வயதைக் குறிப்பிட வேண்டும்!

சமூக வலைதளங்களில் சமூக விரோதிகள் விரிக்கும் சதி வலைகளில் இளைஞர்கள், குறிப்பாக பெண்கள் சிக்கித் தவிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
வயதைக் குறிப்பிட வேண்டும்!


சமூக வலைதளங்களில் சமூக விரோதிகள் விரிக்கும் சதி வலைகளில் இளைஞர்கள், குறிப்பாக பெண்கள் சிக்கித் தவிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அதிலும், ஒன்றும் அறியாச் சிறுவர்கள் சிக்கி வாழ்க்கையை இழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

ஃபேஸ்புக்கில் இணைவதற்கு வயது 18, டிவிட்டர், இன்ஸ்டாகிராமில் 13 வயது என நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், அவை வெறும் ஆவண விதிமுறைகளாகவே தொடர்கின்றன. நடைமுறையில் எந்த வயதுச் சிறுவனும் தனது வயதைத் தவறாக குறிப்பிட்டு கணக்கைத் தொடர முடிகிறது.

இதுபோன்ற சிறுவர்களின் கணக்குகளை குறிப்பிட்டு பெற்றோர் புகார் அளித்தால் மட்டுமே அந்த கணக்கை அகற்ற வழி உள்ளது. ஆனால், பெரும்பாலான பெற்றோர்களுக்கு தங்கள் சிறுவர்களுக்கு சமூக வலைதளக் கணக்கு இருப்பதே தெரிவதே இல்லை. சிலரோ சிறுவர்களின் புகைப்படங்கள், விடியோக்களைப் பகிர சமூக வலைதள கணக்குகள், யூடியுப் சேனல்களை தொடங்கித் தருகிறார்கள். சிறுவர்களின் கணக்குகளை பெரியவர்கள் கையாளவும் வழி உள்ளதால் இதைப் பெரும்பாலான பெற்றோர்கள் அனுமதிக்கிறார்கள்.

இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முதல்கட்ட முயற்சியை இன்ஸ்டாகிராம்  தொடங்கி உள்ளது. அதன்படி, பயன்பாட்டாளர்கள் தங்களின் வயதைக் குறிப்பிடுவதைக் கட்டாயமாக்கி உள்ளது. வயதைக் குறிப்பிடவில்லை என்றால் ஒவ்வொரு முறை  உள்ளே நுழையும்போது வயதைக்  குறிப்பிடும் தகவல் தொடர்ந்து கொண்டே இருக்கும். அனைத்து பயன்பாட்டாளர்களும் தங்களின் வயதைப் பதிய இன்ஸ்டாகிராம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் மூலம் 13 வயதுக்கு குறைவானவர்கள் இதில் வரும் தகவல்களைப் பார்க்க இயலாதபடி செய்ய வேண்டும் என்பதே இதன் நோக்கம் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

பலர் தவறான வயதை குறிப்பிடலாம் என்பதால், வரும் நாள்களில் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, பயன்பாட்டாளர்களின் பிறந்தநாள் புகைப்படங்கள், தகவல்கள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து உண்மையான பிறந்த தேதியைக் கண்டுபிடிக்கும் தொழில்நுட்பத்தையும் இன்ஸ்டாகிராம் ஆய்வு செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

குறிப்பிட்ட வயதினருக்கு மட்டுமான தளமாக இன்ஸ்டாகிராம் இருக்க வேண்டும் என்று அந்த நிறுவனம் இந்த நடவடிக்கைகளை எடுத்து வருவது பாராட்டுக்குரியது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com