கிளர்ந்தெழுங்கள் தோழர்களே! - 18: விஞ்ஞானமே மெய்ஞானம்!

என்ஜினியர்கள் தினம் செப்டம்பர் 15 - ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
கிளர்ந்தெழுங்கள் தோழர்களே! - 18: விஞ்ஞானமே மெய்ஞானம்!

என்ஜினியர்கள் தினம் செப்டம்பர் 15 - ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. நாட்டின் சிறந்த பொறியாளர் "பாரத் ரத்னா' விசுவேஸ்வரய்யாவின் பிறந்த நாளில் நாட்டிற்கு அரியபணியாற்றும் பொறியாளர்களைப் போற்றி மகிழும் நாள்.

கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவிசுவேசுவரய்யா தனது வாழ்நாளில் வியக்க
வைக்கும் சாதனைகள் புரிந்துள்ளார். ஒருவரது வாழ்நாளில் இத்தகைய வானளாவிய கட்டமைப்புகளை வடிவமைத்து பழுதில்லாமல் நிறைவேற்ற முடியுமா என்பது பிரமிக்க வைக்கிறது. தேசத்தையும் மக்களையும் உளமார நேசித்து தன்னலமின்றி அவர் பணியாற்றியதால் தான் அது சாத்தியமாயிற்று.

"கர்மயோகம் என்பது கடனே' என்று உழலாமல் எடுத்த பணியை செவ்வனே நிறைவேற்றினால் தான்கர்மம் யோகத்தில் முடியும். சிரத்தையாக வேலை செய்பவர் வேலையின் நுணுக்கங்களை துல்லியமாக அறிந்திருப்பார். கர்மயோகத்திற்கு அடிப்படை வித்யா ஞானம், அதாவது செயல்முறைக் கல்வியில் தெளிந்த அறிவு. வித்யா இருவகைப்படும் . "பர' வித்யா, "அபர' வித்யா. பர வித்யா என்பது ஆத்மார்த்தமான அறிவு, பரம்பொருளைப் பற்றிய சிந்தனை.

"ஆட்டுவித்தால் யார்தான் ஆடாதாரே' என்று உலகை ஆட்டிப் படைக்கும் ஒரு சக்தியை அதை கடவுள், அல்லது வேறு எப்படி விவரித்தாலும் அந்த ஆத்மசிந்தனை இன்றியமையாதது. அபர வித்யா என்பதுலௌகீகமான அன்றாட கடமைகள் பற்றிய புரிதல்.

