மெய்நிகர் நேர்காணல்... நேரடி நேர்காணல்... எது சரி?

கரோனா நோய்த்தொற்று உலகத்தையே புரட்டிப் போட்டுவிட்டது. 
மெய்நிகர் நேர்காணல்... நேரடி நேர்காணல்... எது சரி?

கரோனா நோய்த்தொற்று உலகத்தையே புரட்டிப் போட்டுவிட்டது.

இதன் காரணமாக அரசுப் பணிகளிலும் தனியார் நிறுவன பணிகளிலும் பல்வேறு மாற்றங்கள் வந்துவிட்டன. நிறுவனங்களில் ஆள் சேர்ப்பு பணிகள் கூட வித்தியாசமாக மாறிவிட்டன.

தனியார் நிறுவனங்கள் தொடர்ந்து தங்கள் நிறுவனத்திற்காக பணியாளர்களை நியமித்து வருவதும் தொடர்ந்து வருகிறது. இதற்காக அவர்கள் நேர்காணல் நடத்தி வருகின்றனர். 

முன்பெல்லாம் விண்ணப்பதாரர்களை நேரில் வரவழைத்து நேர்காணல் செய்து,  தேர்வு நடத்தி, பணியாளர்களைத்  தேர்வு செய்து வந்தனர்.

ஆனால் தற்போது பணியாளர்கள் தேர்வு செய்யும் முறையும் ஆன்லைன் மூலமே அதாவது விர்ச்சுவல் இன்டர்வியூ எனப்படும் மெய்நிகர் நேர்காணல் ஆக மாறிவிட்டது. விண்ணப்பதாரர்கள் தங்கள் வீட்டிலிருந்தே நிறுவனம் நடத்தும் நேர்காணலில் பங்கேற்று பணியில் சேர்ந்து வருகின்றனர்.

தற்போதைய சூழலில் இதுதான் சரியான வழி என்றாலும் கூட, நேரடியாக விண்ணப்பதாரரைச் சந்தித்து நேர்காணல் செய்வதுதான் சிறப்பாக இருக்கும் என சில ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

கடந்த 18 மாதங்களாக தொலைதூரத்தில் இருப்பவர்களையும் மெய்நிகர் நேர்காணல் மூலம் நிறுவனங்கள் பணியமர்த்தி வருகின்றன. என்றாலும் ஒருவரின் தனிப்பட்ட ஆளுமை மற்றும் அவரின் திறன்களை அளவிடுவதற்கான வாய்ப்பு இத்தகைய மெய்நிகர் நேர்காணலில் இருக்குமா என்ற சந்தேகம் ஆய்வாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஒருவரை நேரில் சந்தித்து நேர்காணல் நடத்தும் பொழுது அவரின் எண்ண ஓட்டங்களை வெளிக்காட்டும் முகத்தைக் கொண்டே அவரின் செயல்பாடு என்னவாக இருக்கும் என்று தீர்மானித்து விட முடியும். ஆனால் மெய்நிகர் நேர்காணலில் இது சாத்தியமில்லை என்கின்றன ஆய்வு முடிவுகள். 

