கிளர்ந்தெழுங்கள் தோழர்களே! - 14: பாரதி ஒரு காவலன்!

""எப்படியேனும் தேகத்தை உறுதி செய்து கொள்ள வேண்டும். நமது காரியம் முடிந்த பிறகுதான் சாவோம்; அதுவரை சாகமாட்டோம்.
கிளர்ந்தெழுங்கள் தோழர்களே! - 14: பாரதி ஒரு காவலன்!

""எப்படியேனும் தேகத்தை உறுதி செய்து கொள்ள வேண்டும். நமது காரியம் முடிந்த பிறகுதான் சாவோம்; அதுவரை சாகமாட்டோம். நம் இச்சைகள்நம்முடைய தர்மங்கள் நிறை வேறும்வரை நமக்கு மரணமில்லை'' பாரதியார் பராசக்தியை துதிக்கையில் நீண்ட ஆயுளுக்காக வேண்டினார். எதற்கு ? நாட்டுக்கு உழைத்து சுதந்திர இந்தியாவைத் தரிசிக்க! ஆனால் காலன் 39வயதிலேயே அவருடைய உயிரைப் பறித்துக்கொண்டான். 1921 -ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11- ஆம் தேதி பாரதியார் அமரராகிய தினம்.

"தூங்கையிலே வாங்குகிற மூச்சு - அது சுழி மாறிப் போனாலும் போச்சு' என்று ஒரு பிச்சைக்காரன் பாடிய பாட்டை வைத்து அமிர்தமான ஒரு கட்டுரையில் பாரதி உலகின் இன்பங்களை விவரிக்கிறார். "எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா' என்று பாடியவர் அல்லவா!

"இன்பங்களை நுகரும் அதே வேளையில் துன்பம்நீங்க பாடுபட வேண்டும். துன்பம் நீங்க அறிவுவேண்டும். உழைக்க வேண்டும். அறிவை வளர்க்க நேரம் வேண்டும்; நூறு வருடங்களாவது வேண்டும். எவ்வளவோ சாதிக்கலாம். ஆனால் அடுத்த நிமிடம் நிச்சயமில்லை என்று சோர்ந்து விட்டால் எதைக் கொண்டாடுவது?'

பாரதியார் பூத உடல் மறைந்து நூறு வருடம் கடந்து விட்டது. அவரது கவிதைகளுக்கு அழிவில்லை.

நூற்றாண்டு நினைவு வருடத்தில் பாரதியார் சிந்தனை நம்மை ஆட்கொள்ள வேண்டும்.

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே "ஆடுவோமே... பள்ளு பாடுவோமே... ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று'' என்று விடுதலை பெற்ற இந்தியாவைக் கனவு கண்டார் பாரதி.

அவரது கனவு மெய்ப்பட்டது, அவர் மறைவிற்கு 26 ஆண்டுகளுக்குப் பிறகு!

தனது நாட்டையும் நாட்டு மக்களையும் நெஞ்சார நேசித்த தலைவர்கள் காந்தி, நேரு, கோகலே, காமராஜ், திலகர் போன்றோர். அந்த வரிசையில் தமிழக மக்களுக்கு விடுதலை வேட்கையை தனது எழுச்சி மிகு கவிதைகள் மூலம் விதைத்த பாரதியார் முதன்மை பெறுகிறார். எந்த ஓர் எதிர்பார்ப்பும் இன்றி அரசியலுக்கு அப்பாற்பட்டு இந்திய மக்கள் நலனே பிரதானம் என்று தன் குறுகிய வாழ்நாளை நாட்டிற்காக அர்ப்பணித்த மாமனிதர் பாரதியார்.

பாரதியார், ஜீவா, காமராஜ், கக்கன் போன்ற அவதார புருஷர்களை காலம் உள்ளவரை போற்றி, இளைய தலைமுறையினருக்கு அவர்களது சேவையை முன் உதாரணமாக வைத்து ஊக்கப்படுத்த வேண்டியது தமிழ் சமுதாயத்தின் கடமை .

