கற்பது மனித இயல்பு!
By கோமதி எம்.முத்துமாரி | Published On : 07th September 2021 06:00 AM | Last Updated : 06th September 2021 09:42 PM | அ+அ அ- |

கற்கால மனிதன், இக்கால நவீன மனிதனாக மாறியதற்கு காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள்? தொழில்நுட்பம் இவ்வளவு தூரம் சென்றதற்கும் புவியைத் தாண்டி வேறு கோள்களில் ஆராய்ச்சி செய்யும் அளவிற்கு மனித அறிவு வளர்ந்ததற்கும் எது அடிப்படை என்று நினைக்கிறீர்கள்?
நிச்சயமாக கற்றலும் கற்றலுக்கான தேடலும் தான். கற்றலின் விளைவே இக்கால நவீன தொழில்நுட்ப உலகம். கற்றலின் தேடலே புதிய கண்டுபிடிப்புகள்.
கற்பதனால் ஒருவரது நடத்தையில் கூட அதிகப்படியான நேர்மறை மாற்றங்கள் ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
வரலாற்றின் மிகச்சிறந்த மனிதர்கள் எல்லாம் வாழ்நாள் முழுவதும் கற்றவர்கள். பள்ளிப் பாடத்தைத் தாண்டி உலக அறிவைப் பெற்ற பலரும்தான் இன்றைய சாதனையாளர்கள்.
மகாகவி பாரதியார் தம்மிடம் உள்ள புத்தகங்களை சொத்துகள்போல பாவித்தார். "தனித்தீவில் உங்களைத் தள்ளிவிட்டால் என்ன செய்வீர்கள்?' என்று கேட்டதற்கு "புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக இருப்பேன்' என்று கூறியுள்ளார் நேரு. இவ்வாறாக கற்றலின் ருசியை அறிந்தவர்கள் அவ்வளவு எளிதாக அதனை விட்டுவிட முடியாது.
கற்றலின் சக்தியே அபாரம். தனிப்பட்ட உலக அறிவு, மொழித்திறனை வளர்த்தல், தொழில் சார்ந்த அறிவைப் பெறுதல் உள்ளிட்ட காரணங்களுக்காக வாழ்நாள் முழுவதும் கற்றுக் கொள்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அமெரிக்காவின் மிகப்பெரும் பணக்காரரான பால் டியூடர் ஜோன்ஸ், "நிதி மூலதனத்தை அறிவுசார் மூலதனமே வெல்லும்' என்று குறிப்பிடுகிறார். எனவே, நம்முடைய திறன்களை வளர்த்து, வளர்ச்சியை நோக்கிய பயணத்திற்கு சுய கற்றல் என்பது அவசியமாகிறது.
வாழ்நாள் முழுவதும் கற்றல் என்பது உங்களில் இலக்காக இருந்தால், அதனை செயலாக்க இந்த உத்திகள் உங்களுக்கு உதவும்.
கற்றலுக்கு முன்னுரிமை
"ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித் தரும் ஆகச் சிறந்த பரிசு, புத்தகம்தான்' என்றார் வின்ஸ்டன் சர்ச்சில்.
வளர்ந்துவரும் நவீன தொழில்நுட்ப உலகில் விஞ்ஞானம் எந்த அளவுக்கு வேகமாக வளர்ச்சி அடைகிறதோ அந்த அளவுக்கு கற்பதையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
உங்கள் அறிவு, திறமை, அனுபவம் எல்லாம் முன்பைவிட பன்மடங்கு மதிப்புமிக்கவையாக இன்று மாறியுள்ளன. எனவே, எதிர்காலத்தில் இன்னும் வேகமாக உலகம் வளர்ச்சியை நோக்கிச் செல்லலாம். அதற்கேற்ப நாமும் சுய கற்றலுக்கு மதிப்பளித்து முன்னுரிமை அளிக்க வேண்டும்.
சுய கற்றலில் ஈடுபடுவது உங்களின் தற்போதைய வேலையைச் சிறப்பாகச் செய்ய உதவும். எதிர்காலத்தில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்தாலும் புதியனவற்றைக் கற்பது உங்களுக்குக் கைகொடுக்கும்.
மதிப்புமிக்க உங்கள் திறமை, அறிவு மற்றும் அனுபவத்தைத் தொடர்ந்து மேம்படுத்த வாழ்நாள் முழுவதும் கற்றலுக்கு முன்னுரிமை கொடுங்கள்.வாசிப்பின் அவசியம் மேற்குறிப்பிட்டதுபோல தலைவர்கள், மாமேதைகள் எல்லாரும் தங்களின் வாழ்நாள் இறுதிவரை புத்தகத்துடன் வாழ்ந்தவர்கள்தான். மக்களிடமும் அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திவிட்டுச் சென்றவர்கள்.
