இசை... மூளை... இதயம்!

உடலைப் புத்துணர்வுடன் வைத்துக் கொள்ள எப்படி உடற்பயிற்சி தேவையோ அதுபோல மூளையை புத்துணர்வாக்க, மூளைக்குப் பயிற்சி கொடுப்பது அவசியம்.   மூளைக்கான சிறந்த பயிற்சி எது தெரியுமா? இசைதான்.  
இசை... மூளை... இதயம்!


உடலைப் புத்துணர்வுடன் வைத்துக் கொள்ள எப்படி உடற்பயிற்சி தேவையோ அதுபோல மூளையை புத்துணர்வாக்க, மூளைக்குப் பயிற்சி கொடுப்பது அவசியம்.   மூளைக்கான சிறந்த பயிற்சி எது தெரியுமா? இசைதான்.  

இன்று உடல்நலப் பிரச்னைகளைவிட மனநலப் பிரச்னையால் பாதிக்கப்பட்டோர்தான் அதிகம். இசை மனநலத்தை மேம்படுத்த உதவுகிறது. மனநல சிகிச்சை முறைகளிலும் இசை இடம்பெற்று வருகிறது. சந்தோஷம், துக்கம் என இரு மனநிலைகளிலும் ஏற்ற ஒன்று இசையே. 

இதுதவிர, இசையைக் கேட்பது நினைவுத்திறனை அதிகரிக்கும்; கவனச்சிதறலைத் தடுக்கும், பயம், பதற்றத்தைப் போக்கும். ஒருவித தன்னம்பிக்கையை அளிக்கும். மன அழுத்தம், மனச்சோர்வு நீங்கும்... இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். 

இசையைக் கேட்பது மனிதர்களின்  13 வகையான உணர்ச்சிகளைத் தூண்டுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். பொழுதுபோக்கு, மகிழ்ச்சி, சிற்றின்பம், அழகு, தளர்வு, சோகம், கனவு, வெற்றி, கவலை, பயம், எரிச்சல், மீறுதல் மற்றும் உணர்ச்சி மிகுதல் ஆகிய 13 வகையான உணர்ச்சிகளை இசை தூண்டுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இசையைக் கேட்கும்போது காதுகள் வழியாகச் செல்லும் இசை, மூளையின் எண்ணற்ற நியூரான்களில் அதிர்வுகளை ஏற்படுத்துகின்றன. இந்த அதிர்வுகளைப் பொருத்தே மூளையின் செயல்திறன் இருக்கிறது. 

மெல்லிய இசையைக் கேட்டால் இலகுவாக தூக்கம் வருவதுபோல இருக்கும். துள்ளலான இசையைக் கேட்கும்போது ஆட வேண்டும் என்று தோன்றும். அதிகப்படியான ஒலி அசெளகரியத்தை ஏற்படுத்தும். இவையெல்லாம் இசையின் அதிர்வுகள் மூளையில் ஏற்படுத்தும் தாக்கங்களே. 

இன்றைக்கு பலருக்கும் துணையாக, ஆறுதலாக இருப்பது இசைதான். தனிமையில் இருப்பவர்களுக்கு ஆகப்பெரும் ஆசுவாசம் இசையும் மனதுக்கு பிடித்த பாடல்களும்தாம். 

இன்று வயதானோர் பலருக்கு சுறுசுறுப்பு போய்விடுகிறது. நினைவுத்திறன் குறைந்து ஞாபக மறதி ஆட்கொண்டு விடுகிறது. ஆனால், தொடர்ந்து இசையைக் கேட்கும்போது மூளையின் நரம்புகள் தூண்டப்படுவதால் வயதானாலும் உங்களுக்கு நினைவுத் திறன் நன்றாக இருக்கும் என்று கூறுகிறது ஓர் ஆய்வு. 

அதுபோல, மருத்துவமனைகளில் பல்வேறு சிகிச்சைகளுக்கு இசையைப் பயன்படுத்தி நோயாளிகளுக்கு நம்பிக்கையூட்டுகின்றனர் மருத்துவர்கள். 