சங்க இலக்கியங்களைப் படித்தால் அதைப் புரிந்து கொள்ள உரை தேவை. திருக்குறளுக்கு பரிமேலழகர் உரை; அதைப் புரிந்து கொள்ள கோனார் உரை(!) என்று அந்த கால தமிழ் சொல்லாட்சி உயர்ந்த நிலையில் இருந்தது. சேர, சோழ, பாண்டியர் ஆட்சிக்குப் பிறகு தெலுங்கு நாயக்கர், கன்னட ராயர், மராட்டியர், முகலாயர், போர்த்துக் கீசியர், டச்சு நாட்டவர், ஆங்கிலேயர் என்று தொடர்ந்து அந்நியர் அதுவும் வேற்று நாட்டின் மன்னர்களின் சாதாரண படை பிரதிநிதிகள் ஆட்சியில், தமிழ் மொழி ஆட்சி பீடத்திலிருந்து சிதைந்தது; மறுக்கலாகாது.

சரளமான நயம் அளாவிய தமிழை மீட்டெடுத்தவர் வள்ளலார், வள்ளலாரின் ஆன்மிகத் தமிழால் ஈர்க்கப்பட்டார் பாரதியார். தேசிய சிந்தனை, நாட்டுப் பற்று, சுதந்திரப் போராட்டம், உலக நடப்புகள், சமுதாய நல் மதிப்பீடுகளை மக்களுக்கு தனது ஒப்பிலா தமிழ் நடை மூலம் உணர்த்தியவர் பாரதி.

"நெஞ்சில் உறுதி வேண்டும். வாக்கினில் இனிமை வேண்டும். கனவு மெய்ப்பட வேண்டும். எங்கு நோக்கினும் வெற்றி. பாரத சமுதாயம் வாழ்கவே, ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்'- எளிமையான தமிழ் பசுமரத்து ஆணி போல் மனதில் பதிய வைக்கும் நடை பாரதிக்கே உரித்தானது.

"நூறு இளையவர்களைக் கொடு; தேசத்தை வலிமையாக்குகிறேன்' என்றார் சுவாமி விவேகானந்தர். அதே போல் இளைய சமுதாயத்தின் மீது அளவிலா நம்பிக்கை வைத்து அவர்கள் எத்தகையவர்களாக இருக்க வேண்டும் என்பதை பாரதியார் ஒளியேற்றுகிறார்:

"ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா
உறுதிகொண்ட நெஞ்சினாய் வா வா வா
களிபடைத்த மொழியினாய் வா வா வா
கடுமை கொண்ட தோளினாய் வா வா வா
தெளிமை பெற்ற மதியினாய் வா வா வா
சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா
எளிமைகண் டிரங்குவாய் வா வா வா
ஏறுபோல் நடையினாய் வா வா வா'

உடலும் உள்ளமும் எவ்வளவு தூய்மையாக ஒளிர வேண்டும் என்பதை இதைவிட எளிமையாக உரைத்திட முடியாது!
முறுக்கு மீசை, அனல் பறக்கும் தீர்க்க பார்வை, முண்டாசு தலை - உடனே நினைவிற்கு வருவது பாரதியார் தோற்றம்.
உலகிற்குச் சொல்ல அவ்வளவு இருக்கிறது என்பதால் தான் எப்போதும் தலைப்பாகை கட்டி சுமந்தானோ!
முக பாவத்திற்கு ஏற்றவாறு சீருடை அணிந்தால் பாரதி ஒரு மிடுக்கான காவல்துறை ஆளாகக் காட்சி அளிப்பார்!
"அச்சம் தவிர்' , "ஏறு போல் நட', "செய்வது துணிந்து செய்', "தேசத்தை காத்தல் செய்', "நீதி நூல் பயில்' என்று ஆத்திசூடியில் பாரதி அடுக்கிக் கொண்டே போகிறார், காவல் துறைக்கு உகந்த அறிவுரைகளாக!
1829 -இல் தொழில் புரட்சியால் வளர்ச்சி பெற்ற லண்டன் மாநகர பொது அமைதி பிரச்னைகளைச்
சமாளிக்க அப்போதிருந்த உள்துறைச் செயலர் ராபர்ட் பீல் லண்டன் மாநகர காவல் அமைப்பை உருவாக்கினார். காவல் துறைக்கான ஒன்பது கட்டளைகளைப் பிரகடனப்படுத்தினார். அவை அனைத்துமே பாரதியின் ஆத்திச் சூடியில் உள்ள அறிவுரைகள்! அது மட்டுமல்ல, மக்களிடமிருந்து காவலர்கள் வித்தியாசப்பட வேண்டும் என்பதற்காக அவர்கள் மீசை வைத்துக் கொள்ளவேண்டும் என்றும் பணித்தார் ராபர்ட் பீல். இதுதான் போலீசின் மீசை கதை!

