய அம்மா எனக்கு ஊக்கம் அளித்தார்கள். மீண்டும் முயற்சி செய்தால் நிச்சயம் தேர்வாகிவிடுவேன் என்று நம்பிக்கையூட்டினார்கள்.

இதற்கிடையில் எனக்கு பேங்க் ஆஃப்நியூயார்க் மெல்லனில், ஃபினான்ஷியல் அனலிஸ்ட் வேலை கிடைத்தது. வேலையும் செய்து கொண்டு சிஏ தேர்வுக்கு பயிற்சி செய்வது சிரமமாக இருந்தது. இருந்தாலும் நான் விடவில்லை.

கரோனா தொற்று ஏற்பட்டதும் வீட்டிலிருந்தே வேலை பார்க்கச் சொன்னார்கள். அலுவலகம் சென்று வருவதற்கான பயண நேரம் மிச்சப்பட்டது. அந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு சிஏ தேர்வுக்காக முயற்சி செய்து கொண்டே இருந்தேன். தேர்வு எழுதி இந்த ஆண்டு சிஏ தேர்வில் நான் தேர்ச்சி பெற்றுவிட்டேன். நம்மாலும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. மகிழ்ச்சி ஏற்பட்டது. என்னைவிட அதிகம் மகிழ்ந்தவர்கள் என் குடும்பத்தினர்தான்.

இந்த தேர்வு எழுதியதில் சில சிரமங்களும் இருந்தன. பார்வைத் திறன் குறைவு என்பதால் நான் நேரடியாகத் தேர்வு எழுத முடியாது. நான் சொல்லச் சொல்ல பிறர்தான் எனக்காகத் தேர்வு எழுத வேண்டும். அதற்காகத் தேர்வு எழுதுபவர்களைத் தேடிப் பிடிப்பது சிரமமானதாக இருந்தது. ஒரு கட்டத்தில் பிறரை நம்பாமல் என் அம்மாவையே எனக்காகத் தேர்வு எழுதச் சொன்னேன்.

என்னைப் போல தேர்வு எழுத முயற்சிப்பவர்கள், பிறர் சொல்கிறார்கள் என்பதற்காக - குடும்பத்தினர், நண்பர்கள் வற்புறுத்தலுக்காக - சிஏ தேர்வு எழுத முயற்சி செய்யக் கூடாது. நாமே முழு விருப்பத்துடன், முழு ஈடுபாட்டுடன் முயற்சி செய்ய வேண்டும். அப்போதுதான் வெற்றி பெற முடியும்'' என்றார் கோகுலகிருஷ்ணன்.

கோகுலகிருஷ்ணனின் இன்னொரு முகம் இசைக் கலைஞராக இருப்பது. மார்கழி மாதத்தில் சென்னையில் நடக்கும் இசைக் கச்சேரிகளில் கர்நாடக சங்கீதத்தில் வாய்ப்பாட்டு பாடியிருக்கிறார்.

ஏ.ஆர்.ரஹ்மானின் கேஎம் மியூசிக் கன்சர்வேட்டரி இசைப் பள்ளியில் சாட்டர்ஜி
என்பவர் இவருக்குப் பியானோ வாசிக்கக் கற்றுக் கொடுத்து இவரை ஊக்கப்படுத்தியிருக்கிறார். இவரின் பியானோ இசையை ஏ.ஆர்.ரஹ்மான் யூ டியூப்பில் பதிவேற்றம் செய்ய அதை அதிகம் பேர் பார்த்திருக்கிறார்கள்.

""சிஏ தேர்வுக்கான முயற்சிகளின் போதும் கூட நான் பாடுவதை விட்டுவிடவில்லை. குறைந்தது ஓர் அரைமணி நேரமாவது பாடுவேன். ஆடிட்டிங் நிறுவனத்தை நான் தொடங்கி நடத்தினாலும், இசை, பாடலுடன் ஆன எனது தொடர்பு தொடர்ந்து கொண்டே இருக்கும்'' என்கிறார் கோகுலகிருஷ்ணன்.

பாலக்காடு ராம்பிரசாத்தை தனது குருவாக வரித்திருக்கும் கோகுலகிருஷ்ணன், நாதஸ்வரக் கலைஞர் நாமகிரிப் பேட்டை கிருஷ்ணனின் கொள்ளுப் பேரன். அது மட்டுமல்ல, சென்னை தொலைக்காட்சியின் மேனாள் இயக்குநர் ஏ.நடராஜனின் பேரனுமாவார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com