கிளர்ந்தெழுங்கள் தோழர்களே! - 37: செல்வத்துள் செல்வம்

"நா  ன் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும். 
கிளர்ந்தெழுங்கள் தோழர்களே! - 37: செல்வத்துள் செல்வம்


"நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்.

நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும்.' இதை எல்லாரும் பழக்கமாக்கினால் சமுதாயத்தில் பிரச்னையே இருக்காது. "சும்மா வம்பளக்காதே' என்று பெற்றோர்கள் வெட்டிப் பேச்சை வெட்டியெடுக்க கடிந்து கொள்ளும் காலமெல்லாம் போய்விட்டது ! இப்போது எல்லாரும் கைபேசியில் மூழ்கி ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமல் பொழுதைக் கழிக்கிறார்கள்!

கருத்து சுதந்திரம் பற்றி விழிப்புணர்வு வந்துள்ளது வரவேற்கத்தக்கது. ஆனால் ஒருதலைப்பட்சமாக தங்களுடைய கருத்துகளைப் பதிவு செய்கிறார்கள்.

மற்றவர் கருத்துகளைக் கேட்பதற்குப் பொறுமையில்லை மனமும் இல்லை. நல்ல கருத்துகளைப் புறந்தள்ளி கருத்து திணிப்பாக, சமூக நல்லிணக்கத்திற்கு எதிரான கருத்துகள்தாம் பிரதான நேரத்தை ஆக்கிரமித்துள்ளன.

"செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்' என்றார் வள்ளுவர். கேள்வி ஞானம் தான் ஒருவரது அறிவை செப்பனிடுகிறது. விஷயம் தெரிந்தவர்களோடு பொறுமையாக உரையாடினாலே பல புத்தகங்கள் படித்ததற்கு ஈடாகும். செவியால் உணர்வதுதான் மனதில் பதியும்.

பேச்சாற்றல் வளர வேண்டும் என்றால் அதற்கு செவியால் உணர்வது உரமாகும்.

"நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய வாயினராதல் அரிது' என்பார் வள்ளுவர்.

அண்ணாவின் பேச்சாற்றலுக்கு காரணமே அவர் மற்றவர் பேசுவதைக் கவனமாகக் கேட்டு , சரியான பதில் கொடுப்பதை ஒரு கலையாக வளர்த்துக் கொண்டார்!

முழுமையான புரிதலுக்கு எல்லா உண்மைகளையும் அலசி ஆராய்வது இன்றியமையாதது. உதாரணமாக மருத்துவப் படிப்பிற்கு நீட் நுழைவுத் தேர்வு சர்ச்சையை எடுத்துக் கொள்ளலாம். நுழைவுத் தேர்விற்கு எதிராக உச்சகட்ட பிரச்சாரம் செய்யப்படுகிறது.

நீட் தேர்வு சட்டத்தை யார் கொண்டு வந்தது? எப்போது நடைமுறைப்படுத்தப்பட்டது என்ற விவாதங்களால் பயனில்லை. 2010 - ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அமலுக்கு வந்த சட்டம் பல தடங்கல்களைச் சந்தித்தது. உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பல மனுக்களை ஒவ்வொரு கட்டதிலும் ஆராய்ந்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளில் உள்ள சங்கடங்களை சமன் செய்யும் வகையில் 2010 -இல் நிறைவேற்றப்பட்ட நீட் சட்டம் நடைமுறைப்படுத்தும் சட்ட முன்வடிவை 2016 ஜுலை ஆகஸ்ட் மாதங்களில் பாராளுமன்றம் நிறைவேற்றியது. தமிழ்நாட்டிற்கு நுழைவுத் தேர்விலிருந்து அளித்த விதி விலக்கும் முடிவடைந்து நீட் நுழைவு தேர்வு 2017- இல் இருந்து முழுமையாக நடத்தப்பட்டு வருகிறது.