வித்யா ஞானம், கல்வியின் புரிதல் பற்றி சுவாமிசிவானந்தா தெளிவாக விவரிக்கிறார். எல்லா ஜீவராசிகளையும் ஒரு பிரத்யேகமான சக்தி இயக்குகிறது. சிங்கம், புலி, யானை போன்ற மிருகங்களை எடுத்துக் கொண்டால் மகத்தான சக்தி அவற்றிடம் இருக்கின்றன. அந்தசக்தியை இயக்குவதும் ஒரு மகத்தான சக்தி. உயரிய பிறப்பு என்று நாம் அனுமானிக்கும் மனிதனிடம்எவ்வளவோ திறன்கள் புதைந்திருக்கின்றன. அந்ததிறமைகளை வெளிக்கொணருவதற்கு ஓர் இயக்கம் தேவை. உயிர், உடல் உறுப்புகளை இயக்குகிறது. அது மட்டும் இருந்தால் போதாது. மேல் நோக்கிய உணர்வு தேவை. ஒவ்வொரு ஜீவராசிக்கும் ஆன்மா என்ற உயரிய இயக்கம் உள்ளது. அதை உணர்ந்து பரம்பொருளைஅறிவது தான் பர வித்யா, ஆத்ம ஞானம். அதுதான் உலக விஷயங்களைப் புரிந்து கொள்வதற்கான அடிப்படை அறிவு. சர்வ சக்தி படைத்த ஆன்மா மூலம் பரம்பொருளை நாடிச் செல்வதுதான் பர வித்யா என்பதை எளிமையாக விளக்குகிறார் சுவாமி சிவானந்தா.
திருநெல்வேலி மாவட்டம் பத்தமடையில் குப்புசாமி என்பவராக 1887- ஆம் வருடம் பிறந்த சுவாமிகள் இளம் பருவத்தில் புத்திசாலி சிறுவனாக பள்ளியில் சிறப்பாகப் பயின்று மருத்துவத்தில் ஆர்வம் ஏற்பட்டு,தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பட்டம் பெற்றார். பிரிட்டிஷ் மலேசியாவில் பத்து வருடங்கள் மருத்துவராகப் பணியாற்றினார். ஏழை மக்களுக்குஇலவசமாக மருத்துவ உதவியளித்து மக்களின்பாராட்டைப் பெற்றார்.
உடம்பளவில் மருத்துவம் குணப்படுத்துகிறது. ஆனால் அகத்தூய்மைக்கு உபாயம் ஆன்மீகம் என்பதை உணர்ந்து மலேசியாவிலிருந்து இந்தியா திரும்பி ரிஷிகேஷ் ஹரித்வார் கங்கை கரைக்குச் சென்று தியானத்தில் ஈடுபட்டு சுவாமி விசுவனாந்த சரஸ்வதியிடம் சன்யாச தீஷை பெற்றார். இந்தியாவில் பல மாகாணங்களுக்குப் பயணித்தார். அரபிந்தோ, ரமண மஹரிஷி, சுத்தானந்த பாரதி ஆகியோரைச் சந்தித்து வேதங்கள் உபநிஷத்துகள் கற்றறிந்து ஆன்மீக வாழ்க்கையை அரவணைத்தார்.
"தெய்வீக வாழ்வியல்' (டிவைன் லைஃப் சொசைட்டி) என்ற சங்கத்தை அமைத்து பக்தர்களை சமுதாயப்பணியில் ஈடுபடுத்தினார். மனதையும் உடலையும் ஒருமுகப்படுத்தும் "சித்தஸ்ய ப்ராணஸ்ய நிரோதஹா' என்ற பதஞ்சலி யோகியின் சூத்திரத்தின் அடிப்படையில் யோகக் கலையைப் பயிற்றுவித்தார். ரிஷிகேஷ்பகுதியில் சிவானந்தா ஆசிரமம் இன்றும் இயங்கு
கிறது. முசூரியில் உள்ள ஐஏஎஸ் பயிற்சி அகாடமியில் பயிற்சி பெறும் இளம் அதிகாரிகளுக்கு சிவானந்தா ஆசிரமம் யோக பயிற்சி அளிக்கிறார்கள். ஹைதராபாத் ஐபிஎஸ் அகாடமியிலும் சிவானந்தா யோக பயிற்சிஅளிக்கப்படுகிறது.
ஆத்ம சிந்தனையின் தாக்கம் இருந்ததால்தான்விசுவேஸ்வரய்யா பல துறைகளில் சாதிக்க முடிந்தது. கிருஷ்ணராஜசாகர் அணை ஓர் எடுத்துக்காட்டு. மைசூர் சமஸ்தானத்தின் தலைமைப் பொறியாளராக இருந்தபோது மண்டியா பகுதியில் காவிரி நதி தண்ணீரைச் சேமிக்க அணை கட்ட
வேண்டும் என்ற திட்டத்தைக் கொடுத்தார். பல எதிர்ப்புகளைத் தாண்டி மைசூர் மகாராஜா கிருஷ்ண ராஜ உடையார்ஒப்புதலும் மதறாஸ் மாகாண ஆளுகை
யாளர் பிரிட்டிஷ் அரசின் ஒப்புதலோடு 1911 - ஆம் வருடம் அணை கட்டும்
பணி துவங்கியது.
ஆசியாவிலேயே பெரிய அணை என்ற பெயர் பெற்றது. தானியங்கி நவீன கத
வடைகளை வடிவமைத்து, உபரி நீர் தானியக்கத்தில் வெளியேற அணையில் வகை செய்யப்பட்டுள்ளது. அணை நீர் மட்டம் குறையும் போது கதவுகள் தாமே மூடிக் கொள்ளும். இந்த கதவடைகள் இன்றும் சீராக இயங்குகின்றன என்பது பிரமிப்பூட்டும் தொழில் நுட்ப சாதனை.
பொது மக்களுக்கு மகிழ்ச்சியூட்டும் வகையில் பிருந்தாவன் பூங்கா, அணையின் பக்கத்தில் எழில் பொங்க காட்சியளிக்கிறது. அந்த காலத்தில் எல்லா மொழி படங்களின் காதல் பாடல் காட்சிகளில் பிருந்தாவன் கார்டன் இடம் பெற்றிருக்கும்!
"தொழில்மயமாக்கு... இல்லையேல் அழிந்துவிடு' என்ற தாரக மந்திரத்தை 1912-18 - இல் மைசூர் சமஸ் தானத்தின் திவானாக இருந்தபோது அரசாளுமையில் நடைமுறைப்படுத்தி மைசூர் ராஜ்யத்தின் வளமைக்கு வழி வகுத்தார்.

