வணிக நிறுவனங்களில் நியூரோ மார்க்கெட்டர்கள்!
By -இரா. மகாதேவன் | Published On : 12th April 2022 06:00 AM | Last Updated : 12th April 2022 06:00 AM | அ+அ அ- |

மனிதர்கள் சிக்கலானவர்கள்; அவர்களின் முடிவெடுக்கும் செயல்முறைகள் எப்போதும் பெரும் விவாதங்களுக்கு உட்பட்டது. மனிதர்கள் முடிவெடுக்கும் தன்மையை புரிந்துகொள்வது மற்றும் மனித நடத்தை மாதிரிகளை உருவாக்குவது வணிகங்களுக்கும், சமூகத்திற்கும் முக்கியமானது.
அறிவியல் படிப்பவர்கள் மருத்துவமனைகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், மருத்துவ ஆய்வகங்களில் மட்டுமே பணியாற்ற முடியும் என்ற நிலை மாறிவிட்டது. அவர்கள் வணிக நிறுவனங்களிலும் பணியாற்ற முடியும் என்பதற்கு உதாரணமாக விளங்குகிறது நரம்பியல் கல்வி.
ஒருவர் ஒரு பொருளை வாங்கும் முடிவை எடுப்பதற்கு முன், தயாரிப்பு வடிவமைப்பு, பிறர் பயன்படுத்திய அனுபவம், வடிவம், பொருள், நிறம், விலை மற்றும் பேக்கேஜிங் வடிவமைப்பு போன்ற பலவற்றில் கவனம் செலுத்துகிறார். இந்த கவனம், வெளிப்புற தூண்டுதல்கள், பார்வை, ஒலி, வாசனை, தொடுதல் ஆகியவற்றின் மூலம் கிடைக்கும் விளக்கத்தை முழுமையாக நம்பியுள்ளது.
இந்த தூண்டுதல்கள் நமது மூளையால் பகுப்பாய்வு செய்யப்படுகின்றன. என்றாலும், அவை பகுத்தறிவுடன் பகுப்பாய்வு செய்யப்படுவதில்லை. அவை மூளையின் பகுதிகள் வழியாக உணர்ச்சிகள், வலி மற்றும் வெறுப்பு போன்ற முதன்மை உணர்வுகளையே முதலில் செயல்படுத்துகின்றன. வாங்கும் முடிவுகள் இந்த மயக்க உணர்வுகளை (ஈர்க்கும் செயல்பாடுகளை) பெரும்பாலும் சார்ந்துள்ளது.
இந்த நிலையில்தான், வணிகர்கள் மற்றும் முடிவெடுப்பவர்களுக்கு மனித முடிவெடுக்கும் கருத்துகள் பற்றிய செயல் அறிவை வழங்குவதில் நரம்பியல் கல்வி கவனம் செலுத்துகிறது. பல்வேறு சந்தைப்படுத்தல், தூண்டுதல்களுக்கு ஒரு நபரின் மயக்கமான பதிலை அளவிடுவதற்கான நடைமுறை திறன்களை நரம்பியல் கல்வி வழங்குகிறது.
இதன் அடிப்படைகள், ஒரு நபரின் சுயநினைவற்ற உடல் எதிர்வினையை அளவிடுவதற்கான அறிவைப் பெறுவதில் கவனம் செலுத்துகிறது. ஒரு தொகுப்பு, விளம்பரங்கள் அல்லது இணையதளத்தில் எந்த குறிப்புகளை ஒரு நபர் பார்க்கிறார் என்பதையும், இந்த குறிப்புகள் நேர்மறை அல்லது எதிர்மறை உணர்ச்சி தூண்டுதல்களை உருவாக்குகின்றனவா என்பதையும் நியூரோ மார்க்கெட்டிங் இளைஞர்களால் மதிப்பிட முடியும்.
மூளை முடிவெடுக்கும் செயல்முறைக்கும், பார்வை மற்றும் கவனம் ஆகியவற்றுக்கும் இடையே நேரடி ஒத்திசைவு உள்ளது. மனித மூளை அறியாமலேயே ஒரு தேர்வு செய்வதற்கு முக்கியமானதாகக் கருதப்படும் குறிப்புகளில் நரம்பியல் கல்வி கவனம் செலுத்துகிறது.
தயாரிப்பை உருவாக்குபவர்கள், சந்தைப்படுத்துபவர்கள் அல்லது விளம்பரதாரர்களுக்கு கண்காணிப்பு, முகபாவனை பகுப்பாய்வு ஆகியவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை விஞ்ஞான ரீதியாக மதிப்பிடுவதற்கு, நுகர்வோரை அதிகப்படுத்த முடிவெடுக்கும் செயல்முறைக்கு மையமாக நரம்பியல் கல்வி உள்ளது.
இணையதளங்கள், விளம்பரங்கள், பல்பொருள் அங்காடி காட்சி, விலைக் குறிச்சொற்கள் மற்றும் பலவற்றுக்கான அறிவாற்றல் மற்றும் உணர்ச்சிபூர்வமான பதில்கள் அவர்களின் தொகுப்புகளில் இருக்கும். சந்தைப்படுத்தல் தூண்டுதலுக்கு உடலின் தன்னியக்க பதிலை மதிப்பிடுவதன் மூலம் நுகர்வோர் நடத்தையின் ஆழ்மனதை ஆராய நரம்பியல் கல்வி படித்தவர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள்.