அரசு மருத்துவ கல்லூரிகள் மட்டும் இல்லாது தனியார் கல்லூரிகளுக்கும் நீட் தேர்வு மூலம் தான் மருத்துவப் படிப்பு இடங்கள் அளிக்கப்படும் என்பது வரவேற்கத்தக்கது. அரசியல் பின்னணி உள்ள பணம் பறிக்கும் கல்வி தாதாக்கள் கொட்டம் அடங்கும் வகையில் அமைந்துள்ள இந்தச் சட்டம் மாணவர்களுக்கு வரப்பிரசாதம்.

இந்தியாவில் மொத்த மருத்துவப் படிப்பிற்கான இடங்கள் 88,120, பல் மருத்து படிப்பில் 27,498 இடங்கள் நீட் தேர்வு மூலமாக நிரப்பப்படுகின்றன.இது தவிர, மருத்துவ முதுகலைப் படிப்பிற்கும் நுழைவுத் தேர்வு மூலமாக நிரப்பப்படும் பிற மாநிலங்களுக்கான 50% இடங்களிலும் பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இட ஒதுக்கீடு, பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு (வருடவருமானம் ரூ 8 லட்சம்) 10 % இடஒதுக்கீடு என்ற அரசு ஆணையை உச்ச நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது.

தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, மஹாராஷ்ட்ரா மாநிலங்களில் தான் அதிகமான மருத்துவப் படிப்பிற்கான இடங்கள் உள்ளன. இந்தியாவின் முதல்
மருத்துவப் பட்டம் பெற்ற பெண்மணி தமிழ்நாட்டின் டாக்டர் முத்துலட்சுமி என்ற பெருமை நமக்கு உண்டு.

தமிழ்நாட்டில் 2020 -இல் மத்திய அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்ட பதினொரு புதிய மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் ஜனவரி 12- இல் தொடங்கி வைத்தார். இதன் மூலம் கூடுதலாக 1450 மருத்துவப் படிப்பிற்கான இடங்களை சேர்த்தால் மொத்தம் 11, 825 இடங்கள்.

இந்தியாவில் அதிக மருத்துவ படிப்பிற்கான இடங்களை கொண்ட முதன்மை மாநிலம் தமிழ்நாடு. இதில் 85% சதவிகிதம் இடங்கள், 69% இட ஒதுக்கீடு அடிப்படையில் நீட் தேர்வு மூலமாக நிரப்பப்படுகிறது. கிடை ஒதுக்கீட்டில் 7.5% அரசு பள்ளிகளில் படித்த மாணாக்கர்களுக்கு ஒதுக்கப்பட்டு, இந்த வருடம் 535 ஏழை அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பு மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

நீட் நுழைவுத் தேர்வு நடைமுறைக்கு வந்த முதல் ஆண்டில் தமிழக மாணவர்கள் அவ்வளவு வெற்றி ஈட்ட முடியாததற்கு காரணம் , நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று அரசியல் கட்சிகள் கூறியதை நம்பி மாணவர்கள் முறையாகத் தயாராகவில்லை . அது தவிர சமச்சீர் கல்வி என்று கல்வி தரம் தாழ்ந்திருந்ததும் முக்கிய காரணம். 2018- இல் பள்ளிக் கல்வி பாடத்திட்டம் சீரமைக்கப்பட்டு , மாணாக்கர்களுக்கு இலவச நீட்நுழைவு தேர்விற்கான பயிற்சி அளிக்கப்பட்டதில் அதிகமான மாணவர்கள் தேர்ச்சி பெற்று வருகிறார்கள்.

நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் தர வரிசை வெளியிடப்பட்டுள்ளது. 43% இடங்கள் பிற்படுத்தப்பட்டோருக்கும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர்க்கு 31 சதவீதமும், ஷெட்யூல் வகுப்பினருக்கு 19% சதவீதமுமாக அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள இடங்கள் முழுவதும் மேற்கண்ட பிரிவு மாணாக்கர்களுக்குக் கிடைத்திருக்கிறது.

நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது என்று வைக்கப்படும் வாதம் முற்றிலும் தவறானது என்பது இதிலிருந்தே புரியும்.

மேலும் மருத்துவப் படிப்பில் 15% இடங்கள் வேறு மாநிலத்தவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. இதில் சுமார்12 ஆயிரம் இடங்கள் உள்ளன. நீட் தேர்வு மூலமாக இந்த இடங்களைப் பெற தமிழக மாணவர்களுக்கு வாய்ப்பு உண்டு.