ஆனால் முந்தைய முறையை விட வீடியோ அழைப்புகள் மூலம் நடைபெறும் நேர்காணல் மூலம் விரைவாகப் பணியாளர்களை நியமிக்க முடிந்ததாக 54 சதவீத நிறுவன தலைவர்கள் தெரிவிக்கின்றனர். அதில் 41 சதவீத பணியாளர்கள் சரியான திறன் உடையவர்களாக இருந்ததாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இத்தகைய மெய்நிகர் நேர்காணல்களால் பயணச் செலவுகள் மற்றும் இதர செலவுகள் குறைவதால் நிறுவனங்கள் அதை விரும்புகின்றன. அதையும் தாண்டி திறமையானவர்கள் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களுடன் வீடியோ அழைப்பு மூலம் பேச முடிவதால் திறமையானவர்களைத் தேர்வு செய்யும் மிகப்பெரிய வாய்ப்பாக மெய்நிகர் நேர்காணல்கள் இருப்பதாக நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் மெய்நிகர் நேர்காணலை நிறுவனத்தின் உயர்மட்ட தலைவர்கள் அனைவரும் பார்க்க முடியும் என்பதால் ஒருவரைப் பற்றிய விவரங்களை ஒரே நேரத்தில் அனைவரும் தெரிந்து கொள்ள வாய்ப்பாகவும் இத்தகைய நேர்காணல்கள் உள்ளதால் தனியார் நிறுவனங்கள் இதை தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகின்றன.
சாதக அம்சங்கள் இருப்பது போலவே பாதகங்களும் மெய்நிகர் நேர்காணலில் இருக்கத்தான் செய்கின்றன. பொதுவாகவே இணைய இணைப்புகளில் வேக குறைபாடு, பல இடங்களில் நெட்வொர்க் பிரச்னைகள் போன்ற குறைபாடுகள் இருக்கின்றன.
மெய்நிகர் நேர்காணல் மூலம் ஒருவரை இன்டர்வியூ செய்யும்பொழுது மோசமான இணைய இணைப்பு அல்லது மோசமான வீடியோ மற்றும் ஆடியோ போன்றவற்றின் காரணமாக விண்ணப்பதாரரின் முழு விவரங்களையும் தெரிந்து கொள்ள  முடியாமல் போய் விடக்கூடும். விண்ணப்பதாரர் சரியான விவரங்களை, சரியான பதில்களைக் கூறினாலும் கூட நேர்காணல் நடத்துபவருக்கு சரியான முறையில் அது சென்றடையாமல் போய்விடவும் சாத்தியக் கூறுகள் உள்ளன.
சிறிய வீடுகளில் வசிக்கும் விண்ணப்பதாரர்கள் மெய்நிகர் நேர்காணலில் உரையாடும் பொழுது அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் செயல்பாடுகள் கூட நேர்காணலைப் பாதிக்கக்கூடும். இதன் காரணமாக சரியான திறன் மிக்கவர்களை நிறுவனங்கள் இழந்துவிடக்கூடும். 
இன்னும் சொல்லப்போனால் விண்ணப்பதாரர்கள் பயன்படுத்தும் செயலிகள் நேர்காணலுக்காக வடிவமைக்கப்பட்ட செயலிகளாக இருப்பதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தற்போதைய நெருக்கடியான சூழலில் மெய்நிகர் நேர்காணல் தான் ஆள்சேர்ப்பு நடவடிக்கைகளுக்கு பெரிதும் உதவுகின்றன என்பதை மறுப்பதற்கில்லை. சாதாரண பணியிடங்களுக்கு இது போன்ற முறைகளைப் பின்பற்றுவது ஏற்புடைய விஷயம்தான். அதேசமயம் உயர்நிலை பணியிடங்களுக்கு முதல்கட்ட தேர்வுகளை மெய்நிகர் நேர்காணல் மூலம் நடத்திவிட்டு இறுதிக்கட்ட தேர்வை நேருக்கு நேர் என்ற முறையில் நேரடி நேர்காணல் மூலம் தேர்வு செய்தால் மிக நல்லது என்கின்றன ஆய்வுகள். 
நேரடி நேர்காணல்கள் மூலம் விண்ணப்பதாரரின் உடல் மொழியில் இருந்து தேர்வாளர் முக்கியமான விபரங்களை பெற முடியும் என்பதுடன் விண்ணப்பதாரரின் தனிப்பட்ட மற்றும் சமூகத் திறன்களை துல்லியமாகத் தெரிந்து கொள்ளவும் இத்தகைய நேரடி நேர்காணல் உதவும். 
நிறுவன தலைவர், மெய்நிகர் நேர்காணல் மூலம்  பணியாளரைத் தேர்வு செய்யும் பொழுது ஏற்படும் புரிந்துணர்வைக் காட்டிலும் நேரடியாக சந்தித்து நேர்காணல் நடத்தி தேர்வு செய்வதில் கிடைக்கும் புரிந்துணர்வு அதிகம்தான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com