கிளர்ந்தெழுங்கள் தோழர்களே!- 45: உழைப்போம் மண்ணுக்கு...

ஜனநாயக முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தனது கொள்கைகளின் அடிப்படையில் திட்டங்களை வகுத்து செயல்முறையை அறிவிக்கிறது.
கிளர்ந்தெழுங்கள் தோழர்களே!- 45: உழைப்போம் மண்ணுக்கு...

ஜனநாயக முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தனது கொள்கைகளின் அடிப்படையில் திட்டங்களை வகுத்து செயல்முறையை அறிவிக்கிறது. அதற்கான நிதிநிலை ஆதாரங்களையும் மாமன்றம் மூலம் பெறப்படுகிறது.

அந்தத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு நிர்வாகத்தினுடையது. அதை நிர்வகிப்பவர்கள் இரும்புக் கவசம் - ஸ்டீல் ஃப்ரேம் எனப்படும் அதிகாரிகள்.

நாட்டில் ஒரே மாதிரியான வளர்ச்சி, பாதுகாப்புப் பணிகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்காக, அரசியல் சாசனத்தில் அகில இந்திய பணிகள் ஐ. ஏ.எஸ். , ஐ. பி.எஸ். , ஐ எஃப். எஸ்.

(வனப் பாதுகாப்புப் பணி) மூன்று பணிகள் வரையறுக்கப்பட்டுள்ளன. சுதந்திரம் அடைந்த பிறகு அரசு அதிகாரிகள் அரசாங்கத்துக்கு நல்ல ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நாட்டின் முதல் பிரதமர் ஜவாஹர்லால்நேரு, அகில இந்திய பணிகளை உருவாக்கி, ஏற்கெனவே இருந்த ஐ.சி. எஸ். அதிகாரிகளுக்கு மதிப்பு கொடுத்து அவர்கள் மீது பிரத்யேக நம்பிக்கை வைத்திருந்தார். ஆனால் மக்கள் நலத் திட்டங்கள் நிறைவேற்றுவதில் அவரால் எதிர்ப்பார்த்த ஒத்துழைப்பு அதிகாரிகளிடம் இருந்து கிடைக்கவில்லை . இதனை நேரு அவர்களே பலமுறை ஆதங்கத்தோடு தெரிவித்திருக்கிறார்.

அதனால்தானோ என்னவோ இந்திரா காந்தி தனக்கு சாதகமான அதிகார வர்க்கத்தை வளர்க்கும் வழியை வகுத்தார். இதனால் அதிகார இரும்புக் கவசத்தில் தளர்வு ஏற்பட்டது. நல்ல பதவிகளைப் பெற அதிகாரிகளும் வளைந்து கொடுக்க ஆரம்பித்தார்கள்.

மாநிலக் கட்சிகள் அரசியல் களத்தில் கால் பதித்து ஆட்சி அமைக்கும் வாய்ப்பைப் பெற்றதும் முதலில் அவர்கள் செய்தது அதிகாரிகளை மாற்றுவது, இணக்கமாக இல்லாதவர்களைப் பந்தாடுவது வழக்கமாகிப் போனது. பணி மூப்பு அடையும் தருவாயில் உள்ள பணியாளர்களை முக்கிய பதவியில் அமர வைத்து அவர் மூலம் நடைமுறைக்கு ஒவ்வாத சிலவற்றை நிறைவேற்றிக் கொள்ளும் தவறுகள் பல மாநிலங்களில் நடக்கின்றன. கணக்காயர் ஆய்வின்போது கண்டுபிடிக்கப்பட்டு காலம் கடந்ததால் உரியவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் வேறு வழியின்றி முடிக்கப்படுகிறது. இதுவே தொடர் கதையாக ஒவ்வொரு கால கட்டத்திலும் நடக்கிறது.

அரசியல்வாதிகளின் பணிக்காலம் ஐந்து வருடம். ஆனால் அரசு அதிகாரிகள் பணி குறைந்த பட்சம் முப்பது வருடம். ஆட்சியில் அமரும் அரசியல்வாதிகள் ஐந்து வருடத்துக்குள் திட்டங்களை நிறைவேற்றி, அரசியல் களத்தில் நிலைக்க மக்கள் ஆதரவை பெறவேண்டும், தங்கள் கட்சிக்கும் தனக்கு தனிப்பட்ட முறையிலும் ஆதாயம் பார்க்க வேண்டும்!