மூளை எவ்வாறு தகவலைச் செயலாக்குகிறது என்பதில் ஒரு எளிமையான விளக்கம் உள்ளது. ஒவ்வொரு தூண்டுதலையும் நாம் அனுபவிக்கிறோம். ஒவ்வொரு தூண்டுதலுக்கும் ஒரு உணர்வுபூர்வமான நேர்மறை, எதிர்மறை அல்லது நடுநிலையான துலங்கல் இருக்கும். எனவே, மனிதர்களின் மூளை இந்த தூண்டுதலுடன் தொடர்புடைய தகவலை மட்டுமல்ல, உணர்ச்சிகளையும் செயல்படுத்துகிறது. கொடுக்கப்பட்ட தூண்டுதலுடன் தொடர்புடைய உணர்ச்சி, மூளையில் பல்வேறு பகுதிகளால் செயலாக்கப்படும். இது பார்வை கவனம், தக்கவைப்பு, உந்துதல் மற்றும் முடிவெடுப்பதை பாதிக்கிறது. நல்ல விற்பனையாளர்கள் சாத்தியமான வாங்குபவர்களுடன் உணர்ச்சி ரீதியான தொடர்பை உருவாக்க முடியும். எனவே, அவர்களின் பொருட்களை வாங்க நுகர்வோரை வற்புறுத்துகிறார்கள்.
நியூரோ மார்க்கெட்டிங்கின் பயன்பாடு பெரிய நிறுவனங்களின் தயாரிப்புகள் மற்றும் சந்தைப்படுத்தல் உத்தி (யுனிலீவர், ஹூண்டாய், பேபால் மற்றும் மைக்ரúôசாப்ட்) ஆகியவற்றுடன் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. அதேபோல, முன்னணி மார்க்கெட்டிங் ஆராய்ச்சி நிறுவனங்கள் தங்கள் கார்ப்பரேட் வாடிக்கையாளர்களுக்கு ஆதரவாக நியூரோ மார்க்கெட்டர்களை அதிகளவில் நம்பியுள்ளன. வணிகர்களுக்கு, வாடிக்கையாளரின் உந்துதல், ஈடுபாடு மற்றும் வாங்கும் முடிவைப் புரிந்துகொள்வதற்கும், அவர்களின் நிறுவன சந்தைப்படுத்தல் உத்தியை ஆதரிப்பதற்கும் தேவையான திறன்களை நியூரோ மார்க்கெட்டிங் கல்வி வழங்குகிறது.
பாடத்திட்டம்: பி.எஸ்ஸி. நரம்பியல் தொழில்நுட்பம் அல்லது நரம்பியல் அறிவியலில் இளங்கலை என்பது 3 வருட முழுநேர படிப்பு. இதில் முதுகலை படிப்பும் உள்ளது. நரம்பியல் என்பது மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் கட்டமைப்பு மற்றும் செயல்பாட்டைக் கையாள்கிறது. நரம்பியல் வேதியியல், பரிசோதனை உடலியல் அல்லது மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் ஏதேனும் அறிவியல் பிரிவு ஆகியவை ஆய்வுப் பாடங்களாகும்.
ஒரு நரம்பியல் தொழில்நுட்பவியலாளர், நரம்பியல் இயற்பியல் முதல் நரம்பியல் உளவியல் வரை பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெறமுடியும். பொதுவாக இந்தப் பாடங்களைப் படிப்பவர்கள் மருத்துவர்களின் கீழ் மட்டுமே பணியாற்ற வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. அதேநேரத்தில், நரம்பு மண்டலத்தின் செயல்பாடு தொடர்பான கண்டறியும் அளவுருக்கள் பற்றிய தரவுகளை சேகரித்து பகுப்பாய்வு செய்வதில் மருத்துவர்களுக்கு நரம்பியல் கல்வி அல்லது தொழில்நுட்பம் முடித்தவர்கள் உதவுகிறார்கள்.
சான்றளிக்கப்பட்ட நரம்பியல் தொழில்நுட்ப வல்லுநர்கள், நரம்பியல் கோளாறுகளுக்கான மருந்துகளையும் உருவாக்கலாம். இந்தத் துறையின் தகுதிவாய்ந்த வல்லுநர்கள் மருத்துவம் அல்லாத தொழில் வாய்ப்புகளையும் பெறலாம். நரம்பியல் துறை, அறிவியல் எழுதுதல், அரசுத் திட்ட மேலாண்மை, அறிவியல் வழக்குரைஞர் மற்றும் கல்வி உள்ளிட்ட ஆராய்ச்சித் துறைக்கு வெளியே, நரம்பியல் விஞ்ஞானிகளுக்கு ஏராளமான தொழில் வாய்ப்புகள் உள்ளன.
உலகம் முழுக்க பல்வேறு முன்னணி கல்வி நிறுவனங்களிலும் நரம்பியல் அறிவியலுக்கான பாடத்திட்டங்கள் உள்ளன. பல அயல்நாட்டு கல்வி நிறுவனங்கள் இணையவழியிலும் நரம்பியல் அறிவியல் பாடங்களை கற்பிக்கின்றன.
இந்த பாடத்திட்டத்தில் பயில விரும்பும் மாணவர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்திலிருந்து 10+2 தகுதியுடன் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். அதோடு, இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் ஆகியவற்றை முதன்மைப் பாடங்களாக உயர்நிலைப் படிப்பில் படித்திருக்க வேண்டும்.
கல்வி நிலையங்களைப் பொருத்து சராசரி கல்விக் கட்டணம் ரூ. 10,000 முதல் 1.90 லட்சம் வரை அல்லது சற்று அதிகமாக இருக்கும். அதேபோல, திறமையைப் பொறுத்து மாத ஊதியமாக ரூ. 40 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை பெறலாம்.