கல்வி...  தொழில்நுட்பம்!

தொழில்நுட்பம் அனைத்துத் துறைகளிலும் பெரும் மாற்றங்களைப் புகுத்தி வருகிறது. அதிலும் கல்வித் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் அபரிமிதமானவை.
கல்வி...  தொழில்நுட்பம்!

தொழில்நுட்பம் அனைத்துத் துறைகளிலும் பெரும் மாற்றங்களைப் புகுத்தி வருகிறது. அதிலும் கல்வித் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் அபரிமிதமானவை. முந்தைய தலைமுறையினர் கற்பனையே செய்து பார்க்க முடியாத பல்வேறு விஷயங்கள் தற்போது சாத்தியமாகியுள்ளன. 

அதிலும் கரோனா தொற்று பரவலுக்குப் பிறகு தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டே கல்வித்துறை இயங்கி வருகிறது. தொழில்நுட்ப வசதிகள் இல்லையெனில், கரோனா தொற்று பரவல் காலத்தை கல்வித்துறை எவ்வாறு சமாளித்திருக்கும் என்பதை எண்ணிப் பார்க்கக் கூட முடியவில்லை. 

முன்பெல்லாம் குறிப்பிட்ட செய்தியைப் பெறுவதற்காக நூலகத்தைத் தேடி அலைந்து, நாள்முழுவதும் அங்கு புத்தகங்களைத் தேட வேண்டிய சூழல் இருந்தது. தற்போது காலம் மாறிவிட்டது. வேண்டிய தகவல்களை விரல் நுனியில் துரிதமாகப் பெற முடிகிறது. பாடம் தொடர்பான விஷயங்களை முன்பு ஆசிரியர்களிடம் மட்டுமே கேட்டுத் தெளிய முடியும். விடுமுறை எனில், பள்ளி திறக்கும் வரை ஆசிரியரைச் சந்தித்து சந்தேகங்களை நிவர்த்தி செய்ய காத்திருக்க வேண்டும். 

இப்போதெல்லாம் புதிய பாடங்களைக் கற்பதற்கு பள்ளி, கல்லூரி ஆசிரியர்களை முழுமையாக சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. இணையவழியில் கிடைக்கும் பல்வேறு தகவல்களில் இருந்து எளிதில் கற்றுக் கொள்ள முடியும்; சந்தேகங்களையும் விரைவில் தீர்த்துக் கொள்ள முடியும். 

பள்ளி, கல்லூரிகள் விடுமுறை என்றாலும் கூட, ஆசிரியர்களைக் கைபேசி வாயிலாக எளிதில் தொடர்பு கொள்ள முடியும். தற்போதைய சூழலில், ஒவ்வொரு வகுப்புக்கும் வாட்ஸ்ஆப், டெலிகிராம் செயலிகளில் தனிக்குழுவே உள்ளது. அந்தக் குழுவில் ஆசிரியர்களும் இடம் பெற்றுள்ளனர். அவர்களிடம் எந்த சமயத்திலும் சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பை  தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்படுத்தித் தந்துள்ளது. 

புதிய தொழில்நுட்பங்கள் கல்வியை எளிதில் கற்க உதவுகின்றன. புரிந்து கொள்வதற்குக் கடினமாக இருக்கும் பாடங்களைக் கூட அனிமேஷன், கிராஃபிக்ஸ் உள்ளிட்டவற்றின் வாயிலாக எளிதில் புரிய வைக்கின்றன. இத்தகைய தொழில்நுட்ப வளர்ச்சியானது மாணவர்களுக்குப் பல்வேறு கற்றல் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்துள்ளது. 

நண்பர்களை எளிதாகத் தொடர்பு கொண்டு கல்வி கற்க முடிகிறது. அவர்களிடமே சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ள தொழில்நுட்ப வசதிகள் உதவுகின்றன. இந்த வசதிகள் மாணவர்களின் நேரத்தைப் பெருமளவில் மிச்சப்படுத்தி, வேறு புதிய விஷயங்களில் அவர்கள் கவனம் செலுத்த உதவுகின்றன. 

தொழில்நுட்ப வசதிகளானது ஆசிரியர்களின் பணியையும் எளிமைப்படுத்தியுள்ளது. மாறி வரும் சூழலுக்கேற்ப ஆசிரியர்கள் தங்கள் அறிவையும் விசாலப்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. புதிய தலைமுறையினருக்குக் கற்பிப்பதற்கேற்ற திறனையும் ஆசிரியர்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்குத் தொழில்நுட்பங்கள் உதவி புரிகின்றன. 

கல்வித்துறையில் தொழில்நுட்பங்கள் ஏற்படுத்தி வரும் மாற்றங்கள், இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளன. கல்வி கற்பதற்கு ஆசிரியர்களை மட்டுமே சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை என்ற சூழல் உருவாகியுள்ளதால், பல இளைஞர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு வருகின்றனர். 

தொழில்நுட்பங்களின் வசதியால் இளம் வயதிலேயே புத்தாக்க நடவடிக்கைகளில் மாணவர்களால் ஈடுபட முடிகிறது. பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்கான செயலிகளையும் இளைஞர்கள் வடிவமைத்து வருகின்றனர். பல்வேறு திறன்களை வளர்த்துக் கொள்ளவும் தொழில்நுட்ப வசதிகள் உதவி வருகின்றன. 

அதே வேளையில், தொழில்நுட்பங்களுக்கு மாணவர்கள் அடிமையாவதும் அதிகரித்து வருகிறது. தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் சாதக, பாதகங்கள் இரண்டுமே உள்ளன. அதில் உள்ள சாதகமான அம்சங்களை மட்டும் எடுத்துக்கொண்டு தேவையில்லாதவற்றைத் தவிர்த்துவிட வேண்டும். 

தொழில்நுட்பங்களால் தற்போது கவனச்சிதறல்கள் அதிகமாக உள்ளன. அவற்றை மாணவர்கள் தெளிவாகப் புரிந்துகொள்வது அவசியம். நேரத்தை வீணடிக்கும் பயனற்ற தொழில்நுட்பங்களால் மாணவர்கள் ஈர்க்கப்பட்டுவிடக் கூடாது. இளைஞர்களை எளிதில் ஈர்க்கும் வகையில்தான் தொழில்நுட்பங்கள் உருவாக்கப்படும். அவற்றின் நோக்கத்தை சரியாகப் புரிந்துகொண்டு தொழில்நுட்பங்களை சரியான நோக்கத்துக்காக மட்டுமே பயன்படுத்தினால், வெற்றியை விரைவாக அடைந்துவிட முடியும். தேவையில்லாத தொழில்நுட்பங்கள் வெற்றியைத் தாமதப்படுத்தும். எதைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது இளைஞர்களின் கைகளிலேயே உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com