மேனாள் அரசின் பொருளாதார ஆலோசகர் மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் இந்திய நிர்வாகத்தில் உள்ள பிரச்னைகளைப் பற்றி விரிவாக கூறுகிறார்.

சுதந்திரம் அடைந்து 75 வருடங்கள் நிறைவடைந்தும் ஏழை மக்கள் அரசு சேவைகளைப் பெற இயலவில்லை. எல்லாவற்றுக்கும் போராட்டமாக இருக்கிறது. " காவல் நிலையத்துக்கு போய் பழக்கமில்லிங்க! கொஞ்சம் சொல்லுங்க!' என்று ஏழை மக்கள் மட்டுமல்ல; பல தரப்பட்ட மக்களும் கேட்கும் நிலை உள்ளது.

அரசு மருத்துவமனைகளில் சரியான கவனிப்பு இல்லை. தேவையான மருந்து அளிப்பதில்லை. நிலம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு உடனே தீர்வு கிடைப்பதில்லை. கணினி வழி என்கிறார்கள் .

ஆனால் நடைமுறையில் சுலபமாக அரசு சேவைகள் ஏழை மக்களுக்குச் சென்றடைவதில்லை. சாதாரண மக்கள் எல்லாவற்றையும் சகித்து கொண்டு வாழ்க்கையை நடத்த வேண்டும்.

பணம் படைத்தவர்கள், சமுதாயத்தில் பிரபலமானவர்களுக்கு பிரச்னை இல்லை. கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்து காரியத்தைச் சாதித்துக் கொள்கிறார்கள்.

பாமர மக்களுக்கு இருக்கும் ஒரே அஸ்திரம் தேர்தலில் அவர்கள் அளிக்கும் வாக்கு. அரசு சேவைகளை பெறுவதற்கு ஒரு பாலமாக உள்ளூர் அரசியல்வாதி இயங்கி உதவுவதால் மக்கள் வேறுவழியின்றி அவரது வலையில் விழுகிறார்கள்.

வர்த்தகம் செய்பவர்கள், அரசு ஒப்பந்தம் எடுப்பவர்கள் தொழில் நடத்துபவர்களுக்கு தங்கள் தொழிலை தக்க வைத்து கொள்ளவும் விருத்தி செய்யவும் அரசியல்வாதிகள் இணக்கம் தேவைப்படுகிறது. ஊழலில் ஊறிய அரசியல்வாதிகளுக்கு தேர்தலில் போட்டியிடவும் தொகுதி மக்களின் அவசரத் தேவைகளை பூர்த்தி செய்ய வசதி படைத்தவர்களின் நட்பும் ஆதரவும் தேவைப்படுகிறது. அதிகார வர்க்கத்தின் நெளிவு சுளிவுகள் அறிந்து எளிதில் பெற முடியாத அரசு சேவைகளை எளிதில் பெற உதவும் உள்ளூர் அரசியல் வாதியின் தலையீடு மக்களுக்கு தேவைப்படுகிறது. இந்த இணக்கமான ஊழல் கூட்டுறவின் பிணைப்பை அவ்வளவு லேசாக உடைத்து விட முடியாது!

நிர்வாகச் சீர்திருத்தம் செய்வதற்கு அரசியல் களத்தில் போட்டியிடும் நேர்மையாளர்கள் நிலை குலைந்த நிர்வாக அமைப்பை எதிர்த்து போராட வேண்டும் . அவ்வளவு எளிதாக அவர்கள் வெற்றி பெற முடியாது என்பது மக்களுக்கு தெரியும்.தங்களது அன்றாட வாழ்க்கை போராட்டத்தில் உதவிக்கரம் நீட்டும் உள்ளூர் ஊழல் பேர்வழியோடு கைகோர்பதே மேல் என்று ஒதுங்கும் மக்களை குறை சொல்ல முடியாது. சீர்திருத்தவாதி களத்தில் தோற்கடிக்கப்படுவார், ஊழல் உறவு தொய்வின்றி தொடரும்!

