கையை இழந்த... நம்பிக்கை இளைஞர்!

படிப்புக்கும் செய்யும் வேலைக்கும் தொடர்பில்லாமல் கிடைத்த வேலையைச் செய்து கொண்டுதான் பலர் இருக்கிறார்கள்.
கையை இழந்த... நம்பிக்கை இளைஞர்!

படிப்புக்கும் செய்யும் வேலைக்கும் தொடர்பில்லாமல் கிடைத்த வேலையைச் செய்து கொண்டுதான் பலர் இருக்கிறார்கள். சிம்பயோனிக் என்ற செயற்கை கைகளைத் தயாரிக்கும் நிறுவனத்தைத் தொடங்கி நடத்திக் கொண்டிருக்கும் ரிஷி கிருஷ்ணாவின் கதை வேறு. அவர் சென்னை டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியில் 2015 - இல் பி.எஸ்சி விஷுவல் கம்யூனிகேஷன் படித்திருக்கிறார். ஆனால் அந்தப் படிப்புடன் தொடர்பில்லாத சிம்பயோனிக் நிறுவனத்தை 2019-இல் தொடங்கியிருக்கிறார்.

பாண்டிச்சேரிக்கு ஒருமுறை பஸ்ஸில் பயணம் செய்து கொண்டிருந்தபோது நடந்த விபத்தே அதற்குக் காரணம். விபத்தில் அவருடைய வலது கை முழங்கைக்குக் கீழ் நசுங்கிவிட்டது. நசுங்கிய பகுதியை எடுத்துவிட்டார்கள். அதன் பின் செயற்கை கை வாங்க ரிஷி கிருஷ்ணா அலைந்த அலைச்சலும், அவர் விரும்பிய மாதிரி செயற்கை கை கிடைக்காததுமே இந்த நிறுவனத்தை அவர் தொடங்கக் காரணமாக அமைந்துவிட்டது. அவருடைய செயற்கை கை தயாரிக்கும் நிறுவனம் குறித்து ரிஷி கிருஷ்ணாவிடம் பேசியதிலிருந்து...

""கல்லூரி படிப்பு முடித்தவுடன் "சுடர்' என்ற தன்னார்வ கல்வி நிறுவனத்தில் சில ஆண்டுகள் வேலை செய்தேன். அப்போதுதான் பஸ் விபத்து ஏற்பட்டது. செயற்கை கை வாங்குவதற்காக முயற்சி செய்தேன். நம்நாட்டில் தயாரிக்கப்படும் செயற்கை கைகள் செயல்படாதவை. கை போல ஒன்றை உடலில் பொருத்திக் கொள்வதற்கே அது பயன்படும். அதன் விலையோ ரூ.10 ஆயிரத்துக்கும் மேல் உள்ளது.

நான் செயல்படும் செயற்கை கை வாங்க முயற்சி செய்தேன். அவை வெளிநாடுகளில் தயாரிக்கப்படுபவை. அவற்றின் விலையே ரூ.40 லட்சத்திலிருந்து ரூ.50 லட்சம் வரை இருக்கிறது. அட்வான்ஸ் கொடுத்துவிட்டு பலமுறை கடைக்குச் சென்று கேட்டேன். என்கைக்குப் பொருத்தமான அளவில் என் விருப்பப்படி செயல்படும் செயற்கை கைகிடைக்கவே இல்லை.

கையை மூடவும் திறக்கவும் மட்டும் செய்கிற - குறைந்த அளவில் செயல்படும் தன்மையுள்ள - "மசில் பவர்' என்கிற செயற்கை கையின் விலையே ரூ.7 லட்சம் சொன்னார்கள்.

எனவே எனக்குத் தேவையான செயல்படும் செயற்கை கையை நானே செய்தால் என்ன என்று எனக்குத் தோன்றியது. நண்பர்களிடம் சொன்னேன். எனக்கு மட்டும் அல்ல, என்னைப் போல செயல்படும் செயற்கை கைகள் தேவைப்படும் பல மாற்றுத்திறனாளிகளுக்கும் செயற்கை கைகளைச் செய்து கொடுக்கும் நிறுவனத்தைத் தொடங்கினால் என்ன என்று எல்லாருக்கும் தோன்றியது. ரூ.40 லட்சம் - 50 லட்சம் கொடுத்து எல்லாராலும் செயற்கை கைகளை வாங்க முடியாது. எனவே விலை குறைவான செயல்படும் செயற்கை கைகளைத் தயாரிக்கலாம் என்ற நோக்கத்துடன் 2018- இல் உருவானதுதான் சிம்பயோனிக் நிறுவனம்.

நான் படித்தது விஷுவல் கம்யூனிகேஷன் என்றாலும், இது தொடர்பாக நிறையப் படித்துத் தெரிந்து கொண்டேன். என்னுடைய நண்பர் நிரஞ்சன் குமார் இத்தாலியில் மெக்கானிக் என்ஜினியரிங்கில் முதுநிலைப் பட்டம் பெற்றவர். இன்னொரு நண்பர் அருண் தற்போது எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் முதுநிலைப் பொறியியல் படித்து வருகிறார். தருண் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் பொறியியல் படித்தவர். இவர்களுடைய உதவியும் கிடைத்தது.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் செயற்கை கை செயல்படும் முறையை அதை வாங்கிய ஒருவர் தெரிந்து கொண்டு அதற்குத் தன்னைப் பழக்கப்படுத்திக் கொள்வது மிக மிக கடினமாக உள்ளதைத் தெரிந்து கொண்டோம். அதனால் அதை வாங்கிய பலர் அதைப் பயன்படுத்தாமல் மூலையில் வைத்துவிடுகிறார்கள். இந்த குறையைப் போக்க வேண்டும் என்று நாங்கள் திட்டமிட்டோம்.