பழையகால நினைவுகளை மீட்டெடுக்கும் சக்தி இசைக்கு மட்டுமே உண்டு. சாதாரணமாக ஒரு பழைய பாடலைக் கேட்கும்போது அந்தப் பாடலின் இசை, பாடல் வரிகள் சார்ந்து உங்கள் வாழ்வில் நடந்த பழைய நிகழ்வுகள் நினைவுக்கு வருவதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். 

இசைக்கு உங்கள் உடல் எவ்வாறு எதிர்வினையாற்றுகிறது என்பதையும் தெரிந்துகொண்டு உங்கள் உடல், மனநிலைக்கு ஏற்ப இசையை அனுபவிக்கிறீர்கள். 

ஏன், ராகங்களுக்கும் உடலில் உள்ள நரம்புகளுக்கும் தொடர்பு இருப்பதாக அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

நீங்கள் கேட்ட இசையையே திரும்பத் திரும்ப கேட்பதைவிட புதிய இசையை உணரும்போது அதனைப் புரிந்துகொள்ள உங்கள் மூளை போராடுகிறது. அதாவது புதிய இசையால் மூளைக்குப் பயிற்சி அளிக்கப்படுகின்றது. 

இசைக்கு எதையும்  ஆற்றும் சக்தி உள்ளது என்பது தெரிந்ததே. பல்வேறு அறிவியல் ஆய்வுகள் கூட இதனை உறுதி செய்கின்றன. இசை, மன அழுத்தத்தைச் சரி செய்யும் என்பதைத் தாண்டி, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? 

தினமும் 30 நிமிடம் இசை கேட்பது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும் என்று புதிய ஆய்வு ஒன்று கூறுகின்றது. 

மன அழுத்தத்தினால் ஏற்படும் இதய நோய்களுக்கு இசை அருமருந்து. முதல்முறை இதய அடைப்பினால் பாதிக்கப்பட்டோர் தொடர்ந்து இசையைக் கேட்கும்பட்சத்தில் அவர்களுக்கு அடுத்தடுத்த இதய அடைப்புகள் வருவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருக்கின்றன. 

மாரடைப்பிற்குப் பிறகு இதய நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் இசை சிகிச்சையும் (மியூசிக் தெரபி) இருக்க வேண்டும் என்று வலியுறுத்தும் ஆய்வாளர்கள், இந்த சிகிச்சையால் எந்தவித பக்கவிளைவுகளும் இல்லை என்பதால் அனைத்து நோயாளிகளுக்கும் அனைத்து சிகிச்சை முறைகளிலும் இதனைப் பயன்படுத்தலாம் என்று கூறுகின்றனர். 

இசையை கேட்பதால் இதயநோய்கள் காரணமாக இறப்பவர்களின் எண்ணிக்கை குறைகிறது என்று ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.  மியூசிக் தெரபியினால் இதய செயலிழப்பு விகிதத்தில் 18%, அடுத்தடுத்த மாரடைப்பின் விகிதம் 23%, இதய அறுவை சிகிச்சை 20% மற்றும்  இதயம் தொடர்பான இறப்பு விகிதம் 16% குறைந்துள்ளது இதில் கண்டறியப்பட்டுள்ளது. 

ஒரு நபர் மன அழுத்தத்தில் இருக்கும்போது அவரது நரம்பு மண்டலம் சண்டை அல்லது கோபத்துடன் துடிப்பாக இருக்கும். அப்போது அவர்கள் இசையைக் கேட்கும்போது நரம்பு மண்டலத்தில் இத்தகைய நிலையை மாற்றி அமைதிப்படுத்துகிறது. இதனால் மன அழுத்தம் முற்றிலும் குறைகிறது.  மன அழுத்தம் குறைவது, இல்லாமலிருப்பது உடல் நலனுக்கு உகந்தது.

எனவே, உடல்நிலை, மனநிலை இரண்டையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள,  இசையால் பரவசம் அடையுங்கள்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com