அதனை உடைக்க ஒரே வழி அரசு சேவைகள் மக்களுக்கு உடனடியாக சிரமமின்றி கிடைக்க வழிவகை செய்தல், அரசு நடைமுறைகள் விதிகளை எளிமையாக்குதல், ஏழை மக்கள் சில்லரை அரசியல் இடைதரகர்களை நம்பியிருக்கும் நிலையை மாற்றுதல்.

ஐ. ஏ. எஸ். அதிகாரிகள் தலைமை வகிக்கும் இந்த அதிகார வர்க்கம் செயலிழந்து நிலை குலைந்துள்ளது. மக்கள் பிரச்னைகள் தீராததற்கு அரசியல்வாதிகளை மட்டும் குறை கூற முடியாது ,அதிகார வர்க்கத்தின் தரம் தாழ்ந்த நிலையும் முக்கிய காரணம் என்று கூறியுள்ளார் மேனாள் ஐ. ஏ.எஸ். அதிகாரி சுப்பா ராவ். மத்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்தவர் அவர். திறமையான அதிகாரிகளை மத்திய அரசு பணி ஆணையம் தேர்ந்தெடுக்கிறது. மிகவும் கடினமான தேர்வில் வெற்றி பெற்று வரும் ஐ. ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு நேர்த்தியான உயர்தர பயிற்சி அளிக்கப்படுகிறது. களத்தில் முத்திரை பதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தோடு பணியில் இறங்குகிறார்கள்.

ஆனால் காலப்போக்கில் அவர்களிடம் ஒரு தளர்வு ஏற்படுகிறது. அதற்கு காரணம் நல்ல வேலைக்கு வெகுமதி, சுணக்கத்திற்கு தண்டனை என்ற மனித மேம்பாட்டு ஆளுமையின் முக்கியமான விதியை கடைபிடிப்பதில்லை. எல்லோரும் வேலை "பார்க்கிறார்களே' ஒழிய வேலை "செய்வதில்லை' என்று அங்கலாய்க்கிறார் ஒரு மேனாள் முதல்வர் என்று ராவ் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது:

25 % அதிகாரிகள் ஊழலில் ஊறியிருக்கிறார்கள், 50 % அதிகாரிகள் தங்களை பாதுகாத்துக் கொண்டு வேலைசெய்யாமல் காலத்தை ஓட்டுகிறார்கள் மீதம் 25% அதிகாரிகளை வைத்து கொண்டு தான் அரசு பணிகள் நிறைவேற்ற வேண்டிய நிலை உள்ளது என்பது வேதனைக்குரியது .

ஐ.ஏ.எஸ். , ஐ.பி.எஸ். அதிகாரிகள் பத்து வருடமாவது களத்தில் பணியாற்றவேண்டும். பணியில் ஓரளவு அனுபவம் பெற்ற பிறகு பல்வேறு துறைகளில் சிறப்பு அந்தஸ்து - ஸ்பெஷலை சேஷன் பெற வேண்டும். இது நடை பெறுவதில்லை. அரசு அதிகாரிகள் அரசியல் குறுக்கீடுகளுக்கு இணங்கமாட்டோம் என்று முடிவெடுத்தால் ஒட்டுமொத்த அதிகாரிகளின் முதுகெலும்பு நிமிரும்,நிர்வாகம் திறம்படும் என்பது ராவின் வாதம்.

சிலர் இதற்கு மாற்று கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.ஆட்சி மாறும் பொழுது ஊழல் குற்றச்சாட்டுகள் அடிப்படையில் வழக்குகள் முந்தைய ஆட்சி அமைச்சர்கள் மீது தொடரப்படுகிறது, அதில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும் பிரச்னை வருகிறது. அதனாலேயே பல நல்ல அதிகாரிகள் நமக்கேன் வம்பு என்று ஒதுங்கிவிடுகிறார்கள்.

களத்தில் கஷ்டப்பட்டு பணிசெய்பவர்களின் செயல்பாடுகளை சிபிஐ போன்ற அமைப்புகள் கூறு போடுகின்றன. உண்மையாக பணியாற்றுபவர்கள் சோர்வடைகிறார்கள், முக்கியமான கோப்புகளில் கையெழுத்திட தயங்குகிறார்கள், அதனால் பணிகள் முடங்குகின்றன என்கிறார்கள் அனுபவம் மிக்க அதிகாரிகள்.