பாரதியின் மீசையும் காவல்துறை மீசையும் அந்த ஒற்றுமையோடு நில்லாமல் ஆத்திசூடியையும் பின்பற்றினால் "நம் தொழில் காவல்' என்று காவல்துறை நிமிர்ந்து நிற்கும்!

பெண்ணினத்திற்கு மகுடம் சூட்டியவர் பாரதி.

அச்சம் நாணம், மடம், பயிர்ப்பு என்று பெண்களை அடக்கி ஆண்ட நிலையிலிருந்து உச்சம், ஞானம், திடம், உயிர்ப்பு என்று பெண்கள் உச்சத்தைத் தொட, "பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினிற் பெண்கள் நடத்த வந்தோம்' என்று தனது கவிதை மூலம் சமுதாயத்திற்கு உணர்த்தினார் பாரதி.

"நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்'

பாஞ்சாலியை பெண் விடுதலைக்கு ஓர் அடையாளமாக "பாஞ்சாலி சபதம் கவிதையில் நிலை நிறுத்தினார்.

பாரதியாரின் காவியக் கவிதை பாஞ்சாலி சபதத்தில் ஒரு காட்சி - துச்சாதனன் திரெளபதியின் நீண்ட கூந்தலைப் பிடித்து அரசவைக்கு இழுத்துக் கொண்டு
வருகிறான். வழி நெடுக மக்கள் செய்வதறியாது கூக்குரலிடுகிறார்கள். பாரதியார் இதை மனம் வெதும்பி

"நெட்டை மரங்களாய் நின்று புலம்பினர்
பெட்டை புலம்பல் பிறர்க்கு துணையாமோ?'

என்று மக்களின் கையாலாகாத மனநிலையைநிந்திக்கிறார். சமுதாயத்தில் பல நிலைப்பாடுகளில் பாரதி விவரிக்கும் கையாலாகாத ஜடமாக புழங்கும் நிலை இன்றும் தொடர்கிறது.

தருமரையும் விட்டு வைக்கவில்லை. சூதாட்டத்தில் நாட்டையும் பாஞ்சாலியையும் பணயம் வைத்து இழக்கும் போது "ஆயிரங்களான நீதியவை உணர்ந்த தருமன், தேயம் வைத்திழந்தான்;- சீச்சீ சிறியர் செய்கை செய்தான்' என்று தருமனை தான் கவிஞன் என்ற உரிமையில் சாடுகிறார்.

சிறைவாசிகள் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்று 1948 -இல் ஐக்கிய நாடுகள் மனித உரிமை கழகம் எடுத்துரைத்தது. சிறைவாசிகள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பது அந்த நாட்டின் சமுதாய கலாசாரத்தின் பிரதிபலப்பு. இதையே பாரதி தீர்க்கதரிசியாக 1910-இலேயே சிறைக்கைதிகள் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பதை "கைதி விஷயம்' என்ற கட்டுரையில் விவரிக்கிறார். "கைதிகளை அன்புடன் நடத்த வேண்டும். ஏதோ குற்றம் செய்துவிட்டார்கள். தெளிந்த புத்தி இருந்தால் நடந்திருக்குமா? ஜன சமூகத்திலே சிலரை நாகரிக நிலைக்குக் கீழே, தர்ம நடைக்குக் கீழே, லௌகீக
சாதனத்துக்கும் கீழே அமிழ்த்து வைத்த குறை யாரைச் சேர்ந்தது?' என்ற நெத்தியடி கேள்வி எழுப்புகிறார்!