தொழில் நிறுவனங்களில் சாதனை படைத்தவர்களும் புத்தக வாசிப்பின் அவசியத்தை இளைய தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்கின்றனர்.
எலோன் மஸ்க் ஒரு நாளைக்கு இரண்டு புத்தகங்களைப் படித்து வளர்ந்ததாகவும், பில்கேட்ஸ் வருடத்திற்கு 50 புத்தகங்களையும், மார்க் ஜுகர்பெர்க் பணியின் இடையே இரண்டு வாரங்களுக்கு ஒரு புத்தகமாவது படிப்பதாகவும் கூறுகிறார்கள். அவர்களின் சாதனையைப் போற்றிக் கொண்டாடும் நாம், அவர்கள் இத்தகைய நிலையை அடைய புத்தகமும் ஒரு காரணம் என்பதை யோசிக்கத் தவறிவிடுகிறோம்.
எனவே, வாசிப்பின் மீதான ஆர்வத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். அன்று முதல் இன்றுவரை கற்றல்தான் காலத்தின் சிறந்த முதலீடாக இருக்கிறது. மேலும் அது பல சூழ்நிலைகளில் உங்கள் அறிவைப் பயன்படுத்தி வட்டியை வாழ்நாள் முழுவதும் அளித்து வருகிறது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
கற்றல் பட்டியலை பராமரித்தல் நாம் ஒவ்வொரு நாளும் புதிய தகவல்களைத் தெரிந்து வைத்திருக்கலாம் அல்லது புத்தகங்களைப் படித்திருக்கலாம். இல்லையெனில் "இவற்றையெல்லாம் கற்றுக் கொள்ள வேண்டும், இந்த புத்தகங்களை எல்லாம் படிக்க வேண்டும்' என்ற விருப்பம் இருக்கலாம். அவையனைத்தையும் குறிப்பு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
கற்றுகொண்டவை, கற்றுக்கொள்ள வேண்டியவை என இரு பிரிவுகளில் அதனை எழுதி வைத்துவிடுங்கள். இதில் இரண்டு நன்மைகள் இருக்கின்றன.
நீங்கள் படித்து முடித்த பட்டியலைப் பார்க்கும்போது உங்களையறியாமலே உங்களுக்கு ஒரு நம்பிக்கை பிறக்கும். இன்னும் படிப்பதற்கு ஆர்வம் வரும். இதனால் உங்களுடைய இந்த இரண்டு பட்டியலும் நீண்டுகொண்டே செல்லும்.
கணினியில் கூட "புக்மார்க்' பக்கத்தில் நீங்கள் கற்க வேண்டிய தகவல்களைத் சேமித்து வைத்துக்கொள்ளலாம். ஆன்லைனில் காணும் ஒவ்வொரு புதிய யோசனையையும் "புக்மார்க்' செய்துவிட்டால் நேரம் இருக்கும்போது அவற்றைப் பற்றி தெரிந்துகொள்ளலாம்.
புரிதலைச் சோதித்தல்
வாசிப்பு, கற்றலின் ஒரு சிறந்த ஆரம்பம். அதன்மூலம் கிடைக்கும் அனுபவங்களே வளர்ச்சிக்கு அடிகோலிடுகின்றன. அதே நேரத்தில் வெறுமனே புரிதலின்றி வாசிப்பது, கற்பது எந்தப் பலனையும் தராது. நல்ல புரிதலுடன் கற்றுக் கொள்வதே அறிவை வளர்க்கும்.
மேலும் தான் கற்றவற்றை மற்றவர்களுக்கு பகிர்வதன் மூலமும் பல்வேறு வழிகளில் கற்பிப்பதன் மூலமும் புதிய அறிவு கிடைக்கும். அந்தவகையில் கற்றலின் மீதான புரிதல் அவசியம்.
கற்றல் வாழ்க்கையை வளப்படுத்துகிறது. வாழ்வின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலைத் தருகிறது. திறன்களை கற்றுக்கொள்ள ஊக்குவிக்கிறது. நடத்தையில் முற்போக்கான ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறது. மேலும் சுயமாக சிந்திக்க, பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள,
தன்னம்பிக்கை மற்றும் ஊக்கத்தை அதிகப்படுத்த என கற்றல் ஒருவரது வாழ்வை முழுமையாக்குகிறது. ஏனெனில், கற்பது மனித இயல்பு!