சமுதாயத்தில் நல் மதிப்பீடுகள் நலிந்து விட்டன. காந்தி, காமராஜ், ராஜாஜி, படேல், கக்கன் போன்ற தலைவர்கள் இல்லை. இதன் தாக்கம் அரசு நிர்வாகத்திலும் பிரதிபலிக்கிறது. முன்பெல்லாம் நேர்மையான அதிகாரிகள் போற்றபடுவார்கள், எந்த ஒரு நேர்விலும் ஆட்சியில் உள்ள அரசியல் தலைவர்கள் அவர்களை விட்டுக்கொடுக்க மாட்டார்கள். இதெல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. நேர்மையான அதிகாரிகள் நிர்வாகத்துக்கு இடைஞ்சல் என்று ஒதுக்கப்படுவதுதான் நடக்கிறது.

அரசியல்வாதிகள் இலவசம் என்ற துருப்புச் சீட்டை காண்பித்து ஆட்சி பிடிக்கிறார்கள். தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இலவசங்களை கூவி, கூவி அறிவித்து பஞ்சாபிலும் ஆட்சி அமைத்துள்ளார். எப்படி மாதம் எல்லா மகளிருக்கும் ரூ. 1,000 கொடுப்பார் என்பது கேள்விக்குறி!

தமிழ்நாட்டில் துவங்கிய இலவச அவலம் ஒட்டுமொத்த மக்களை சோம்பேறிகளாகவும் அடிமைகளாக்க தில்லி வரை சென்றுள்ளது !

எலி எப்போதும் இரையை தேடிக்கொண்டே அலையும் . நாம் எளிதாக பார்க்க முடியாத இடத்தில் எல்லாம் சென்று இரை தேடும். ஒரு ஜாடி நிறைய தானியம் அதற்கு மேலே ஒரு எலியை உட்கார வைத்தால் அதற்கு தலை கால் புரியாது. எளிதாக இவ்வளவு உணவா அதுவும் உழைக்காமல் என்று தின்ன ஆரம்பிக்கும். அது தானியத்தை தின்ன தின்ன அளவு குறையும். எலி ஜாடிக்கு அடியில் மாட்டிக்கொள்ளும், வெளியே வர முடியாது. மேலும் அதிகமாக தானியம் போட்டால் தான் அது உயிர் வாழ முடியும். அதுவும் எந்த தீனி ஜாடியில் விழுகிறதோ அதைத்தான் உண்ண வேண்டும். இலவசத்தை எதிர்ப்பார்த்து வாழ்க்கையை வீணடிக்கும் மக்கள் நிலையும் எலியை போன்றதுதான். அரசியல்வாதிகள் அளிக்கும் இலவசங்களை நம்பி தங்கள் சுய முயற்சியை நம்பாது ஏதோ வாக்களிக்கும் கருவிகளாக ஏழை மக்கள் மாறிவிட்ட அவலம் தொடர்ந்து நடக்கிறது, முடிவில்லாமல்!

திராவிடம் என்று பெருமை பேசுபவர்கள் மக்களை உண்மையாக நேசித்தால் நேர்மையான ஆட்சி அளிக்க வேண்டும். தமிழ் மண்ணின் மீது உண்மையான பற்றுடைய மக்கள் இலவசங்களை நம்பாமல் தமது உழைப்பை மண்ணுக்கு அளிக்க வேண்டும். தமிழ் நாட்டை வளமையாக்குவது நம் கையில்!

போன வார கேள்விக்கு பதில்: உல்போவிட்ச் 1992 ல் அமரிக்க பாதுகாப்பு அமைச்சகத்தில் உதவி செயலராக நாட்டின் பாதுகாப்பு திட்டத்தை வகுத்தார். அதன்படி உலகில் அமரிக்கா சக்தி வாய்ந்த நாடாகவும், போட்டியிடும் மற்ற நாடுகளை அடக்கி தனது வலிமையை நிரூபிக்க வேண்டும் என்பது உல்போவிட்ச் கோட்பாடு என்று அழைக்கப்படுகிறது.

இந்த வார கேள்வி: நிதி பொறுப்புணர்வு சட்டம் எப்போது அமலுக்கு வந்தது?

கட்டுரையாளர்: மேனாள் காவல்துறைத் தலைவர்
மேனாள் சட்டமன்ற உறுப்பினர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com