பத்ராச்சலம் எஃகு தொழிற்சாலை விசுவேசுவரய்யாவின் மதி நுட்பத்தில் உயர்ந்த உற்பத்தி திறன் பெற்றது. பாங்க் ஆஃப் மைசூர், மைசூர் சந்தன எண்ணெய் தொழிற்சாலை மேலும் பல எண்ணற்ற தொழில் தடங்கள் விசுவேஸ்வரய்யாவால் நிறுவப்பட்டன. பெங்களூரில் 1917 - ஆம் வருடம் அரசு பொறியியல் கல்லூரியை நிறுவி அதன் ஆலோசகராகப் பல ஆண்டு காலம் இருந்தார்.

131 அடி உயரம் கிருஷ்ணசாகர் அணை கட்டி முடித்த அதே நேரத்தில் சேலம் மாவட்டத்தில் மேட்டூர் அணை கட்டுமானப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. 1934- இல் கட்டப்பட்ட மேட்டூர் அணை உயரம் 120 அடி. ஆனால் பரப்பளவு கே ஆர் எஸ் அணையை விட இரண்டு மடங்கு அதிகம்! மேட்டூர் அணைக்கு காவிரி நீர், கேஆர்எஸ் அணை, கபினி அணையிலிருந்து வருகிறது.

மேட்டூர் அணை, பொறியாளர்களின் மகத்தான சாதனை! ஆங்கிலேய என்ஜினியர் எல்லிஸ் தலைமையில் நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டு மேட்டூர் மலை சூழ்ந்த பகுதிகளை எல்லையாக வைத்து பரந்து விரிந்த அணையை வடிவமைத்தனர். அணையின் நீளம் 1700 மீட்டர். காவிரி நீர் அதைத் தவிர துணை நதிகள் பாலாறு, சென்னாறு, தொப்பாறு ஆகியவை அணையை நிரப்புகின்றன. மொத்த கொள்ளளவு 93.47 டிஎம்சி. 1934 -இல் மதறாஸ் மாகாணத்தின் ஆளுநர் ஸ்டான்லி, அவர் இந்தியாவின் வைஸ்ராய் பொறுப்பிலும் இருந்தார்.

அவரது பெயர் தாங்கி மேட்டூர் அணை, ஸ்டான்லி நீர்தேக்கம் என்ற பெயர் பெற்றது.

தலைமைப் பொறியாளர் எல்லீசுடன் பல தமிழ் நாட்டு என்ஜினியர்கள் பணிபுரிந்தனர். ராவ் பகதூர் வெங்கட்ராம அய்யர், திவான் பகதூர் சுவாமினாத அய்யர், ராவ் பஹதூர் நரசிம்ம அய்யங்கார், ராவ் பஹதூர் ராமஸ்வாமி அய்யர், செயல் பொறியாளர்களாக அணை திட்டமிடல் கட்டுமானப் பணியில் முழுமையாக உழைத்தனர். அவர்களது பெயர் தாங்கிய பழுதடைந்த பதாகை அவர்களது உழைப்பிற்கு சான்றாக ஒரு மூலையில் உள்ளது. அவர்களுக்கு வளாகத்தில் சிலை வைத்து அவர்களது மகத்தான பணியை நினைவு கூர வேண்டும். அதற்கான் செலவை ஏற்கிறோம் என்ற அவர்களது குடும்பத்தினரின் கோரிக்கை. இதுவரை அரசு நிறைவேற்றவில்லை. அரசியல் ஆதாயம் தான் குறி என்ற நிலை எப்போது மாறுமோ!

தரம் வாய்ந்த பொறியாளர்களை உருவாக்க மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இந்திய தொழில் நுட்பக் கல்லூரிகள் முக்கிய மாநிலங்களில் நிறுவப்பட்டன. ஐஐடி படிப்பதற்கு கடினமான நுழைவுத் தேர்வைக் கடக்க வேண்டும். கணிதம், இயற்பியல் இவ்விரண்டு பாடங்களிலிருந்தும் நுணுக்கமான கேள்விகள் கேட்கப்படும். எண்களை நொறுக்கி விடையளிக்கும் திறன் சிலருக்கு இயல்பாக இருக்கும். பலருக்கு பிரத்யேக பயிற்சி தேவை.

பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த ஆனந்த குமார் கணிதவியலில் நிபுணர். பத்திரிகைகளில் விஞ்ஞானம், கணிதம் பற்றி கட்டுரைகள் எழுதி அதன் மூலம் பிரபலமானவர். பீகார் மாநிலம் பாட்னாவில் ஐஐடி நுழைவுத் தேர்வுக்கு மாணவர்களைத் தயார்செய்யும் பணியை 2002 -இல் "சூபர் 30' என்று பெயரிட்டு ஒரு திட்டத்தைத் தொடங்கினார் . அவரது முக்கிய குறிக்கோள் சமுதாயத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு முறையான பயிற்சி அளித்து போட்டித் தேர்வுகளுக்குத் தயார் செய்ய வேண்டும். அந்த விசேஷப் பயிற்சித் திட்டத்தில் வெற்றிகரமாக முதல் ஆண்டிலேயே கணிசமான மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். பத்து வருடங்களில் அவர் பயிற்சி கொடுத்த 300 மாணவர்களில் 263 மாணவர்கள் நுழைவுத் தேர்வில் வெற்றி அடைந்து ஐஐடியில் படிக்கும் வாய்ப்புப் பெற்றனர்.

ஏழைக் குடும்பத்தில் பிறந்த ஆனந்த் குமார் தந்தை தபால் நிலைய குமாஸ்தா. அரசுப் பள்ளியில் ஹிந்தி வழியில் கல்வி கற்றார். கணிதத்தில் ஈர்ப்பு ஏற்பட்டு பட்டப்படிப்பு படிக்கும்போது எண்கள் கோட்பாடு பற்றிய இவரது அறிக்கை கணித உலகில் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேல் படிப்புக்கு கேம்பிரிட்ஜ் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் வசதியில்லாததால் செல்லவில்லை. தனியே மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் கணிதம் சொல்லிக் கொடுக்க துவங்கினார். கணித மேதை ராமானுஜம் பெயரில் அவரது ட்யூஷன் பள்ளி பிரபலமானது. சுமார் 500 மாணவர்களுக்கு மேல் இணைந்தனர் . அவர்களிடமிருந்து அதிக பண வசூல் செய்யவில்லை; மாறாக ஆனந்த குமாரின் தாயார் மாணவர்களுக்கு சிற்றுண்டி சமைத்துக் கொடுப்பார், ஏழை மாணவர்கள் வயிறார! இப்படியும் ஓர் இந்தியர்!

பிபிசி போன்ற ஊடகங்கள் அவரைப் பாராட்டி ஆசியாவில் சிறந்த பயிற்சியாளர் எனறு கௌரவப்படுத்தினார்கள். அமரிக்க ஜனாதிபதியின் விசேஷ தூதர் "ஆனந்த குமாரின் பள்ளி, நாட்டிலே சிறந்த பள்ளிகளில் ஒன்று' என்று பாராட்டினார். அப்படிப்பட்டவரை இங்குள்ளவர்கள் தமிழ் சமுதாயத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டமாட்டார்கள்!
வாழ்க்கையில் சவால்கள் வரும்; போட்டிகள் இருக்கும். அவற்றை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதை இளைஞர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
உன்னால் முடியும் என்று உற்சாகப்படுத்துவதை விட்டுவிட்டு அவர்களுக்கு மனச் சோர்வு ஏற்படும் வகையில் திசை திருப்பும் சுயநலக்காரர்களை சமுதாயம் புறக்கணிக்க வேண்டும்.
ஸ்டான்லி நீர்தேக்க வளாகத்தில் ஸ்டீபன் க்ரெல்லட்டின் அர்த்தமுள்ள சொற்றொடர் ஐ ள்ட்ஹப்ப் ல்ஹள்ள் ற்ட்ழ்ர்ன்ஞ்ட் ற்ட்ண்ள் ஜ்ர்ழ்ப்க் க்ஷன்ற் ர்ய்ஸ்ரீங்... கடமையின் தத்துவத்தை விளக்குகிறது.
"ஒரு முறைதான் நான் உலகில் இவ்வழி செல்வேன் ஏதாவது நன்மை, பரோபகாரம் சக மனிதனுக்கு இப்போதே செய்வேன்...
தவிர்க்காமல், நேரம் தாழ்த்தாமல்.
ஏனெனில் நான் மீண்டும் இந்த வழியில் வருவேனோ நான் அறியேன்'
உலகை சிருஷ்டித்த ஆண்டவன் உலகின் முதல் பொறியாளர். ஆண்டவனின் செயல் வல்லுநர்களான விஷ்வகர்மர்களை ஆயுத பூஜையில் ஆராதிப்போம்.
சென்ற வார கேள்விக்குப் பதில்: 1949 - இலிருந்து ஜெர்மனி நாட்டின் பொருளாதார அமைச்சர் "சந்தைப் பொருளாதார' மேதை லுட்விக் எர்ஹார்ட்
இந்த வார கேள்வி: உலகில் பழைமையான நீரணை எது?

(விடை அடுத்த வாரம்)

கட்டுரையாளர்: மேனாள் காவல்துறைத் தலைவர்
மேனாள் சட்டமன்ற உறுப்பினர்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com