பாண்டிச்சேரியிலுள்ள ஜிப்மர் கல்லூரியில் மருத்துவ இடங்கள் 187, அதில் இடஒதுக்கீடு போக பொது இடங்கள் 121. நீட் தேர்வு மூலமாக இந்த வருடம் 32 தமிழ்நாட்டு மாணவர்களுக்கு இடம் கிடைத்திருக்கிறது. இது மொத்த இடங்களில் 24.6% ஆகும். ஜிப்மர் கல்லூரி தொடங்கியதிலிருந்து இதுவரை தமிழ்நாட்டிலிருந்து 30 மாணவர்கள் தான் பயன் அடைந்தார்கள் என்பது போக, ஒரே வருடத்தில் 32 மாணவர்களுக்கு ஜிப்மர் போன்ற உயர் தர கல்லூரியில் இடம் கிடைத்திருப்பது சரித்திர சாதனை! இது போல் மற்ற மத்திய "எய்ம்ஸ்' மற்றும்
பிற மாநில மருத்துவக் கல்லூரிகளில் தமிழ்நாட்டு மாணவர்கள் இடம் பெற்று டாக்டர்கள் ஆகலாம். இது நீட் தேர்வினால் வந்த மிகப்பெரிய மாற்றம்.

திருவள்ளூர் மாவட்டம் பெரும்பேடு குப்பத்தைச் சேர்ந்த தினக் கூலி வேலை செய்பவரின் மகள் அனுஷா, வேலூர் கணேசபுரத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி அரசு பள்ளி மாணவி சத்யா, சேலம் சின்னனூர் நெசவு தொழிலாளி மகன் கலையரசன், மயிலாடுதுறை திருக்கடையூரில் தந்தையை இழந்து கூலி வேலை செய்யும் தாய் அரவணைப்பில் அரசு பள்ளியில் படித்த ஜான் சுந்தர் சிங், பழங்குடி வகுப்பினர் பட்டியலில் நீட் மூலம் முதலிடம் பிடித்த பழரச வியாபரி மகள் சினேகா இவர்கள் எல்லாருக்கும் இந்த வருடம் அரசு மருத்துவ கல்லூரியில் படிக்கும் அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. இதுபோல் பல ஏழைகள் வாய்ப்பு பெற்றிருக்கிறார்கள்.

இவர்கள் முதல் தலைமுறைப் பட்டதாரிகளாக தலை நிமிர்ந்து முன்னேறுவார்கள். மேலும் நமது மாணவர்கள் அகில இந்திய அளவில் ஓ பி சி பிரிவு தர வரிசையில் இருபது சதவிகிதம் இடங்களைப் பெற்றிருக்கிறார்கள்.

இட ஒதுக்கீட்டிற்குத் தகுதியானவர்களில் வசதி படைத்தவர் மட்டும் மருத்துவப் படிப்பிற்கு கோடிகளைக் கொடுத்து தேர்ச்சி பெற்றது என்பது மாறி நீட் தேர்வினால் ஏழை எளிய மாணவர்களுக்கு தரமான மருத்துவப் படிப்பு அரசு நிர்ணயிக்கும் அளவான கட்டணத்தில் கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது. இட ஒதுக்கீட்டில் முறையான பயன் சமுதாயத்திலும் பொருளாதாரத்திலும் பின் தங்கிய மாணவர்களுக்கு நீட் நுழைவு தேர்வினால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை உணர்ந்து நுழைவுத் தேர்வில் அரசியல் ஆதாயம் பார்க்காமல் மாணவர்கள் நலன் கருதி பெருந்தன்மையோடு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

செயல் திறனோடு கேட்க வேண்டும் - ஆக்டிவ் லிசனிங்க் என்பது வாழ்க்கையில் முக்கியம் என்கிறார் ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ராபின் ஆப்ரஹம்.