செயற்கை கைகளைத் தயாரிப்பதில் இன்னுமொரு பிரச்னை, செயற்கை கையின் அளவு, வடிவம் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும். ஏற்கெனவே தயாரித்து விற்பனை செய்யப்படுகிற வெளிநாட்டுத் தயாரிப்பான செயற்கை கைகள், நிரந்தர அளவுகளின்படி உருவாக்கப்பட்டவை. நாங்கள் இதை மாற்றி ஒவ்வொரு தனிநபருக்கும் பொருந்தக் கூடிய விதத்தில் செயற்கை கைகளை உருவாக்கத் திட்டமிட்டோம். இதற்கு 3 டி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறோம். கையை உடலுடன் பொருத்தும் இடத்தை ஸ்கேன் செய்து 3 டி தொழில்நுட்பத்தின் மூலம் தேவைப்படும் அளவில் செயற்கை கைகளை நாங்கள் உருவாக்குகிறோம்.

ஒருவர் ஒரு பாட்டிலை எடுக்க வேண்டும் என்று நினைத்தவுடன், அந்த எண்ணம் மூளையிலிருந்து சிக்னலாக மின் அலைகள்வடிவில் அவர் கைகளுக்கு வருகிறது.

சிக்னலின் ஆணைக்கு ஏற்ப கைகள் செயல்படுகின்றன. நாங்கள் மூளையிலிருந்து வரக்கூடிய எலக்ட்ரிகல் சிக்னல்களைச் சென்சார் மூலமாகத் தெரிந்து கொண்டு அந்த சிக்னலில் ஆணைகளுக்கு இணங்க செயல்படும் செயற்கை கைகளை உருவாக்குகிறோம். இந்த முறையின் மூலம் செயற்கை கைகளை எளிதாகச் செயல்பட வைக்க முடியும். வெளிநாட்டு தயாரிப்புகளைப் போல செயல்படுத்துவதில் குழப்பம் இருக்காது.

இயற்கையான கையைப் போல செயற்கைகையை முழுமையாகச் செயல்படும்படி செய்ய முடியாது. உதாரணமாக கீழே விழுகிற ஒரு பொருளை எட்டிப் பிடிக்கிற அளவு வேகமாகச் செயல்பட வைக்க முடியாது. நார்மல் கைக்கு மூளையிலிருந்து நேரடியாகச் சிக்னல் செல்வதால் அது உடனடியாகச் செயல்படும். செயற்கை கையைப் பொருத்தவரை, மூளையிலிருந்து வருகிற சிக்னல்களை முதலில் கைபுரிந்து கொள்ள வேண்டும். பின்னர் அந்தச் சிக்னல்களைச் செயல்படுத்த வேண்டும். இதற்குச் சிறிது கால இடைவெளி தேவைப்படுகிறது.

வெளிநாடுகளில் தயாரிக்கப்படுகிற செயற்கை கைகளில் இந்த கால இடைவெளி 5 விநாடிகளாக உள்ளது. நாங்கள் இந்த கால இடைவெளியை 3 விநாடிகளாகக் குறைத்திருக்கிறோம்.

எவ்வளவுக்கெவ்வளவு கால இடைவெளி குறைகிறதோ அவ்வளவுக்கவ்வளவு செயற்கை கைகள் விரைவாகச் செயல்படும். கால இடைவெளியைக் குறைப்பதற்கான தொழில்நுட்பம் வளர வேண்டும். அதற்கான ஆராய்ச்சிகள் உலக அளவில் நடந்து வருகின்றன.
நாங்கள் தயாரித்திருக்கும் செயல்படும் செயற்கை கை, கையைத் திறக்கும், மூடும். பாட்டிலைத் தூக்கும். செயற்கை கையின் ஒவ்வொரு விரல்களுக்கும் தனித்தனி அசைவுகள், ஒவ்வொரு அசைவுக்கும் தனித்தனி அழுத்தங்கள்
உள்ளன. அதுபோல கை மணிக்கட்டு சுழலும் அளவும், இயங்கும் அளவும் கைகளுக்கு ஏற்ப மாறுபடும். இவையெல்லாம் கணக்கில் கொண்டு நாங்கள் செயற்கை கையை உருவாக்கியிருக்கிறோம்.
நாங்கள் உருவாக்கிய செயற்கை கையை பரிசோதனைமுறையில் நானும், என்னைப் போன்ற சில மாற்றுத்திறனாளிகளும் பயன்படுத்திப் பார்க்கிறோம். அதிலுள்ள குறைகளை தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டிருக்கிறோம். இந்தப் பணி எளிதானதல்ல, ஆனால் தேவைதான் கண்டுபிடிப்புகளின் தாய். வரும் 2022 முதல் செயல்படும் செயற்கை கையின் உற்பத்தியைத் தொடங்க இருக்கிறோம்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com