"கைதிகளுக்குக் கொடுக்கப்படும் தண்டனை அவர்
களைத் திருத்தவும் மேலும் குற்றம் செய்யாதபடி
அறிவிலும் ஒழுக்கத்திலும் மேம்பட வழி செய்யவும்

வேண்டும்' என்ற முற்போக்குச் சிந்தனையை அப்போதே விதைத்த சீர்திருத்தவாதி பாரதி.களவை ஒழிப்பதற்கு மூன்று வழிகள் கூறுகிறார்:

மூடனுக்கு படிப்பு சொல்லிக் கொடுத்தல், ஒழுக்கமற்ற
வனைத் திருத்துதல், உயர் பதவியில் இருப்போர்
எப்போதும் நியாயத்தையே செய்தல்!

பாரதி ஓர் ஞானி. ஆத்ம யோகி. பல மொழிகள் கற்றறிந்தவர், வேதங்கள், சாஸ்திரம், சங்கீதம், தத்துவங்கள், உலக சரித்திரம் மற்றும் பல கலைகளில் ஆழ்ந்த அறிவாற்றல் அவரது கவிதைகளில் கட்டுரைகளில் வெளிப்படுகிறது. ஒரு தத்துவப் பாடலில்

"நானெனும் பொய்யை நடத்துவோன் நான்;
ஞானச் சுடர்வானில் செல்லுவோன் நான்;
ஆனபொருள்கள் அனைத்தினும் ஒன்றாய்
அறிவாய் விளங்குமுதற்சோதி நான்'

"உலக இயக்கம் எல்லாம் மாயை, ஆத்ம ஞானம் ஒன்றே மெய்' என்பதைத் தெளிவுபட எடுத்துரைக்கிறார்.

பாரதியின் சொல்லாடல் அபரிதமானது. தேன் மதுர தமிழுக்கு மேலும் சுவை ஊட்டுவன. அவரது கவிதைகள் எல்லாவற்றிலும் இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையிலும் வாழ்க்கையில் வெற்றி பெற துணிவோடு செயல்படுதல், விடா முயற்சி, கடமையாற்றுதல், சமூக நல்லிணக்கங்களைப் பேணுதல் போன்ற நம்பிக்கை யூட்டும் பரந்த உலக நோக்கு சமய சன்மார்க்க கருத்துகள் நிரம்பியிருக்கும்.வயது சாதனைக்கு தடையில்லை என்பதை அவரது ஞான வரிகள் தெளிவுபடுத்துகின்றன:

"அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்-அதை
ஆங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
வெந்து தணிந்தது காடு -தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?'

பாரதி கடமை வீரர். "வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம் அடி மேலை கடல் முழுதும் கப்பல் விடுவோம்' என்ற பாடலில் தொழிலுக்கு வந்தனை செய்வோம் என்று உழைப்பை முன்வைக்கிறார். அவர் வணங்கும் கணநாதன் அருள்பெற

"நமக்குத் தொழில் கவிதை; நாட்டிற் குழைத்தல்
இமைப் பொழுதுஞ் சோரா திருத்தல்'

என்று மூன்றெழுத்து கடமையை மூன்று கட்டளைகளில் விவரிக்கிறார். இந்த வழிகாட்டுதலை நாட்டு மக்கள் பின்பற்றினால் நாடு சுபிட்சம் பெறும் என்பதில் ஐயமில்லை.

"தேடிச் சோறு நிதந் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பலசெயல்கள் செய்து
நரை கூடிக் கிழப்பருவ மெய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத் தாயோ?'

பாரதிக்கு அழிவில்லை. காலம் காலமாக அவனது படைப்புகள் மூலம் உயிர்த்தெழுவான்.

பாரதி ஒரு காவலன், நாட்டின் பாதுகாவலன்!

சென்ற வார கேள்விக்குப் பதில்: ஆப்கான் தலைவர் கான் அப்துல் கஃபர் கான்- எல்லை காந்தி. 1987இல் இந்திய அரசு பாரத் ரத்னா விருது கொடுத்து கௌரவித்தது.

இந்த வார கேள்வி: பாரதியாருக்கு பெண் விடுதலை சிந்தனைகளைத் தூண்டியது யார்?

(விடை அடுத்த வாரம்)

கட்டுரையாளர்: மேனாள் காவல்துறைத் தலைவர் - மேனாள் சட்டமன்ற உறுப்பினர்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com