கேள்வி ஞானம் என்பது முக்கியமான பரிமாணம். பெற்றோர் குழந்தைகளின் தேவைகளை கேட்க வேண்டும். ஆசிரியர் மாணவர்களின் சந்தேகங்களைத் தீர்க்க வேண்டும். முதலாளிகள் தொழிலாளர்களின் குறைகளைக் கேட்க வேண்டும். ஆட்சியாளர்கள் மக்களின் பிரச்னைகளைக் கேட்டறிய வேண்டும். யாருமே காது கொடுக்காது பேசிக் கொண்டேயிருக்கிறார்கள்!

மேலாண்மைக் கல்லூரிகளில் 78 சதவிகிதம் எவ்வாறு சொல்ல வேண்டியதை அறிமுகப் படுத்துவது என்பதற்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆனால் 11 சதவிகிதம் தான் எவ்வாறு கேட்க வேண்டும் என்பது உரைக்கப்படுகிறது. நல்ல சம்பாஷணை அமைய வேண்டும் என்றால் இரு தரப்பும் பொறுமையாக அடுத்தவர் கருத்தை உள்வாங்க வேண்டும்.

இதைத்தான் ஸ்டீபன் கோவி என்ற மேலாண்மை எழுத்தாளர் வெற்றியாளர்களின் ஏழு குணாதிசயங்களில் முக்கியமானதாக, "அவர்கள் மற்றவர் சொல்வதை கவனமாக கேட்பதால் சொல்பவருக்கு நம்பிக்கை பிறக்கிறது அதுவே அவருக்கு வெற்றிப் பாதையை வகுக்கிறது' என்கிறார். சுருங்கச் சொன்னால் "முதலில் மற்றவரைப் புரிந்து கொள்... பிறகு புரிய வை' என்பதைக் கடைப்பிடிக்க வேண்டும்.

கேட்பதில் முதல் கட்டம், கேட்கும் கருத்துகளை கிரஹித்து ஒருங்கிணைப்பது. இரண்டாவதாக அமைதியாக வேறு எதிர்மறை உணர்வுகளின்றி மற்றவர் கருத்துகளை கூர்ந்து கவனிக்க வேண்டும். மூன்றாவதாக நமது செய்கைகள் நடந்து கொள்ளும் விதம் பிறருக்கு நம்பிக்கையூட்டும் விதமாக இருக்க வேண்டும். டிவி விவாதங்களில் பார்க்கிறோம் வெறும் கூச்சலும் குழப்பமும் தான் வெளிப்படுகிறது!

மற்றவர் பேசுவதைக் கேட்டு அவர் கூறிய வார்த்தைகளை நமது பதிலில் உபயோகித்தால் அவர் மகிழ்வார். இது ஒரு மேடை பேச்சு யுக்தி. பேசுபவர், கேட்பவர், பார்வை ஒன்றிவிட வேண்டும். பேசுபவரை ஊக்குவிக்கும் விதமாக கேட்பவர் செய்கைகள் அமைய வேண்டும். பேசுபவரின் கை அசைவுகள், முக பாவங்கள், பல செய்திகளை கொடுக்கும். அவற்றை கவனிப்பதும் ஆக்டிவ் லிசனிங்கின் முக்கிய அங்கம்.

பாராளுமன்ற சட்ட மன்ற சபாநாயகரை ஆங்கிலத்தில் " ஸ்பீக்கர்' என்று அழைக்கிறார்கள். ஆனால் அவர் மற்றவர்களைப் பேச அழைக்க வேண்டும்; தான் அதிகம் பேசக்கூடாது! மற்றவர் பேசுவதை கேட்பவர் ஸ்பீக்கர்!

எல்லோரும் மாமன்ற ஸ்பீக்கர் போல் கேட்பதைப் பழக்கிக் கொண்டால், எவ்வளவு நன்றாயிருக்கும்!

சென்ற வாரக் கேள்விக்கு பதில்:
மேனாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களால் ஜூலை 2014 - ஆம் வருடம் சிவகங்கை சூரகுலம் கிராமத்தில் வீர நாச்சியார் மணி மண்டபம்
திறக்கப்பட்டது.
இந்த வாரக் கேள்வி: தமிழகத்தில் எவ்வளவு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன?

(விடை அடுத்த வாரம்)

கட்டுரையாளர்:

மேனாள் காவல்துறைத் தலைவர்
மேனாள் சட்டமன்ற உறுப்பினர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com